இன்று செய்ய வேண்டியதை நாளைக்கென்று தள்ளி வைத்தால்
ஒரு ஞானி இருந்தார். அவர் ஊர் ஊராகச் சுற்றித் திரிபவர். அவர் ஒரு இடத்திற்குச் செல்லும்போது, ஒரு மனிதனின் வீட்டில் சில நாட்கள் தங்கினார். அந்த மனிதன் ஏழையாக இருந்தாலும், அவரை மிகவும் நல்ல முறையில் உபசரித்தான். அவரிடம் பணிவாகவும், அன்பாகவும் நடந்துகொண்டான். ஆனால், அவன் ஒரு சோம்பேறி. அவனது நடத்தை ஞானியைக் கவர்ந்தது. அவர், புறப்படும் முன்பு சொன்னார்:
""நண்பனே, நீ ஏழையாக இருந்தாலும் நீ என்னை நல்ல முறையில் உபசரித்தாய். உனது அன்பும், அடக்கமும் எனக்குப் பிடித்திருக்கிறது. எனவே, நான் உனக்கு இந்தப் பூவை பரிசளிக்கிறேன். இது பார்வைக்கு சாதாரணப் பூவாகத் தெரிந்தாலும், உண்மையில் மந்திர சக்தி வாய்ந்தது. யாருக்கும் தெரியாமல் இந்தப் பூவால் எந்த இரும்பைத் தொட்டாலும் அது தங்கமாகிவிடும். ஆனால், இந்தப் பூ இரண்டு நாட்கள் மட்டும்தான் மலர்ச்சியாக இருக்கும். அந்த இரண்டு தினங்களுக்குள் நீ உனக்குக் கிடைக்கும் இரும்பை, தங்கமாக்கிக்கொள்ளலாம். இரண்டு தினங்களுக்குப் பிறகு இந்தப் பூ வாடிவிடும். வாடிவிட்டால் அதற்குச் சக்தி இருக்காது. இதைக் கவனமாக நினைவு வைத்துக்கொள்ள வேண்டும்.''
அவர் சென்ற பிறகு அந்தச் சோம்பேறி மனிதன் யோசித்தான். "ஓ! இன்னும் இரண்டு நாட்கள் இருக்கின்றன அல்லவா! நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம்.'
அன்று அந்த மனிதன் நன்றாக உறங்கினான். மறுநாள் எழுந்தபோது மதியப் பொழுதாகிவிட்டது. அப்போது, அவனுக்கு அந்த ஞானி சொன்னது நினைவுக்கு வந்தது. உடனே, எழுந்து நகரத்தில் உள்ள இரும்புக் கடையை நோக்கி ஓடினான். ஆனால், கடை பூட்டியிருந்தது. அன்று விடுமுறை நாள் என்பது அப்போதுதான் அவனுக்கு நினைவு வந்தது. அப்படி அந்த நாளும் கடந்து சென்றுவிட்டது.
மறுநாள் காலையிலேயே விழித்தெழுந்து அவன் நகரத்திற்குச் சென்றான். ஒரு டன் இரும்பு வாங்கினான். ஆனால், அவ்வளவு இரும்பையும் தனியாக வீட்டிற்கு எடுத்துச் செல்ல அவனால் முடியவில்லை. வண்டியும் கிடைக்கவில்லை, கூலிக்கும் ஆட்கள் கிடைக்கவில்லை. மாலைப் பொழுதானது. பக்கத்து கிராமத்திலிருக்கும் தன் சகோதரர்களை அழைத்து வருவதற்காக அவன் சென்றான். அங்கே சென்றபோதுதான், சகோதரர்கள் வெளியூர் சென்றிருப்பது தெரிய வந்தது. அந்த மனிதன் திகைத்துப் போனான். இன்னும் சற்று நேரத்தில் இருட்டிவிடும். இருட்டிவிட்டால் இரண்டு நாட்கள் முடிந்துவிடும். அப்புறம் அந்தப் பூவை வைத்து எதுவும் செய்ய முடியாது.
அவன் அவசர அவசரமாக மீண்டும் இரும்புக் கடைக்கு ஓடினான். எடுக்க முடிந்த அளவு இரும்பை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு விரைந்து ஓடினான். பல இடங்களிலும் தட்டுத் தடுமாறி விழுந்து எழுந்து கடைசியாக அவன் வீட்டை அடைந்தான்.
அப்போது, அந்த நாள் முடிந்துவிட்டது. பூவும் வாடிவிட்டது. ஞானியின் குரல் மட்டும் அவனுக்குக் கேட்டது, ""நண்பனே, உனக்கு வழங்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது. இனி அந்தப் பூவிற்கு எந்தச் சக்தியும் இல்லை. நீ குறித்த நேரத்தில் செயல்பட்டிருந்தால் உன் வீட்டின் வாயிற்படியில் உள்ள இரும்பையாவது தங்கமாக மாற்றியிருக்கலாமே! இது ஏன் உனக்குத் தோன்றவில்லை? இன்று செய்ய வேண்டியதை நாளைக்கென்று தள்ளி வைத்தால் இதுபோன்றுதான் நடக்கும்.''
Comments
Post a Comment