பெரியவர்கள் ஏதாவது சொன்னால் அதில் அர்த்தம் இருக்கும்
ஒருநாள் குளக்கரையில் சத்தம் கேட்டு, தவளைகள் பார்த்தன. குளக்கரையில் இரண்டு காளை மாடுகள் ஒன்றை ஒன்று முட்டி சண்டை போட்டுக் கொண்டு இருந்தன. நேரம் செல்லச் செல்ல அவற்றின் சண்டையும் சூடு பிடித்தது. தவளைகள் ஒன்றுக் கொன்று பந்தயம் கட்ட ஆரம்பித்து விட்டன.
வெள்ளை மாடுதான் சண்டையில் வெற்றி பெறும்!'' என்றது ஒரு குழு தவளைகள்.
இல்லை, இல்லை செவலை மாடுதான் வெற்றி பெறும்!'' என ஒரு குழுவும் தவளைகளுக்குள் பந்தயம் கட்டிக் கொண்டு, ஆர்வத்துடன் மெய் மறந்து மாட்டுச் சண்டையைக் கவனித்தன.
அப்போது அங்கு வந்த கிழத் தவளை, ""இந்த மாட்டுச் சண்டையில் எது வெற்றி பெற்றால் என்ன, தோற்றால் என்ன? சண்டையை வேடிக்கை பார்த்து உங்கள் வாழ்க்கையை இழந்துவிடாதீர்கள்!'' என்றது.
""என்ன தாத்தா! நம்ம கூட்டமே கூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காங்க, நீங்க என்னடான்னா இப்படிப் பேசுறீங்களே!''
""ஆமாப்பா... இந்த சண்டையால் நம் இனம்தான் பாதிக்கப்படும் வாருங்கள் குளத்தை விட்டு வெளியேறுவோம்!'' என்றது.
""இந்த கிழத்துக்கு வேறு வேலையே இல்லை. தானும் லைப்பை என்ஜாய் பண்ணாது, இளசுகளையும் என்ஜாய் பண்ணவிடாது!''
""இந்த மாடுகளில் ஏதாவது ஒன்று வெற்றி பெற்றாலும், தோற்ற மாடு இந்தக் குளத்துக்குள் வெறித்தனமா அங்கு மிங்கும் ஓடுமே! மாடு குளத்துக்குள் ஓடும் போது நம் தவளைச் சகோதரர்கள் எத்தனை பேர் அதன் காலில் மிதிப்பட்டு இறந்து விடுவர் என யோசித்தாயா?'' என்று கூறி கவலைப்பட்டது.
""ஆமாம் தாத்தா! நீங்கள் கூறுவதும் உண்மைதான்!'' என உணர்ந்த சில தவளைகள் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கியது. அவைகளின் பேச்சில் உண்மை இருப்பதை உணர்ந்த சில தவளைகள் அவற்றின் பின்னால் சென்றன.
சிறிது நேரத்தில் அவை குளத்தை விட்டு வெளியேறி தப்பிவிட்டன. அவைகளின் பேச்சைக் கேட்காமல் இளம் தவளைகள் மட்டும் குளத்திலேயே இருந்தன.
சிறிது நேரத்தில் வெற்றி பெற்ற மாடு, தோல்வியுற்ற மாட்டினை முட்டித் தள்ளியது. இதனால், அந்த மாடு குளத்துக்குள் இறங்கி அங்கும் மிங்கும் ஓடியது. இப்போது அதன் கால்களில் மிதிபட்டு எத்தனையோ தவளைகள் இறந்துவிட்டன. "அப்போதே குளத்திலிருந்து தப்பிச் சென்றிருக்கலாமே.
கிழத் தவளை பேச்சை கேட்காமல் இப்படி அநியாயமா சாகிறோமே...' என புலம்பிலயவாறே உயிரைவிட்டன.
எனவே பெரியவர்கள் ஏதாவது சொன்னால் அதில் அர்த்தம் இருக்கும்
Comments
Post a Comment