Namakkal startup "Kaigal" offers blue collar jobs - ஒரே ஒரு மிஸ்டு காலில் திறமைக்கான வேலையை வழங்கும் நாமக்கல் ஸ்டார்ட்-அப் ‘கைகள்'
டெக்னாஜியில் பெரிய மாற்றங்கள் நடந்து வந்துகொண்டே இருந்தாலும் மனிதவளம் இல்லை என்றால் எந்தத் தொழிலும் வெற்றி அடைய முடியாது. தொழில்நுட்பம் சார்ந்த ஊழியர்களாக இருந்தாலும் சரி, உடல் உழைப்பை கொடுக்கும் பணியாளர்களாக இருந்தாலும் சரி ஒரு நிறுவனத்துக்கு பணியாளர்கள் முக்கியம்.
தொழில்நுட்பம் சார்ந்த பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் ஆலோசனை நிறுவனங்கள் பல உள்ளன. ஆனால் ’புளூ காலர்’ பணியாளர்களை ஒருங்கிணைக்கும் நிறுவனங்கள் மிகக் குறைவு. நிறுவனங்களுக்கும் சரியான ஊழியர்கள் கிடைப்பதில்லை, பணியாளர்களுக்கும் சரியான வேலை கிடைப்பதில்லை. ஆனால், இவற்றுக்கான தேவை சந்தையில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இந்தத் தேவையை நிர்ப்புவதற்காக உருவாகப்பட்ட நிறுவனம்தான் ‘Kaigal' 'கைகள்’.
பாலமுருகன், செந்தில் மற்றும் ராவின் ஆகிய மூன்று நண்பர்கள் இணைந்து தொடங்கியதுதான் கைகள். வழக்கமாக மனிதவள நிறுவனங்கள் பெரிய நகரங்களில் தொடங்கப்படும். ஆனால், புளூ காலர் பணியாளர்களுக்கான நிறுவனம் என்பதால் நாமக்கலில் தொடங்கப்பட்டிருக்கிறது ‘கைகள்’.
நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், கோவை, திருப்பூர், மற்றும் திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு எளிதாகப் பணியாளர்களை அனுப்ப முடியும் என்பதால் நாமக்கலில் (பரமத்தி வேலூர்) இந்நிறுவனத்தை தொடங்கி இருப்பதாக பாலமுருகன் தெரிவித்தார்.
ஐடியா எப்படி?நாங்கள் மூவரும் நண்பர்கள். பிஎஸ்ஜி-யில் படித்தோம். இண்டெலில் 11 ஆண்டுகள் வேலை செய்தேன். அதனைத் தொடர்ந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வளர்ந்து வந்ததால் தொடக்க நிறுவனத்தில் வேலை செய்தேன். அப்போது நடந்த இரு விஷயங்கள் இந்த நிறுவனம் தொடங்குவதற்கு தாக்கத்தை ஏற்படுத்தின.
நாங்கள் சிறு ஊர்களில் இருந்தோம். என்னுடைய அப்பா அரசுப் போக்குவரத்து கழகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர். அதனால் எங்கள் கிராமத்தில் இருப்பவர்கள் அடுத்த என்ன செய்யலாம், என்ன படிக்கலாம், என்ன வேலைக்கு செல்லலாம் என்பது குறித்து அப்பாவின் ஆலோசனையை பெறுவதற்காக வீட்டுக்கு வருவார்கள்.
”என்னுடைய நிறுவனர்களில் ஒருவரான செந்தில், கேபிஎன் பார்ம் பிரஷ் எனும் நிறுவனத்தை நடத்தி வந்தார். அவர்களுக்கு பணியாளர்கள் பற்றாக்குறை என்பது அடிக்கடி நிகழ்வாக இருந்தது. பணியாளர்களை கையாளுவதே பெரும் சிக்கலாக இருந்தது. இந்த இரு நிகழ்வுகளை வைத்து, புளூ காலர் பணியாளர்கள் வேலைவாய்ப்புக்கென என பிரத்யேக நிறுவனம் தொடங்கத் திட்டமிட்டோம். அதற்கு ’கைகள்’ என்னும் பெயர்தான் ஏற்றதாகத் தோன்றியது,” என பால முருகன் கூறினார்.நிறுவனங்களுக்கு உள்ள சிக்கல்?
இந்தத் துறையில் பல ஏஜென்சிகள் உள்ளன. அவைகளை நம்பியே பல நிறுவனங்கள் உள்ளன. ஆனால், நிறுவனங்களுக்கு பல சிக்கல்கள். உதாரணத்துக்கு 10 பணியாளர்களை ஏஜென்சி வழங்குகிறது என வைத்துக்கொள்வோம். அடுத்த சில மாதங்களிலே அந்த பணியாளர்களை வேறு நிறுவனத்துக்கு அனுப்பி விடும். ஆனால், பணியாளர்கள் வரவில்லை, புதியவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என ஏஜென்சி நிறுவனங்களிடம் தெரிவித்துவிடும்
அதாவது ஏஜென்சி தன்னிடம் இருக்கும் பணியாளர்களை சுற்றுக்கு மட்டுமே விடப்பட்டிருக்கும். தவிர திறன் வாய்ந்த பணியாளர்களை தேவைப்படும் நிறுவனம் உடனடியாக தேடிபிடிக்க முடியாது என்பதால் வேலை தடைப்படும்.
”பொதுவாக, ப்ளூகாலர் பணியாளர்களைக் கண்டறிவது நிறுவனங்களுக்கு கூடுதல் நேரம் பிடிக்கக் கூடியது. தவிர ஆரம்பகட்ட பணியாளர்களில்தான் வேலை மாறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக இருக்கும். நிறுவனங்கள் எவ்வளவு சலுகைகள் கொடுத்தாலும் கூட பணியாளர்களை தக்க வைப்பது என்பது கடும் சவால். அதனால் நடுத்தர நிறுவனங்களில் எப்போதுமே பணியாளர்கள் பற்றாக்குறை இருந்துகொண்டே இருக்கும். இதனை மாற்ற வேண்டும் என நாங்கள் நினைத்தோம்,” என்றார்.
தமிழகம் முழுவதும் உள்ள எஸ்.எம்.இ. நிறுவனங்களை எங்களுடன் இணைக்கும் முயற்சியை எடுத்தோம். இதுவரை 3,500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் எங்களுடன் உள்ளன. அதேபோ, சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட புரபைல்களை நாங்கள் சேகரித்திருக்கிறோம்.
”இந்த நிறுவனத்தில் வேலை இருக்கிறது என்னும் தகவல்களை மட்டும் நாங்கள் சொல்வதில்லை. அவர்களுக்கு வேலை கிடைக்கும் வரை தொடர்ந்து உதவியாக இருக்கிறோம்,” என பாலமுருகன் கூறினார்.
திறன் வாய்ந்த பணியாளர்களில் அவர்களாகவே தகவல்களை பதிவேற்றம் செய்வார்கள். ஆனால், இதுபோன்ற புளூகாலர் பணியிடங்களில் பணியாளர்களுடன் உரையாடி தகவல்களை பெற்றுதான் முழுமையான தகவல்களை எங்களால் சேமிக்க முடியும். அதனால் நாங்கள் கூடுதலாக நேரம் செலவு செய்ய வேண்டி இருக்கிறது.
'kaigal' ஊழ்யர்கள்
நிதிசார்ந்த நிறுவனங்கள் சில கிராமங்களில் செயல்பட்டுவருகின்றன. அவர்களுடன் இணைந்து புதிய நபர்களை இணைத்து வருகிறோம். மேலும், எப்.எம்.ரேடியோ, பேருந்துகளில் விளம்பரம் கொடுப்பது உள்ளிட்ட பல வகைகளிலும் பலரையும் நாங்கள் இணைத்து வருகிறோம்.
நிதி சார்ந்த தகவல்கள்
2019-ம் ஆண்டு ’kaigal' நிறுவனத்தைத் தொடங்கினோம். நண்பர்கள் மற்றும் நிறுவனர்களின் முதலீடாக ரூ.35 லட்சம் வரை முதலீடு செய்து நிறுவனத்தைத் தொடங்கினோம். இதனை வைத்து புதிய டீமை உருவாக்குவது மற்றும் நிறுவனங்களை இணைப்பது உள்ளிட்டவற்றை செய்தோம்.
வேலைக்காக எங்களிடம் பதிவு செய்பவர்களிடம் நாங்கள் எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. நாங்கள் நிறுவனங்கள் மூலமாக மட்டுமே வருமானம் ஈட்டுகிறோம். ஒருமுறை கட்டணம், மாதந்தோறும் கட்டணம் என சில மாடல்களில் வருமானம் ஈட்டுகிறோம். தற்போதைக்கு மாதம் 3 லட்சம் ரூபாய் அளவுக்கு வருமானம் இருக்கிறது.
வேலைவாய்ப்பை எப்படி வழங்குகிறார்கள்?
- தற்காலிகமான அல்லது நிரந்தர அடிப்படையில் வேலை உத்தரவாதம்.
- கல்வித்தகுதி ஒரு தடையல்ல.
- ஒரே ஒரு மிஸ்டு கால் மூலம் இலவசமாக ஒரு வேலையைப் பெறலாம்.
- திறமைகள் எதுவாயினும் அதற்கேற்ற பொருத்தமான சரியான வேலைவாய்ப்பை கண்டறிதல்.
- அனைத்து திறன்களையும் அனுபவங்களையும் ஒன்றாக பட்டியலிட்டு உங்களுக்கென்று சிறப்பாக உருவாக்கப்பட்ட அடையாள அட்டையைப் பெறலாம்.
இதுவரை 3500 நிறுவனங்களில் 16 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளதாக நிறுவனர்கள் தெரிவிக்கின்றனர். தமிழகம் முழுவதும் லட்சக்கணக்காக சிறு நிறுவனங்கள் உள்ளன. அவர்களை இணைக்கத் திட்டமிட்டிருக்கிறோம். தவிர கர்நாடாக மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கும் விரிவு செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.
தற்போது இந்நிறுவனத்தில் 20 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். புதிய பதிவுகளை உயர்த்துவது, பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது, நிறுவனங்களின் எண்ணிக்கை என அனைத்து அளவீடுகளையும் உயர்த்தத் திட்டமிட்டிருக்கிறோம். இதற்கான நிதி திரட்டும் நடவடிக்கையில் சில முதலீட்டாளர்களிடம் பேசி வருகிறோம், என்றார்.
நாங்கள் ‘சோசியல் இம்பேக்ட்’ என்னும் பிரிவில் செயல்பட்டுவருவதால் இந்தப் பிரிவில் முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கும் முதலீட்டாளர்களிடம் பேசி வருகிறோம் என பாலமுருகன் கூறினார்.
மேலும், பெரிய அளவுக்கு பணியாளர்கள் தேவைப்படுவார்கள் என்பதால், இந்தத் துறையை முறைப்படுத்தும் பட்சத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என பாலமுருகன் தெரிவித்தார்.
Comments
Post a Comment