நெருங்கும் மார்ச் 31... சரியான நேரம்... சரியான பிளான்... வரியைச் சேமிக்கும் வழிகள்!

 நடப்பு 2021-22 நிதி ஆண்டுக்கு வருமான வரியை மிச்சப்படுத்த ஒருவர் திட்டமிடுகிறார் எனில், அவர் வருகிற மார்ச் 31-ம் தேதிக்குள் முதலீடு செய்தாக வேண்டும். வரிச் சேமிப்புக்கான முதலீடு என்கிறபோது நம் அனைவருக்கும் முதலில் ஞாபகத்துக்கு வருவது 80சி பிரிவுதான். நாம் செய்யும் பல்வேறு முதலீடுகளுக்கு இந்தப் பிரிவின்கீழ் வரிச் சலுகை கிடைக்கும். இந்த முதலீடுகளில் யாருக்கு எது ஏற்றது, எந்த முதலீடு லாபகரமாக இருக்கும் எனப் பார்ப்போம்.

என்.விஜயகுமார் நிதி ஆலோசகர்,  https://www.vbuildwealth.com/

எண்டோவ்மென்ட் ஆயுள் காப்பீட்டு பாலிசிக்கான பிரீமியம் தொகை...


வருமான வரியைச் சேமிக்க பெரும்பாலான வர்கள் பயன்படுத்துவது ஆயுள் காப்பீட்டு பாலிசிக்குக் கட்டும் பிரீமியமாக இருக்கிறது. எந்த வகையிலும் ஆயுள் காப்பீடு இல்லாதவர் கள் எண்டோவ்மென்ட் ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுத்து பிரீமியம் கட்டுவதில் தவறில்லை. ஆனால், ஆயுள் காப்பீடு வேறு, முதலீடு வேறு என்கிற வித்தியாசம் தெரியாதவர் கள் இந்த ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கு அதுவும் குறிப்பாக, எண்டோவ்மென்ட், மணிபேக் போன்ற பணப்பலன் தரும் பாலிசிகளை எடுத்து, பிரீமியம் கட்டி வருகிறார்கள்.

இந்த பாலிசி மூலம் ஆயுள் காப்பீடு மற்றும் முதலீட்டுப் பலன் கிடைத்தாலும், அவற்றின் பலன் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இந்த பாலிசிகளில் லட்சக்கணக்கில் பிரீமியம் கட்டினாலும், கோடி ரூபாய்க்கு ஆயுள் கவரேஜ் கிடைக்காது. மேலும், பாலிசி முதிர்வின்போது கிடைக்கும் வருமானம் 5% அல்லது அதற்குக் குறைவாகத்தான் இருக்கிறது. இந்த வருமானம் பணவீக்க விகிதத்தைவிடக் குறைவாக இருக்கிறது. கவரேஜ் குறைவு, வருமானம் குறைவு என்பதால், எண்டோவ் மென்ட் பாலிசிகளைத் தவிர்ப்பது நல்லது.

சிலர் வருமான வரியை மிச்சப்படுத்தப் பங்குச் சந்தை முதலீட்டுடன் இணைந்த யூலிப் பாலிசிகளை எடுத்து பிரீமியம் கட்டிவரு கிறார்கள். இதுவும் காப்பீடு மற்றும் முதலீடு கலந்த திட்டமாகும். மேலும், யூலிப் பாலிசிகளில் வெளிப்படைத்தன்மை குறைவு மற்றும் ஏராளமான கட்டணங்கள் இருக்கின்றன. அதனால், வரிச் சேமிப்பு, காப்பீடு மற்றும் முதலீடு நோக்கத்தோடு இந்த பாலிசியை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

இவற்றுக்குப் பதில், குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் அளிக்கும் டேர்ம் பிளான் பாலிசியை எடுப்பது லாபகரமானது. இந்த பாலிசியில் பாலிசிதாரருக்கு அசம்பாவிதம் ஏற்பட்டால் மட்டுமே குடும்பத்தினருக்கு இழப்பீடு கிடைக்கும்; இதில், பாலிசி முதிர்வில் பணம் எதுவும் கிடைக்காது என்பதால், பலரும் இந்த பாலிசியை எடுக்கத் தயங்குகிறார்கள்.

ஆயுள் காப்பீடு என்பது குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் இல்லையெனில், அவர் கொடுத்த நிதிப் பாதுகாப்பைக் குடும்ப உறுப்பினருக்குக் கொடுப்பதாகும். எனவே, குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் கொடுக்கும் டேர்ம் பிளான் எடுப்பதுதான் சரி.

ஆயுள் காப்பீட்டைப் பொறுத்தவரை, அதை ஒரு முதலீடாகப் பார்க்கக் கூடாது. குடும்பத்தைக் காக்கும் கவசமாகத்தான் பார்க்க வேண்டும். இதிலிருந்து வருமானம் எதிர்பார்ப்பது பெரும் தவறு. எனவே, அனைவரும் முதலீட்டை ஆரம்பிக்கும்முன் எடுக்க வேண்டியது, டேர்ம் பிளான் ஆகும். ஒருவரின் ஆண்டு சம்பளம் / வருமானத்தைப் போல் சுமார் 15 மடங்கு எடுத்துக் கொள்வது நல்லது. இந்த பிரீமியத்துக்கும் வரிச் சலுகை உண்டு என்பதால், டேர்ம் பிளான் பாலிசியைத் தாராளமாக எடுக்கலாம்.



வரிச் சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட்...

தற்போதைய சூழலில், வரிச் சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட்டு களுக்கான வட்டி என்பது வங்கியாக இருந்தாலும் தபால் அலுவலகமாக இருந்தாலும் மிகக் குறைவாக இருக்கிறது. வங்கிகளின் ஐந்தாண்டு ஃபிக்ஸட் டெபாசிட்டு களுக்கு வழங்கப்படும் வட்டி தற்போதைய நிலையில் சுமார் 5.75% முதல் 6.30 சதவிகிதமாக இருக்கிறது. தபால் அலுவலக ஐந்தாண்டு டைம் டெபாசிட்டுக்கு வழங்கப்படும் வட்டி 6.7 சதவிகிதமாக இருக்கிறது.

ஐந்தாண்டு தபால் அலுவலக தேசிய சேமிப்பு பத்திர (NSC) முதலீட்டுக்கும் வருமான வரிச் சலுகை இருக்கிறது. இந்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு 6.8% வட்டி கிடைக்கிறது. வங்கியின் எஃப்.டிக்கு அசலும் வட்டியும் சேர்ந்து ரூ.5 லட்சம் வரைக்கும்தான் டெபாசிட் இன்ஷூரன்ஸ் மூலம் பாதுகாப்பு இருக்கிறது. தபால் அலுவலக டெபாசிட்டுக்கு எவ்வளவு தொகை என்றாலும் அதற்கு மத்திய அரசின் உத்தரவாதம் இருக்கிறது.

இந்த டெபாசிட்டுகள் மூலம் கிடைக்கும் வட்டி வருமானத் துக்கு ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ, அதற்கேற்ப வரி கட்ட வேண்டும். வட்டி வருமானமோ பணவீக்க அளவுக்குத்தான் இருக்கிறது. இதில் வரி கட்டினால் கையில் மிஞ்சுவது சொற்ப வருமானம்தான். ஆனால், முதலீட்டில் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் இந்த டெபாசிட்டுகளில் முதலீடு செய்யலாம்.

நீங்கள் மாதச் சம்பளம் வாங்குபவர்களாக இருக்கும் பட்சத்தில், வரிச் சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட்டுகளைத் தவிர்த்து, விருப்ப பி.எஃப் (VPF) மூலம் கூடுதலாக முதலீடு செய்துவரலாம். இதற்கு ஆண்டுக்கு 8.5% வட்டி வருமானம் கிடைக்கும். மேலும், வட்டி வருமானத்துக்கு வரியில்லை என்பது கூடுதல் சிறப்பாகும். ஒரு நிதி ஆண்டில் பி.எஃப் மற்றும் வி.பி.எஃப் முதலீடு சேர்ந்து ரூ.2.5 லட்சத்தைத் தாண்டும்போது, வட்டி வருமானத்துக்கு வரி வரம்புக்கேற்ப வரி விதிக்கப்படுகிறது. இந்த இரு திட்டங்களும் நீண்ட காலத்தில் மிகச் சிறந்த பயனைத் தரும்.

பென்ஷன் பிளான்கள்...

ஆயுள் காப்பீடு நிறுவனங்கள் வழங்கும் பென்ஷன் பிளான் களில் பெரும்பாலான தனியார் நிறுவன ஊழியர்கள் வருமான வரியை மிச்சப்படுத்த முதலீடு செய்துவருகிறார்கள். இவற்றின் மூலமான வருமானம் சுமார் 5% முதல் 6.5% வரை இருக்கின்றன. இது ஓரளவுக்கு நல்ல வருமானம் என்றாலும், பென்ஷன் வருமானம் வரி வரம்புக்கேற்ப வரிக்கு உட்பட்டது.

தற்போதைய நிலையில், 60 வயதில் ஓய்வு பெறும்பட்சத்தில் இதர வருமானம் எதுவும் இல்லை என்கிறபட்சத்தில், நிதி ஆண்டில் ரூ.3 லட்சம் வரைக்கு மான பென்ஷனுக்கு வரி கட்ட வேண்டியிருக்காது.

ஒருவர் அவரின் வரிச் சேமிப் புக்கான முழு முதலீட்டையும் பென்ஷன் பிளான்களில் முதலீடு செய்வதைத் தவிர்த்து, சுமார் 20-30% தொகையை முதலீடு செய்வது நல்லது.

செல்வமகள் சேமிப்புத் திட்டம்

10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்தான் இந்தச் செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் (சுகன்யா சம்ருதி யோஜனா) முதலீடு செய்ய முடியும். முதலீடு, முதலீட்டுப் பெருக்கம், வட்டி வருமானம் அனைத்துக்கும் வரிச் சலுகை இருக்கிறது.

தற்போதைய நிலையில், ஆண்டுக்கு 7.6% வட்டி வழங்கப் படுகிறது. இது சராசரி பணவீக்க விகிதத்தைவிட அதிகம் என்பதால், ஓரளவுக்கு நல்ல வருமானம்தான்.

முதலீட்டில் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் கல்யாணச் செலவுக்குத் திட்ட மிடுபவர்கள் செல்வமகள் சேமிப்புத் திட்டத்துக்கு ஆதரவு அளிக்கலாம்.

பொது சேமநல நிதி

மாதச் சம்பளக்காரர்களுக்கு சேமநல நிதி (பிராவிடன்ட் ஃபண்ட் – பி.எஃப்) இருக்கிறது. இது அவர்களின் ஓய்வுக் காலத்துக்கு உதவுவதாக இருக்கிறது. மற்றவர்களுக்கு, பொது சேமநல நிதி (பி.பி.எஃப்) இருக்கிறது. இது 15 ஆண்டுக்கால திட்டமாகும். முதலீடு, முதலீட்டுப் பெருக்கம், முதிர்வுத் தொகை மூன்றிலும் வரிச்சலுகை இருக்கிறது.

தற்போதைய நிலையில், ஆண்டுக்கு 7.10% வட்டி வருமானம் கிடைக்கிறது. இந்தத் திட்டத்தில் முதலீடு மற்றும் வட்டி வருமானத்துக்கு மத்திய அரசின் உத்தரவாதம் இருக்கிறது. மேலும், பணவீக்க விகிதத்தைவிடச் சிறிது கூடுதல் வருமானம் கிடைப்பதாக இருக்கிறது.

இதை பொன் மகன் சேமிப்புத் திட்டம் என்றும் சொல்வார்கள். அதாவது, ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் அவர்களின் ஆண் பிள்ளைகளின் உயர்கல்வித் தேவைக்கு இந்தத் திட்டத்தில் முதலீடு செய்துவரலாம்.

முதலீட்டின் அனைத்து நிலைகளிலும் வரிச்சலுகை, நியாயமான வருமானம், மூலதனம் மற்றும் வட்டிக்குப் பாதுகாப்பு இருப்பதால், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு ஏற்ற முதலீடாக இது இருக்கிறது.

நேஷனல் பென்ஷன் சிஸ்டம்...

என்.பி.எஸ் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் நேஷனல் பென்ஷன் சிஸ்டம் என்பது அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்ற வரிச் சேமிப்புத் திட்டம் மற்றும் ஓய்வுக்கால சேமிப்புத் திட்டமாக இருக்கிறது.

இதில் ஒருவரின் வயதுக்கேற்ப பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தையில் பணம் பிரித்து முதலீடு செய்யப்படுவதால், நீண்ட காலத்தில் ரிஸ்க் வெகுவாகக் குறைகிறது. தற்போதைய நிலையில், ஆண்டுக்குச் சராசரியாக 8% முதல் 12% வரை வருமானம் என்.பி.எஸ் முதலீடுகள் கொடுத்து வருகின்றன.

பங்குச் சந்தை சேமிப்பு ஃபண்ட்

இ.எல்.எஸ்.எஸ் (ELSS) என்கிற பங்குச் சந்தை சேமிப்பு ஃபண்டில் செய்யப்படும் முதலீட்டுக்கு 80சி பிரிவின்கீழ் செய்யப்படும் முதலீட்டுக்கு நிபந்தனைக்கு உட்பட்டு, நிதி ஆண்டில் ரூ.1.5 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை இருக்கிறது.

இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட் மென்ட் பிளான் என்கிற எஸ்.ஐ.பி-யில் குறைந்தபட்ச முதலீடு மற்றும் மொத்த முதலீடு ரூ.500 ஆக உள்ளது. வரிச் சேமிப்புத் திட்டங்களிலே மிகக் குறைவான லாக்இன் பீரியட் அதாவது, மூன்று ஆண்டுகள் மட்டுமே லாக்இன் பீரியட் கொண்ட திட்டம் இதுவாகும்.

நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானம் கொடுக்கவல்லது. மேலும், வரி அனுகூலம் கொண்டது. அதாவது, ஓராண்டுக்கு மேற்பட்ட நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு நிதி ஆண்டில் ரூ.1 லட்சம் வரைக்கும் வரி கிடையாது. அதற்கு மேற்படும் ஆதாயத்துக்கு ஒருவர் எந்த வரி வரம்பில் வந்தாலும் 10% வரி கட்டினால் போதும்.

இந்த 80சி திட்டங்களைப் பயன்படுத்தி, உங்களுக்கு அதிக லாபம் தரும் சரியான திட்டங்களைத் தேர்வு செய்து பயன் பெறத் தவறாதீர்கள்!

மூத்த குடிமக்களுக்கு ஏற்ற சேமிப்புத் திட்டம்..!

60 வயது கடந்த மூத்த குடிமக்கள், விருப்பு ஓய்வுபெற்ற 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்றதாக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் இருக்கிறது. இதில் முதலீடு செய்வதன் மூலம் வருமான வரியை மிச்சப்படுத்த முடியும். தற்போதைய நிலையில், ஆண்டுக்கு 7.4% வட்டி வழங்கப் படுகிறது. இதை ஓரளவுக்கு நல்ல வருமானம் என்று சொல்லலாம். வட்டி வருமானம் வரிக்கு உட்பட்டது என்றாலும் நிபந்தனைக்கு உட்பட்டு, நிதி ஆண்டில் ரூ.50,000 வரை வட்டி வருமானத்துக்கு வரிச் சலுகை இருக்கிறது. நிதி ஆண்டில் ஒருவர் அதிகபட்சம் ரூ.15 லட்சம் முதலீடு செய்யலாம். ஆனால், நிபந்தனைக்கு உட்பட்டு ரூ.1.5 லட்சம் வரைக்கும்தான் நிதி ஆண்டில் முதலீட்டுக்கு வரிச் சலுகை கிடைக்கும்.

மொத்த வரிச் சலுகை எவ்வளவு?

ஆயுள் காப்பீடு தொடங்கி மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் வரை அனைத்துத் திட்டங்களிலும் செய்யப்படும் மொத்த முதலீட்டுக்கு ரூ.1.5 லட்சம் வரைதான் வரிச் சலுகை கிடைக்கும்.

என்.பி.எஸ் முதலீட்டுக்கு, அனைவருக்கும் 80சி பிரிவைத் தாண்டி 80சிசிடி (1பி) பிரிவின்கீழ் ரூ.50,000 வரை வரிச்சலுகை கிடைக்கிறது. 60 வயதில் அதுவரைக்கும் சேர்ந்திருக்கும் தொகையில் 60% தொகையை மொத்தமாக எடுத்துக்கொள்ளலாம். மீதி 40% தொகை பென்ஷன் கணக்கில் முதலீடு செய்யப்பட்டு பென்ஷன் கிடைக்கும். பென்ஷனுக்கு வரி உண்டு.

வருமான வரித்தாக்கல் நீட்டிப்பு யாருக்கு?

ப.முகைதீன் சேக் தாவூது

தனிநபர்கள் முடிவடைந்துள்ள 2020-21 நிதியாண்டுக்கு, அபராதம் இல்லாமல் வரித்தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 31.12.2021 என்பதில் எந்தவித மாற்றத்தையும் வருமான வரித்துறை அறிவிக்கவில்லை. கடந்த 11.01.2022 அன்று வருமான வரித்துறை வெளியிட்ட சுற்றறிக்கை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ள தேதி நீட்டிப்பு யாருக்கு எனில், ஒவ்வொரு நிதியாண்டு முடிந்தபின் அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 30-க்குள் வரித்தாக்கல் செய்யக் கடமைப்பட்ட இனங்களைக் கொண்டவர்களுக்கு மட்டுமே.

தனிநபர்களுக்கான வழக்கமான வரித்தாக்கல் தேதி என்பது ஜூலை 31. எனவே, இது தனிநபர்களுக்கான தேதி நீட்டிப்பு அல்ல. 31.12.2021 வரை வரித்தாக்கல் செய்யாத தனிநபர்கள் அபராதத்துடன் 31.03.2022-க்குள் வரித்தாக்கல் செய்யலாம்.

அபராதம் இல்லாமல்...

31.03..2022 வரை அபராதம் இல்லாமலே வரித்தாக்கல் செய்யும் சலுகையும் ஒரு சாரருக்கு உண்டு. அதாவது, ஒட்டுமொத்த வருமானமும் (Gross total income) வரி வரம்புக்கு உட்பட்டு இருந்தால், அவர்கள் அபராதம் இல்லாமல் தற்போது வரித்தாக்கல் செய்யலாம். ஒட்டுமொத்த வருமானம் என்பது 80C முதல் 80U வரையான வரிச்சலுகைகளைக் கழிப்பதற்குமுன் உள்ள வருமானமாகும்.

ரூ.1,000 அபராதம்...

சம்பள வருமானம் அல்லது வணிக வருமானம், தொழில் வருமானத்துடன் வீட்டு வாடகை போன்ற இதர வருமானங்களையும் கூட்டினால் வருவது ஒட்டுமொத்த வருமானம் (Gross total income). இதிலிருந்து 80C முதல் 80U வரையான வரிச்சலுகைகளைக் கழித்த பிறகு வரக்கூடிய மொத்த வருமானம் (Taxable Income) ரூ.5 லட்சத்துக்குள் இருப்பவர்கள் ரூ.1,000 மட்டும் அபராதம் செலுத்தி தற்போது வரித்தாக்கல் செய்யலாம்.

ரூ.5.000 அபராதம்

யாருக்கெல்லாம் ஒட்டுமொத்த வருமானத்திலிருந்து 80C முதல் 80U வரையான வரிச் சலுகைகளைக் கழித்தபின் கிடைக்கும் மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளதோ, அவர்கள் அனைவரும் ரூ.5,000 அபராதத்துடன் வரித்தாக்கல் செய்யலாம்.

மேற்கண்ட மூன்று பிரிவினருக்கும் வரித்தாக்கல் செய்ய கடைசி தேதி 31.03.2022 வரைதான்.

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ