ஒரு தாயாக உங்களின் மகளுக்கு, பெண்களில் பொருளாதார தன்னிறைவு (Financial Autonomy) மற்றும் அதன் தேவை பற்றி என்னென்ன கற்று கொடுப்பீர்கள்?

 சுருக்கமாக சொல்வதென்றால், பெண்களுக்கு பொருளாதார தன்னிறைவின் அவசியம்


  • சுய பாதுகாப்பு.
  • நேர்மையான வாழ்க்கை.
  • குடும்பத்தில் அங்கீகாரம்.
  • சமுதாயத்தில் மரியாதை.

கல்வியும், வேலைக்குச் செல்வதும், பொருளீட்டுவதுமே பொருளாதார தன்னிறைவு பெற வழியென்றும், தன்னுடைய கிரெடிட் கார்டில் விருப்பப்படி துணிமணிகள், பியூட்டி பார்லரில், ஹோட்டலில் செலவு செய்வதுமே பொருளாதார தன்னிறைவு, சுதந்திரம் என்று நினைத்தால்.… என்னுடைய பதில் திருப்தியைத் தராது.


  • நானறிந்த வரை இந்தியாவில் பெண்களின் பொருளாதார நிலை.
  • எனக்கு பொருளாதார தன்னிறைவு அறிமுகமான விதம்.
  • என் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்த விதம்.


நம் பெண்களின் பொருளாதார நிலை.


சேத்த பணத்த சிக்கனமா

செலவு பண்ண பக்குவமா

அம்மா கையில கொடுத்து போடு

அவங்க ஆற நூறு ஆக்குவாங்க


என்று மருதகாசி மட்டுமா, அதற்கு முன்னே சங்கப்பாடல்களில் புலவர் பெருஞ்சித்திரனார்


நின் நயந்து உறைநர்க்கும், ....

................என்னோடும் சூழாது

......என் மனை கிழவோயே......


என்று பாட்டினூடே சொல்லி விட்டார்.


நம் பெண்கள் பொருளாதார தன்னிறைவுவும், சமத்துவமும், சுதந்திரமும், அதிகாரமும் இயல்பாகவே பெற்றவர்கள்.


மேற்கத்திய கலாச்சாரமான செலவழிக்கும் ஆற்றலை வைத்து பொருளாதார சுதந்திரத்தை கணக்கிடுவதை கண்ணுற்ற சிலர், தன்னுடைய இயல்பை மாற்றிக் கொண்டதால், அதன் விளைவால், இங்கே பெண்களின் பொருளாதார அதிகாரம் முடக்கப்பட்டு பின்னர் தன்னிறைவாவது பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.


மேலை நாடுகளின் பொருளாதார அமைப்பை இந்திய பொருளாதார அமைப்புடன் அப்படியே பொருத்திப் பார்ப்பது சரியாகாது.


கிராமத்தில் என் பெரியப்பா நாராயணஸ்வாமி, எந்நேரமும் பெருமாள் கோவிலும், திவ்யதேச தரிசனமும் தான். பெரியம்மா ஆண்டாள் (பெயருக்கு ஏற்றாற்போல்) அனைத்தையும் கட்டி ஆண்டார். விவசாயமும், அதை சார்ந்த தொழில்களும்.


நான்கு மகள்கள், இரு மகன்கள். ஒருவர் பொறியியல் முடித்து அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். நான் அவரை பார்த்தது கூட இல்லை. மற்றுமொருவர் பட்டயக் கணக்கர். நான்கு பெண்களுக்கு திருமணம் சீரும் சிறப்புடன்.


ஆண்டாள் பெரியம்மா, பெரிதாக படிக்கவில்லை, அரக்கப்பரக்க வீட்டு வேலைகளை முடித்து வேலைக்கு ஓடவில்லை. அவர் காலம் முடிந்து 25 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் அவரை பற்றி எழுதுகிறேன் என்றால் அவரின் ஆளுமை என்னை வியக்க வைக்கிறது. சொத்தின் மதிப்பு இம்மியளவும் குறையாமல் கூடிக்கொண்டே செல்கிறது. பிள்ளைகளை வளர்த்த விதம் அப்படி.


யாரேனும் பூர்வீக சொத்தை அழித்து கொண்டிருந்தால்


பத்தை, எட்டாக்க படாதபாடு படுகிறான்


என்று என் தாய்வழி தாத்தா பழித்து சொல்வார். புதிதாக சொத்துக்களை உருவாக்க முடியாவிட்டாலும், மூதாதையர் அளித்ததை அழிக்காமல் இருப்பதே உத்தமம்.


உழைப்பு, உற்பத்தி பெருக்கம், ஊதியம், சேமிப்பு, முதலீடு, சேவைகள் என்பதை அடிப்படையாகக் கொண்டது நம் பொருளாதாரம்.


இங்கே சிக்கனமும், சேமிப்பும், முதலீடும் முக்கியமாக கருதப்படுகிறது.


நம் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்கு அஸ்திவாரமான, இந்த வாழும் கலையை, கல்வியை கலாச்சாரத்தின் வழியாக அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதில் பெண்களின் பங்கு இன்றியமையாதது.


நான் கற்ற விதம்.


நம் குடும்ப அமைப்பே பொருளாதாரத்தை தீர்மானிக்கிறது. பெற்றோரின் வளர்ப்பு முறையில் ஏற்படும் தாக்கம் இதில் வெளிப்படுகிறது.


என் பள்ளிக்கால(7-8 வயது) விடுமுறைக்கு, தாய் வழி தாத்தா வீட்டிற்கு செல்வது வழக்கம்.


வீட்டின் பக்கத்திலேயே "கரூர் வைசியா பேங்க்". தாத்தாவின் கட்டிடம்தான், வாடகைக்கு விட்டிருந்ததார். அதனாலோ என்னவோ தயக்கமோ, பயமோ இன்றி செல்வேன். தாத்தாவின் வங்கி வேலைகளுக்கு மெசஞ்சர் நானே.


ஒரு முறை பேங்க் மேனேஜர் திருமகள் திருமண திட்டத்தில் பணம் சேமிக்க என் அப்பாவிடம் சொல்லச் சொன்னார்.


அப்பாவிடம் கேட்டேனே, இந்த பணம் என் கல்யாணத்துக்கு என்றால், கல்யாணம் முடிந்த பின்னே என் செலவுக்கு யார் பணம் கொடுப்பார்கள்?




பிறரிடம் வேலை செய்து சம்பாதிப்பதை பற்றி என் அப்பாவிற்கு தோன்றவில்லை, உனக்கு பிசினஸ் ஆரம்பித்து கொடுக்கிறேன் என்று சொன்னார்.



  • கடலூரில் 9ஆம் வகுப்பு படிக்கும் போது, அவரிடமே மாதமாதம் ₹200 பெற்று, விஜயா பேங்கில் RD-ல் என் கல்லூரி படிப்பிற்காக சேமிக்க கற்றுக் கொடுத்தார்.
  • திருச்சியில் கல்லூரியிலேயே இணைக்கப்பட்டிருந்த சிண்டிகேட் பேங்கில் ஒரு வருடத்திற்கு தேவையான காலேஜ், எக்ஸாம் ஃபீஸ், பாக்கெட் மணி எல்லாவற்றிற்கும் SB-ல் டெபாசிட் செய்து விடுவார். அந்தப் பணத்தைக் கொண்டே சமாளிக்கணும்.
  • பணிபுரிந்த போதும் என் வருமானத்தை சேமிக்க கட்டாயமாக்கினார்.

இப்படியே எனக்கு பணத்தை கையாளவும், செலவு செய்யவும், செலவு செய்தபின் கணக்கு பார்த்து சரிசெய்து கொள்ளவும் பழக்கப்படுத்தி விட்டார்.



  • திருமணத்தின் போதைய அன்பளிப்பு தொகையை பலவாறாகப் பிரித்து FD, மியூச்சுவல் ஃபண்டில் டெபாசிட் செய்து ஒரு ஃபைலில்(portfolio) தேதி வாரியாக அடுக்கி கொடுத்துவிட்டார்.
  • கோவைக்கு என் வீட்டுக்கு வரும் போதெல்லாம் என் போர்ட்ஃபோலியோ-வை சரிபார்ப்பார். இதில் என் கணவரின் தலையீடு அறவே இல்லை:))
  • அசையா சொத்துக்களை பராமரிக்கவும், பங்கு வர்த்தகமும், முதலீடும் கற்றுக் கொடுத்தார்.

பிஸினஸ் ஆரம்பித்து கொடுக்கிறேன் என்று சொன்னது மட்டுமே அவரின் காலம் வரை பல காரணங்களால் இயலாமல், பின்னர் சாத்தியமானது.



இன்று பொருளாதாரத்தில் தன்னிறைவும், சுதந்திரமாகவும் உணருகிறேன். அதற்கு காரணமாக என்னுடைய சிக்கனமும், சேமிப்பும், முதலீடும் என்று திடமாக நம்புகிறேன்.



கற்றுக் கொடுத்த விதம்.



30 வருடங்களுக்கு முன் நான் கற்ற பொருளாதார அறிவு பிள்ளைகளுக்கு அப்படியே ஒத்து வருமா? என்று கேட்டால் நிச்சயமாக ஆம்!



பரிவர்த்தனைகள் டிஜிட்டல் மயமாகி விட்டாலும், என்னுடைய பழைய முறையிலான சேமிப்பும், முதலீடும் சில மாற்றங்களுடன் கற்பித்திருக்கிறேன்.



"சிக்கனம் சேமிப்பு முதலீடு"



என்ற மந்திரம் எக்காலத்திற்கும், எல்லோருக்கும் ஆனது.



என் தலைமுறையிலேயே பெற்றோரை தாயின், தந்தையின் கடமை என்று பிரித்துப் பார்க்கவில்லை. என் தந்தையே தாயுமானவர் என பல பதிவுகளில் எழுதியிருக்கிறேன். நானும், என் கணவரும் பிள்ளைகளுக்கு பொருளாதாரத்தை கற்பிப்பித்ததில் பாலின பேதம் பார்க்கவில்லை.



நாங்கள் கற்பித்தவை.



  1. பணத்தை கையாளும் விதிமுறைகளை, மரியாதையை தெரிந்துகொள்ள வேண்டும்.
  • சும்மா ஃபிரிட்ஜ் மேல், டைனிங் டேபிள், புக் செல்ஃப் என்று எல்லா இடத்திலும் சில்லறைகளை சிதற விடக்கூடாது.
  • குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்று சொல்வார்கள். செல்வமும் அப்படியே.
  1. பள்ளி, கல்லூரிகளில் பயில்வதால் மட்டுமே பொருளாதார தன்னிறைவு அடைந்து விட முடியாது.
  2. முழுநேர, பகுதிநேர வேலை மற்றும் செயலற்ற வருமானம் (passive income) அவசியம்.
  3. தோராயமாக வாழ்நாள்? இன்னும் எத்தனை வருடங்கள் கடுமையாக, மிதமாக உழைக்க வேண்டும்? ஓய்வு காலத்தில் வருமானம் எவ்விதத்தில்? திட்டமிடல் வேண்டும்.
  4. அவசரத் தேவைகளுக்கு என்று வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பணம் தனியாக ஒதுக்கி வைத்து பழக வேண்டும்.
  5. விலைவாசி ஏற்றத்திற்கு தகுந்தார்ப்போல் சேமிப்பையும் முதலீட்டையும் கணக்கிடல் வேண்டும்.
  6. செலவு செய்வதற்கு முன் நிறைய யோசிக்க வேண்டும். செலவு செய்தது அனாவசியம் என்று உணர்ந்தால் அடுத்தமுறை அத்தவறு நிகழாதவாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  7. மினிமலிஸ்ட் வாழ்க்கையை வாழ தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
  8. அசையும் அசையாச் சொத்துக்களை பராமரிக்கவும் புதிதாக உருவாக்கவும் கற்றுக்கொள்ளவேண்டும்.
  9. கடன் வாங்கவும், உரிய நேரத்தில் திருப்பிக் கொடுக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும்.
  10. கடன் அட்டையை, அழிக்க வந்த ஆயுதமாகவே பலர் நினைக்கிறார்கள். எதையும் சரியாக கையாளத் தெரிந்தால் நன்மையே.
  11. சேமித்த பணத்தை முதலீடு செய்ய குடும்பத்தில் நம் முன்னோர்கள் பின்பற்றிய வழிமுறைகளையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
  12. ஏதும் புரிபடவில்லை என்றால் பர்சனல் பினான்சியல் அட்வைசர்களிடம் ஆலோசனை பெற்றால் மிகச்சரியாக வழி நடத்துவார்கள்.
  13. பணம் சம்பாதிப்பதற்காக உடலையும், மனதையும் மிகவும் வருத்திக்கொண்டு தரம் தாழ்ந்து போக கூடாது.





தன் உடல்/மனநிலையை கணக்கில் கொள்ளாமல், மாங்கு மாங்கு என்று உழைப்பவரை பார்த்தால், இப்படி சாட்டையால் அடித்து பிச்சை வாங்குபவர்கள் தான் நினைவுக்கு வருவார்கள்.




என் அம்மாவிடமிருந்து கற்றது, கற்றுக் கொடுக்கப்பட்டது

நீரை ஆண்டாள், சீரை ஆண்டாள்.


சிறுவயதில் இரு உள்ளங்கைகளையும் ஒன்றாக இணைத்து ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி எவ்வளவு நேரம் உன்னால் பிடித்து வைத்திருக்க முடிகிறது பார்க்கலாம் என்று சவால் விடுவார்.

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துபவரிடமே செல்வம் சேரும் என்று சொல்லி சொல்லியே வளர்த்தார். இப்பொழுதும் என் வீட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் என் சிக்கனம் வெளிப்படும்:))

கணக்கிலடங்கா படையெடுப்பு, அந்நிய ஆதிக்கம், உலகப்போர், பெரும்பஞ்சம் உலகமயமாக்கல் என்று பல இடர்ப்பாடுகள் வந்த போதும் இந்தியப் பொருளாதாரம் அசைக்க முடியாமல் வலுவாக ஸ்திரத்தன்மையுடன் இருப்பதற்கு காரணம் நம் பெண்களின் பொருளாதார தன்னிறைவும், அதிகாரமே! 

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ