உங்கள் குழந்தைக்கு முதன் முதலாக எந்த ஒரு விடயத்தை கற்றுத் தந்தீர்கள்? இன்று அது அவர்களின் வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கின்றதா?

 நான் என் மகனுக்கு முதலில் சொல்லிக் கொடுத்தது செஸ் விளையாடுவதற்கு.


சாம்பியனாக்க திட்டமெல்லாம் ஒன்னும் இல்லை. தற்செயலாக நிகழ்ந்தது தான்.


மகன் பிறந்த 5வது மாதத்தில் மாமியார் வீட்டிற்கு சென்றோம். தேர் திருவிழா கடையில், தாத்தா தன் பேரனுக்கு விளையாட செஸ் வாங்கி வந்தார்.


என் மாமியாரோ, 5 மாத குழந்தைக்கு வாங்கிவரும் விளையாட்டு சாமானா இது? என்று கேலி செய்தார்.


தாத்தா மனம் வாடக்கூடாதென்று,


செஸ் காய்களை குழந்தையின் விரலில் கோத்து, பிடித்து என்று விளையாட செய்தேன்.

குழந்தை உட்கார ஆரம்பித்த பிறகு ஒவ்வொரு கட்டத்திற்குள்ளும் காய்களை சரியாக வைப்பதற்கு…

இரண்டு வயதில் வெள்ளை, கருப்பு நிற காய்களை தனியாக பிரிப்பதற்கு…

மூன்று வயதுக்குள் எல்லா காய்களையும் சரியாக அதனதன் இடத்தில் வைப்பதற்கு…

ஐந்து வயதில் நன்றாகவே விளையாட ஆரம்பித்து விட்டான்.

என்னம்மா அஞ்சு மாசத்துல இருந்து செஸ் விளையாடிக்கிட்டே இருந்தா, இந்நேரம் எவ்வளவோ உயரத்தில் இருந்து இருக்கணுமே?'ன்னு நீங்க நினைக்கிறது புரியுது.


சாம்பியன் ஆனாரா?


முழு ஆண்டு பரீட்சை விடுமுறைக்கு தாத்தா வீட்டிற்கு(என் அப்பா) சென்ற பொழுது ஓய்வில்லாமல் செஸ் விளையாடிக் கொண்டே இருந்தான்.


யாராவது வீட்டில் சும்மா இருந்தால் "என்னோட செஸ் விளையாட வர்றீங்களா?" என்று நச்சரிக்கும் அளவிற்கு.


விடுமுறை முடிந்து கோவைக்கு திரும்புவதற்கு எல்லா பொருட்களையும் பேக் செய்யும் பொழுது செஸ் மட்டும் காணவில்லை.


வீடு முழுவதும் தேடினேன். பார்த்துக் கொண்டிருந்த என் அப்பா "இங்க வந்து உட்காரும்மா" என்று சோபாவில் அவர் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு சொன்னது....


ஊருக்கு செஸ் எடுத்துக்கிட்டு போக வேண்டாம். நான் தான் மறைச்சு வெச்சேன்.


இவன் வயசில நானும் இப்படிதான் செஸ் விளையாடிட்டே இருந்தேன். எப்போதும் கையில போர்டு வெச்சிகிட்டு ஊரை சுத்திகிட்டே....


பள்ளிகூடத்துகு எப்பவாவது தான் போவேன். ஒவ்வொரு வருஷமும் பாட்டி, நெல், கடலை, எள், வெல்லம் எதையாவது மூட்டையா வாத்தியார் வீட்டுக்கு அனுப்பிவிடுவார். எல்லா வருஷமும் பாஸ் ஆகிட்டே இருந்தேன்.


எல்லா சப்ஜெக்ட்லயும் ஜீரோ. கணக்கில் மட்டும் ஜஸ்ட் பாஸ் செய்து இருப்பேன். எப்படின்னே தெரியவில்லை.


ஒருநாள் வாத்தியார் கோபத்திலே இனிமே செஸ் விளையாடுவியா?'ன்னு திட்டி என் உள்ளங்கையில பிரம்பால் 5 அடிக்கு மேல அடிச்சிட்டார்.


அப்ப கையில போட்டிருந்த மோதிரம் நசுங்கி கழட்ட முடியலை. வீட்ல சொன்னா திட்டுவாங்கன்னு பயந்துகிட்டு சொல்லலை.


ரத்த ஒட்டம் இல்லாம விரலோடு கலர் மாற ஆரம்பிச்சதும் பயந்துகிட்டு எங்ம்மாகிட்ட சொன்னேன். நகை செய்யும் பத்தரை வரவழைச்சு மோதிரத்தை நறுக்கி எடுத்துட்டாங்க.


அப்புறமா செஸ் விளையாடவே இல்லை. அதுக்கப்புறம்தான் ஸ்கூல்ல என்ன நடக்குதுன்னு ஏதோ புரிய ஆரம்பிச்சது.


அதுக்கு முன்னாடி வரை மூளைக்குள்ள எப்போ செஸ் விளையாடலாம்? யார் கூட விளையாடலாம்? எப்படி ஜெயிக்கலாம்? இதுவேதான் ஓடிக்கிட்டே இருக்கும்.


காலையில் எழுந்து பல் விளக்கும் போதும் சரி, சாப்பிடும்போது கூடவும்.


எல்லா நேரமும் ஒரு போதை போல. கிறுக்கு'ன்னு கூட சொல்லலாம்.


இந்த சம்பவத்துக்கு அப்புறம் செஸ் விளையாட நினைச்சாலே விரல் வலிதான் ஞாபகத்துக்கு வந்தது. அதனால் செஸ் விளையாடுறதை சுத்தமா விட்டுட்டேன்.


படிக்க ஆரம்பிச்சுட்டேன். அப்பவும் ஆவரேஜ் ஸ்டுடென்ட் தான். நெல்லு மூட்டை லஞ்சம் கொடுக்காமல் நானாக பாஸ் ஆகும் அளவுக்கு படிச்சேன்.


அஸ்திவாரம் சரியா இல்லாததால, நல்லா படிச்சு மார்க் வாங்க முடியல.


என் காலம் எப்படியோ போயிருச்சு. அந்த அனுபவத்தில் சொல்றேன்,


விளையாட்டு விளையாட்டா இருக்கணும்.


செஸ் விளையாட்டில் சாம்பியனா ஆறது, சம்பாதிக்கறதெல்லாம் ஆயிரத்தில் ஒருத்தர் தான்.


அதுவரை செஸ்போர்டில் காய்களை எங்கே வைக்க வேண்டும் என்று தெரிந்த எனக்கு,


செஸ் போர்டு-ஐ வாழ்க்கையில் எந்த இடத்தில் வைக்க வேண்டும்


என்றும் தெரிந்து கொண்டேன்.


கோவை திரும்பிய பிறகு பள்ளியிலேயே நீச்சல் பயிற்சி சேர்ந்து விட்டார். படிப்பு, நீச்சல் என்று நேரம் சரியாக இருந்தது. வார இறுதி நாட்களில் மட்டுமே செஸ் விளையாடுவார்.

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ