அபிமன்யு

 சிறுவன் ஒருவன் சாதனைகளைச் செய்ய முடியுமா? நிச்சயமாய் முடியும். அபிமன்யுவின் வரலாறை படிக்கும் குழந்தைகள் பெரும் சாதனையாளர்களாக மாறுவார்கள். அர்ஜூனனின் மனைவி சுபத்ரா. துவாரகை மன்னன் பலராமன், கண்ணன் ஆகியோரின் தங்கை. அவளுக்கு ஆனைப்பட்டணம் என்ற ஊரை சீதனமாக அளித்தார் பலராமன்.  சுபத்ரா கர்ப்பமாக இருந்த நேரத்தில் அண்ணன் கண்ணனிடம் போர் முறைகளைப் பற்றி கேட்டாள். கண்ணன் சொல்ல ஆரம்பித்தார். எப்படியெல்லாம் போரில் யூகங்கள் வகுக்கப்படும், அதிலிருந்து எப்படியெல்லாம் வீரர்கள் தப்புவார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.  அவரது விளக்கம் சுபத்ராவுக்கு போரடித்து விட்டது போலும். உம் கொட்டிக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தவள் அப்படியே தூங்கி விட்டாள். ஆனால் உம் சத்தம் மட்டும் வந்து கொண்டே இருந்தது. சுபத்ராவின் வயிற்றில் இருந்த குழந்தை தான் அது.போர் முறைகளைப் பற்றிக் கவனமாகக் கேட்டுக் கொண்டே உம் கொட்டியது. கண்ணன் அப்போது சக்ர வியூகம் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அதை அமைக்கும் விதத்தைச் சொல்லி முடித்த அவர், தங்கையைக் கவனித்தார். தங்கை அயர்ந்து உறங்கி விட்டதைப் பார்த்து எழுந்து விட்டார். சக்ரவியூகத்தில் இருந்து தப்பிக்கும் வழியைச் சொல்வதற்குள் தங்கை தூங்கி விட்டதால் கண்ணன் பாதியில் முடித்து விட்டார். கருவில் இருக்கும் போதே வீரக்கதை கேட்ட அந்த குழந்தைதான் அபிமன்யு. அவன் பிறந்ததும், பலராமனுக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு சுந்தரி என பெயர் சூட்டினர். அவள் அழகில் சிறந்து விளங்கினாள். இருவரும் வளர்ந்ததும், திருமணம் செய்து வைத்து விடுவோம் என பேசி முடித்தனர். ஆண்டுகள் கடந்தன. அபிமன்யு தன் மாமா பலராமனிடம் வித்தைகள் பல கற்றான். தனிடையே அபிமன்யுவின் தந்தை அர்ஜூனன், நாடிழந்து வனவாசம் சென்று விட்டான். சுபத்ரா தனியாக இருந்ததால், அபிமன்யு தாய்க்கு துணையாகச் சென்று விட்டான். இளம் பருவத்திலேயே திருமணம் பேசி முடித்ததால், அபிமன்யு மீது சுந்தரி தீராக்காதல் கொண்டிருந்தாள்.

சுந்தரிக்கு மணம் முடிக்க ஏற்பாடு ஆனது. இந்த நிலையில் சகுனி துரியோதனனிடம் ஒரு யோசனை சொன்னான். துரியோதனா! பலராமன் நம் பக்கம் இருப்பது எபபோதுமே நல்லது.  அவனது உறவு நிலையாக இருக்க வேண்டுமானால், உனது மகன் லக்குவனுக்கு பலராமனின் மகள் சுந்தரியை மணம் முடித்து விடு. உறவு பலப்படும், என்றான். துரியோதனனுக்கு இந்த யோசனை நல்லதாகத் தெரிந்தது. பலராமனுக்கு ஓலை அனுப்பினான். பலராமனுக்கு பெரும் மகிழ்ச்சி. துரியோதன மகாராஜா பாண்டவர்களின் ராஜ்யத்தையும் வெற்றி கொண்டு பரந்த நிலப்பரப்பை வைத்திருக்கிறார். அவரது வீட்டில், நீ வாழ்ந்தால் மிகுந்த செல்வச் செழிப்புடன் இருப்பாய், என மகளுக்கு அறிவுரை கூறினார் தந்தை. மகளால் தந்தையை எதிர்த்து பேச முடியவில்லை. ஆனால் அழுகை பீறிட, ஆபத்தாந்தவனான தன் சித்தப்பா கண்ணனிடம் புகார் சொன்னாள். பாருங்கள் சித்தப்பா! உங்கள் அண்ணன் செய்வது நியாயமா? அபிமன்யுவுக்கும், எனக்கும் காதல் வளர காரணமாக இருந்து விட்டு, இப்படி செய்யலாமா? என்றாள். கண்ணனும் அண்ணனிடம் பேசிப் பார்த்தார். அண்ணன் ஒப்புக் கொள்ளவில்லை. ஏற்கனவே நம் தங்கையை கட்டிக் கொடுத்து விட்டு அவள் கணவனுடன் வாழ இயலாமல் கஷ்டப்படுவது போதாதா? இன்னும் நம் மகளை வேறு அந்தக்குடும்பத்தில் திருமணம் செய்விக்க வேண்டுமா? அங்கே பொருள் இல்லையே.  மகள் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் சிரமப்பட வேண்டுமா? சிறுவயதில் விளையாட்டாக பேசியதை எல்லாம் பொருட்படுத்தக் கூடாது. நீ கவுரவர்களை வரவேற்கும் ஏற்பாட்டைச்செய், என கண்ணனை விரட்டி விட்டார் பலராமன். கண்ணன் அண்ணனை எதிர்த்துப் பேச முடியாமல் போய் விட்டார். சுந்தரி நேரடியாக ஒரு ஓலையை அபிமன்யுவுக்கு அனுப்பி விட்டாள். அபிமன்யு ஆத்திரம் கொண்டான். சுபத்ராவால் இதை நம்பமுடியவில்லை. நேரடியாக அண்ணன் வீட்டுக்குச் சென்று, நியாயம் கேட்பதற்காக மகனுடன் புறப்பட்டாள். செல்லும் வழியில் அவளுக்கு கடும் சோர்வு ஏற்பட்டது. தாயும், மகனும் காட்டில் ரதத்தை நிறுத்தி விட்டு ஓய்வெடுத்தனர்.

அப்போது, ஒரு அரக்கன் அங்கு வந்தான். அவன் தனது காட்டில் அனுமதியின்றி தங்கிய அபிமன்யுவை எதிர்த்தான். அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது.  அவன் அபிமன்யுவைக் கொன்று விட்டான். சுபத்ரா துடித்தாள். அவளது அழுகுரல் கேட்டு வனதேவதை அங்கு தோன்றினாள். அவள் ஒரு மந்திரத்தை உபதேசித்தாள். அதைச் சொல்லி மகனின் கன்னத்தில் வருடினாள் சுபத்ரா. அபிமன்யு உயிர் பெற்று எழுந்தான்.  எழுந்த வேகத்தில் தன்னுடன் போராடிய கடோத்கஜனையும், அவனைச் சேர்ந்த வீரர்களையும் கொன்று விட்டான். இதைக் கேள்விப்பட்டு கடோத்கஜனின் தாயார் அங்கு ஓடிவந்து அரற்றினாள். மகனே! நீ இறந்த விபரத்தை உன் தந்தை பீமனிடம் எப்படி சொல்வேன், என்று புலம்பினாள். அதன்பிறகு தான் இறந்தது பீமனின் மகன் என்பது தெரிந்தது.  இறந்தது தனது சகோதரன் என்பதை அதன்பிறகே அபிமன்யு தெரிந்து கொண்டான். சுபத்ரா மனமிறங்கி, வனதேவதை சொல்லித் தந்த மந்திரத்தைச் சொல்லி கடோத்கஜனையும், மற்றவர்களையும் எழுப்பினாள். நடந்ததை அறிந்த கடோத்கஜன், மகிழ்ந்து தம்பி அபிமன்யுவுக்கு உதவ முன்வந்தான்.  அவர்களை காட்டிலேயே இருக்கச் சொல்லி விட்டு, பெண் வேடம் பூண்டு பலராமனின் நாட்டுக்குள் சென்றான். அவனும், அவனோடு உருமாறி வந்த பெண்களும் அரண்மனைக்குள் மாப்பிள்ளை வீட்டார் என சொல்லிப் புகுந்தனர்.  அங்கு சென்றதும் அவன் சுந்தரி போல உருவத்தை மாற்றிக் கொண்டு, முகூர்த்த சமயத்தில் மாப்பிள்ளை லக்குவன் பக்கத்தில் அமர்ந்தான். அவன் தாலி கட்ட வரும்போது, தனது அரக்க உருவத்தைக் காட்டினான். அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதற்குள் சுந்தரியை வான் வழி தூக்கிச்சென்றான் கடோத்கஜன். அதற்குள் கண்ணனும் பலராமனுக்கு தெரியாமல், காட்டிற்கு வந்தார்.

 அபிமன்யுவுக்கும், சுந்தரிக்கும் அங்கேயே திருமணம் நடந்தது.  இருவரும் பின்பு பலராமனைச் சந்தித்து ஆசிபெற்றனர். முதலில் கோபப்பட்டாலும், பின்பு சமாதானமாகி விட்டார் அவர். இதன்பிறகே குரு÷க்ஷத்திர யுத்தம் நடந்தது. தர்மரை எப்படியும் சிறைபிடிப்பேன் என துரோணர் சபதம் எடுத்தார். இதற்காக பாண்டவர்களை அவரிடமிருந்து பிரித்து, வெவ்வேறு இடத்திற்கு கூட்டிச் சென்று விட்டால், அவரைப்பிடிப்பது எளிதாகும் என திட்டமிடப்பட்டது.  அதன்படியே திட்டத்தையும் செயல்படுத்தினார்கள். பல்வேறு திசைகளிலிருந்து படைகள் பாய்ந்து வந்தன. அவர்கள் எல்லாரையும் தடுக்க திசைக்கு ஒருவராக எல்லாரும் பிரிந்தனர்.  தர்மர் தனித்து நின்ற போது, அபிமன்யு மட்டுமே பெரியப்பாவுக்கு பாதுகாப்பாக நின்றான். அவன் இளைஞன் தானே என்று, யாரும் கண்டு கொள்ளாமல் தர்மரை நெருங்கினர். ஆனால் அவனது வீரத்தின் முன் யாரும் நிற்கமுடியவில்லை. இதைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர். சக்ர வியூகம் அமைத்தால் மட்டுமே அவனைப் பிடிக்க முடியும் என்ற நிலைமை வந்தது. சக்ரவியூகத்தையும் உடைத்த அபிமன்யு கடுமையாகப் போரிட்டான். பலரை அம்பெய்து கொன்றான்.

சக்ர வியூகத்தை உடைத்து உள்ளே நுழையும் ரகசியம்தான் அபிமன்யுவுக்கு தெரியும். வெளியே வரும் உத்தி தெரியாது என்பதால், அதில் இருந்து அவனைப் பாதுகாப்பாக வெளியே மீட்டு வருவதற்கு உதவியாக வந்திருந்தான் பீமன். ஆனால் உள்ளே நுழைந்துவிட்ட அபிமன்யு, ஒரு கட்டத்தில் அங்கேயே சிக்கிக்கொண்டான். பீமனின் பக்கபலம் அவனுக்குக் கிடைக்கவில்லை. போர்க்களத்தில் ஜயத்ரதன் செய்த மாய வேலைகளே அதற்குக் காரணம். துரோணர் விட்ட அம்பு அபிமன்யுவின் தேர்க் கொடியை அறுத்தது. கர்ணனின் அம்பு, தேர்ச் சக்கரத்தை முறித்தது. துரியோதனனின் ஆயுதம் தேர்ப் பாகனைக் கொன்றது. சகுனியின் பாணம் அபிமன்யுவின் வில்லை முறித்தது. துச்சாதனனின் அம்பு அபிமன்யுவை தேரிலிருந்து கீழே தள்ளியது. ஜயத்ரதனின் பாணம், அபிமன்யுவின் கரத்தைக் கிழித்தது. உடம்பெல்லாம் புண்ணாகி, குருதி ஒழுக, நிராயுதபாணியாக நின்றான் அபிமன்யு, எனினும், அதர்ம யுத்தம் புரிந்த கவுரவர்களைக் கண்டு அவன் சிறிதும் அஞ்சவில்லை. தொடர்ந்து போரிட்டான். அப்போது துச்சாதனனின் மகன் கோழை போல் பின்னாலிருந்து தன் கதையால் அபிமன்யுவின் தலையில் ஓங்கி அடித்தான். சுருண்டு விழுந்தவன் எழுந்துவிடுவானோ என்ற பயத்தில் மற்ற மகாரதர்கள் தங்கள் ஆயுதங்களால் வலிமையாகத் தாக்கி, அபிமன்யுவின் உடலில் அடையாளச் சின்னமிட்டனர். உடல் உருக்குலைந்தாலும், உறுதி குலையாத பொலிவோடு அபிமன்யு தரையில் சாய்ந்தான். இல்லை.... அவன் சாகவில்லை! என்றும் பதினாறு வயது என சிவனால் ஆசீர்வதிக்கப்பட்ட மார்க்கண்டேயன் போல இவனும் ஓர் இதிகாச நாயகன் ஆனான். சொர்க்கம் அவன் ஆன்மாவை வரவேற்றது.

களத்தில் மகன் இறந்தது தெரியாமல், தான் வெற்றிபெற்ற பெருமிதத்துடன் திரும்பிக்கொண்டிருந்தான் அர்ஜுனன். வழியில், அவன் கண்ட காட்சி ஒன்று அவனைத் திடுக்கிட வைத்தது. அக்னியை வளர்த்து, அதற்குள் விழுந்து உயிர்த் தியாகம் செய்யத் தயாராக இருந்தான் அந்தணன் ஒருவன். ஸ்ரீகண்ணனிடம் ரதத்தை நிறுத்தச் சொல்லி, அந்தணன் அக்னியில் விழா வண்ணம் தடுத்தான் அர்ஜுனன்.  ஐயா, என் ஒரே மகன் இன்று போரில் உயிர் துறந்துவிட்டான். இனி நான் வாழ்ந்து என்ன பயன்? என்னைச் சாக விடுங்கள்! என்று கெஞ்சினான் அந்தணன். பெரியவரே! ஆத்மஹத்தி செய்வது எவ்வளவு பெரிய பாவம்! தங்கள் மகன் போரிலே இறந்தான் என்றால், அவன் வீர சொர்க்கமல்லவா அடைந்திருப்பான்! அதனை எண்ணிப் பெருமைப்படாமல் இப்படிக் கோழைப்போல் தற்கொலைக்கு முயல்வது அறிவீனம் அல்லவா? என்றான் அர்ஜுனன்.  தத்துவம் சொல்வது எளிதய்யா! தங்களுக்கு இதுபோல் நேர்ந்தால், அப்போது தெரியும் என்றான் அந்தணன். அதைக் கேட்டதும், அர்ஜுனன் உணர்ச்சிவசப்பட்டவனாக, என் மகனைப் போர்க் களத்திலே இழக்க நேரிட்டால்கூட, தங்களைப் போல் கோழையாகத் தற்கொலை செய்துகொள்ள மாட்டேன். என் மகனின் மரணத்துக்குக் காரணமான எதிரிகளுடன் போரிட்டு, வென்று அவர்களை அழித்து, அவன் ஆத்மா சாந்தி பெறச் செய்வேன் . இது வெறும் வார்த்தையல்ல. நான் சொன்னதைச் செய்யும் க்ஷத்திரியன், சத்தியம் தவறாதவன். நான் சொல்வதைக் கேளுங்கள். தற்கொலை எண்ணத்தை விட்டுச் செல்லுங்கள் என்று உறுதி குலையாத குரலில் பேசினான்.

அந்தணனும் ஆறுதலடைந்து என் மகனே நேரில் வந்து வேண்டுவதுபோல இருக்கிறதப்பா! என் உயிர் காத்த நீ பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்திவிட்டுச் சென்றான். அர்ஜுனனின் ரதம் பாசறையை நோக்கி விரைந்தது. அன்றைய யுத்தம் என்னவாகியிருக்கும் என்று அர்ஜுனன் ஊகிக்கும் முன்பே, பாண்டவ வீரர்களில் சிலர் ஓடி வந்து கண்ணீரும் கம்பலையுமாக அபிமன்யுவின் மரணச் செய்தியைக் கூறினர். அதைக் கேட்டதும் அர்ஜுனன் சித்தம் கலங்கி, வெட்டப்பட்ட மரம்போல் தேரிலிருந்து சாய்ந்தான். அபிமன்யு! அபிமன்யு! என வெறிபிடித்தவன் போல், தன் மகனின் சடலத்தைத் தேடி ஓடினான். அபிமன்யுவின் உடலின் மீது விழுந்து அழுது புலம்பினான். தன் அம்பறாத் துணியிலிருந்து அஸ்திரம் ஒன்றை உருவி எடுத்து, அதனைத் தன் மார்பிலே பாய்ச்சி மரணத்தைத் தழுவி, மகனுடன் கலந்து ஆயத்தமானான். அப்போது எதிரே நின்றான், சற்று நேரத்துக்கு முன் அர்ஜுனனால் காப்பாற்றப்பட்ட அந்த அந்தணன்.  ஓஹோ! க்ஷத்திரிய தர்மம் இவ்வளவுதானா? உபதேசமும் தத்துவமும் பிறருக்குத்தானா? கொடுத்த வாக்கைச் சில விநாடிகளுக்குள்ளேயே மீறுவது தர்மமா? என்று நகைத்தான். அந்த அந்தணனின் சொல் அம்புகள் தைத்ததும், அர்ஜுனனின் கையிலிருந்து வில் அம்பு கீழே விழுந்தது.

தன் உயிரைக் காப்பதற்காக, தன் தந்தையான இந்திரனையே அந்தணனாக உருக்கொண்டு வரச் செய்து இந்த நாடகத்தை ஸ்ரீகண்ணன்தான் நடத்தியிருக்கிறான் என்பதை அறியாத அர்ஜுனன் துயரம் தாங்காமல், கிருஷ்ணா... என்று கதறி, மயங்கினான். பின்னர், கண்ணனின் காக்கும் கரங்களின் ஸ்பரிசம் பட்டு அர்ஜுனன் மீண்டும் சுயநினைவு பெற்றான். என் மைந்தன் அபிமன்யுவின் மரணத்துக்குக் காரணமான சத்ருவை இன்று சூர்ய அஸ்தமனத்துக்குள் அழித்துவிடுகிறேன். தவறினால், இன்று அஸ்தமனமானதும் நான் அக்னிப்பிரவேசம் செய்துவிடுவேன். இது கண்ணன் மீது ஆணை! என்று சபதம் செய்தான்.  மகனின் மரணத்துக்கு ஜயத்ரதனே காரணம்; பீமனும் மற்ற சகோதரர்களும் அபிமன்யுவுக்கு உதவியாக வர இயலாதவாறு தடுத்தது அவனே என்று தெரிந்ததும், அர்ஜுனன் முகத்தில் கோபாக்னி பொங்கியது. கிருஷ்ணா! ஜயத்ரதன் எங்கிருக்கிறானோ, அங்கே தேரைச் செலுத்து என்றான்.

அர்ஜுனன் சபதம் கவுரவர்கள் காதுக்கு எட்டியது. சூர்யாஸ்தமனம் வரை ஜயத்ரதனை மறைத்து வைத்துக் காப்பாற்றிவிட்டால், அப்புறம் அர்ஜுனன் அக்னிப் பிரவேசம் செய்வான்; குரு÷க்ஷத்திரப் போர் முடிந்துவிடும்; பாண்டவர்களை இரண்டாவது வனவாசம் செய்யத் துரத்தி விடலாம்! என்று மனக்கோட்டை கட்டினான் துரியோதனன். எனவே, எவரும் அறியாத மலைக்குகை ஒன்றில் ஜயத்ரதனைத் தகுந்த பாதுகாப்போடு மறைத்து வைத்துவிட்டான்.  கண்ணன் தேரைச் செலுத்திக் களைத்துவிட்டான். அர்ஜுனன் ஜயத்ரதனைத் தேடிக் காணாமல் நம்பிக்கையிழந்தான். கதிரவன் மேற்கு திசையில்  தன் பயணத்தை முடித்துக்கொண்டிருந்தான். திடீரென மேல் வானில் இருள்சூழ ஆரம்பித்தது. கதிரவன் மறைந்துவிட்டான். அர்ஜுனன் முயற்சி தோற்றது.  பாண்டவர்கள் பதறினர். கண்ணனின் பாதங்களில் விழுந்து கதறினர். என்னால் என்ன செய்ய முடியும்? விதியின் வலிமை அப்படி! என்பது போல் மவுனம் சாதித்தான் கண்ணன். தன் சபதத்தை நிறைவேற்ற ஆயத்தமானான் அர்ஜுனன்.

அக்னி வளர்க்கப்பட்டது. எடுத்த சபதத்தின்படி அர்ஜுனன் அக்னிப் பிரவேசம் செய்யத் தயாரானான். அவன் அக்னியில் இறங்கி அழியப்போவதைக் காண, ஐயத்ரதனும் ஆவலோடு மறைவிடத்தில் இருந்து வெளியே வந்தான். கவுரவர்களின் கூட்டத்தில் ஒருவனாக, மலை முகட்டில் நின்றுகொண்டான். அர்ஜுனன் அக்னியை வலம் வந்தான். கண்ணன் பாதங்களை வணங்கினான். அப்போது கண்ணன், அர்ஜுனா! காண்டீபத்தை உன் கையில் ஏந்தி, நாணேற்றிய வண்ணமே அக்னிப் பிரவேசம் செய். முடியுமானால், தலைகளைக் கொய்து நினைத்த இடத்துக்கு கொண்டு போகும் வல்லமை வாய்ந்த அஸ்திரம் ஒன்றையும் வில்லில் தொடுத்துக்கொண்டே அக்னியை வலம் வா! என்றான். அர்ஜுனனும் கிருஷ்ணனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அவ்வாறே செய்தான். திடீரென மேல் வானிலே பிரகாசமான வெளிச்சம் ஒன்று தோன்றியது. ஆம், உண்மையில் அப்போது அஸ்தமனம் ஆகவில்லை; சூரியன் தற்காலிகமாக மறைக்கப்பட்டிருந்தான்; கண்ணன் தன் ஸுதர்சனச் சக்கரத்தால் சூரியனை மறைத்து வைத்திருந்தான் என்பதை எல்லோரும் புரிந்துகொண்டனர். வியப்படைந்து மேல் வானை நோக்கினான் அர்ஜுனன்.

பேரொளியுடன் சூரியன் தரிசனம் தந்தான். ஸுதர்சனச் சக்கரம் நகர்ந்ததும், இருளெனும் மாயை மறைந்து, மேற்கு திசையில் வானம் சிவப்பொளியை வீசிக் கொண்டிருந்தது. அர்ஜுனன் கண்களில், தூரத்தில் குன்றின் மீது நின்று கொண்டிருந்த ஜயத்ரதன் தென்பட்டான். அர்ஜுனா! அதோ ஜயத்ரதன்! அவன் தலையைக் கொய்து, வனத்திலே தவம் செய்து கொண்டிருக்கும் அவன் தந்தை விருத்தக்ஷத்ரன் என்ற முனிவனின் மடியில் விழச் செய்! என்று ஆணையிட்டான் கண்ணன். கண்ணிமைக்கும் நேரத்தில் காண்டீபத்திலிருந்து கணை புறப்பட்டது. அது ஜயத்ரதன் தலையைக் கொய்து, விண்ணிலே தூக்கிச் சென்று. வனத்தில் தவம் செய்துகொண்டிருந்த விருத்தக்ஷத்ரன் மடியில் போட்டது. தன் தவத்தை யாரோ கலைப்பதாக எண்ணி, மடியில் விழுந்த தலையைத் தரையில் தள்ளினான் விருத்தக்ஷத்ரன். உடனே விருத்தக்ஷத்ரனின் தலை சுக்குநூறாக வெடித்தது. தன் மகன் ஜயத்ரதன் தலையை எவன் தரையில் விழச் செய்கிறானோ, அவன் தலை சுக்குநூறாக வெடிக்க வேண்டும் என்று வரம் பெற்றிருந்தான் விருத்தக்ஷத்ரன். அவன் வரமே அவனையும் அவன் மகனையும் சேர்த்து அழித்துவிட்டது.

பாண்டவர்களின் கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தன. கண்ணனை அர்ஜுனன் நெஞ்சாரத் தழுவிக்கொண்டான். 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து, செயற்கரிய செயல்கள் புரிந்து சொர்க்கம் பெற விரும்பி, வரம் பெற்று ஜனித்தவன் அபிமன்யு. அவன் மரணத்தை வென்ற மாவீரன். மகாபாரத்தில் ஒரு மார்க்கண்டேயன் அவன்! என்று கூறி, பாண்டவர்களைச் சமாதானப்படுத்தினான் கண்ணன்.

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ