இந்த ஓவியம் சொல்லும் கதை இது தானா?
ஒரு காலத்தில், ஒரு இராஜ்யம் இருந்தது. அந்த இராஜ்யத்தின் ராஜாவிற்கு ஒரு காலும், ஒரு கண்ணும் இல்லை, ஆனால் அவர் மிகவும் புத்திசாலி மற்றும் அன்பானவர்.
ஒரு நாள் ராஜா அரண்மனை வாசல் வழியாக நடந்து கொண்டிருக்கும்போது, அவருடைய மூதாதையரின் ஓவியங்களைக் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது குழந்தைகளும் இதே போல் அரண்மனை வாசல் வழியாக நடந்து வரும் போது, அவர்களுடைய மூதாதையரின் ஓவியங்களைப் பார்ப்பார்கள் என்று நினைத்துப் பார்த்தார்.
ஆனால் ராஜாவிடம் வரைந்த உருவப்படம் இல்லை. எனவே அவர் பல புகழ்பெற்ற ஓவியர்களை வரவழைத்தார். அரண்மனையில் வைப்பதற்காக அவருடைய அழகான உருவப்படத்தை வரைய விரும்புவதாக மன்னர் அறிவித்தார்.
அங்கிருந்த அனைத்து ஓவியர்களும் ராஜாவிற்கு ஒரு கால் மற்றும் ஒரு கண் தான் உள்ளது என்று யோசிக்க ஆரம்பித்தார்கள். அவரது படத்தை எப்படி அழகாக வரைவது? அது சாத்தியமற்றது என்று ஒவ்வொரும் ஒவ்வொரு சாக்குகளைச் சொல்லி ஓவியம் வரைய மறுத்து விட்டனர்.
அப்போது ஒரு ஓவியர் தனது கையை உயர்த்தி, நீங்கள் விரும்பும்படி நிச்சயமாக ஒரு அழகிய ஓவியத்தை நான் வரைவேன் என்று கூறினார். ராஜாவும் அவருக்கு அனுமதியளித்தார், ஓவியரும் ஓவியம் வரைய ஆரம்பித்தார். நீண்ட நேரத்திற்கு பிறகு, ஓவியர் வரைபடம் தயார் என்று கூறினார்..! ஓவியர் ஓவியத்தை, ராஜாவிடம் கொடுத்த பிறகு, ராஜா உட்பட அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர்.
ஓவியர், ராஜா ஒரு குதிரை மீது ஒரு கால் வைத்திருப்பது போலவும், தன்னுடைய வில்லை வளைத்து, ஒரு கண்ணை மூடிக்கொண்டு குறி வைப்பது போல ஒரு உருவப்படத்தை வரைந்தார். ராஜாவின் குறைபாடுகளை புத்திசாலித்தனமாக மறைத்து ஓவியர் அந்த அழகிய உருவத்தை உருவாக்கியிருப்பதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அந்த ஓவியருக்கு ராஜா மிகப்பெரிய பரிசை கொடுத்தார்.
Comments
Post a Comment