குறைவான தேவை; நிறைவான வாழ்வு... அவசியம் பின்பற்ற வேண்டிய மினிமலிசம்!
மினிமலிசம்
மினிமலிசம் - இன்றைக்குப் பலரும் இந்த வாழ்க்கை முறை பற்றிப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். மினிமலிசம் என்பது முதலில் ஒரு கலைக்கோட்பாடாகத்தான் தொடங்கியது. 1960-களில் அமெரிக்காவில், வெறும் கோடு, சதுரம், வட்டம் போன்ற வடிவங்களையும், கறுப்பு, வெள்ளை போன்ற அடிப்படை நிறங்களையும் மட்டுமே உபயோகித்து படைக்கப்படும் கலைப் படைப்புகளில் தொடங்கியது மினிமலிசம் (Minimalism). இன்று மனித வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் இதன் உபயோகம் கொண்டாடப்படுகிறது.
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, “நாளை பணத்துக்கு என்ன செய்யப்போகிறோம்?” என்ற கவலையின்றி வாழ்வதே உண்மையான மகிழ்ச்சி அல்லவா? அதை அடையும் வழியாகக் ‘குறைவான தேவை; நிறைவான வாழ்வு’ என்ற மினிமலிசக் கோட்பாடு முன்வைக்கப்படுகிறது. மினிமலிசம் என்பது தேவையான பொருளைக்கூட வாங்க மறுக்கும் கஞ்சத்தனமல்ல; குறைந்த விலைப் பொருள்களையே வாங்கும் சிக்கனமும் அல்ல; “இது என் வாழ்வுக்குத் தேவைதானா” என்று தீர்க்கமாக யோசித்து, கண்டிப்பாகத் தேவை என்னும் பொருள்களை மட்டும் வாங்கும் பழக்கம்.
இன்று நம்மைச் சுற்றி நாம் காண்பதென்ன? ஒரு சிறிய விசேஷத்துக்கும், கொண்டாட்டத்துக்கும் சக்திக்கு மீறிய ஆடம்பரம், ஆர்ப்பாட்டமான செலவுகள்! ஒரு முறை மட்டுமே அணியப்பட்டு அலமாரியில் தூங்கும் ஆடைகள்; முன்பு எப்போதோ வாங்கி இன்றுவரை தேவைப்படாமல் குவிந்து கிடக்கும் சி.டி/ டி.வி.டி-கள்; பாதி படிக்கப்பட்டும், தொடவே தொடாமல் தூசி படிந்தும் கிடக்கும் புத்தகங்கள்; நான்கைந்து வகை ஷூக்கள்; கைப்பைகள்; ஃபோன்கள், அவற்றின் அக்சஸரீஸ்; வீட்டை நிறைக்கும் ஃபர்னிச்சர்கள்; அடுப்படியில்கூட ஏழெட்டு வாணலிகள், தேவைக்கு அதிகமான தட்டு, தம்ளர் கரண்டி வகையறாக்கள்; வெறும் பந்து விளையாட்டிலேயே சந்தோஷம் கொள்ளும் நாய்க்குக்கூட பலவித விளையாட்டுப் பொருள்கள்.
இந்த ஷாப்பிங் போதைக்கு மருந்தாக வந்திருக்கும் மினிமலிசத்தைக் கடைப்பிடிப்பவர்கள் தங்களைத் தாங்களே கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்டுக்கொள்கிறார்கள்.
1. நான் ஷாப்பிங் என்னும் போதைக்கு அடிமையா, 2. யோசிக்காமல் பொருள்களை வாங்கித் தள்ளுகிறேனா, 3. வேண்டாத பொருள்களை வாங்கிக் குவிக்கும் பழக்கம் உள்ளதா, 4. இந்தப் பொருள் எனக்குத் தேவைதானா, 5. இதை என்ன காரணத்துக்காக வாங்க விரும்புகிறேன், 6. அடுத்தவர் மதிக்க வேண்டும் என்பதற்காக வாங்குகிறேனா?
இது போன்ற கேள்விகள் செலவைக் குறைத்து செல்வச் செழிப்பை அதிகரிக்க உதவுகின்றன. ஷாப்பிங் மட்டுமன்றி, வேறெங்கெங்கு இந்த மினிமலிசத்தை நாம் உபயோகிக்க முடியும்?
கடன்கள்
வீட்டுக் கடன், கல்விக் கடன், வாகனக் கடன், நகைக் கடன் போன்ற முக்கிய கடன்கள் மட்டுமன்றி, டி.வி / ஃப்ரிட்ஜ் வாங்கக் கடன், செல்போன் வாங்கக் கடன் என்று பலவித சிறு கடன்களில் சிக்கித் தவிப்போர் பலர். மறதியாலோ, பற்றாக்குறையாலோ இவற்றுக்கு இ.எம்.ஐ செலுத்தத் தவறினால், வட்டி ஏறுவது மட்டுமன்றி, அபரதாமும் கூடுகிறது. சிறு கடன்களைப் பொறுத்தவரை, ஒன்றை முழுவதுமாகக் கட்டி முடித்த பின்புதான் அடுத்த கடனை வாங்க வேண்டும் என்ற மினிமலிசக் கொள்கை உதவும்.
கிரெடிட் கார்டுகள்
நான்கைந்து கிரெடிட் கார்டு கள் வைத்து சர்க்கஸ் செய்வது பலருக்கு கைவந்த கலையாக இருக்கலாம். ஆனால், அது தரும் டென்ஷனிலிருந்து விடுபட விரும்புபவர்கள் கட்டணம் குறைவாக உள்ள ஒன்றிரண்டு கார்டுகளை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை சரண்டர் செய்யலாம்.
ஒன்றிரண்டு வங்கிக் கணக்குகள்...
பல வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும்போது குழப்பம் ஏற்படுவதுடன், ஒவ்வொரு சேமிப்புக் கணக்கிலும் ஐந்நூறு, ஆயிரம் என்று சில்லறையாக வைத்திருக்கும் பணம் மிகக் குறைந்த வட்டியே ஈட்டும். மினிமம் பேலன்ஸ் இல்லாது போனால் விதிக்கப்படும் வங்கிக் கணக்கில் மீதமிருக் கும் பணத்தையும் விழுங்கிவிடும். ஆகவே, அதிகம் உபயோகிக்காத வங்கிக் கணக்குகளை குளோஸ் செய்வது நல்லது.
குறைந்த எண்ணிக்கையில் ஃபண்டுகள், பங்குகள்
அதிக எண்ணிக்கையில் மியூச்சுவல் ஃபண்டுகள் வைத்திருந்தால், ஃபண்டுகளின் செயல்திறனைத் தொடர்ந்து எடைபோட நேரம் கிடைப்பது கடினம். மேலும், ஒரே துறை பங்குகள் ஒவ்வொரு ஃபண்டிலும் இருக்கும்பட்சத்தில், நம் முதலீட்டில் பன்முகத்தன்மை குறைகிறது. அதேபோல், 25 - 30 கம்பெனிகளின் பங்குகளை நாம் வைத்திருக்கும்பட்சத்தில், ஆவரேஜ் லாபம் குறையும் வாய்ப்புள்ளது. அவை ஒவ்வொன்றின் மதிப்பும் (Valuation) கூடுகிறதா, குறைகிறதா என்று எடை போடுவதற்குத் தேவையான நேரம் கிடைப்பதும் கஷ்டம். ஆகவே, ஃபண்டுகள் மற்றும் கம்பெனிகளின் எண்ணிக்கையைக் குறைவாக வைத்திருப்பது நம் போர்ட்ஃபோலியோவின் செயல்திறனை அதிகரிக்கும்.
மாதாந்தர சப்ஸ்க்ரிப்ஷன்களைக் குறைத்தல்...
போன மாதம் யூடியூப் கிளாஸ் சப்ஸ்க்ரிப்ஷன், அதற்கு முன்பு ஓடிடி சப்ஸ்க்ரிப்ஷன், போன வருடம் ஜிம் சப்ஸ்க்ரிப்ஷன் என்று பலவித சப்ஸ்க்ரிப்ஷன்களை ஆரம்பித்து, அவற்றுக்கான கட்டணங்களையும் ஆட்டோமேட்டிக்காக வங்கிக் கணக்கில் இருந்து செல்லுமாறு ஏற்பாடு செய்துவிடுகிறோம். அதன்பின் பலவற்றை உபயோகிப்பதுமில்லை; சப்ஸ்க்ரிப்ஷன் செல்வதை நினைவு கொள்வதுமில்லை. ஆகவே, இவை அனைத்தையும் ஒரு லிஸ்ட் போட்டு பயன்படுத் தாதவற்றை நிறுத்திவிடலாம்.
நோ பை / லோ பை (No Buy, Low Buy) காலங்கள்...
சில மாதங்களைத் தேர்ந்தெடுத்து அப்போது உணவு/வாடகை/ போக்குவரத்து/ மருந்துகள் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே செலவழிக் கும் பழக்கத்தை மேற்கொள்வது ‘நோ பை’ எனப் படுகிறது. வேறு சில மாதங்களில் இதை சற்று தளர்த்தி ஆசைக்காகச் செய்யும் செலவுகளைக் குறைவாக மேற்கொள்வது ‘லோ பை’ எனப்படுகிறது. உதாரணமாக, குடும்பத்துடன் வாரம்தோறும் ஹோட்டல் செல்பவர்கள் அதை மாதம் இரு முறை யாகக் குறைத்து ‘லோ பை’ பழக்கமாக மாற்றலாம்.
இவை தவிர, வீட்டில் வேண்டாது குவிந்திருக்கும் ஃபர்னிச்சர், புத்தகங்கள், கருவிகள், வீட்டு உபகர ணங்கள் (Home Appliances) ஆகியவற்றை க்விக்கர் போன்ற ஆப்களைப் பயன்படுத்தி விற்று வீட்டை சுத்திகரிக்கலாம். அடுத்த தெருவில் இருக்கும் காய்கறி கடைக்குச் செல்வதற்கு வாகனத்தைப் பயன்படுத்தாமல் நடந்து சென்று உடல்நலனை அதிகரிக்கலாம். அடிக்கடி பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் வாங்கி சுற்றுச் சூழலை பாதிப்பதைத் தவிர்த்து, ஒரு நல்ல பிளாஸ்க் அல்லது கண்ணாடி பாட்டிலில் அவ்வப்போது நீர் நிரப்பி பயன்படுத்தலாம். கிண்டில் / இ புக்/ ஆடியோ புக் / இ-பேப்பர் போன்றவை செலவையும் குறைக்கும்; வீட்டில் அடைசல் இன்றி இருக்கவும் உதவும்.
“தேவையில்லாத பொருள்களை வாங்கினால் தேவையான பொருள் களை விற்க நேரிடும்” என்பது பெரியோர் வாக்கு. மினிமலிசத்தைப் பின்பற்றினால், அந்தக் கஷ்டம் நமக்கு வராது!
Comments
Post a Comment