24 வயதில் ரூ.12 கோடி டேர்ன்ஓவர்... இ-காமர்ஸில் கலக்கும் குமரி ஷாப்பி..!

 ஆன்லைன் பிசினஸ்

வெறும் 24 வயதில் ‘அட’ என்று சொல்ல வைக்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் மாங்கன்று விளையைச் சேர்ந்த தீபின். இவருடைய குமரி ஷாப்பி, இப்போது கன்னியா குமரியைத் தாண்டி, தமிழகம் முழுக்க பிரபல மாகி வருகிறது. கருங்கல் பகுதியில் இருக்கும் குமரி ஷாப்பி அலுவலகத்தில் தீபினைச் சந்தித்துப் பேசினோம்.


“எனக்கு பெரிய ஃபேமிலி பேக்கிரவுண்ட் கிடையாது. என் அப்பாவுக்கு விவசாயக் கூலி வேலை; அம்மாவுக்கு ரேஷன் கடையில வேலை. நான் ஆரம்பத்தில டம்மியா ஒரு இ-கார்மஸ் வெப்சைட் கிரியேட் பண்ணு வோம்னு நினைச்சு, ‘கே.டி மார்ட்’-ன்னு ஒரு வெப்சைட்டை கிரியேட் பண்ணினேன். அதுக்குப் பிறகு 2019 பிப்ரவரி 14-ம் தேதி ‘குமரி ஷாப்பி’ங்கிற பெயர்ல ஒரு இணையதளத்தை தொடங்கினேன். முதல்ல எட்டு மாசத்துக்கு நான் தனி ஆளாத்தான் அதை நடத்தினேன். நான் பகல்ல டெலிவரிபாயா வேலை பார்ப்பேன். ராத்திரி வெப்சைட்ல டிசைன் பண்ணுவேன். மளிகைச் சாமான்கள் சொந்தமா வாங்கிட்டு வந்து, ஸ்டாக் வச்சு ஆன்லைன்ல விக்கத் தொடங்கினேன். அதுல ஒண்ணுரெண்டு கல்யாண ஆர்டர் கிடைச்சது. ஆனா, அவங்க சமயத்துக்குப் பணம் தராததுனால எனக்கு 1.08 லட்சம் கடன் ஆயிடுச்சு. என் வீட்லயும் எதிர்ப்பு கிளம்பி, எனக்கு பணம் தர மாட்டேன்னுட்டாங்க.

மனம் தளராம கடன் தந்தவங்களை நேரில் பார்த்து ஒரு மாசம் டைம் கேட்டுட்டு, பிசினசில முழுமூச்சா இறங்கினேன். இரண்டு இளைஞர்களை வேலைக்கு வச்சுகிட்டேன். அப்புறம் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போட்டு பிசினஸை விளம்பரப்படுத்தத் தொடங்கினேன். ஆனா, நெருங்கிய ஒருசில நண்பர்கள் மட்டும் ஆர்டர் தந்தாங்க. அந்தச் சமயத்தில, முதல் லாக் டெளன் போட்டாங்க. பொருளை சப்ளை செய்ய முடியலை. வேற வழியில்லாம, மார்த்தாண்டத்தில ஒரு ஐ.டி கம்பெனியில வேலைக்குச் சேர்ந்தேன். அங்க மத்தியானம் வரை டிரெய்னிங் போயிட்டு மத்தியானத்துக்கு மேல என் பிசினஸைக் கவனிச்சேன்.

Kumari shoppy



பணியாளர்களுடன் தீபின்

இந்தச் சமயத்துல ‘குமரி ஷாப்பி’ பத்தி ஃபேஸ்புக்ல ஒரு வீடியோவை நானே தயங்கித் தயங்கிப் பேசி போட்டேன். அந்த வீடியோவை 1,700 பேர் ஷேர் பண்ணினாங்க. மூணு லட்சம் பேர் பார்த்தாங்க. அதில இருந்துதான் நம்ம டேர்னிங் பாயின்ட் ஆரம்பிச்சது. அதுக்கு பிறகு வாடிக்கையாளர்கள் வர ஆரம்பிச்சாங்க. 2020 ஜூன் மாசம் வாக்கிலதான் இந்த வெப்சைட் மூலமா ஒரு லட்சம் ரூபாய் லாபம் பார்த்தேன். அதுக்கு பிறகுதான் மெல்ல மெல்ல முன்னேற்றம் வர ஆரம்பிச்சது. வரக்கூடிய வருமானத்தை முழுசா இந்த பிசினஸிலே திரும்பவும் முதலீடு செஞ்சேன். வரக்கூடிய பிப்ரவரியில மூன்று வருஷம் முடியுது. அதுக்கு பிறகுதான் லாபத்தை கையில எடுக்கப்போறேன்” என்றவர், இந்த பிசினஸை நிலைநிறுத்த பட்ட கஷ்டம் ஒன்றல்ல, இரண்டல்ல. அதைப் பற்றி எடுத்துச் சொன்னார்.

‘‘ஆரம்பத்தில வெப்சைட்ல மொபைல் வியூ மட்டும் ரெடி பண்ணிகிட்டு கடைகளில் போய் டைஅப் கேட்டேன். ஒரு கடைக்காரர் வெப்சைட் பெயரைச் சொல்லுன்னார். நான் சொன்னதும் சிஸ்டத்தில டைப் பண்ணி பார்த்தார். ஆனா, சிஸ்டம் பிளாங்கா இருந்தது. அதைப் பார்த்து கோபமாகி, என்னைத் திட்டி விட்டுட்டார். ‘மொபைல் வியூதான் இப்ப இருக்கு; சிஸ்டம் வியூ இனிதான் வரும்’னு அவருகிட்ட சொல்லி புரியவைக்க முடியல.

இதுமட்டும் இல்லாம, ரெண்டு மூணுவாட்டி ஹேக்கிங் எல்லாம் நடந்துச்சு. மொதல்ல நாங்க வேட் பிரஸ்லதான் வெப்சைட் வச்சிருந்தோம். எங்களுக்கு ஒருத்தர் 40,000 ரூபாய் லேப் டாப்பை ஆஃபர்ல 8,000 ரூபாய்க்கு தந்தார். எங்களுக்கு அப்ப தேவை இருந்ததுனால வாங்கினோம். அவங்க அதில ஸ்பைவேர் வச்சு தந்திட்டாங்க. அதனால நாங்க வெப் சைட்டுக்கு யூஸ் பண்ண பாஸ்வேர்டு எல்லாம் அவங்களுக்குப் போயிரும். அதை வச்சு எங்க வெப்சைட்டை காலி பண்ணிட்டாங்க. அதனால எங்க எட்டு மாச உழைப்பு வேஸ்ட் ஆயிடுச்சு. லேட்டா அதைத் தெரிஞ்சுகிட்டு அந்த லேப்டாப், அப்ப யூஸ் பண்ணின மொபைல், ஹார்ட் டிஸ்க், ஏழெட்டு பென்ட்ரைவ் எல்லாத்தையும் அழிச்சிட்டோம். வெப்சைட்டை மீட்க முயன்றப்பதான் ‘பேக்கப்’ எடுத்து வச்சீங்களான்னு கேட்டாங்க. அப்படி ஒரு சமாசாரம் இருக்கிறதே அப்பதான் எங்களுக்குத் தெரிஞ்சது.

போன வருஷம் ஜனவரியில எங்க ஃபேஸ்புக்கை ஹேக் பண்ணி எங்க வீடியோவை எல்லாம் டெலிட் பண்ணிட்டாங்க. அப்புறம் அந்த ஃபேஸ்புக் அக்கவுன்டை எங்க டீம் மீட்டு எடுத்துட்டாங்க. 2020 செப்டம்பர் 4-ல எங்க அப்ளிகேசனை லாஞ்ச் பண்ணினோம். அந்த சமயத்துல கன்னியாகுமரியில இ-காமர்ஸ்ல இருந்தவங்க எங்களைப் பற்றி நெகட்டிவ் பதிவுகளைப் பரப்பினாங்க. அதுவும் எங்களுக்கு சாதகமா அமைஞ்சிருச்சு. அந்த எதிர்மறை விளம்பரங்களைப் பார்த்து ‘குமரி ஷாப்பில என்ன இருக்கு’ன்னு பார்க்க வந்தவங்க நிறையபேர் எங்களுக்கு கஸ்டமர் ஆகிட்டாங்க. அதனால, 35 நாளில எங்க ஆப் 10,000 இன்ஸ்டால்ஸைக் கடந்திருச்சு.


அப்ளிகேஷன் லாஞ்ச் பண்ணிப்ப 2020 செப்டம்பர் 24 முதல் 27 வரை ஃபெஸ்டிவெல் ஆஃபர் போட்டிருந்தோம். அதுக்காக பேப்பர்ல விளம்பரம் போட்டிருந்தோம். எங்க ஊழியர்கள் 15 நாளா ஆபீஸ்ல ராத்திரி பகலா வேலை பார்த்தாங்க. நூறு டெலிவரி பாய்ஸ் ஐந்து நாள் வேலைக்காக டெம்பவரியா எடுத்து வச்சிருந்தோம். காலையில 6 மணிக்கு ஆஃபர் ஆரம்பிச்சோம்; 6.15-க்கு வெப்சைட்டும் போயிடுச்சு, அப்ளிகேசனும் போயிடுச்சு. அப்பத்தான் வெப்சைட் கெபாசிட்டிக்காக சர்வர்னு ஒரு விஷயம் இருக்கிறது தெரிய வந்துச்சு. ஒரு செக்கண்ட்ல 1.6 லட்சம் பேஜஸ் லோட் ஆகி யிருக்கு. அப்ப நாங்க பேசிக் பிளான்ல பே பண்ணி வச்சிருந்த சர்வரோட கெபாசிட்டி ரொம்ப கம்மி. திரும்பவும் வெப்சைட்டை அப்டேட் பண்ண 48 மணி நேரம் டைம் எடுக்கும். இதைப் பார்த்துட்டு, 111 பேர் பிளே ஸ்டோர்ல நேரடியா போய் ஒன் ஸ்டார் ரிவியூ போட்டுட்டாங்க. நான் துடிச்சுப் போயிட்டேன். ஆனா, அதை வெளிக்காட்டி கிட்டா ஊழியர்கள் உடைஞ்சு போயிருவாங்கன்னு, ‘நாம சரி பண்ணிடலாம்’னு அவங்களுக்கு ஊக்கம் கொடுத்தேன். ‘தொழில் நுட்பக் கோளாறு காரணமா இப்படி ஆயிடுச்சு; ரெண்டுநாள் கழிச்சு திரும்பவும் சேல்ஸ் நடக்கும்’னு மறுநாள் விளம்பரம் போட்டோம். வெப்சைட்டை ரெடி பண்ணிகிட்டு சில நாள் களிலேயே திரும்பவும் ஆஃபர் சேல்ஸ்ஸைத் தொடங்கினோம். முதல்நாளில 1.15 லட்சம் ரூபாய்க்கு தேன் மிட்டாய் சேல் பண்ணினோம். எங்களுக்கு கொஞ்சம் லாஸ் ஆனாலும் மக்கள் மத்தியில நல்ல ரீச் ஆச்சு. மூணாவது நாள் ஒன் ஸ்டார் ரிவியூ போட்டவங்க எல்லாம் அதை மாத்தி ஃபைவ் ஸ்டார் ரிவியூ கொடுத்தாங்க. நிறைய இன்ஸ்டால்ஸ் ஆச்சு. அப்ப சர்வர் பிரச்னை ஆனதுனால நாங்க சொந்தமா சர்வர் வாங்கினோம். இப்ப சர்வர், சாஃப்ட்வேருக்காக மட்டுமே ஒரு கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருக்கேன். எல்லாமே அட்வான்ஸா வச்சிருக்கிறோம்.

ஆரம்பத்துல கடைகளில இருந்து பொருள்களை எடுத்து மக்களுக்குக் கொண்டு கொடுக்கிறதுதான் எங்க பிசினஸ். லாக்டெளன் சமயத்தில கடைகளை மூடினதுனால எங்க பிசினஸும் ஸ்டாப் ஆச்சு. அப்பத்தான் நாமளும் ஸ்டாக் வச்சுக்கணும் அப்படீங்கிறதை யோசிச்சோம். இப்ப நான்கு இடங்களில வேர்ஹவுஸ் எடுத்து, அதில ஒரு கோடி ரூபாய்க்கான பொருள்கள் ஸ்டாக் வச்சிருக் கோம். கன்னியாகுமரி மாவட்டத் தில 547 கடைகள் எங்களோட டைஅப்ல இருக்காங்க.

எனக்கு இப்ப 24 வயசுதான் ஆவுது. சிலர் ‘குமரி ஷாப்பி’ ஓனர பாக்கணும்னு சொல்வாங்க. நான் சின்ன வயசா இருக்கிறதுனால சில பெரிய ஆஃபர்கள் ரிஜெக்ட் ஆனதும் உண்டு. சிலர் ஷேர் மாதிரி இன்வெஸ்ட் பண்ண வந்தாங்க. ஆனா, என் வயச பார்த்துட்டு ரிஜெக்ட் பண்ணிட்டு போயிட்டாங்க. அதுவும் ஒரு விதத்தில நல்லதுதான். வெறும் ஒரு லட்சம் ரூபா, ரெண்டு லட்சம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு அவங்கள உள்ள எடுத்திருந்தா கம்பெனியில பெரிய பகுதியை இழந்திருப்பேன். 2019-ல யாராவது ஒரு லட்சம் ரூபா தாங்க 50% ஷேர் தாரேன்னு கேட்டிருந்தேன். அப்ப என்னைப் பார்த்து சிரிச்சவங்க, இப்ப பெரு மிதமா பார்க்கிறாங்க. ஒரு கோடி ரூபாய் பெருசா, வேல்யபிள் ஐடியா பெருசான்னு என்கிட்ட கேட்டா ஐடியாதான் பெருசுன்னு நான் சொல்வேன்” என்றவர், குமரி ஷாப்பியின் வளர்ச்சி பற்றியும் சொன்னார்.

“டெலிவரிக்காக இப்ப மாசச் சம்பளம் கொடுக்கிறோம். அதிகமா பிசினஸ் நடக்குறதுனால இனி கமிஷன் பேசிக்ஸ்ல டெலிவரி பாய்ஸை நியமிக்கலாம்னு இருக்கேன். மளிகைப் பொருளில இருந்து மொபைல், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் எல்லாம் சேல்ஸ் ஆகுது. தீபாவளியைவிட கிறிஸ்துமஸ்க்கு 27% விற்பனை அதிகரிச்சது. கன்னியாகுமரி தவிர மதுரை, சிவகாசி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் எங்க ஊழியர்கள் வேலை பார்க்கிறாங்க. தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களுக்கு கூரியர் மூலமா சர்வீஸ் கொடுக்கிறோம். இப்ப குமரி ஷாப்பி அப்ளிகேஷன் 49,600 இன்ஸ்டால்ஸ் ஆகியிருக்கு. இன்னும் 400 இன்ஸ்டால்ஸ் வந்திடுச்சுன்ன 50,000 ஆகிடும். அப்ப கன்னியாகுமரி மாவட்டத்தில 50,000 தொட்ட முதல் அப்பிளிகேஷன் குமரி ஷாப்பியாதான் இருக்கும். இப்ப சராசரியா ஒரு நாளுக்கு 60 இன்ஸ்டால்ஸ் வருது.

எங்களுக்கு ஆரம்பத்தில ஒரு நாள் அதிகபட்சமா 8 ஆர்டர் வரும். ஒரு மாசம் அதிகபட்சமா ஆயிரம் ரூபாய் டேர்ன்ஓவர் ஆனாலே ஆச்சர்யம். இப்ப ஒரு மாசம் ஒரு கோடி ரூபா டேர்ன்ஓவர் ஆகுது. ஒரு மாசத்தில அதிகபட்சமா 1.23 கோடி டேர்ன்ஓவர் ஆச்சு. கடைசி ஆறு மாசத்துல சராசரியா மாசம் 85 லட்சம் ரூபாய் டேர்ன் ஓவர் வருது. இப்ப கன்னியாகுமரி மாவட்டத்தில மட்டும் ஒரு நாள் 100-லிருந்து 150 ஆர்டர் வரும். மற்றபடி தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆர்டர் வருது. மொத்த டேர்ன் ஓவர்ல 15% லாபம் வரும். ஊழியர்களுக்கு இப்ப அடிப்படை சம்பளம் 8,000 ரூபாய் கொடுக்கிறேன். தகுதியைப் பொறுத்து 25,000 ரூபாய் சம்பளம் வரைக்கும் கொடுக்கிறேன்’’ எனப் பெருமையாகப் பேசி முடித்தார்.

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ