6 மிக முக்கியமான விஷயங்கள்!!! - 6 Most Important Things !!!

 1.      உடல்-உள நலம் - Physical-mental health (சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்டலாம் என்பார்கள்). உடல்நலம் குன்றியிருந்தாலும் நல்ல உளநலம் இருந்தால் ஓரளவுக்கு ஈடுகட்டலாம், இரண்டையும் அக்கறையாகப் பேணுதலும் இடைவிடாது வலுப்படுத்துதலும் வேண்டும். புறத்தூய்மை அகத்தூய்மை இரண்டும் இதில் அடங்கும்.


2.      கல்வி - Education. இது பட்டம் பெறுவதன்று. முனைவர்ப்பட்டம் பெறுவதன்று. எழுதப்படிக்கத் தெரிந்து சிந்திக்கக் கற்றல். பெரிய செல்வம் உங்களுக்குக் கிடைத்தாலும் அதனைக் காக்க அறிவும் கல்வியும் வேண்டும. இல்லாவிட்டால் பெற்றதையும் இழப்போம். உடல்-உள நலம் பேணவும் இந்தக் கல்வி மிகத்தேவை. அறிவு அற்றம் காக்கும் என்றார் திருவள்ளுவர் (அற்றம் என்றால் முழுவதுமாக அழிவது, பெரும் இழப்பு அற்றுப்போதல் அற்றம், அழிவு). கற்றாருக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு. கல்வி பெரும் விடுதலை அளிப்பது, வாய்ப்பளிப்பது, வாய்ப்பை உருவாக்கவும் உதவுவது. கற்கவேண்டியதைக் கற்க வேண்டும். திருட்டு ஏமாற்று போன்றவற்றைக் கற்பதால் தீமையே. எனவே கற்க கசடற, அதேநேரம் கற்பவை (கற்பனவற்றை, நல்லதை) கற்கவேண்டும். கல்வியின் மிக அடிப்படையான கருவான கூறு கேள்வி. கேட்கும் திறன், உளப்பாங்கு. கற்றிலராயினும் கேட்க என்பார்கள். கேள்வியில்லாத கல்வி உயிரற்ற உடல்போல்! கேள்வி என்பதற்கு அன்பு என்றும் ஆழ்பொருள் அதனைப் பின்னே பார்க்கலாம்


3.      உழைப்பு- Effort. விடாமுயற்சியும் தக்கவாறு நல்லுழைப்பும் தேவை. உழைப்பே உயர்வுதரும். உழைப்பவருக்கே உலகம்! உழைப்பு இல்லை எனில் பெற்ற செல்வத்தை இழக்கலாம், பெற்ற உடல்-உள நலத்தை இழக்கலாம், கல்விகூட மங்கிப்போகலாம். உடலாலும் உள்ளத்தாலும் இடைவிடாது உழைத்தல் வேண்டும். உள்ளத்தின் அழுக்குகளை (சினம், சோம்பல் (மடிமை என்றும் சொல்வார்கள்), பொறாமை.. போன்ற எத்தனையோ குறைபாடுகளை) நீக்கவும் உயிர்ப்பான உழைப்பு வேண்டும். ஊழ் தான் பெரு வலிமை உடையது என்பார் வள்ளுவர், ஆனால் அவரே ஊழையும் அப்பாலோ வைப்பாராம் இடைவிடாது உழைப்பவர் (உஞற்றுபவர். உஞற்றுதல் = கடுமையாக முயன்று உழைத்தல்). உழைப்பில் அடங்கும் முயற்சியும் விடா முயற்சியும். விடாது முயல்பவருக்குத் 'தெய்வங்கள்' கூட இவருக்கு என்ன உதவி செய்யலாம் என்று காத்துக்கிடக்குமாம். உலகத்தின் செல்வம் வளர்ச்சி அனைத்தும் உழைப்பால் ஆனது! உழைப்பின்றி உலகம் இல்லை.


4.      பொருள்-Wealth-செல்வம். பொருள் தேடுதல். நல்வழியில் செல்வம் திரட்டுதல் வாழ்வின் அடிப்படை. செல்வம் இல்லை எனில் உடல்-உள நலம் பேணுதலுல் முதல் அனைத்தும் கடினம். பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. அறவழியில் செல்வம் ஈட்டுதல் வேண்டும். ஆக்கமான பலவற்றைச் செய்ய செல்வம் வேண்டும். மெய்யான இன்பம் செல்வத்தில் இருந்து பெறுவதன்று எனினும் செல்வம் பலவாறு துணை செய்யும், வழிநல்கும்.


5.      உறவு-Relation, நல்லுறவு, அன்புறவு இல்லாவிடில் வாழ்ந்தென்ன பயன்? தீய நட்பை விலக்குதலும் (அதற்கான அறிவு, கல்வி) நல்நட்புகளைக் கொண்டிருத்தலும் பெரும் செல்வம் பெரும் இன்பம். உறவின் அடிப்படை அன்பு. அன்பே அடிப்படை. அன்பே வாழ்வின் இன்ப ஊற்று. அன்பு கொள்வதால் உறவு ஏற்படுகின்றது. இன்பம் பிறக்கின்றது. வாழ்வின் குறிக்கோள் இன்பத்துடன் இருத்தல். அறத்தால் வருவதே இன்பம் என்பார்கள். உறவைக் கொண்டிருப்பதில் பெரு உழைப்பும் உள்ளது. நட்பை நட்ட பின் காக்கவேண்டும் என்பார் வள்ளுவர். கேள் என்றால் அன்பு. கேளிர் என்றால் அன்புடையவர், உறவினர். (யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று வருவதில் உள்ள கேளிர்). கேள்வர் என்றால் அன்பர், காதலர், கணவன்..கேளலர் என்றால் பகைவர். அதாவது அன்பில்லாதார். உறவு என்பது அன்பால். அன்பு கொண்டவர் சொல்லுவதைக் கேட்கும் திறனும் கொண்டிருத்தல். சி'ட்டு கிருட்டிணமூர்த்தி என்னும் மெய்யியலாளர் சொல்வார்: To listen is to love! To love is to listen. தமிழில் ஒரு சொல் இதனை அதன் முழுப்பொருளுடன் சுட்டும். கேள். உறவுக்கு அடிப்படை அன்பு, கேள்! கேண்மை என்றால் நட்பு.


6.      உதவும் உள்ளம் - Helping . கொடையுணர்வு. இயன்ற அளவு பிறருக்கு உதவுதல் வேண்டும். இது பணமாக இருக்க வேண்டியதில்லை. உடலுழைப்பு, நேரம் பகிர்ந்து நல்லன செய்தல், நல்லறிவைப் பகிர்தல், நல்லூக்கம் தருதல், அன்பு பாராட்டல். கண்பார்வையற்றவருக்கு சாலையைக் கடக்க உதவுதல். ஆயிரமாயிரம் வழிகளில் உதவலாம். ஒன்றுமில்லை என்றாலும் கண்களால் இனிதுநோக்கி ஒரு புன்முறுவல் செய்யலாம்.


வாழ்தல் இனிது! வாழ்வோம் இன்பமாய்!

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை