சிக்கல் இல்லாமல் சொந்த வீடு வாங்க இந்த 8 விஷயங்கள் கட்டாயம்..!

 பெரும்பாலானவர்களின் வாழ்நாள் கனவாகச் சொந்த வீடு இருக்கிறது. ஒரு சட்டை வாங்குகிறோம்; செல்போன் வாங்குகிறோம்; சரியில்லை எனில், தூரப் போட்டுவிட்டு, வேறு வாங்கிக்கொள்ளலாம். ஆனால், வீட்டைப் பொறுத்தவரை, நாம் அப்படி நினைக்க முடியாது. அது வாழ் நாள் முடிவாக இருக்கிறது. இன்றைய நிலையில், பெரும்பாலான மக்களால் ஒரு வீடுதான் வாங்க முடியும். அவர்கள் வாங்கும் அந்த வீடு சரியாக அமையவில்லை எனில், அதன் பாதிப்பு வாழ்க்கை முழுக்கத் தொடர்ந்துகொண்டிருக்கும்.

ஆர்.குமார் நிறுவனர், https://navins.in/

ரியல் எஸ்டேட் துறையைப் பாதுகாக்க இன்றைக்கு ‘ரெரா’ என்கிற மிகப்பெரிய அமைப்பு வந்திருக்கிறது. ஆனால், எத்தனை சட்டங்கள் வந்தாலும் வீடு, சொத்து வாங்குபவர்கள், ‘நான் வாங்குகிற மனைக்கு, வீட்டுக்கு நாம்தான் பொறுப்பு’ என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ‘நான் யாரிடம் வேண்டு மானாலும் ஏமாறுவேன். அரசாங்கம் என்னைக் காப்பாற்ற வேண்டும். சி.எம்.டி.ஏ காப்பாற்ற வேண்டும்’ எனக் கோரிக்கை வைப்பதில் நியாயமில்லை.

வீடு விஷயத்தில் சரியாக முடிவெடுக்காமல் அல்லது உணர்ச்சிவசப்பட்டு தவறான வீட்டை வாங்கினால், அது வாழ்க்கையின் வெற்றியைப் பாதிக்கும். ஒருவருக்கு அலுவலகத்தில் பிரச்னை என்றாலும், வீட்டில் வந்துதான் நிம்மதி அடைகிறார். அந்த வீடே பிரச்னையாக இருந்தால், நிம்மதியைத் தேடி அவர் எங்கே போவார்? அதனால், வீடு வாங்கும்போது மிக மிக விழிப்புடன் செயல்பட வேண்டும்.

சொந்த வீடு வாங்கும்போது கவனிக்க வேண்டிய எட்டு முக்கியமான விஷயங்களைத் தவறாமல் கவனித்தால், நீங்கள் வாங்கும் வீடு உங்கள் எதிர்காலத்தை மிகச் சிறப்பானதாக ஆக்கும். அந்த எட்டு விஷயங்கள் என்னென்ன?

1. வரலாறு முக்கியம்

முதலில், சரியான பில்டரைத் தேர்வு செய்வது மிக முக்கியம். அவருடைய வரலாற்றை ஆராய்ந்து பார்ப்பது முக்கியம். பில்டர் இதற்குமுன் கட்டிக் கொடுத்த வீடு களின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது என்பதை நேரில் சென்று பார்க்க வேண்டும்.

மேலும், அந்த வீடுகளில் வசிப்பவர்களிடம் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது. இப்போதெல்லாம், பில்டர் பிரச்னை, வீடு கட்டுமானத்தில் பிரச்னை எனில், இணைய தளங்கள், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சோஷியல் மீடியாக்களில் புகார்களைப் பறக்கவிடுகிறார்கள். எனவே, ஒருவர் நல்ல பில்டரா என்பதைக் கண்டுபிடிப்பது இன்றைக்கு சுலபமான விஷயம்தான்.

2. வீட்டில் வசிக்கப் போகிறீர்களளா..?

பலர் விலை அதிகமாக இருக்கிறது என்று நகருக்கு வெளியே வெகு தொலைவில் வீட்டை வாங்கிவிடுகிறார்கள். அவர்களுக்குச் சொந்த வீடு என்கிற கௌரவம், மற்றவர்கள் மதிக்க வேண்டும், தம்பி வீடு வாங்கிவிட்டான், தங்கை வீடு வாங்கிவிட்டாள், அலுவலக நண்பர் வீடு வாங்கிவிட்டார் என்பதாகத்தான் வீடு வாங்குவதற்கான முக்கியமான காரணமாக இருக்கிறது.

நாம் வாங்கும் வீட்டில் சந்தோஷமாக வசிக்கப் போகிறோமா எனப் பலரும் நினைப்பதில்லை. நகரிலிருந்து 40 கி.மீ தொலைவில்தான் நம் பட்ஜெட்டுக்கு ஏற்ற வீடு கிடைக்கிறது என வாங்கிவிடுகிறார்கள். ஆனால், அந்த வீடு அவர்கள் குடும்பத்துக்கு எந்த நன்மையும் தருவதில்லை. காரணம், நகருக்குள் வசித்துக்கொண்டு, இந்த வீட்டை வாடகைக்கு விடுவார்கள். வாடகை வருமானமும் பெரிதாக இருக்காது. அந்தஸ்து, கௌரவம் பார்த்துச் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள்.

3. அடிப்படை வசதிகள் அவசியம்..!

வேறு சிலர் புறநகரில் சென்று வசிக்கும் எண்ணத்துடன் வீட்டை வாங்குகிறார்கள். ஆனால், பிள்ளைகள் படிக்க நல்ல பள்ளிக்கூடம் இருக்கிறதா, போக்குவரத்து வசதி இருக்கிறதா, மருத்துவமனை வசதி இருக்கிறதா எனப் பார்ப்பதில்லை. பிள்ளைகளுக்குத் தேவையானவை அருகில் இருக்க வேண்டும். அவர்கள் நீண்ட தூரம் அலையும்போது, படிப்பு பாதிக்கப்படும். எனவே, வீடு என்பது வசிக்க அத்தியாவசிய வசதிகளுடன் இருப்பது மிக அவசியமாகும்.

4. விலையைக் கூர்ந்து கவனிப்பது மிக முக்கியம்..!

வீடு வாங்குபவர்களுக்குப் பல பேர் மனையோ, வீடோ என்ன விலை போகிறது என அக்கம்பக்கத்தில் விசாரிப்ப தில்லை. மனை வாங்கி வீடு கட்டி சென்ற பிறகு அல்லது கட்டிய வீட்டை வாங்கி குடியேறிய பிறகு, புரொமோட்டர் அல்லது பில்டர் என்னிடம் அதிக விலைக்கு இடம் அல்லது வீட்டை விற்று என்னை ஏமாற்றிவிட்டார் எனப் புகார் கூறுவதை வழக்கமாகப் பார்க்க முடிகிறது.

விலைக் குறைவு என்பதை மட்டுமே வைத்து வீடு வாங்கும் முடிவை எடுக்காதீர்கள். சந்தை விலையைவிட மிகவும் குறைவான விலைக்கு ஒரு பில்டர் வீட்டை விற்கிறார் எனில், கண்ணில் விளக்கெண் ணெய் ஊற்றிக்கொண்டு பார்க்க வேண்டும்.

குறைந்த விலையில் வீட்டை விற்கிறார்கள் எனில், அந்த இடத்தில் மனை என்ன விலை போகிறது, கட்டுமானச் செலவு எவ்வளவு, இந்த அளவுக்குக் குறைவான விலைக்கு வீட்டை எப்படி விற்க முடியும் என உங்களுக்கு நீங்களே கேள்வி கேளுங்கள். வீட்டின் கட்டுமானத் தரம் எப்படி இருக்கிறது என்பதை நல்ல பொறியாளரை வைத்துப் பரிசோதியுங்கள். விலை குறைவாகக் கிடைக்கிறது என்பதற்காகக் கண்ணை மூடிக் கொண்டு வீடு வாங்கினால், இழப்பு உங்களுக்குத்தான் என்பதை நினைவில் வையுங்கள்.

குறைவான விலையில் கொடுப்பவர்தான் நல்ல பில்டர் என வேறு எதையும் கவனிக்காமல் வீடு வாங்குவது தவறு. உங்கள் அலுவலகத்திலிருந்து மிக அதிக தொலைவில் வீடு வாங்கினால் அலுவலகம் வந்துசெல்லும் நேரம் மற்றும் போக்குவரத்து செலவே பெரும் தொகையாக இருக்கும். இதற்குப் பதில், விலை அதிகம் என்றாலும் நகர்ப் புறத்தில் வாங்குவது நல்லது. போக்குவரத்துக்குச் செலவு செய்யும் தொகையைக் கொண்டு கூடுதல் இ.எம்.ஐ கட்ட முடியும்.

5. அரசு அனுமதி அவசியம்..!

சட்டமும் அரசாங்கமும் ஓரளவுக்குத்தான் பாதுகாப்பாக இருக்கும். வீடு வாங்குபவர்கள்தாம் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

இதற்குமுன், புராஜெக்டில் பிளான் அப்ரூவல் இல்லாமலேயே வீடுகளை விற்க ஆரம்பித்து விடுவார்கள். இப்போது அப்படி எல்லாம் செய்வது கடினம். ரியல் எஸ்டேட் துறையை ஒழுங்கு படுத்தும் ‘ரெரா’ அமைப்பு பில்டர் களைக் கண்காணித்துக் கொண்டி ருக்கிறது.

‘ரெரா’விடம் அப்ரூவல் வாங்குவதற்கு முன், சி.எம்.டி.ஏ, அல்லது டி.டி.சிபி அமைப்பிடம் லே அவுட் மற்றும் கட்டுமான ஒப்புதல் வாங்கியிருக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்பு, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட அமைப்புகளிடம் அனுமதி வாங்கி இருந்தால் மட்டுமே ‘ரெரா’வின் அனுமதி கிடைக்கும்.

நீங்கள் வாங்கப்போகும் வீட்டின் புராஜெக்டை ‘ரெரா’விடம் பதிவு செய்திருக் கிறார்களா, அதன் பதிவு எண் என்ன என்பதை அறிந்து, அதை ‘ரெரா’ வெப்சைட்டில் சரிபார்ப்பது அவசியம். பில்டர் சொல்லும் விவரங்களை ‘ரெரா’ இணையதளத்தில் சரியாக இருக்கிறதா என்பதைப் பாருங்கள். சில பில்டர்கள் ‘ரெரா’வில் சரியான விவரங்களைத் தந்து விட்டு, வீடு வாங்குபவர்களிடம் தவறான விவரங்களைச் சொல்வது நடக்கிறது. எனவே, நீங்கள்தான் கவனமாக இருக்க வேண்டும்.

நீங்கள் பத்தாவது மாடியில் வீடு வாங்குகிறீர்கள் எனில், எத்தனை மாடி வரைக்கும் அப்ரூவல் வாங்கி இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துங்கள். ஒரு வேளை, எட்டு மாடிக்குத்தான் அப்ரூவல் வாங்கியிருப்பார்கள். ஆனால், பத்து மாடி கட்டியிருப்பார்கள். இது போன்ற திட்டங்களில் வீடு வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

6. கார்பெட் ஏரியா

பில்டர்கள் காமன் ஏரியா, கார்பெட் ஏரியா, பிளின்த் ஏரியா, பில்டப் ஏரியா, சூப்பர் பில்ட்அப் ஏரியா எனப் பல டெக்னிக்கல் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். அது நன்றாகப் படித்தவர்களுக்கே கூட புரிவதில்லை.

ஒரு பில்டர், 1,000 சதுர அடி வீடு, சதுர அடி விலை ரூ.5,000 எனச் சொல்கிறார். அப்போது வீட்டின் விலை ரூ.50 லட்சம் ஆகும். இன்னொரு பில்டர், 1,000 சதுர அடி வீடு, சதுர அடி விலை ரூ.6,000 எனச் சொல்கிறார். அப்போது வீட்டின் விலை ரூ.60 லட்சமாகும். இதன்படி, ரூ.50 லட்சம் வீடு மலிவு என அதை வாங்கிவிடுகிறார்கள். ஒரு பில்டர் 900 சதுர அடி வீட்டை 1,000 சதுர வீடு என்று சொன்னால், வீட்டை வாங்குபவரால் அதைக் கண்டுபிடிப்பது மிகக் கடினம்.

‘ரெரா’ அமைப்பு வீட்டை கார்பெட் ஏரியா அளவின் அடிப்படையில்தான் விற்பனை செய்ய வேண்டும் என விதிமுறை கொண்டு வந்திருக்கிறது. எங்கள் நிறுவனத்தின் ப்ரவ்ச்சரில் நாங்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகளை விற்கும்போது கார்பெட் ஏரியா எவ்வளவு, பிளின்த் ஏரியா எவ்வளவு, காமன் ஏரியா எவ்வளவு என ஓர் அட்டவணை போட்டே காட்டியிருப்போம். விலையை மட்டும் கவனிக்காமல் நீங்கள் வசிக்கப் போகிற கார்பெட் ஏரியா எவ்வளவு என்பதைக் கவனிப்பது மிக அவசியமாகும்.

அந்த வீட்டுக்கான கார்பெட் ஏரியா எவ்வளவு என்பது ‘ரெரா’ அமைப்பின் இணையதளத்தில் (https://www.rera.tn.gov.in/) இருக்கும். பில்டர் 1,000 சதுர அடி பரப்பு சொல்லும் வீட்டின் ச.அடி விலை ரூ.5,000. கார்பெட் ஏரியா 700 சதுர அடி எனில், ரூ.50 லட்சம் வீட்டின் ஒரு சதுர அடி கார்பெட் ஏரியாவின் விலை சுமார் ரூ.7,145 ஆகும்.

இதுவே, பில்டர் 1,000 சதுர அடி பரப்பு சொல்லும் வீட்டின் ச.அடி விலை ரூ.6,000. கார்பெட் ஏரியா 850 சதுர அடி எனில், ரூ.60 லட்சம் வீட்டின் ஒரு சதுர அடி கார்பெட் ஏரியாவின் விலை சுமார் ரூ.7,058 ஆகும். மேலும், கார்பெட் ஏரியா கணக்குப்படி, ஒரு சதுர அடிக்கு ரூ.87 குறைவாகவும் கிடைத்திருக்கிறது. அந்த வகையில் 850 சதுர அடி கார்பெட் ஏரியா கிடைக்கும் 6,000 ரூபாய் வீடே லாபகரமாக இருக்கும். விலையை மட்டும் பார்த்து வாங்கி ஏமார்ந்து போகாதீர்கள்.

7. காமன் ஏரியாவையும் கவனியுங்கள்

முதலில் கார்பெட் ஏரியாவில் விலையை ஒப்பிட்டுப் பார்த்துவிட்டு, அதன்பிறகு அந்த அடுக்குமாடியில் இருக்கும் இதர வசதிகள், அதை ஒட்டியிருக்கும் வசதிகளின் அடிப்படையில் பில்டர் சொல்லும் விலை கொடுக்கலாமா என்பதைப் பார்த்து முடிவு செய்ய வேண்டும்.

காமன் ஏரியா என்பது பில்டருக்கு பில்டர் வேறுபடுகிறது. காமன் ஏரியாவில் எதுவெல்லாம் அடக்கம் என வீடு வாங்கப் போகிறவர் அந்த பில்டரிடம் கேட்க வேண்டும். படிக்கட்டு, லிஃப்ட் ஆகியவற்றை சில பில்டர்கள் காமன் ஏரியாவில் சேர்த்திருப்பார்கள். சில பில்டர்கள் சுற்றுச்சுவர், கழிவு வெளியேற்றுவதற்கான கட்டுமானப் பகுதி, தண்ணீரைப் பூமிக்கு அடியில் சேர்த்து வைக்கும் கட்டுமான பகுதி, மேல்நிலை குடிநீர்த் தொட்டி ஆகியவற்றையும் சேர்த்திருப்பார்கள். இந்த ஒப்பீட்டையும் வீடு வாங்குபவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

கிளப்ஹவுஸ், கார் பார்கிங் ஆகியவையும் காமன் ஏரியாவில் வருகிறது. ‘ரெரா’ சட்டப்படி கார் பார்க்கிங் காமன் ஏரியாவில் வருகிறது. வீடு வாங்கும்போது இதுபோன்ற விஷயங்களைக் கவனிக்கும் பொறுப்புகள் வீடு வாங்குபவர்களுக்கு இருக்கிறது. இவற்றை எல்லாம் கவனிக்காமல் வாங்கிவிட்டு, என்னை ஏமாற்றி விட்டார்கள் என்றோ, நான் ஏமாந்துவிட்டேன் என்று சொல்வதிலோ எந்த நியாயமும் இல்லை!

ஃபிளாட்டை பிளான்படி கட்டி இருக்கலாம்; ‘ரெரா’வில் பதிவும் செய்திருக்கலாம். ஆனால், முக்கியமாகப் பார்க்க வேண்டியது, நமக்குக் கொடுப்பதாகச் சொன்ன ஏரியாவும் கொடுக்கிற ஏரியாவும் சரியாக இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும்.

8. ஆவணங்கள்தான் ஆணிவேர்..!

ஆவணங்களின் உண்மைத் தன்மை மிக முக்கியம். வீடு கட்டுமானம், டிசைன், லொகேஷன் எல்லாம் அருமை யாக இருந்து, ஆவணங்களில் ஏதாவது பிரச்னை எனில், ஒட்டு மொத்தமாகப் பணமும் நிம்மதியும் போய்விடும்; நாளைக்கு விற்க முடியாது; அல்லது விலை குறைத்துக் கொடுக்க வேண்டி வரும்.

ஆரம்ப காலத்தில் பில்டருக் கும் வீடு வாங்குபவருக்கும் இடையேயான பிரச்னைக்கு கோர்ட்டுக்குதான் போக வேண்டிருந்தது; இதில், பிரச்னைக்குத் தீர்வு காண பல ஆண்டுகள் ஆகின. அதன் பிறகு நுகர்வோர் கோர்ட்டுக்குப் போக வேண்டியிருந்தது. சில மாதங்கள் அல்லது சில ஆண்டு களில் தீர்வு கிடைத்தது.

இப்போது ‘ரெரா’ அமைப்பு வந்திருப்பதால், பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கிறது; பிரச்னைகளும் வெகுவாகக் குறைந்திருக்கிறது. ‘ரெரா’ அமைப்பு வீடு வாங்குபவர்களின் பிரச்னைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து விரைந்து தீர்த்து வைக்கிறது.

இனியாவது மேலே உள்ள 8 விஷயங்களையும் கவனித்து வீடு வாங்கி, நிம்மதியாக இருங்கள்!

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை