ஹெல்த் பழமொழியும் அதன் பொருளும்
1. அகப்பை குறைத்தால் கொழுப்பை அடக்கலாம்.
அகப்பையான இரைப்பைக்குச் செல்லும் உணவை அளவு மற்றும் திறனறிந்து குறைத்தால் மட்டுமே கொழுப்பை அடக்கலாம்.
2. உப்பு அறியாதவன் துப்பு கெட்டவன்
உணவில் அளவோடு உப்பு சேர்த்தால் பசியைச் சீராக்கும். ஜீரணிக்கும். அதிகப்பட்டால் உமிழ்நீரை அதிகரித்து குமட்ட வைக்கும்.
3. இன்று விருந்து நாளை உபவாசம்
இப்படி இருந்தால் வயிற்று உப்புசம், செரியாமை, அதைத்தொடரும் வயிற்றுப்புண் நோய்களைத் தவிர்க்க முடியும். உபவாசம் என்றால் பட்டினியிருத்தல் மட்டுமல்ல. தேவைப்படின் பழஆகாரம் சாப்பிடுவதும்தான்.
4. கடுக்காய்க்கு அக நஞ்சு; இஞ்சிக்கு புற நஞ்சு
கடுக்காயைப் பயன்படுத்தும்போது உள்ளிருக்கும் கொட்டையை நீக்கிவிட வேண்டும். இஞ்சி, சுக்கு உபயோகிக்கும் போது அதன் மேல் தோலை நீக்கிவிட வேண்டும்.
5. எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளைத் தாய்க்கும் எட்டே கடுக்காய்.
மலச்சிக்கலுக்கும் அண்மையில் பிரசவித்த தாய்க்கும் உள் மூலத்துக்கும் கடுக்காய் ஒரு சிறந்த மருந்து, மலத்தை இளக்க கடுக்காய்ப் பிஞ்சை பயன்படுத்தவேண்டும்.
6. எருதுக்குப் பிண்ணாக்கு, ஏழைக்கு கரிசாலை.
எருதுக்கு உணவாக அமையும் பிண்ணாக்கு போல, ஏழைக்கு எளிதில் கிடைக்கும் உணவு கரிசாலைக் கீரை. குறைந்த விலையில் நல்வாழ்வு தரக்கூடியது.
7. பொன்னை எறிந்தாலும் பொடிக்கீரையை எறியாதே.
பொன்னால் அழகு சேர்க்க முடியும். பொடிக் கீரைதான் ஆரோக்கியம். அதிலும் பொன்னாங்கன்னிக்கீரை தங்கச் சத்து உடையது.
8. வாழை வாழ வைக்கும்:
வாழைப்பழம் உடலைத் தேற்றும் வாழைக்காய் மந்தம் என்றாலும் அளவறிந்து சாப்பிட்டால் உடலுக்கு ஊட்டம் தரும். சிறுநீரகக் கல்லை வாழைப்பூ நீக்கும். சிறுநீரை வாழைத்தண்டு பெருக்கும்.
9. வெங்காயம் உண்போருக்கு தங்காயம் பழுதில்லை:
உடல் இயந்திரத்துக்கு வரும் முக்கிய நோயான உயர் ரத்த அழுத்தத்தை வெங்காயம் கட்டுப்படுத்தும்.
10. கடுகு சிறுத்தாலும் காரம் போகாது
கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி நிவாரணியாக செயல்படும்.
11. உடம்பை முறித்துக் கடம்பில் போடு
உடல் வலியைப் போக்கி ஓய்வையும் உறக்கத்தையும் இயல்பிலேயே வரவழைக்கும் தன்மை கடம்பு மரத்திற்குத்தான் உண்டு.
12. அறுகம்புல்லும் ஆபத்துக்குதவும்:
திடீர் வண்டுக்கடி, ஒவ்வாமை என்ன கடித்ததென்றே தெரியாமை இவற்றிற்கு அறுகம்புல் ஒரு நச்சு நீக்கி, இது விஷத்தை முறிக்கும் தன்மையுடையது.
13. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு:
பெண்கள் அளவுக்கதிகமாக சாப்பிட்டால் அவர்களின் இடைப்பகுதி பெருத்து அழகுகெட்டுவிடும்.
14. ஆலை இல்லா ஊரில் இலுப்பைப்பூ சர்க்ரை.
கரும்பில் இருந்துதான் சர்க்கரை என்றல்ல இலுப்பைப் பூவையும் சர்க்கரையாக பயன்படுத்து வோர் உண்டு.
Comments
Post a Comment