Habits we need to break - உடைத்தெறிய வேண்டிய பழக்கங்கள்..!
இளைஞர்கள் உடைத்தெறிய வேண்டிய சில பழக்கங்கள், செயல்பாடுகள் இருக்கின்றன
1. வலைதள உலாவல்
நம்மில் பலருக்கும் இன்று விரல் நுனியில் இணைய வசதி இருப்பதால் மனதில் சிறு கேள்வி உதித்தால்கூட செய்யும் வேலையை அப்படியே போட்டுவிட்டு ‘தேடி ஆராய’ ஆரம்பித்துவிடுகிறோம். இவ்வகையான தேடல்கள் நேரத்தை விரயமாக்கி, நம் வேலையையும் பாதிக்கும். இதை தவிர்க்க, வேலை நேரத்தில் தோன்றும் கேள்விகளையெல்லாம் ஒரு நோட்பேடில் குறிப்பெடுத்து வைத்துக்கொண்டால், ஓய்வு நேரத்தில் இந்த ஆற்றல் நிறைந்த தேடலில் ஈடுபடலாம்.
2. ஒரே நேரத்தில் பல வேலைகள்
இது பெரிய திறமை எனக் கருதி நம்மில் பலரும் ஒரே நேரத்தில் இரண்டு வேலைகள் செய்வதுண்டு. ஆனால் அறிவியல் ஆராய்ச்சியின்படி 2 சதவிகித மக்களே இந்த மல்டி டாஸ்க்கிங்கில் சிறப்பாக செயல்படுவதாக கூறப்படுகிறது. மற்றவர்கள் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என அநாவசிய சாகசங்களைக் குறைத்தால் சிறப்பாக செயல்பட முடியும்.
3. மெசேஜ், ஈ-மெயில்களை கண்காணிப்பது
இது ஒரு வகையான மயக்கமாகவே மாறிவிட்டது. இந்தப் பழக்கம் வேலையை மட்டுமல்ல மனநிலையையும் பாதிப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
4. காரணம் தேடுதல்
ஒரு வேலையை தொடர்ந்து செய்ய வேண்டும் என முடிவு செய்திருப்போம். ஆனால் அதை மறந்தால் அதற்கு நமக்கு நாமே காரணம் சொல்லிக்கொண்டு, எடுத்த செயலை அப்படியே விட்டுவிடுவோம். தினமும் அதிகாலை எழ வேண்டும் என்ற நம் புத்தாண்டு உறுதிமொழி போல. இப்படி நாம் காரணங்கள் சொல்லி கழட்டிவிட்ட காரியங்களே நமக்கு பெரிய தடையாக அமைந்திருக்கும்.
5. அநாவசிய சந்திப்புகள்
ஆன்லைனிலேயே பல வேலைகளை முடிக்கும் நவீன டெக்னாலஜி காலத்தில், தேவையில்லாத நேரடி சந்திப்புகளை குறைத்துக் கொள்ளலாம். தெளிவில்லாத சந்திப்புகள் தவிர்க்கப்பட வேண்டியவை ஆகும்.
6. ஒத்திவைத்தல்
அப்புறம், பிறகு, நாளை என தள்ளிப்போட்டு பல காரியங்கள் ஒரேயடியாகக் காணாமல் போன கதைகள் உண்டு. அதேபோல் சுலபமான வேலைகளை முதலில் முடித்துவிட்டு கடினமானதை கடைசியில் செய்வோம் எனவும் மறந்து விடுவோம். இது தவிர்க்க வேண்டிய முக்கிய பழக்கமாகும்.
7. உட்கார்ந்திருப்பது
வீடோ அல்லது அலுவலகமோ ஒரே இடத்தில் அமர்ந்திருக்காமல் அவ்வப்போது சிறிது தூரம் காலாற நடப்பது, கணினித் திரையை விட்டு கண்களுக்கு ஓய்வு கொடுப்பது நல்ல புத்துணர்ச்சியை தரும்.
8. முக்கியத்துவம் அளித்தல்
நிறைய குறிக்கோள்கள் இருப்பதில் தவறில்லை. ஆனால் அவைகளின் முக்கியத்துவம் உணர்ந்து செயல்படுவது வாழும் நாட்களை அர்த்தமுள்ளதாக்கும்.
9. பொய் தூக்கம்
படுக்கையில் ‘இன்னும் 5 நிமிஷம்’ என்று எழுந் திருக்க மனமில்லாமல் புரள்பவர்களில் பெரும்பாலானோருக்கு அப்பழக்கம், கூடுதல் எனர்ஜி, மேம்பட்ட சிந்தனையை வழங்கும் என நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. நிறைவான இரவுத் தூக்கமும் அதிகாலை கண் விழிப்பும் சிறந்ததொரு நாளை தரும்.
10. ஓவர் பிளானிங்
லட்சிய வெறி கொண்டோர் ஒரு நிமிஷத்தைக் கூட வீணாக்கமாட்டேன் என்ற பெயரில் தீவிரமாக பிளான் போட்டு செயல்படுவர். தங்கள் திட்டத்தில் சின்ன தடங்கல் ஏற்பட்டால் கூட சோர்ந்துவிடுவார்கள். இது பெரிய தடை.
11. திட்டமிடல் இல்லாமை
எந்த திட்டமும் இல்லாமல் வாழ்க்கையில் போகிற போக்கில் வென்று விட முடியாது. இந்த எல்லையும் ஆபத்தானதே. லட்சியமில்லா வாழ்க்கை சுவாரசியமற்றதாகிவிடும்.
12. செல்போனை சார்ந்திருத்தல்
எல்.இ.டி. ஸ்கிரீன்கள் கொண்ட செல்போன், லேப்டாப் போன்றவை வெளியிடும் ஒளி கண் திரையை பாதிக்கக்கூடியவை. தூங்கும் போது கூட செல்போனை தலைமாட்டில் வைத்து தூங்குவோர் தான் அதிகமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
13. எல்லாம் பெர்பெக்ட்
எல்லா காரியத்திலும் நேர்த்தியை எதிர்பார்ப்போர் செயல்படுவதை காட்டிலும் வேலையை தள்ளிப்போடுபவராகவே உள்ளனர். நேர்த்தி எல்லா விஷயத்திலும் கிடைத்துவிடாது. எல்லோராலும் ‘மிஸ்டர். பெர்பெக்ட்’ ஆக முடியாது. வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளையும் கற்றுக்கொள்ள வேண்டும்..
Comments
Post a Comment