உங்கள் உயர்வைத் தடுக்கும் 10 காரணங்கள்!

 செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

ஒரு புத்தகக் கடையில் சென்று, ‘‘சுய முன்னேற்றம் தொடர்பான புத்தகங்கள் எங்கே இருக்கிறது’’ என்று கேட்டேன். ‘‘அதை நான் சொன்னால் நீங்கள் தேடும் விஷயத்துக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்’’ என்று சொன்னார் அந்தக் கடையில் பணிபுரியும் உதவியாளர். இந்த சுவாரஸ்யமான சம்பவத்தைச் சொன்னபடி ஆரம்பிக்கிறது `நாம் ஏன் மாறுகிறோம்?’ (மற்றும் நாம் மாறாதிருப்பதற்கான 10 காரணங்கள்) என்னும் இந்தப் புத்தகம்.

புத்தகத்தின் பெயர்: How We Change (and 10 Reasons Why We Don’t) ஆசிரியர்: Dr Ross Ellenhorn பதிப்பாளர்: Piatku

வெறும் திட்டம் போதாது...

நீங்கள் தற்போது இருக்கும் நிலையில் இருந்து மாற வேண்டும் என்று மிகவும் விரும்புவீர்கள். அந்த மாற்றம் எந்த அளவுக்கு உங்களுக்கு உதவியாக இருக்கும் என்பதும் உங்களுக்கு நன்றாகவே தெரியும். இதற்காக நீங்கள் திட்டங்கள் பலவும் தீட்டுவீர்கள். இந்தத் தடவை நாம் எப்படியும் அந்த மாற்றத்தைக் கொண்டுவந்துவிட வேண்டும் என்று வைராக்கியத்துடன் செயல்படுவீர்கள். ஆனால், ஒரு சில நாள் கழித்துப் பார்த்தால், மீண்டும் பழையபடியான வாழ்க்கையை வாழத் தொடங்கியிருப்பீர்கள். அதாவது, எந்த அளவுக்கு நீங்கள் மாற வேண்டும் என்று திடமாக விரும்புகிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் மாறுவதற்கான முயற்சிகளை எடுப்பதில்லை என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவீர்கள்.

எது நம்மை செயல்பட வைக்கிறது..?

1930-ம் ஆண்டு கர்ட் லூவின் எனும் பெர்லின் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒரு ஆய்வை செய்தார். அந்த ஆய்வில் அவரும் அவருடைய மாணவர்கள் பலரும் ஒரு உணவகத்துக்கு சாப்பிடச் சென்றனர். உணவகத்தில் அவர்களுடைய மேசைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த உணவு பரிமாறுபவர், அவர்கள் சொன்ன மெனுவை ஆர்டர் எடுத்துச் சென்று 15 நிமிடத்தில் அனைவருடய உணவையும் கொண்டு வந்தார். சாப்பிட்டு முடித்து பில் தொகையைக் கொடுக்கும் முன் பேராசிரியர் உணவு பரிமாறியவரிடம், ‘‘நாங்கள் என்னென்ன உணவை ஆர்டர் செய்தோம்’’ என்று கேட்க, அவர் இம்மிபிசகாமல் கூறினாராம்.

பின்னர் உணவுக்கான கட்டணத்தை அவர்கள் செலுத்திவிட்டு, சற்று நேரம் மாணவர்களுடன் பேசிக்கொண்டிருந்து விட்டுக் கிளம்பும் முன், மீண்டும் அந்த உணவு பரிமாறியவரை அழைத்து, ‘‘நாங்கள் என்னென்ன உணவுகளை ஆர்டர் செய்தோம்’’ என்று கேட்க, அவரால் சரியாகச் சொல்ல முடியவில்லை. ‘‘கொஞ்சம் நேரம் முன்பு சரியாகச் சொன்னீர்களே, இப்போது உங்களால் ஏன் சொல்ல முடியவில்லை...’’ என்று கேட்க, அவரோ ‘‘நீங்கள்தான் பில் தொகையைச் செலுத்திவிட்டீர்களே... திரும்பவும் அதை ஏன் நினைவில் வைத்திருக்க வேண்டும்?’’ என்றாராம். இதிலிருந்து பேராசிரியர் கண்டறிந்த விஷயம் என்ன வெனில், பில் தொகை செலுத்தப்படும் வரை உணவு பரிமாறும் நபர் ஒரு விதமான பதற்றத்தில் இருக்கிறார் (எங்கே கணக்கை சரியாக வைத்துக்கொள்ளாமல் போய் விடுவோமோ, சரியான தொகை செலுத்தாமல் போய்விடுவார்களோ என்ற நினைப்பில்). அந்தப் பதற்றமே ஆர்டர் செய்த உணவுகளைச் சரியாக அவர் நினைவில் வைத்துக்கொள்ள செய்தது. பில் தொகை செட்டிலானபின் அவருக்கு அந்தப் பதற்றம் அறவே இல்லாமல் போய்விடுகிறது. அதனால் அவருக்கு அவை நினைவில் இல்லாமல் போய்விட்டது என்பதுதான்.




மாற்றத்தைக் கடைவிடும் மனநிலை...

இந்த ஆய்வுக்கும் மாற்றத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா..? ‘‘நாம் மாற வேண்டும் என்று நினைக்கிறோம். அதற்கான விஷயங்களைப் பட்டியலிடுகிறோம். அடைய வேண்டிய மாற்றத்தை நினைவில் கொண்டிருக்கும் வரை (பில் தொகை செலுத்தும் வரை) நாம் செய்ய வேண்டிய விஷயங்களை நாம் மறக்கவே மாட்டோம். ஆனால், அன்றாட வாழ்க்கையின் சுழலில் சிக்கி, மாற்றத்துக்குத் தேவையான நாம் செய்ய வேண்டிய விஷயங்களை நம்மால் செய்ய முடியாமல்போகும்போது நமது மனசாட்சி குறுகுறு என்று உறுத்தும். ‘இதைக்கூட நம்மால் செய்ய முடியவில்லை; எப்படி நாம் மாறி முன்னேறுவது’ என்கிற சுயபச்சாதாபம் தோன்றும். இந்தக் குறுகுறுப்பைத் தவிர்க்க சுலபமான மாற்று வழியாக, நாம் என்ன மாற்றம் அடைய வேண்டும் என்று நினைத்தோமோ, அதை மறந்துவிடுகிறோம் (பில் தொகை செலுத்த ஈடானது – இலக்கைக் கைவிடுதல்). இதெல்லாம் சாத்தியமில்லை என நாமே நம் மனதில் தீர்மானித்துவிடு கிறோம். இப்படித் தீர்மானிக்கப்பட்ட அடுத்த நிமிடமே நாம் மாற்றத்துக்காக என்னென்ன விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தோமோ, அவற்றை ஒட்டுமொத்தமாக மறந்துவிடுகிறோம்’’ என்கிறார் ஆசிரியர்.

உங்களுக்கான மாற்றத்தை நீங்களே கொண்டு வாருங்கள்...

பல ஆண்டு ஆராயச்சிக்குப் பின்னால் மாற்றம் குறித்த உளவியல் கண்டுபிடிப்பு என்பது என்னவெனில், ஒரு நிபுணர் கூறும் செயல்களைச் செய்வதன் மூலம் மாற்றத்தைக் கொண்டுவந்துவிட முடியாது என்பதுதான். உண்மையான சுயஉதவி என்பது உங்களுக்கு நீங்களே உதவுவதுதான். அதாவது, ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து அந்தத் திசையில் உங்களைப் பயணிக்கச் செய்வதற்கான காரியங்களை ஒருங்கிணைத்து நடத்திக் காட்டும் சுயதலைமைப் பண்பை (லீடர்ஷிப்) நீங்களே பெறுவது என்பதுதான். மற்றவர்கள் சொல்லும் ஆலோசனைகளைக் காதுகொடுத்துக் கேட்டு அது குறித்து சிந்தித்து உங்களுக்கு ஏற்றாற்போல் நடைமுறைப் படுத்துவதன் மூலம்கூட மாற்றத்தை ஓரளவுக்குக் கொண்டுவர முடியலாம். ஆனால், ‘நான் சொல்வதை அப்படியே பின்பற்றுங்கள்’ என்று ஒருவர் சொல்வதை ஒரு செம்மறி ஆடு போல் பின்பற்றிச் செல்வதால், மாற்றத்தைக் கொண்டு வரவே முடியாது. ஏனென்றால், நீங்களே உங்களை மேய்க்கும் மேய்ப்பராக வேண்டிய காரியம் இது என்று அடித்துச் சொல்கிறார் ஆசிரியர்.

மாற்றம் என்பது...

நீங்கள் உங்களுடைய நடத்தை யில் கொண்டு வர வேண்டிய மாற்றத்துக்கு நீங்களே பொறுப்பு என்பதை நினைவில் கொள்ளுங் கள் என்று எச்சரிக்கும் ஆசிரியர், இதனாலேயே மாற்றத்தை நம் வாழ்வில் கொண்டு வருவது (கொண்டு வரவே முடியாமல் போவதற்கு என்றுகூடச் சொல்லலாம்!) மிகவும் கடினமானதொரு காரியமாக இருக்கிறது என்கிறார்.

நம்முடைய மாறுவதற்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையாமல் ஏன் தோல்வியில் முடிகின்றன? மாறுவதற்கு நாம் விரும்பினாலும் மாறாமல் இருப்பதே நம்மை நிலையாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கும் என்று நாம் முழுமையாக நம்பு வதாலேயே இந்த நிலையில் நாம் இருந்துவிடுகிறோம். மாற முயற்சி செய்து அதில் தோல்வி அடைந்தாலோ, செய்கிற மாற்றத் தால் தோல்வி அடைந்தாலோ என்னவாகும்? நம்முடைய நண்பர்களும் சமூகமும் என்ன சொல்லும் என்ற எண்ணமே நம்மிடையே மேலோங்குகிறது. இதையும் தாண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. அது என்ன?

மாற்றம் என்பது நீங்கள் முழுமையாக (காரண காரியம், சாதக பாதகங்களை முழுமையாக ஆராய்ச்சி செய்த பிறகு எடுக்கும் முடிவின் மூலம்) விரும்பி எடுத்த முடிவாகவும் அதில் நீங்கள் உறுதியாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் அது. இது இல்லாது போன சூழலில் வெறுமனே மாற வேண்டும் என்ற எண்ணத்துக்காக முயற்சி செய்வதும், பயிற்சியாளர் கள், புத்தகங்களைத் துணைக்கு வைத்துக்கொள்வதும் எந்தவித பலனையும் அளிக்காது என்று சொல்லும் ஆசிரியர், பின்வரும் பத்து காரணங்களே நாம் மாறாமல் இருப்பதற்கு முக்கியமானவையாக இருக் கின்றன என்கிறார்.

மாறாமல் இருப்பதற்கான 10 காரணங்கள்...

1. மாறாமல் இருப்பதால், நாம் தனியாளாக இல்லாமல் கூட்டத்துடன் செல்கிறோம்; நம்முடைய வெற்றி, தோல்விக்கு நாமே பொறுப்பு என்ற நிலைக்கு தள்ளப்படுவதில் இருந்து தப்பித்துக்ொள்கிறோம்.

2. மாறாமல் இருப்பதால், புதிய பாதையில் அடுத்தது என்ன என்ற கேள்விக்கு நாம் சொந்தமாகப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்கிறோம்.

3. மாறாமல் இருப்பதால், தெரியாத விஷயங்களிலிருந்து நாம் காப்பாற்றப்படுகிறோம்.

4. மாறாமல் இருப்பதால், நம்மைக் குறித்த நம்முடைய எதிர்பார்ப்புகளிலிருந்து நாம் தப்பித்துக்கொள்கிறோம்.

5. மாறாமல் இருப்பதால் , மற்றவர்கள் நம்மைக் குறித்து செய்யும் எதிர்ப்பார்ப்பு களிலிருந்து நாம் தப்பித்துக் கொள்கிறோம்.

6. மாறாமல் இருப்பதால், நாம் யார் (திறமை, தைரியம் என பல விஷயங்களில்) என்பதை நாமே தெரிந்து கொள்வதிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்கிறோம்.

7. மாறாமல் இருப்பதால், நாம் நம்மை பல்வேறு விதமான அவமானங்களிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்கிறோம்.

8. மாறாமல் இருப்பதால், பெரிய வலிகளிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்கிறோம்.

9. மாறாமல் இருப்பதால் நாம் மற்றவர்களிடமிருக்கும் உறவில் எந்தவித மாற்றமும் செய்யாமல் காப்பாற்றிக் கொள்கிறோம்.

10. மாறாமல் இருப்பதால், நாம் நம்முடன் கொண்டிருக்கும் உறவில் எந்தவித மாற்றமும் செய்யாமல் காப்பாற்றிக் கொள்கிறோம்.

‘‘இருக்கும் நிலைக்கும் மாற வேண்டிய நிலைக்கும் இடையே இருக்கிற கடுமையான பதற்றத்தைத் (tension) தாங்கிக்கொள்ளும் மனநிலையை நீங்கள் கொண்டிருந்தால் உங்களால் அதற்கு ஏதுவான விஷயங்களைச் சுலபமாகச் செய்து, உங்களுடைய வாழ்வில் மாற்றத்தை நிச்சயமாகக் கொண்டு வர முடியும்’’ என்று கூறி முடிக்கிறார் ஆசிரியர்.

மாறத் துடிக்கும் மனிதர்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது!

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ