அன்பு நடமாடும் கலைக்கூடமே

 ‘அவன்தான் மனிதன்’ படப்பிடிப்பு 1973ம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. படத்தின் பாடல்களுக்காக தயாரிப்பாளர்கள் கவியரசரை விரைந்தனர். எதனையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் கவிஞரின் குணத்தை அறிந்திருந்த அவர்கள், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் ‘மே’ மாதத்தை கவிஞருக்கு நினைவுப்படுத்தினர். இறுதியாக ஒரு நாள், அவர்கள் அதனை நினைவுப்படுத்திய அத்தருணத்திலேயே, அவ்விடத்திலேயே, அனைத்து பாடல்களையும் கவிஞர் மலர்த்தினார். சென்னை, ஹோட்டல் அட்லாண்டிக்-ல் அந்த அறையிலே, அப்பொழுதே, ஒன்றும் விடப்படாமல் அனைத்துப் பாடல்களும் எழுதிக் கொள்ளப்பட்டன. புறப்படுவதற்கு முன் கவிஞர், தயாரிப்பாளர்கள் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.ஸ்.விஸ்வநாதன் அவர்களிடம், அந்தப் பாடல்களில் ஒன்றுக்கு மட்டும் சற்று கூடுதல் கவனம் செலுத்துமாறு சொல்லிவிட்டு சென்றார். அந்தப் படத்திற்காக கவிஞர் எழுதிய பாடல்கள் ஐந்து. அவை “ஆட்டுவித்தால் யாரொருவர்…”, “மனிதன் நினைப்பதுண்டு…”, “எங்கிருந்தோ அந்தக்குரல்…”, “அன்பு நடமாடும் கலைக்கூடமே…” மற்றும் “ஊஞ்சலுக்குப் பூட்டி…” ஆகியவையாகும். அவர்கள் அனைவரும் அந்த குறிப்பிட்ட பாடலைக் கண்டறிய நீண்ட நேரம் முயற்சித்து இறுதியில் எம்.ஸ்.வி கண்டறிந்தார். கவிஞர் குறிப்பிட்ட அந்தப் பாடல் “அன்பு நடமாடும் கலைக்கூடமே…”. கேட்பவர்களுக்கு கவிஞர் எழுதிய காதல் பாடல்களில் அதுவும் ஒன்று என்று தான் தெரியும். ஆனால் அப்பாடலின் வரிகளை கூர்ந்து கவனித்தால் மற்றொரு விஷயமும் தெரியவரும். அப்பாடலின் வரிகள்,


அன்பு நடமாடும் கலைக்கூடமே

ஆசை மழை மேகமே

கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே

கன்னித் தமிழ் மன்றமே

மாதவி கொடிப்பூவின் இதழோரமே

மயக்கும் மதுச்சாரமே

மஞ்சள் வெயில் போலும் மலர் வண்ண முகமே

மன்னர் குல தங்கமே

பச்சை மலைத்தோட்ட மணியாரமே

பாடும் புது ராகமே

வெள்ளலை கடலாடும் பொன்னோடமே

விளக்கின் ஒளி வெள்ளமே

செல்லும் இடந்தோறும் புகழ் சேர்க்கும் மனமே

தென்னர் குல மன்னனே

இன்று கவி பாடும் என் செல்வமே

என்றும் என் தெய்வமே

மாநிலம் எல்லாமும் நம் இல்லமே

மக்கள் நம் சொந்தமே

காணும் நிலம் எங்கும் தமிழ் பாடும் மனமே

உலகம் நமதாகுமே

அன்று கவி வேந்தன் சொல் வண்ணமே

யாவும் உறவாகுமே


அந்த தயாரிப்பாளர்கள் அடிக்கடி படப்பிடிப்பு சிங்கப்பூரில் ‘மே’ மாதம் துவங்கவிருக்கிறது என்பதை வலியுறுத்தியது கவிஞரை சற்று பொறுமையிழக்கச் செய்திருக்கிறது. அதற்காகவே இந்தப் பாடலின் வரிகளை ‘மே’ என்றே முடியுமாறு வடிவமைத்திருப்பார். இதனை உணர்ந்த அவர்கள் அனைவருமே கவிஞரின் செய்கையை ரசித்து மனம் விட்டு சிரித்தனர். அன்று மட்டுமில்லை, அவர்கள் மட்டுமில்லை, இன்று கூட நாம் அறியும்போதும் நம் முகமலர்களில் ஒரு புன்னகை மலர்கிறது அல்லவா. கவிஞரின் கோபத்தின் வெளிப்பாடு கூட கவித்துவமானது தானே.

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ