பலவீனத்துக்கு ஓர் உதை!
பள்ளி விளையாட்டு போட்டிக்காக பெயர் கொடுக்குமாறு ஏழாம் வகுப்பிற்கு சுற்றறிக்கை வந்தது. மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த விளையாட்டுகளுக்கு விருப்பம் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். ஆசிரியர் மாணவர்களின் பெயர்களை எழுதிக் கொண்டிருந்தார்.
கால்பந்து அணிக்கு மதன், சந்துரு, சந்தோஷ் என சிலர் பெயர் கொடுத்தார்கள். “கால்பந்து விளையாட்டுக்கு என் பெயரை எழுதிக்கோங்க சார்” என்று குரல் கொடுத்தான் கார்த்தி.
எல்லோரும் சிரித்தார்கள். அந்த வகுப்பிலேயே கார்த்திக்கு ஒல்லியான தேகம். உடல் பலமும் குறைவு. விளையாட்டில் அவனும் பெரிய ஈடுபாடு காண்பித்ததில்லை. ஆசிரியருக்கே ஆச்சரியம்தான்.
“நீ வேணும்னா செஸ் போட்டில கலந்துக்க கார்த்தி. கால்பந்து கஷ்டம். அடிபடும்” என்று தயங்கினார் ஆசிரியர்.
“கத்துட்டாவது விளையாடுவேன் சார்” என்றான் பிடிவாதமாக.
ஆசிரியர் கார்த்தியின் பெயரை எழுதிக்கொண்டார். சக மாணவர்கள் நகைப்புடன் பார்த்தார்கள்.
அந்தப் பள்ளியில் ஆண்டுதோறும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள்தான் கால்பந்து சாம்பியன். தங்கவேல் அந்த வகுப்பில் படித்ததுதான் அதற்கு காரணம். தங்கவேல் படிப்பில் சுமார் என்றாலும், விளையாட்டில் முதலிடம் வந்துவிடுவான். தினமும் பயிற்சி செய்வான். நல்ல உடல்வாகு கொண்டவன். கால்பந்து போட்டிகளில் நுணுக்கத்துடன் விளையாடுவான். அது மட்டுமல்ல, ஆண்டுதோறும் ’சிறந்த விளையாட்டு மாணவன்’ கோப்பையை தங்கவேல் தட்டிவிடுவான். இப்போதும் அவனுக்குத்தான் பரிசு என்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள்.
போட்டி அறிவிக்கப்பட்டதும் கார்த்தி பயிற்சியை ஆரம்பித்தான். தினமும் 4 கி.மீ. தூரம் ஓடினான். தன் வகுப்பு தோழர்களுடன் தினமும் கால்பந்து விளையாடினான். தனியாக ஆடிப் பார்த்தான்.
தன்னை வீழ்த்த கார்த்தி திட்டமிடுவது தெரிந்ததும் தங்கவேலுக்கு சிரிப்புதான் வந்தது. “இந்த ஆண்டும் கோப்பை எனக்குத்தான்” என்று மார்தட்டினான். வழக்கம் போல் தனது தோழர்களுடன் பயிற்சி செய்தான். ஒருவித இறுமாப்புடனே திரிந்தான்.
விளையாட்டுப் போட்டிக்கான நாள் வந்தது. கால்பந்து போட்டி விறுவிறுப்பாக நடந்தது. அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று, ஏழாம் வகுப்பும் ஒன்பதாம் வகுப்பும் கால்பந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தன. மைதானத்துக்கு வந்த ஏழாம் வகுப்பு மாணவர்களை தங்கவேல் ஏளனமாகப் பார்த்தான். கார்த்தியைப் பார்த்ததும் சிரித்துவிட்டான். கார்த்தியும் தங்கவேலைப் பார்த்து புன்னகைத்தான்.
இறுதி ஆட்டம் தொடங்கியது. இரு அணியினரும் பயங்கரமாக மோதிக் கொண்டார்கள். கார்த்தி சுறுசுறுப்பாக விளையாடி தனது அணிக்கு கோல்களை குவித்தான். தங்கவேல் அணியின் யுக்திகளை மாற்றி, உற்சாகப்படுத்தினான்.
இரு அணிகளும் சமபலத்தில் இருந்த நேரத்தில் கடைசி நிமிட பரபரப்பு நிலவியது. மைதானமே ஆவலாய் பார்த்துக்கொண்டிருந்தது. கார்த்தி உதைத்து வேகமாக வந்த பந்தைத் தடுக்க தங்கவேல் முயன்றான். அதையும் மீறி பந்து வலைக்குள் நுழைந்து ஏழாம் வகுப்பு அணிக்கு வெற்றி கிடைத்தது.
அதே நேரத்தில் “இந்த ஆண்டு கோப்பை கார்த்திக்கு செல்கிறது” என அறிவித்தார் உடற்கல்வி ஆசிரியர். சக மாணவர்கள் கார்த்தியை தோளில் ஏற்றி கொண்டாடினார்கள். அவர்களுடன் தங்கவேலும் இணைந்து கார்த்தியைத் தாங்கி பிடித்தான். ஊக்கமது கைவிடேல்!
–பிரவீண்
நன்றி-விஜயபாரதம்
Comments
Post a Comment