UPSC தேர்வு: "முதல் முயற்சியிலேயே வெற்றி பெறுவது எப்படி?"- வழிகாட்டும் விஷ்ணு IAS
"இப்போதெல்லாம் இணையத்தில் நிறையத் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அதைப் பயன்படுத்தி நாம் UPSC தேர்வுக்குத் தயாராக முடியும். ஆனால், நான் படிக்கும்போது புத்தகங்களைத் தேடி எடுத்துப் படிக்க வேண்டும்." - வே.விஷ்ணு IAS
சாமானிய மக்களோடு நெருக்கமாகப் பழகக் கூடிய நெல்லை மாவட்ட ஆட்சியரான வே.விஷ்ணு IAS, வற்றாத ஜீவநதியான தாமிரபரணி நதியைப் பாதுகாப்பதில் அக்கறை கொண்டவர். அதனால், ‘தூய பொருநை நெல்லைக்குப் பெருமை’ என்ற தாரக மந்திரத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வரும் அவர்,
”நான் 2009-ல் திருச்சி என்.ஐ.டி-யில் பி.டெக் படித்து முடித்தேன். படித்து முடித்ததும் எனக்கு அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள ஒரு நிதித்துறை நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது.
எனக்கு சிறு வயதில் இருந்தே மக்களுக்குச் சேவையாற்றும் வகையில் பணியாற்ற வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. ஆனால் அமெரிக்க வேலையில் கைநிறைய சம்பளம் கிடைத்த போதிலும், நாட்டுக்குச் சேவையாற்றவில்லை என்கிற எண்ணம் எழுந்து கொண்டே இருந்தது. அதனால் இரண்டு ஆண்டுகளில் அந்த வேலையை உதறித் தள்ளிவிட்டு நாடு திரும்பினேன். 2011-ல் சொந்த ஊருக்கு வந்ததும் பிரதமரின் ஊரக மேம்பாட்டுக்கான ஃபெல்லோஷிப் கிடைத்தது. அந்த சமயத்தில் UPSC தேர்வுக்காக நானாகவே படிக்கத் தொடங்கினேன்.
இப்போதெல்லாம் இணையத்தில் நிறையத் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அதைப் பயன்படுத்தி நாம் UPSC தேர்வுக்குத் தயாராக முடியும். ஆனால், நான் படிக்கும்போது புத்தகங்களைத் தேடி எடுத்துப் படிக்க வேண்டும். ஆனாலும், ஒவ்வொரு தேர்வுக்கும் இருக்கும் முறையை (patron) புரிந்து கொள்ள வேண்டும். UPSC தேர்வைப் பொறுத்தவரையிலும், ஒவ்வொரு கேள்வியும் உங்களின் சுய சிந்தனையை வெளிப்படுத்துவதாக இருக்கும். அதைப் புரிந்து தேர்வை எழுதினாலே நேர்முகத் தேர்வு காலத்தில் மிகவும் பயனுள்ளதாக அமையும். அதனால் நான் இந்தத் தேர்வு முறையைப் புரிந்துகொண்டு படிக்கத் தொடங்கினேன்.
திருவனந்தபுரத்தில் கேரள அரசு சார்பாக சிவில் சர்வீஸ் தேர்வுக்குப் பயிற்சி அளிக்கும் மையத்துக்குச் சென்று ஏழு மாதகாலம் படித்தேன். மற்றபடி எந்தப் பயிற்சி மையத்திலும் சேர்ந்து நான் படிக்கவில்லை. சொன்னால் நம்ப மாட்டீர்கள்... நான் UPSC தேர்வு எழுதிய முதல் முயற்சியிலேயே 34-வது ரேங்க் வாங்கித் தேர்வானேன். அதனால் பாடங்களைப் புரிந்து கொண்டு படித்தால் முதல் முயற்சியிலேயே நிச்சயமாக வெற்றியைக் கைப்பற்ற முடியும்.”
குடிமைப் பணிக்கான தேர்வில் எளிதாக வெற்றி பெறுவது எப்படி, தேர்வுக்குத் தயாராவது எப்படி, இணையத்தில் கொட்டிக் கிடக்கும் தகவல்கள் எவை என்பது பற்றி மே 1-ம் தேதி பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரியில் விகடன் நடத்தும் UPSC/ TNPSC பயிற்சி முகாமில் இன்னும் விரிவாகப் பேச இருக்கிறார், வே.விஷ்ணு IAS.
குடிமைப் பணியில் சேவையாற்றி வரும் மேலும் பல அதிகாரிகளும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்ற இருக்கிறார்கள்.
Comments
Post a Comment