வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை….
தூதுவளை கீரையை தூது கொண்டு போன சம்பவம்
வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையிலும்
நடைபெற்றது.
சோழ நாட்டின் மன்னரான ஆளவந்தார் அரச விவகாரங்களில்
தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டு ஆன்மிக
முன்னேற்றம் காண முடியாமல் இருந்தார்.
மன்னரின் பாட்டனாரான நாதமுனி சுவாமிகளின் சிஷ்யரான
ஆச்சாரியர் மணக்கால் நம்பிக்கு, ஆளவந்தார் அவர்
முன்னோர்கள் போல் ஆன்மிக வழி செல்லாமல் ராஜபோகத்தில்
காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறாரே என்று மிகவும் மன
வருத்தம்.
அவரை எப்பாடுபட்டாவது மாற்ற விரும்பினார். ஆனால் மன்னரை
சந்திக்க சாதாரண மனிதரான அவருக்கு நிறைய தடைகள்.
அவர் மிகவும் யோசித்து ஒரு யுக்தியை கையாண்டார்.
மன்னருக்கு தூதுவளை கீரை மிகவும் பிடிக்கும் என்று தெரிந்து
கொண்டு, மன்னரின் சமையலறைக்கு தினமும் தூதுவளை
கீரையை பறித்துக் கொண்டு போய் கொடுத்தார்.
கீரை மிகவும் சுவையாக இருந்ததால் மன்னர் அதை மிகவும் விரும்பி
உண்டார். ஆறு மாதங்கள் தொடர்ந்து கீரை கொடுப்பது தொடர்ந்தது.
பிறகு திடீரென்று மணக்கால் நம்பி கீரை கொடுப்பதை நிறுத்தி
விட்டார். இப்போதெல்லாம் சமையலில் தூதுவளை கீரை இல்லையே
என்று மன்னர் கேட்க, சமையலறையில் பணிபுரிபவர் ஆறு
மாதங்களாக ஒரு முதிய வைஷ்ணவர் கீரையைக் கொண்டு வந்து
கொடுத்தார்.
ஆனால் கொஞ்ச நாட்களாக அவரைக் காணவில்லை என்று சொன்னார்.
மன்னர் தன் படை வீரர்களை எல்லாம் அனுப்பி அந்த பெரியவர்
எங்கேயி ருந்தாலும் கண்டு பிடித்து கூட்டிக் கொண்டு வரச் சொன்னார்.
அவ்வாறாக கூட்டிக் கொண்டு வரப்பட்ட மணக்கால் நம்பி அவரிடம்
தன்னை அவர் பாட்டனார் நாதமுனிசுவாமிகளின் சிஷ்யன் என்று
அறிமுகப்படுத்திக் கொண்டார்.
நம்பிகளிடம் உரையாடிய ஆளவந்தார் அவர் மேதாவிலாசத்தால்
மிகவும் கவரப்பட்டு அவர் தினந்தோறும் தன்னை சந்தித்து
உரையாடலாம் என்று அனுமதி கொடுத்தார்.
நம்பிகள் நாள்தோறும் தூதுவளையைக் கொண்டு வந்து கொடுத்து
விட்டு மன்னரிடம் நல் வார்த்தைகள் கூறி உரையாடு வார்.
இப்படியாக பகவத் கீதையின் 18 அத்தியாயங்களையும்
உபதேசித்தார்.
கீதையைக் கேட்கக் கேட்க, ஆளவந்தாரின் மனம் மாற ஆரம்பித்தது.
மன்னராக தான் வாழும் வாழ்க்கை அர்த்தமற்றது, சாரமற்றது என்று
உணர்ந்தார். பெருமாளை அடைய உபாயம் தனக்கு சொல்லுமாறு
நம்பிகளைக் கேட்டுக் கொண்டார்.
‘அவனையடைய உபாயம் அவன் மட்டுமே’ என்றார் மணக்கால்
நம்பி.
மன மகிழ்ந்து போன ஆளவந்தார் இத்தகைய நல் உபதேசங்கள்
செய்த நம்பிக்கு ஏதாவது சன்மானம் கொடுக்க விரும்பினார்.
ஆனால் மணக்கால் நம்பியோ தமக்கு எதுவும் வேண்டாமென்று
கூறிவிட்டு, ஆனால் ஆளவந் தாரின் பாட்டனார் விட்டுச் சென்ற
விலை மதிக்க முடியாக குலதனம் தன்னிடம் இருப்பதாகவும் அதை
ஆளவந்தாருக்கு கொடுக்கவே தூதுவளை கொண்டு தூது வந்தாகவும்
கூறினார்.
வியந்து போன ஆளவந்தார் உடனே அந்த குலதனத்தைக் காண
விருப்பப்பட, மணக்கால் நம்பி அவரை அழைத்துக் கொண்டு
ஸ்ரீரங்கம் பெரிய கோவிலுக்கு வந்தார்.
நேரே பெருமாள் சன்னதி முன் ஆளவந்தாரை நிறுத்தினார்.
“தங்கள் பாட்டனார் நாதமுனிகள் தேடி வைத்த குலதனம் இதுவே”
என்று பெருமாளை சுட்டிக் காட்டினார்.
அரங்கனின் திருமுகத்தில் புன்முறுவல்.
‘எம்மைப் பார்க்க இத்தனை காலமாச்சோ உமக்கு’ என்பது போல ஒ
ரு கேலியான பாவம். கண்களில் நீர் மல்க அரங்கனின் திருமேனி
அழகில் லயித்து அரச போகத்தை விட்டார்.
பெருமாளும் அளவற்ற அன்போடு ஆளவந்தாரை ஆட்கொண்டார்.
ஆளவந்தாரே உடையவர் என்று அழைக்கப்படும் ஸ்ரீ ராமானுஜரின்
மானசீக குருவும் ஆவார்.
பாட்டனார் வழியில் ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தை கட்டிக் காக்க
ஆளவந்தாரை ராஜபோகத்திலிருந்து ஆன்மிகப் பாதையில் திருப்பிக்
கொண்டு வந்த சம்பவம் தூதுவளை கீரை தூது போனதால் அல்லவா
நடைபெற்றது?
-ரேவதி பாலு
நன்றி: மங்கையர் மலர்
Comments
Post a Comment