மரணம் ஒரு வரம். மரணம் பெருங்கருணை.

அலெக்சாண்டர் இந்தியாவுக்கு வருமுன் இந்திய ஞானத்தைப் பற்றியும், ஞானிகளைப் பற்றியும் அதிசயங்களைப் பற்றியும் கேள்விப் பட்டிருந்தார்.


அதில் ஒன்று, இங்கு வட இந்தியாவில் ஏதோ ஒரு குகையில் ஒரு சுனை இருப்பதாகவும், அந்த சுனை நீரை குடிப்பவர்கள் சாகாவரம் பெறுவர் என்பதுமாம்.


அலெக்சாண்டர் இந்தியாவிலிருந்து திரும்புவதற்கு முன் மிகுந்த பிரயத்தனத்திற்கு பின் அந்த குகையைக் கண்டுபிடித்தும் விட்டார்.


படைகளை பின்னே நிறுத்தி விட்டு அலெக்சாண்டர் மட்டும் முன்னேறி குகைக்குள் சென்றார். அது நீண்ட ஒரு குகை. குகையின் இறுதியில் சிறியதாக ஒரு சுனை இருப்பதைக் கண்டார். தண்ணீர் தெளிவாக சலனமற்று இருந்தது. அருகில் சென்றார். குனிந்தார். கவனமாக இரு கைகளையும் குவித்து தண்ணீரை அள்ளினார்.


என்ன ஒரு அற்புதம். இனிமேல் சாவில்லை. உலகம் முழுதும் செல்லலாம்:; வெல்லலாம்.


அப்பொழுது ஒரு குரல் கேட்டது. தலையை நிமிர்த்திப் பார்த்தார். எதிர்க்கரையில் மிகவும் சோகமான தோற்றத்துடன் ஒரு காகம் அமர்ந்திருந்தது. அது பேசியது.


"ஒரு நிமிடம்…" அலெக்சாண்டருக்கு ஆச்சரியம். காகம் தொடர்ந்தது.


"ஒரு நிமிடம்…அந்த நீரைப் பருகுவதற்கு முன் என் கதையைக் கேளுங்கள். நானும் உங்களைப் போல்தான்…சில நூறு வருடங்களுக்கு முன் ஒரு நாள் மிகுந்த ஆசையுடன் இந்த நீரைப் பருகினேன். இந்த உலக சுகங்களை ஆசை தீர அனுபவித்தேன். இனி பார்க்க வேண்டியது எதுவும் இல்லை. அனுபவிக்க வேண்டியது எதுவுமில்லை. எல்லாம் அலுத்து விட்டது. என்னுடன் இருந்த உறவினர்களும் நண்பர்களும் இறந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது. எனக்கு என்று எவரும் இல்லை. எனக்கு வாழவும் பிடிக்கவில்லை. இந்த நீரைப்பருகி சாகா வரம் பெற்று விட்டதால் இறக்கவும் முடியவில்லை. வாழ்க்கை மிகவும் நரகமாகி விட்டது. இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது என்றுதான் நான் இங்கேயே அமர்ந்திருக்கிறேன். உன்னைப் போன்று யாராவது எப்பொழுதாவது வருவாராயின் அவர்களை எச்சரிக்கிறேன். இனி உன் விருப்பம்" என்று முடித்தது.


அலெக்சாண்டருக்கு ஒரே குழப்பம். கண்களை மூடி சில நிமிடங்கள் யோசித்தான். இறுதியில் அந்தக் காகம் சொல்வதில் உள்ள நியாயம் புரிந்தது. தெளிவு பிறந்தது.


அலெக்சாண்டர் புத்திசாலி. கைகளில் இருந்த நீரை மீண்டும் சுனையில் விட்டான்.


அந்த காகத்தை மிகுந்த நன்றியுடன் நோக்கினான். கை கூப்பி விடை பெற்றுத் திரும்பினான்.


பிறகு அலெக்சாண்டர் தனது 32-ம் வயதில் இறந்தது நம் அனைவருக்கும் தெரிந்ததுதானே!


துரோணரின் மகன் அசுவதாமன் ஏழு சீரஞ்சீவிகளில் ஒருவன். மிகவும் பாவப்பட்ட சிரஞ்சீவி. கிருஷ்ணரின் சாபம் பெற்றவன்.


"கருவில் இருக்கும் குழந்தையைகூட கொன்ற மகாபாதகனான நீ பூமி அழியும்வரை உயிரோடு இருந்தாலும் உனக்கு உறவென்று யாரும் இருக்கமாட்டார்கள், உன் சியமந்தகமணி உன்னிடம் இல்லாததால் இனி உன்னை எந்த நோயும் தீண்டும், உன் முன் நெற்றியில் இருந்து உதிரம் எப்போதும் நிற்காமல் வடியும், உனக்கு பசியோ, தாகமோ,தூக்கமோ எதுவும் இருக்காது" என்று சாபம் இடுகிறார் ஸ்ரீகிருஷ்ணர்.


இன்றும் குஜராத் மாநிலத்தின் ஆசிர்கார் மாவட்டத்தில் உள்ள மலைக்காடுகளில் அவர் சுற்றி வருவதாகவும், பலர் அவரை நேரில் கண்டதாகவும் வதந்திகள் உண்டு.அவர் நெற்றியில் பெரிய காயமும் அதில் இருந்து உதிரம் வடிந்துகொண்டே இருக்கும் என்றும், அவர் சுமார் 10 அடி உயரம் இருப்பார் என்றும் மக்களிடையே ஒரு பேச்சு. ஆனால் அது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.அந்த மலையில் உள்ள மிகப்பழமையான சிவன் கோவிலுக்கு தினமும் அதிகாலையில் வந்து அவர் பூஜித்து செல்வதாகவும், அந்த சுற்றுவட்டார பகுதிகளில் கிடைக்காத மலர்களும், இமயத்தின் சாரல்களில் மட்டுமே வளரும் அதிசயமான மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வதாகவும் அப்பகுதி மக்களிடையே ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது.


இது போன்ற ஒரு வாழ்க்கை தேவையா ?

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

Nothing can compete with The knowledge gained from poor, confidence

EFFECTS OF NEGATIVE THOUGHTS ON YOUR MIND & BODY