வேலை இல்லையா? கவலை வேண்டாம்.. இனி சுயதொழில் தான் எதிர்காலமே!

 வேலை இல்லையா? கவலை வேண்டாம்.. இனி சுயதொழில் தான் எதிர்காலமே!


சென்னை :கொரோனாவால் பலர் வேலை இழந்து வீட்டில் முடங்கி கிடக்கிறார்கள். நிறைய பேர் மீண்டும் பழைய படி வேலைக்கு செல்ல எத்தனை மாதங்கள் ஆகும் என்பது தெரியாத நிலை இருக்கிறது. இந்த சூழலில் சுயதொழில் செய்யலாமா என்று பலரும் எண்ணிக்கொண்டிருப்பீர்கள். கவலை வேண்டாம். இனி சுயதொழில் தான் எதிர்காலமே.

பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை கொரோனா லாக்டவுன் காரணமாக மூடப்பட்டன. இதனால்அந்த நிறுவனங்கள் நஷ்டத்தை குறைக்க ஆட்குறைப்பு நடவடிக்கையை கையில் எடுத்தன. இதனால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்துவிட்டார்கள்.

இந்நிலையில் தமிழகத்தில் பெரிய நகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரை பெரும்பாலான கடைகள் போதிய வருவாய் இல்லாததால் நிறைய பேரை வேலைக்கு வர வேண்டாம் என்று சொல்லிவிட்டன. இப்போது வருமானம் இல்லாமல் அவர்களும் தவிக்கிறார்கள்..

வாழ்வாதாரம் இழப்பு

நாட்டில் வேலை இல்லாத திண்டாட்டம் உருவாகும் சூழலுக்கு கொரோனா வித்திட்டுள்ளது. இப்போதைய சூழலில் அவரவருக்கு தெரிந்த வகையில் ஏதேனும் சுயதொழில் செய்யலாம் என ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே அவர்களுக்கான இந்த பதிவு. ஒரு நாள் விபத்தில் உடல் உறுப்புகளை இழந்தவர்கள் போல் பலர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளில் வேலை பார்த்த பலரும் வேலையை இழந்து தவித்து வருகிறார்கள். இப்போதைய வேலையில்லாத திண்டாட்ட நிலை கொரோனாவை விட கொடியதாக இருக்கிறது.

பிடித்த தொழிலை செய்யுங்கள்

எனவே வேலை போய்விட்டதே என்று முடங்கிவிடாமல் மாறி இருக்கும் புதிய உலகிற்கு தக்கப்படி உங்களது தகுதியையும் திறனையும் வளர்த்துக் கொள்ளுங்கள். ஆபிஸில் போய் பார்க்கும் உத்தியோகத்தில் தான் கௌரவம் அடங்கி இருக்கிறது என்று எண்ணாமல் பிடித்த தொழிலை செய்யுங்கள். ஆனால் அதில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்ளுங்கள். இந்த தொழில் செய்தால் லாபம், அந்த தொழில் செய்தால லாபம் என்று எண்ணாமல் எந்த தொழிலை செய்தால் நீங்கள் சிறப்பாக வருவீர்கள், எதை பற்றிய புரிதல் உங்களுக்கு அதிகம் என்பதை பார்த்து செய்யுங்கள்.

தேவைகள் அதிகரிப்பு

நாட்டில் ஏராளமான புதிய தொழில்களுக்கான வாய்ப்புகளும் தேவைகளும் உருவெடுத்துள்ளன. மத்திய, மாநில அரசுகளும் சிறு, குறு தொழிலை ஊக்கப்படுத்தப் பல்வேறு கடன் உதவிகளை வழங்க முன்வந்துள்ளன. எனவே இதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இன்றைய சூழலில் ஆப்லைன் ஆன்லைன் என இரண்டிலும் மக்களை சென்றடையும் வகையில் தொழிலை மாற்றிக்கொள்ளுங்கள் அப்படி செய்தால் தான் ஜெயிக்க முடியும்.

எலுமிச்சை மொத்த வியாபாரி

ஆப்லைன் தொழில் ஒன்றை சொல்கிறேன். எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் காய்கறியை சாலையின் ஓரத்தில் கொட்டி வியாபாரம் செய்து வந்தார். அவர் விவசாயிகளிடம் நேரடியாக சென்று அதிகமாக எலுமிச்சை வாங்கி வியாபாரம் செய்து வந்தார்.. கேரளா சென்ற வியாபாரி ஒருவர் திடீரென நின்று பார்த்து எவ்வளவு என்று கேட்டார். குறைவான விலை சொன்ன உடன் தினமும் அனுப்ப முடியுமா? என்று கேடடார் . உடனே சரி என்றார் நண்பர். அவருக்கு எழுமிச்சையை அனுப்பி வைத்தார். இதேபோல் பலரையும் தேடி சென்று நான் தருகிறேன் என்று ஆர்டர்பிடித்தார். விளைவு அடுத்த சில வருடங்களில் கோடீஸ்வரன் ஆகிவிட்டார்..

சுவை தரம் அதிகம்

இன்னொருவரை சொல்கிறேன். இவர் சென்னையைச் சேர்ந்தவர். சென்னையில் பிரதான பகுதியில் ஒரு ஹோட்டல் தொடங்கினார். அந்த ஹோட்டல் இத்தனைக்கும் சிறிய சந்தில் தான் உள்ளது. மெயின் ரோட்டில் மிகவும் புகழ் பெற்ற ஓட்டல் இருக்கிறது. ஆனாலும் சிறிய ஓட்டலுக்கு தான் இன்றைக்கும் மக்கள் அதிகம் செல்வார்கள். அந்த அளவிற்கு வளர காரணம் தொழில் காட்டிய அக்கறை. சுவையான சாப்பாடு கொடுக்க அவர் எடுத்துக்கொண்ட சிரத்தை. அவருக்கும் சரி, மக்களுக்கும் சரி கட்டுபடியாகக்கூடிய விலையில் தரமான உணவை கொடுத்தார். சுவை மிக அதிகமாக இருந்தது. குவிந்தது கூட்டம். இன்று வரை அவர் தரத்தைவிடவில்லை. கால ஓட்டத்தில் ஆன்லைனிலும் ஆர்டகளை அள்ளிக் கொண்டிருக்கிறார்.

அடிப்படை தேவை பொருள்

இந்த இரண்டும் என் வாழ்வில் நான் பார்த்தது. இன்னும் நிறைய இருக்கிறது. இதேபோல் நிறைய பேரை நாம் பார்த்திருப்போம். கதைகளையும் கேட்டிருப்போம். தற்போது லாக்டவுனுக்கு பின்னர் இணையத்தைப் பயன்படுத்தி ஆப்ளிகேஷன்கள் மூலம் மேற்கொள்ளும் தொழில்கள் ஒருபுறம் வளர்ந்து வருகிறது. இன்னொரு புறம் அடிப்படைத் தேவைகளுக்கான பொருள் விற்பனையும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

அவசரம் வேண்டாம்

எனவே . உங்களுடைய தொழில் அடிப்படைத் தேவைகள் சார்ந்ததா, தொழில்நுட்பம் சார்ந்ததா என்பதை முதலில் முடிவு செய்துகொள்ளுங்க்ள். உங்களின் வாடிக்கையாளர்கள் யார் என்பதை முடிவு செய்யுங்கள. எவ்வளவு முதலீடு செய்யப்போகிறீர்கள், கடனுதவி எவ்வளவு கிடைக்கும் என்பதைத் திட்டமிட்டு செயல்படுங்கள். ‘எல்லாரும் பிசினஸ் தொடங்குகிறார்கள்; எனவே, நானும் தொடங்குகிறேன்', ‘வேலை போய்விட்டது. வேறு வழியில்லாமல் இப்போது இருக்கும் குடும்பச் சூழலைச் சமாளிக்க பிசினஸ் தொடங்குகிறேன்' என்று அவசர அவசரமாக முதலீடு செய்து தொழில் தொடங்கக் கூடாது. நீங்கள் தொடங்கும் தொழில் பற்றிய தெளிவான புரிதல் அவசியம். நுணுக்கங்களை அறிந்து வைத்திருப்பது அவசியம். இப்போதைக்கு மக்களின் அடிப்படைத் தேவைகளை தளமாக கொண்டு உங்கள் பிசினஸ் இருந்தால் சிறப்பாக இருக்கும்.

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ