ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ
8.5 கோடிப் பிரதிகள் விற்றுச்சாதனை படைத்துள்ள நூல் ஆன்மாவிற்குப் பரவசமூட்டுகின்ற ஞானத்தை உள்ளடக்கிய எளிய, சக்திவாய்ந்த இப்புத்தகம், ஆன்டலூசியா பகுதியைச் சேர்ந்த, சான்டியாகோ என்ற செம்மறியாட்டு இடையன் ஒருவனைப் பற்றியது. அவன் ஸ்பெயினில் உள்ள தன்னுடைய சொந்த கிராமத்திலிருந்து புறப்பட்டு, பிரமிடுகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பொக்கிஷத்தைத் தேடி எகிப்தியப் பாலைவனத்திற்குச் செல்லுகிறான். வழியில் அவன் ஒரு குறவர்குலப் பெண்ணையும், தன்னை br>ஓர் அரசர் என்று கூறிக் கொள்ளுகின்ற br>ஓர் ஆணையும், ஒரு ரசவாதியையும் சந்திக்கிறான். அவர்கள் அனைவரும், அவன் தேடிக் கொண்டிருக்கின்றன பொக்கிஷத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய பாதையை அவனுக்குக் காட்டுகின்றனர். அது என்ன பொக்கிஷம் என்பதோ, வழியில் எதிர்ப்படும் முட்டுக்கட்டைகளை சான்டியாகோவால் சமாளிக்க முடியுமா என்பதோ அவர்கள் யாருக்கும் தெரியாது. ஆனால், லௌகிகப் பொருட்களைத் தேடுவதில் தொடங்குகின்ற ஒரு br>பயணம், தனக்குள் இருக்கும் பொக்கிஷத்தைக் கண்டறிகின்ற ஒன்றாக மாறுகிறது. வசீகரமான, உணர்வுகளைத் தட்டியெழுப்புகின்ற, மனிதாபிமானத்தைப் போற்றுகின்ற இக்கதை, நம்முடைய கனவுகளின் சக்திக்கும் நம்முடைய இதயம் சொல்லுவதைக் கேட்க வேண்டியதன் முக்கியத்துவத்திற்குமான ஒரு நிரந்தரச் சான்றாகும்.
ஆழ்மனதின் கேள்விகளுக்கு விடையளித்த `தி ஆல்கெமிஸ்ட்'
ஒரு ஜிப்ஸியாக வாழ்வதை ஒவ்வொரு மனிதனும் விரும்பலாம். ஆனால் ஜிப்ஸியாக இருப்பது அவ்வளவு சுலபமல்ல.
வாழ்க்கை குறித்து சற்று ஆழமாகச் சிந்திக்கும் போதெல்லாம் பல பதிலற்ற கேள்விகள் காற்று போன்று விடாமல் மனிதர்களைத் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.
நமக்குக் கிடைத்துள்ள வாழ்வை நன்றாக அனுபவித்து ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமா? அல்லது குறிப்பிட்ட குறிக்கோளை அடைவதை நோக்கமாகக்கொண்டு வாழ்ந்து சிறப்பான சாதனைகள் புரியவேண்டுமா? இந்த இருவகையான வாழ்வு முறைகளில் எது அர்த்தமுள்ளதாக இருக்கும்? இதுவும் இது போன்றும் இன்னும் பல பல கேள்விகள் வாழ்க்கை குறித்த ஆழமான சிந்தனைகளின் போது நம் மனதில் ரீங்காரமிடும்.
பிரேசில் எழுத்தாளரான பவுலோ கோய்லோ (Paulo Coelho) எழுதிய தி ஆல்கெமிஸ்ட் (The Alchemist) நாவல் இத்தகைய பல கேள்விகளுக்கும் பொருத்தமான பதில் அளிப்பதாய் அமைந்துள்ளது.
தி ஆல்கெமிஸ்ட் நாவல் உலகம் முழுவதும் ஜிப்ஸியாகப் பயணம் செய்வதற்கும், புதையல்களைக் கண்டுபிடிப்பதற்கும் கனவு காணும் சாண்டியாகோ என்ற ஆடுமாடுகளை மேய்க்கும் சிறுவன் குறித்த கதை. ஒரு ஜிப்ஸியாக வாழ்வதை ஒவ்வொரு மனிதனும் விரும்பலாம்.
ஆனால் ஜிப்ஸியாக இருப்பது அவ்வளவு சுலபமல்ல. எதிர்பார்ப்புகள் ஏதுமற்று, கிடைப்பதை மகிழ்வுடன் ஏற்கும் ஒரு துறவியின் மனநிலை அதற்கு வேண்டும் என்கிறார் கோய்லோ.
கதையில், மனதின் தேடல் குறித்து கோய்லோ கூறும்போது, "துன்பத்தின் பயம் துன்பத்தைவிட மோசமானது என்று உங்கள் இதயத்திற்குச் சொல்லுங்கள். மேலும் கனவுகளைத் தேடும்போது எந்த இதயத்திற்கும் முன்மாதிரி எதுவுமில்லை. ஏனெனில் தேடலின் ஒவ்வொரு நொடியும் கடவுள் மற்றும் நித்தியத்துடன் நமது இரண்டாவது சந்திப்பாகும்" என்கிறார்.
நாவலின் ஓரிடத்தில் தேசாந்திரியாகத் திரியும் நாயகன் தன் பயணத்தின் வழியில் ஒரு துறவியைச் சந்திக்கிறான்.
அவரிடம் அவன் வாழ்வு குறித்து பலவாறும் வினவுகிறான். அவனிடம் ஒரு தேக்கரண்டியைக் (டீஸ்பூன்) கொடுத்து அதில் கொஞ்சம் எண்ணையையும் ஊற்றிய அந்தத் துறவி, எண்ணெய் சிந்திவிடாதபடி அந்தக் கரண்டியை எடுத்துக்கொண்டு ஊரைச் சுற்றி வரச் சொல்கிறார்.
அப்படியே கவனமாக அந்த எண்ணெய் உள்ள கரண்டியுடன் சென்று ஊரைச் சுற்றி வருகிறான் நாயகன்.
அவன் அவரிடம் திரும்பியதும் அந்தக் கரண்டியில் எண்ணெய் அப்படியே இருப்பதைப் பார்த்த அவர், அவனிடம் ஊரில் உள்ள சில அழகான இடங்களைக் குறிப்பிட்டு அவற்றையெல்லாம் ரசித்துப் பார்த்தாயா என்று புன்னகையுடன் கேட்கிறார்.
அவன் தன்னால் அவற்றையெல்லாம் சரியாகப் பார்க்க முடியவில்லை என்றும், தன் கவனமெல்லாம் எண்ணெய் சிந்திவிடாமல் இருக்க வேண்டும் என்பதிலேயே இருந்ததாகவும் கூறுகிறான்.
துறவி அவனை மீண்டும் கரண்டியுடன் சென்று அவர் குறிப்பிட்ட அழகான இடங்களை எல்லாம் நன்றாகக் கண்டு களித்து வரச் சொல்கிறார்.
அவ்வாறே அவனும் சென்று அவர் சொன்ன இடங்கள் அனைத்தையும் நன்றாக ரசித்து வருகிறான்.
மகிழ்வுடனும், உற்சாகத்துடனும் தான் கண்டுகளித்த இடங்களின் அழகை அவன் துறவியிடம் வர்ணிக்கிறான்.
அவன் கூறியதைச் செவியுற்ற துறவி அவனிடம் புன்முறுவலுடன் அமைதியாகக் கேட்கிறார்.
"சரி நான் கொடுத்த எண்ணெய் எங்கே?"
அப்போதுதான் அந்தக் கரண்டியில் சுத்தமாக எண்ணெய் இல்லாததை அவன் கவனிக்கிறான்.
துறவி நாயகனிடம், "ஊரின் அழகை ரசிப்பது மற்றும் கரண்டியில் உள்ள எண்ணெய் சிந்தாமல் இருப்பது இந்த இரண்டையும் ஒரு மனிதன் சமநிலைப்படுத்த வேண்டும். அவ்வாறே வாழ்வை ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியாக அனுபவிப்பதும், குறிப்பிட்ட குறிக்கோளுடன் வாழ்ந்து சிறப்பான சாதனை புரிவதும். இந்த இரண்டில் ஒன்று நிறைவேறாவிட்டாலும் நாம் உண்மையான மகிழ்ச்சியையும் நிறைவையும் வாழ்க்கையில் பெற முடியாது.
எனவே வாழ்க்கையைக் கொண்டாடி ரசித்து, ருசித்து வாழ்வோம். அதேநேரத்தில் அர்த்தமுள்ள குறிக்கோளில் இருந்து நமது கவனம் எந்தக் கணத்திலும் சிதறிவிடாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்வோம்" என்கிறார்.
இந்த விளக்கம் வாழ்வு குறித்த நமது பல்வேறு வினாக்களுக்கும் விடையளிப்பதாக உள்ளது.
இது மட்டுமல்லாது நாவலில் ஆங்காங்கு வாழ்க்கைப் பாடத்தைப் போகிற போக்கில் தூவிக்கொண்டே போகிறார் பவுலோ கோய்லோ.
தி ஆல்கெமிஸ்ட் நாவலில் சில சிந்தனைச் சிதறல்கள்:
# ஒரு வெற்றிகரமான மற்றும் திருப்திகரமான வாழ்க்கையை வாழ்வதற்குத் தனிப்பட்ட புனைவு முக்கியமானது. ஏனெனில் இது ஒருவர் கனவு காணும் விதி.
# தனிப்பட்ட புனைவுகளைப் பின்பற்ற சூழ்நிலைகள் அவ்வப்போது அமைகின்றன.
# மனிதனது கனவிற்கான தேடலும், கனவை நிறைவு செய்வதற்கான தேடலும் மாறுபட்டவை.
# பயணத்தை நம்பினால் சாதாரண வாழ்க்கையைத் தங்கமயமாக மாற்றலாம்.
# கனவை அடையும் நேரம் வரும்போது மனிதனுக்குக் கிடைத்துள்ள உண்மையான காதல் ஒரு சிறந்த தூண்டுதலாக இருக்கும்.
# தோல்வியின் பயம் நம்முடைய விதியை வாழ வைக்கிறது. இதை வெல்வது ஒரு பெரிய வெற்றியாகும்.
# ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அவர் புரிந்துகொள்ளத் தவறும் ஒரு பெரிய கனவு எப்போதும் இருக்கிறது.
# உங்கள் கனவையும், குறிக்கோளையும் பின்பற்றி அதை அடைவது வாழ்க்கையின் வெற்றி.
# வாழ்வதற்கு ஏதேனும் ஒரு நோக்கத்தைக் கண்டுபிடிப்பது அவசியம்.
# நமது கனவுகளை வாழாமல் இருப்பது பாதகமான விளைவினை ஏற்படுத்தும். மேலும் கனவுகளைத் தேடும் எண்ணம் அற்புதமானது. நமது கனவைப் பின்தொடரவும், அதில் ஈடுபடவும், நாம் விரும்பியதை நமக்குக் கொடுக்கவும் முழுப் பிரபஞ்சமும் சதி செய்கிறது.
# ஒவ்வொரு நாளும் காலையில் புதியதாகவும், இரவில் திருப்திகரமாகவும் இருக்கிறது.
# வாழ்க்கையின் தேடல் முழுவதும் வாழ்க்கையை உருவகப்படுத்துவதாக நாம் உணரமுடியும்.
# மனிதன் தன்கனவை அடைய அன்பு ஒரு சிறந்த துணைக் கருவியாக உள்ளது.
# சாதாரண நம்பிக்கைகள் கொண்ட ஒரு சாதாரண சிறுவனின் கண்கவர் கதையின் குறியீட்டு விளக்கத்தின் மூலம் ஆன்மிகம், நம்பிக்கை மற்றும் அன்பின் மதிப்புகளை இந்தக் கதை வலியுறுத்துகிறது.
# வாசகர்களுக்கு மிகவும் நுட்பமான மற்றும் பயனுள்ள வழியில் நேர்மறையின் சக்தியை நாவல் கற்பிக்கிறது.
# மூன்றாம் நபர் கதை பாணியைக் கொண்ட புத்தகத்தின் மொழி எளிமையானது மற்றும் தெளிவானது.
# வாழும்முறையை உணர்ந்து கொள்வது ஒரு மனிதனின் ஒரே உண்மையான கடமையாகும் என்று கதையின் மையம் கூறுகிறது.
# நாம் புத்தகத்தை வாசிக்கும்போது நமது தாத்தா தனது கதையைக் குழந்தைப் பருவத்திலிருந்து நிஜம் போல நம்மிடம் கூறுவதாகக் கற்பனை செய்துகொள்ள முடிவது இந்தக் கதையில் விரவியுள்ள நடையின் பலமாகும்.
மனித வாழ்க்கை ஒரு கனவு போன்றது - நமது கனவுதான் வாழ்க்கை என்று வித்தியாசமான முறையில் கற்றுத்தருகிறார் பவுலோ கோய்லோ.
"நாம் எதையாவது உண்மையாக விரும்பும்போது, அதை அடைய நமக்கு உதவ இந்தப் பிரபஞ்சம் முழுக்க சதி செய்கிறது" என்னும் தி ஆல்கெமிஸ்டின் மையக்கரு வாழ்வு குறித்த சரியான பார்வையை நமக்கு நிச்சயம் அளிக்கும்
Comments
Post a Comment