உழைக்காமல் முன்னேற முடியாது
அதிர்ஷ்டத்தால் முன்னுக்கு வர ஆசைப்படுகிறவர்கள், கோவில் கோவிலாகச் சுற்றி வந்தால் சாமிகள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு வந்து கொட்டிக் கொடுக்கும் என்று நம்புகிறவர்கள், இவர்கள் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா…?
தயவுசெய்து வெளியே வாருங்கள்.. உழைக்காமல் முன்னேற முடியாது.
உழைக்காமல் தற்காலிகமாக மேலே வந்தவர் ஒரு போதும் நிலைக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
சிலர் வாழ்வில் முன்னேற வேண்டும் எனப் பேச்சு அளவில் மட்டும் கூறிக் கொண்டு இருப்பார்களே தவிர செயல்பாடு ஒன்றும் இருக்காது.
அதற்குக் காரணம் உழைக்கும் நோக்கம் இல்லாதது. நாம் ஒரு செயலை எண்ணுவது பெரிதல்ல. அதை செயல்படுத்தி அதற்கேற்ப உழைக்க வேண்டும்.
உழைப்பிற்குப் பலன் நிச்சயம் கிடைக்கும். எந்த ஒரு செயலும் உழைத்தால் தான் நிறைவு பெறுகிறது.
ஊரிலேயே பெரிய ஆலமரம்.அதற்குக் கீழே ஒரு திண்ணை.அந்தத் திண்ணையிலே வெட்டியாக உட்கார்ந்து இருப்பதே பெரிய வேலையாக ஒருவன் செய்து வந்தான்.
அவன் வேலை அந்தத் திண்ணையில் உட்கார்ந்து கால் ஆட்டிக் கொண்டே இருப்பது.. வெட்டியாய்ப் பேசிக் கொண்டு இருப்பது. சோறும் அப்படித் தான் கிடைச்சா சாப்பிடுவது என இருந்தான்.
இதுவே ரொம்ப நாளாய் நடந்து கொண்டு வந்தது. அவனைக் கொஞ்ச நாட்களாய் கவனித்து வந்தப் பெரியவர்
அவனிடம் போய்,தம்பி, இப்படி இங்கே உட்கார்ந்து கொண்டு வெட்டியா கால் ஆட்டிக் கொண்டு இருப்பதை விட, காஞ்சிபுரம் போய் கால் ஆட்டுனாலும் வேலைக்குச் சோறு கிடைக்கும் எனச் சொன்னார்.
அவன் உடனே அப்படியா? காஞ்சிபுரத்துல கால் ஆட்டுனாலே சோறா? என நடந்தே நாலு நாள் கழிந்து காஞ்சிபுரம் வந்து சேர்ந்தான்.
வந்த உடனே ஒரு நல்ல திண்ணையாகப் பார்த்து உட்கார்ந்து ,தன் வேலையைத் தொடங்கினான்.
இரவு வரை காலை வெட்டியாக ஆட்டிக் கொண்டே இருந்தான், யாரும் இவனைக் கண்டு கொள்வதாக இல்லை.
அப்போது அங்கே வந்த ஒருவரிடம் ஊரில் நடந்ததைக் கூறி, சோறும் கிடைக்கும் என்றார் ஒன்றும் கிடைக்கவில்லையே என்றான்.
உடனே,அவர் அவனிடம்,
இது காஞ்சிபுரம் இங்கே பட்டுத் தொழில் மிக அதிகம். அதனால் நீ அந்தத் தொழில் செய்யும் போது காலைக் கொண்டு செய்ய வேண்டிய வேலை என்பதைத் தான் அந்தப் பெரியவர் அப்படி உனக்குக் கூறி உள்ளார்.
நல்ல கால் இருந்தும் பிச்சை எடுக்க நினைக்கும் உன் எண்ணத்தை என்ன சொல்வது? என்றார்.
உழைக்காமல் வாழலாம் என நினைத்த அவன் எண்ணமே, அவனைச் செருப்பால் அடித்தது போலத் தோன்றியது..
ஆம்.,நண்பர்களே..
ஒருவரின் உழைப்பு என்றுமே வீணாவது இல்லை. அவன் எதிர்பார்த்த பலன் உடனே கிடைக்காமல் இருக்கலாம்.
பலன் கிடைக்கவில்லையே என்று மனம் தளர்ந்து உழைப்பதை விட்டுவிடக் கூடாது.
தொடந்து உழைத்து வந்தால் பெரிய பெரிய வெற்றிகளை நம்மால் பெற முடியும்..
(ஆக்கம். உடுமலை சு.தண்டபாணி).💐💐💐
Comments
Post a Comment