உங்கள் வீட்டில் பணம் செழிக்க..

 டந்த சில மாதங்களாக உலகளவில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி எல்லோரையும் பயமுறுத்தி வருகிறது. இன்று இருக்கும் வேலை, நாளை இருக்குமா என்ற சந்தேகத்திலேயே பலர் நாட்களை கடத்துகின்றனர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கை கொடுப்பது சேமிப்பு பழக்கம்தான்! சேமிப்பு என்பது பணம் மட்டுமல்ல.. அது பல வழிகளிலும் இருக்கலாம். இதோ, நிரூபிக்கப்பட்ட 25 ரகசியங்கள்..


1. வங்கிகளில் இருக்கும் பணம்..
சாதாரணமாக சேமிப்பு என்றதும், வங்கியில் ஒரு சேமிப்பு கணக்கு தொடங்கி அதில் பணம் போட்டு வருவதுதான் நினைவுக்கு வரும். ஆனால், சேமிக்கும் பணம் முழுவதும் சேமிப்புக் கணக்கிலேயே இருந்தால் அது எந்தவிதமான பயனையும் தராது. அவசரத் தேவைக்கு எவ்வளவு பணம் தேவையோ அதை மட்டும் சேமிப்புக் கணக்கில் வைத்துவிட்டு, மீதமுள்ள பணத்தை பிக்சட் டெபாசிட்டில் போடுவதுதான் உத்தமமான காரியம். அது, அதிக வட்டி மற்றும் வருமானத்தைப் பெற்றுத் தருவதால் பணம் பெருக வழி வகுக்கும். பல வங்கிகளில் ‘ஃப்ளெக்ஸி டெபாசிட்’ என்று உள்ளது. அதில் போட்டு வைத்தால் அவர்களே நிரந்தர வைப்புக் கணக்கிற்கு மாற்றி விடுவார்கள்.
2. ரெகரிங் டெபாசிட் நல்ல சாய்ஸ்!
மாதாமாதம் ஒரு சிறிய தொகையை ரெகரிங் டெபாசிட்டில் போட்டால் அது வளரும் விதத்தைப் பார்த்தால், உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். ஒரு சிறிய உதாரணம்.. ‘மாதம் 500 ரூபாய் 20 வருடத்திற்கு போட்டு வருவீர்கள்; அது 10 சதவீதம் வட்டி பெறுகிறது’ என்று வைத்துக்கொண்டால், அந்த 20 வருடம் முடிவில் உங்களுக்கு கிடைக்கும் தொகை எவ்வளவு தெரியுமா? சுமார் 3,78,000 ரூபாய்-. நம்ப முடிகிறதா? சேமிப்புக்கு ரெகரிங் டெபாசிட் நல்ல சாய்ஸ்!
3. ஆன்லைன் வங்கி வசதியை பயன்படுத்துங்கள்!
பல வங்கிகளில் ஆன்லைன் பாங்கிங் வசதி உள்ளது. அதைப் பெற்றுக்கொண்டு விட்டால் அதன் மூலமாகவே கிரெடிட்கார்டு பில், டெலிபோன் பில், எலக்டிரிசிட்டி பில் போன்ற பல பில்களையும் கட்டிவிடலாம். இதனால், செக் எழுதி அதைக் கொண்டு போய் போட ஆகும் போக்குவரத்து செலவு, கியூவில் நிற்கும் நேரம்.. எல்லாமே மிச்சம்!
4. வங்கிக் கடனில் வாங்குங்கள் வீடு!
வீடு வாங்குவது என்றால், வங்கிக் கடன் பெறுவது நல்லது. அதன் வட்டியின்மீது கிடைக்கும் வருமான வரிச் சலுகையே ஒரு வகையில் பெரிய ஒரு சேமிப்புதான்!
5. மருத்துவ இன்ஸ்யூரன்ஸ் அவசியம்!
உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் மருத்துவ இன்ஸ்யூரன்ஸ் எடுத்திருந்தால் நலம். இல்லாவிடில் கட்டாயம் இன்ஸ்யூரன்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். மருத்துவ இன்ஸ்யூரன்ஸ் இல்லாத பட்சத்தில் இன்றைய சூழலில் குடும்பத்தில் ஒருவருக்கு ஏதாவது ஆகிவிட்டால் காலம் காலமாக சேமித்து வைத்திருந்த பணமெல்லாமே காணாமல் போகிவிடும். உஷார்! மேலும், இதற்காக செலுத்தும் இன்ஸ்யூரன்ஸ் பிரிமியம் தொகைக்கு 15,000 ரூபாய் வரை வருமான வரிச் சலுகையும் கிடைக்கும்.
6. கிரெடிட் கார்டில் கவனம் தேவை!
கிரெடிட் கார்டு வைத்திருப்பதால் உள்ள பலன்கள், அதன் டியூ கட்டுவதில் ஒரு முறை தாமதமாகி அபராதம் கட்டினாலே காலியாகி விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கிரெடிட் கார்டு செலவுகளை தனியாக எழுதி வைத்து, மாதம் ஒரு முறை அதற்கான தவணை தேதிக்கு முன்னர் கட்டிவிட மறக்கவேண்டாம்.
7. காய்கறி, மளிகை சாமான்கள்..
நமது மாதாந்திர பட்ஜெட்டில் முக்கிய இடம் பெறுவது காய்கறி, மளிகை சாமான்கள் தான். அதில் மிச்சம் பிடித் தாலே நிறைய ரூபாய் சேமிக்க முடியும். சோம்பேறித்தனம் காரணமாக, விலை சிறிது அதிகம் இருந்தாலும் அருகில் உள்ள கடைகளிலேயே காய்கறிகள் வாங்குகிறோம். இதில் தினசரி 3 ரூபாய் கூடுதலாக கொடுக்கிறோம் என்றாலும், வருடத்திற்கு 1. ,080 ரூபாய் நஷ்டம்! இதையே 25 வருடங்களுக்கு வட்டியோடு கணக்கு போட்டால்.. மூன்று லட்ச ரூபாய்க்கு மேல் வரும். நடந்துசென்று அருகிலுள்ள மார்க்கெட்டில் வாங்கினால் பர்ஸுக்கும் நல்லது. உடம்புக்கும் நல்லது.
8. லிமிடெட் பிக்னிக்!
இன்றைய இளைய தலைமுறை ஒவ்வொரு வார இறுதியிலும் பிக்னிக் செல்வது, அதுவும் தங்களுடைய சொந்த பைக் அல்லது கார்களிலேயே செல்வது வாடிக்கையாகி விட்டது. பிக்னிக் வேண்டாம் என்பதில்லை. வாரம் ஒரு முறை என்பதை மாதம் ஒரு முறை என்று மாற்றிக் கொள்ளலாம். அதுவே நல்ல சேமிப்பை தரும்.
9. நடக்கலாம்..தப்பில்லை!
தற்போது சிறிய தூரத்திற்குகூட ஆட்டோ என்று கூப்பிடும் அளவிற்கு வந்துவிட்டோம். பஸ்சுக்குகூட நிற்பதில்லை. குறைந்த தூரத்திற்கு நடை.. சிறிது அதிகமான தூரத்திற்கு பஸ் என்று பழக்கப்படுத்திக் கொள்வது நல்லது. அதேசமயம், மூன்று பேர் போகும்போது ஆட்டோவில் செல்லலாம். 6 அல்லது 7 பேர் என்றால் கால் டாக்ஸியும் தவறில்லை.
10. பிராண்டட் சட்டையா..?
பெரிய கடைகளில் அட்டைப் பெட்டி களில் மடித்து வைக்கப்பட்டிருக்கும் பிராண்டட் சட்டைகளின் அழகில் அதன் அதிகபட்ச விலையை மறந்து விடுகிறோம். ஏன் கடையில் துணிகள் வாங்கி, தைத்து உடுத்தக் கூடாது. அது பெரிய அளவு சேமிப்பைத் தரும். ரெடிமேட் தான் எடுப்பேன் என்றால், தள்ளுபடி விற்பனைகளை கவனித்து எங்கு நல்ல தள்ளுபடி கிடைக்கிறது என்று பார்த்து வாங்குங்கள் (தள்ளுபடியில் வாங்குவது எல்லாம் மட்டமான சரக்கு என்ற எண்ணம் வேண்டாம். அதிகப்படியான சரக்குகள், தையலில் ஏற்பட்ட சிறிய தவறுகள் போன்று உள்ள ரெடிமேட் ஆடைகள்தான் தள்ளுபடி விற்பனைக்கு பெரும்பாலும் வரும்). தற்போது 50 சதவிகிதம் வரை தள்ளுபடியில் பல கம்பெனிகள் விற்பனை செய்கின்றன. அவற்றைத் தேடிப்பிடித்து வாங்குவது உசிதம்.
11. குழந்தைக்கு டிரெஸ் வாங்குகிறீர்களா?
குழந்தைகளுக்கு துணிமணிகள் வாங்கும்போது அவர்களையும் கூட்டிச் சென்று வாங்குவதுதான் உத்தமம். இந்தக் கால குழந்தைகள் முன்பு போல இல்லை. தங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் போடவே மாட்டார்கள். எதற்கு அநாவசிய செலவு?
12. கரன்ட் பில் ஷாக் அடிக்குமே!
கரன்ட்டை தொட்டால்கூட பலருக்கு ஷாக் அடிக்காது. மாதா மாதம் கரன்ட் பில் வந்தவுடன்தான் ஷாக் அடிக்கும். தேவையற்ற விளக்குகளை அணைத்து விடுவதே, பெரிய சேமிப்பை தரும். கிராமப் புறங்களில் மாடுகள் வைத்திருப்பவர்கள் கோபர் கேஸ் (சாண எரிவாயு) அமைத்து இன்னும் எரிபொருள் செலவுகளை மிச்சப் படுத்தலாம். ப்ளாட்டுக்களில் குடியிருப்பவர்கள் ‘சூரிய சக்தி’ பற்றி கட்டாயம் சிந்திக்க வேண்டும். இவற்றுக்கு அரசாங்க மானியங்களும் கிடைக்கின்றன.
13. டெலிபோன் உபயோகிக்கும்போது..
தற்போது குடும்ப பட்ஜெட்டில் பெரிய ஓட்டை போடுவதில் போன் பில்லுக்கும் பெரும் பங்கு உண்டு. ஆளுக்கு ஒரு மொபைல் போன்.. ஐந்து நிமிடம் தாமதமாக வந்தாலே பத்து போன் கால்கள்.. பில் எகிறாமல் என்ன செய்யும்? போன் செய்யும் முன்பு அந்த கால் அவசியம் தானா என்று யோசியுங்கள். வெளிநாடுகளுக்கு போன் செய்வதாக இருந்தால், இன்டர்நெட் மூலமாக பேசுவது செலவை குறைக்கும். இணைய பரிச்சயம் உள்ளவர்கள் முடிந்த அளவு ஈமெயில் பயன்படுத்தலாம். சொல்ல வேண்டியதை அழுத்தம் திருத்தமாகக் கூறவும் முடியும். செலவும் குறைவு.
14. புதிய ஃபர்னிச்சர் வாங்கப் போகிறீர்களா?
முன்பெல்லாம் வீட்டுக்கு பர்னிச்சர் வாங்குவது என்றால், அது காலா காலத்துக்கும் வரவேண்டும் என்று நினைப்போம். தேக்கு, கருங்காலி, ரோஸ் வுட் என்று பார்த்துப் பார்த்து வாங்கி, அதை நமது ஆசாரி ஒவ்வொரு இழையும், இழைக்கும்போதும் அருகில் இருந்து கவனிப்போம். இந்த வேகமான காலத்தில் நமக்கு ஆசாரி பின்னால் செல்ல நேரம் இல்லை. நமது ஆசாரி என்று சொல்லப் படுபவரும் தற்போது யாருக்கும் இல்லை. குறைந்தபட்சம் அடுத்த ஃபர்னிச்சர் வாங்கும்போதாவது, ‘வாங்கும் ஃபர்னிச்சர் ஐந்து வருடம் உழைத்தாலே போதும்; மறுபடி புதியது வாங்கிக் கொள்ளலாம்’ என்ற எண்ணத்தையாவது துறந்துவிட்டு, காலத்திற்கும் உழைக்குமா என்று பார்த்து வாங்குங்கள்.
15. வீட்டு வாடகையில் வருவாய்!
தற்போது போக்கு வரத்து வசதிகள் எவ்வளவோ மேம்படுத்தப்பட்டிருக் கின்றன. அதை வைத்து வீட்டு வாடகையைக் குறைக்கலாமே! சென்னையைப் பொறுத்தவரை, மின்சார ரயில்கள் நகரின் கடைசி வரை இணைக்கின்றன. நகரின் மத்தியில், ரயில் நிலையத் திலிருந்து தள்ளி குடியிருக்கிறீர்கள் என்றால், நகரின் கடைசிக்கு.. ஆனால், ரயில் நிலையத்துக்கு அருகில் வீட்டை மாற்றிக் கொள்வது நல்லது. நகரின் கடைசியில் இருந்தாலும், அந்த வீடு ரயில் நிலையத் திற்கு அருகிலேயே இருப்பதால், போக்கு வரத்து செலவு, பயண நேரம் இரண்டிலும் ஒரே செலவாகத்தான் இருக்கும். ஆனால், அங்கு நீங்கள் செலுத்தும் வீட்டு வாடகை குறைவாக இருக்கும். அது எவ்வளவு சேமிப்பை தருமே!
16. கையில் கூடுதலாக பணம் இருக்கிறதா? கடன்களை திருப்பிச் செலுத்துங்கள்!
கையில் அதிகப்படியான பணம் இருக்குமானால் வாங்கிய கடன்களை அடைப்பது நல்லது. கடன்கள் குறைந்தால் மனதில் சுமை குறையும். பணத்தை கையில் வைத்துக் கொள்வது மட்டுமல்ல.. கடனை அதிக வட்டியில் வைத்துக் கொள்வதும் ஆபத்துதானே!
17. விருந்துகள்.. வீட்டில் நடக்கட்டுமே!
‘நண்பர்களுக்கு விருந்து கொடுக்கிறேன்’ என்பது ஒரு பெரிய செலவுதான். பிறந்த நாள், கல்யாண நாள் என்று. ஏன் இவற்றையெல்லாம் வீட்டிலேயே கொண்டாடி மகிழக் கூடாது. வருபவர்களுக்கு ஏன் வீட்டிலேயே சமைத்து பரிமாறக் கூடாது. செலவும் குறைவு. வருபவர்கள் வயிறும் குளிர்ந்து உங்கள் சமையல் திறமையையும் பாராட்டுவார்களே! அதோடு, அலுவலகத்துக்கு செல்லும்போது கையில் ‘லன்ச்’ கொண்டு செல்லுங்கள். ‘வெளியில் சாப்பிட்டுக்கறேன்’ என்று போனால், அது பெரிய அளவில் செலவை இழுத்துவிடும் ஆபத்து இருக்கிறது.
18. வெஜிடேரியனா? நான்&வெஜிடேரியனா?
‘நான்&-வெஜிடேரியன்’ என்றால் வெஜிடேரியனுக்கே மாறிவிடுவது சேமிப்புக்கு மட்டுமல்ல, உடலுக்கும் நல்லது. மாற முடியாதவர்கள் வாரம் ஒருமுறை தான் ‘நான்-வெஜ்’ என்று ஒரு எல்லை வைத்துக் கொள்ளலாம்.
19. தவிர்க்க முடியாத பள்ளிக் கட்டணம்!
பிள்ளைகளின் பள்ளிக் கட்டணங்கள் தவிர்க்க முடியாதவைதான். உங்கள் பிள்ளைகள் தனியார் பள்ளிகளில் படித்து, அங்கே கட்டணங்கள் அதிகரித்து வரும் வேளையில், பெற்றோர் ஆசிரியர் கழக மீட்டிங்குகளில் அந்தக் கட்டண உயர்வு பற்றி கூற மறக்காதீர்கள். அது அந்த நிர்வாகத்தை ‘இரண்டு பேர் கேள்வி கேட்கிறார்களே’ என்று கவனிக்க வைக்கும். கட்டணங்களை கூட்டும் முன்பு சிறிதாவது யோசிப்பார்கள்.
20. கடன் வாங்கி முதலீடா?
பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அல்லது தங்கத்தில் முதலீடு செய்ய என பலர் கடன் வாங்குகிறார்கள். தற்போது உலகளவில் பொருளாதார சூழ்நிலை சரியில்லாததால் கடன் வாங்கி முதலீடு செய்வது அத்தனை உகந்ததல்ல.
21. டியூசன் எடுக்கலாமா?
சில இல்லத்தரசிகள் நன்கு படித்து வேலை பார்க்காமல் இருக்கலாம். டியூசன் எடுப்பது அவர்களுக்கு ஒரு நல்ல பார்ட் டைம் வேலை! பெரிய நகரங்களில் சப்ஜெக்ட் வாரியாகவே டியூசன் எடுக்கிறார்கள். எந்த சப்ஜெட்டில் உங்கள் நீங்கள் திறமைசாலியோ அந்த சப்ஜெட்டை எடுக்கலாம். டியூஷன்தான் என்றில்லை.. பொழுதுபோக்காக நீங்கள் கற்று வைத்திருக்கும் விஷயங்களை அசைபோட்டு பாருங்கள்.. அதிலேயே கூட அட்டகாசமான வருவாய் தரும் சூட்சுமம் ஒளிந்திருக்கும்.
22. குழந்தைகளுக்கு சேமிப்பை கற்றுக் கொடுங்கள்!
நீங்கள் சேமிப்பதோடு உங்கள் பிள்ளைகளுக்கு சேமிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டியதும் முக்கியம். அவர்களுக்கு மாதாமாதம் தேவையான அளவு பணம் கொடுத்து அவர்களின் செலவுகளை அவர்களையே செய்துவரச் சொல்லுங்கள். இது நிச்சயமாக நல்ல பலன்களை தரும். நீங்கள் அசந்துபோகும் அளவுக்கு நிறைய சேர்த்து வைத்திருப்பார்கள்!
23. அடுத்தவர் என்ன நினைப்பார்?
அடுத்தவர் என்ன நினைப்பார் என்ற நினைப்பிலே நாம் பெரும்பாலும் அதிகம் செலவழிக்கிறோம். அதைத் தவிர்த்தாலே ஒரு பெரிய சேமிப்பு ஏற்படும்.
24. செலவு செய்யும் முன்பு ஒரு நிமிடம் யோசியுங்கள்!
எந்த செலவையும் செய்யும் முன்பு ‘இது தேவையான செலவுதானா?’ என்று ஒரு நிமிடம் யோசியுங்கள். தேவைப்படாத எந்த ஒருபொருளையும் மிகமிக குறைந்த விலையில் கிடைத்தாலும் வாங்காதீர்க்ள். அதேபோல், எந்த ஒரு செலவிலுமே நம் தேவைக்கு சிறிதும் குறைவு வைக்காத.. ஆனால் சேமிப்பை தரும் விஷயங்கள் இருக்கின்றன. கவனித்து செயல்படப் பாருங்கள்!
25. கிரியேட்டிவ்&ஆக இருங்கள்!
எந்த ஒரு விஷயத்திலும் கிரியேட்டிவ்வாக இருப்பதே ஒரு வகையில் சேமிப்பைத் தரும். ‘அவுட்டிங்’ போவதற்கு பதிலாக வீட்டிலேயே குடும்பத்தினரோடு புதுமையான ‘இன்டோர்’ கேம்ஸ் விளையாடுவது, எல்லாவற்றையும் குப்பை என வெளியே தள்ளாமல் அதில் பயன்படுத்த வழிகள் பார்ப்பது.. இவற்றாலும் வீட்டில் பணம் செழிக்கும்.
-சேதுராமன் சாத்தப்பன்

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ