வீட்டிலேயே வளர்க்கக்கூடிய 30 வகை மூலிகைகள்! - உணவுக்கு உணவு... மருந்துக்கு மருந்து!
அறுகம்புல் சாறு... மிகச்சிறந்த ரத்தச் சுத்திகரிப்பான். இதற்கு இணையாக ரத்தத்தைச் சுத்திகரிக்கும் மருந்து ஆங்கில மருத்துவத்தில்கூட இல்லை.
மூலிகைகள் மனிதனுக்கு ஏற்படும் பிணிகளை நீக்கும் அருமருந்துகள். அவற்றை யெல்லாம் சரியாக அடையாளம் கண்டு, உண்டு, நோய்களில் இருந்து நிவாரணம் பெற்றனர் நம் முன்னோர். வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, காலப்போக்கில் அவை மெள்ள மெள்ள நம்மிடமிருந்து அந்நியப் பட்டு கிடக்கின்றன. ஆனாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா படுத்தும் பாட்டால் பலரும் இந்த மூலிகைகளை நாட ஆரம்பித்துள்ளனர். இவை யெல்லாம் எங்கு கிடைக்கும் என்கிற தேடலிலும் இருக்கிறார்கள்.
உண்மையில் ஏழு கடல், ஏழு மலைகளை எல்லாம் தாண்ட வேண்டியதில்லை. நம் வீட்டைச் சுற்றியும், ரோட்டைச் சுற்றியும்கூட அவையெல்லாம் வளர்ந்துதான் கிடக்கின்றன. நாம் நினைத்தால் வீடுகளிலேயேகூட வளர்க்க முடியும். அப்படி சுலபமாக வளர்க்கக்கூடிய 30 வகையான மூலிகைகள் மற்றும் அவற்றின் பலன்கள் இதோ.
1.அறுகம்புல் - ஆரோக்கியம் உங்கள் கையில்...
‘மூர்த்தி சிறிது... கீர்த்தி பெரிது’ என்பார்களே, அது அறுகம்புல்லுக்குத்தான் பொருந்தும். புல் வகைகளின் அரசன் அறுகு. சல்லிவேர் முடிச்சுகள் மூலமாகவும், விதைகள் மூல மாகவும் இனவிருத்தியாகிறது. அறுகம் புல்லை வேர் முடிச்சுகள் இருக்குமாறு வேரோடு பறித்து தொட்டியில் வைத்தால் தானாக வளர்ந்து விடும். தண்ணீர் இல்லாமல் அறுகம்புல் காய்ந்து போய்விடலாம். என்றாலும், பல ஆண்டுகள் கழித்து அந்த வேரில் தண்ணீர்பட்டால்கூட, பட்டென்று செழித்து வளரத் தொடங்கிவிடும் தன்மை அறுகுக்கு உண்டு.
பயன்கள்: அறுகம்புல் சாறு... மிகச்சிறந்த ரத்தச் சுத்திகரிப்பான். இதற்கு இணையாக ரத்தத்தைச் சுத்திகரிக்கும் மருந்து ஆங்கில மருத்துவத்தில்கூட இல்லை. அதனால்தான் அறுகை ‘கிரீன் பிளட்’ என அழைக்கிறார்கள், வெளிநாட்டினர். ‘அறுகைப் பருகினால் ஆரோக்கியம் கூடும்’ என்கிறது, சித்த மருத்துவம். இதை ‘விஷ்ணு மூலிகை’ என்று அழைத்தார்கள், சித்தர்கள்.
அறுகம்புல்லை தண்ணீரில் அலசி சுத்தப்படுத்தி, தண்ணீர் சேர்த்து இடித்தோ, அரைத்தோ சாறு எடுத்துக் காலையில் வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். இது, நீரிழிவு, உடல் பருமன், ரத்த அழுத்தம் ஆகிய நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்து. அறுகு சாறு குடித்தால், இரவில் நல்ல தூக்கம் வரும். சோர்வே தெரியாது. வயிற்றுப்புண் குணமாகும். சளி, சைனஸ், ஆஸ்துமா, தோல் வியாதி, மலச்சிக்கல், பல் ஈறு கோளாறுகள், கர்ப்பப்பைக் கோளாறுகள், மூட்டுவலி ஆகியவை நீங்கும்.
2 துளசி - நொறுங்கும் நெஞ்சு கபம்!
ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய முக்கியமான மூலிகை துளசி. இது தெய்விக மூலிகை மட்டுமல்ல. காற்றில் உள்ள கரியமில வாயுவின் அளவைக் குறைக்கும் அற்புதமான மூலிகையும்கூட. துளசி வளர்க்கத் தேவையானவை சிறிய தொட்டி, ஓரமான ஓர் இடம். வீட்டின் ஜன்னல் பகுதி கூடப் போதுமானது. விதை, கன்று மூலமாக வளர்க்கலாம். சூரிய ஒளி நேரடியாகப் படாமல் அளவாகப்படும் இடத்தில் துளசிச் செடியை வளர்க்க வேண்டும்.
பயன்கள்: ஜலதோஷம், காய்ச்சல், இருமல் போன்ற பல்வேறு பருவகால நோய்களுக்குத் தீர்வு துளசி. தினமும் காலையில் நான்கு அல்லது ஐந்து துளசி இலைகளை அப்படியே மென்றுவரலாம். இதன் இலையில் சாறெடுத்து இஞ்சிச்சாறு, தேன் கலந்து கொடுத்தால் நெஞ்சு கபம் காணாமல் போய் விடும். துளசி, ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது. மன இறுக்கத்தைக் குறைக்கிறது. அதிக ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் துளசி, ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதிலும் உதவுகிறது.
3 கற்பூரவள்ளி - காலடியில் கிடக்கும் காயகல்பம்!
காலடியில் கிடக்கும் காயகல்பம் என்று இதைச் சொல்லலாம். இது, ஓமவள்ளி என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு கிளையை ஒடித்துத் தொட்டியில் வைத்தால் போதும். செடி வளர்ந்துவிடும். குழந்தைகள் இருக்கும் வீட்டில் அவசியம் இருக்க வேண்டிய மூலிகை.
பயன்கள்: இதன் இலைகளை வெறும் வாயில் சாப்பிடலாம். தினம் ஒரு இலையைப் பறித்து, தண்ணீரில் கழுவி சாப்பிட்டு வர, சளி பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். இதன் தண்டுகளை நடவு செய்யாமல் தூக்கிப் போட்டால்கூட தானாக முளைத்துவிடும். சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தை களுக்கு இதன் இலையில் பஜ்ஜி செய்து கொடுக்கலாம். அதிக இருமல் காரணமாக உண்டாகும் நெஞ்சுவலியைப் போக்கும் ஆற்றல் கற்பூரவள்ளிக்கு உண்டு. இதை வீடு களில் மொட்டை மாடி, ஜன்னல், காம்பவுன்டு சுவர் என எங்கு வேண்டுமானாலும் வளர்க்கலாம்.
4 சோற்றுக்கற்றாழை - மாதவிடாய்க் கோளாறுகளுக்கு மாமருந்து!
‘எந்தச் செடியையும் என்னால் வளர்க்க முடிய வில்லை... அதற்குத் தண்ணீர் ஊற்றக்கூட நேரம் இருப்பதில்லை’ என்று சொல்பவர்களும் வளர்க்க ஏற்ற செடி கற்றாழை. இதை வீட்டில் கட்டித் தொங்கவிட்டால்கூடப் போதும்... தண்ணீர், பராமரிப்பு எதுவும் இல்லாமல் வளரும். `கட்டிப் போட்டால் குட்டிப் போடும்' என்பது சோற்றுக்கற்றாழைக்குப் பொருந்தும். சாலையோரங்களில் தானாக முளைத்துக் கிடக்கும் சோற்றுக்கற்றாழையைப் பறித்து வந்து வீட்டில் வைத்தால்... கவனிப்பு இன்றியே வளர்ந்துவிடும். சோற்றுக்கற்றாழை ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய மூலிகை.
பயன்கள்: மனித உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், ஃபோலிக் அமிலம், சுண்ணாம்பு, மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், சிறியளவில் பாஸ்பரஸ் ஆகிய சத்துகள் இதில் உள்ளன. சோற்றுக் கற்றாழையிலிருந்து எடுத்த சோற்றை (சோற்றுக்கற்றாழையின் தோலைச் சீவிய பின் இருக்கும் ஜெல் பகுதி) நன்கு கழுவி சுத்தப்படுத்திய பின் உண்ணலாம். இதனால் உடல் குளிர்ச்சியாகும். சோற்றுக்கற்றாழை மாதவிடாய்க் கோளாறுகள், கருப்பைப் பலவீனம், குழந்தையின்மை ஆகிய மூன்று முக்கிய வியாதிகளுக்கு மருந்தாக விளங்கு கிறது.
5 குப்பைமேனி - குப்பையான மேனியும் குணமாகும்!
‘குப்பையில் கிடக்கும் கோமேதகம்’, ‘சேற்றில் முளைத்த செந்தாமரை’ எனச் சொல்வார்களே... அதற்கு முற்றும் பொருத்தமானது, குப்பை மேனி. வாய்க்கால், வரப்பு, சாலையோரங்கள், குப்பைமேடுகள் எனக் காணும் இடங்களில் எல்லாம் துளிர்த்துக் கிடக்கும் குப்பைமேனி. விதை மூலமாக இனப்பெருக்கம் செய்யும். தொட்டிகளில் இதன் விதைகளைத் தூவி விட்டால் போதும், வளர்ந்துவிடும். நோயால் குப்பைபோல் ஆகிவிட்ட மேனியைக் குணப் படுத்துவதால்தான் இதற்குக் குப்பைமேனி என்ற பெயர்.
பயன்கள்: சொறி, சிரங்கு போன்ற பல்வேறு தோல் நோய்களுக்கு நல்ல மருந்து. குப்பைமேனி செடியை வேருடன் பிடுங்கி, அப்படியே நன்றாகக் கழுவி, பொடியாக நறுக்கி உலர வைக்க வேண்டும். அதில் ஒரு கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டுக் காய்ச்சி, ஆறவைத்து வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால்... பேதியாகி மலத்துடன் வயிற்றுப் பூச்சிகள், கிருமிகள் வெளியேறிவிடும். இலையைப் பொடி செய்து சாப்பிட்டும் பூச்சிகளை வெளியேற்றலாம்.
குழந்தைகளுக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை குடற்புழு நீக்கம் செய்யச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். அதற்கு, குப்பைமேனி இலையை அரைத்துச் சாறெடுத்து, குழந்தைகளுக்கு ஒரு தேக்கரண்டி கொடுக்கலாம்.
6 கீழாநெல்லி - கல்லீரல் பிரச்னைக்கு இலவச வைத்தியம்!
விதை மூலமாக இனப்பெருக்கம் செய்யப் படுகிறது. கீழாநெல்லி என்றாலே மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும் மூலிகை என்பது தெரியும். ஆனால், மஞ்சள் காமாலை யுடன் நின்றுவிடவில்லை இதன் சேவை. பைல் நிரூலின், நார் செக்குரினின், நிர் பைலின், தேலிக் அமிலம், எல்லாஜிக் அமிலம், ஹேலிக் அமிலம் போன்ற 50-க்கும் மேற்பட்ட மருத்துவ மூலக்கூறுகள் இதில் இருப்பதைப் பார்த்து ஆச்சர்யத்தில் வாயடைத்துக் கிடக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
பயன்கள்: கீழாநெல்லி இலையுடன் சிறிது மஞ்சளைச் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து, 15 நிமிடங்கள் வைத்திருந்து குளித்தால், ‘ஸ்கின் பிராப்ளமா... எனக்கா?’ எனக் கேட்கும் அளவுக்கு ‘அடடா’ மாற்றத்தை உணர்வீர்கள். கீழாநெல்லிச் செடியை நன்றாக அரைத்து சொறி, சிரங்கு, படைகளில் பற்றுப்போட்டால் உடனே குணமாகும்.
கல்லீரல் பிரச்னைக்கு லட்சங்களில் பணத்தைச் செலவழித்து பெறும் வைத்தியத்தை, இலவசமாகவே தருகிறது கீழாநெல்லி. நீரிழிவு நோய்க்கும் தீர்வைச் சொல்கிறது இந்தச் சிறியச் செடி. இதை அரைத்து, பாலுடன் கலந்து தொடர்ந்து உட்கொண்டு வந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். இதுமட்டுமா குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுப் பிரச்னைகள், அதிக உஷ்ணம், கண் நோய்கள், மாதவிடாய்ப் பிரச்னைகள், பசியின்மை, தீராத அழுகிய புண்கள், வீக்கம் எனப் பல பிரச்னைகளைத் தீர்த்து வைக்கிறது கீழாநெல்லி.
7 தூதுவளை - தொண்டைவலி தொல்லை... இனி இல்லை!
கொடியாகப் படரும் மூலிகை. இதன் இலை, பூ, காய், கனி, தண்டு, வேர் என அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் நிறைந்தவை. இதைக் காம்பவுண்ட் ஓரமாக நடவு செய்யலாம். ஊதா நிறப்பூக்கள், வெள்ளை நிறப்பூக்கள் என இரண்டு ரக தூதுவளை செடிகள் இருக்கின்றன. தண்டுகளை நடவு செய்து தூதுவளைக் கொடியை உருவாக் கலாம். இதன் இலை மற்றும் தண்டுப் பகுதியில் முட்கள் இருக்கும் என்பதால் கவனமாகக் கையாள வேண்டும்.
பயன்கள்: தூதுவளையைத் துவையலாகச் செய்து சாப்பிட்டால் தும்மல், தலைவலி, இருமல், மூச்சுத்திணறல், சளி பிரச்னைகள் தீரும். தூதுவளையில் ரசம், சூப் செய்தும் சாப்பிடலாம். கைப்பிடி அளவு இலையை மையாக அரைத்து, தோசை மாவுடன் கலந்து தோசை சுட்டுச் சாப்பிடலாம். கோதுமை மாவுடன் சேர்த்து சப்பாத்தியாகவும் செய்து சாப்பிடலாம். தொண்டைவலி குணமாகும். தூதுவளையில் கால்சியம் சத்து அதிகமுள்ளதால் எலும்பையும் பற்களையும் பலப்படுத்தும். அதற்கு, தூதுவளை கீரையுடன் பருப்பு மற்றும் நெய் சேர்த்துச் சமைத்து 48 நாள்கள் சாப்பிட்டு வர வேண்டும். இதன் முள் செடி, தண்டு, இலை, வேர் ஆகியவற்றை நிழலில் 5 நாள்கள் காயவைத்துப் பொடி செய்து தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிட ஆஸ்துமா குறையும். தூதுவளை யுடன் மிளகு சேர்த்துக் கசாயம் வைத்துக் குடித்தால் வறட்டு இருமல் குறையும். தூதுவளை பழத்தை வத்தலாகக் காயவைத்து, வதக்கிச் சாப்பிட்டால் கண் குறைபாடுகள் குறையும்.
8 சிறுபீளை - சிறுநீர்க்கல்லை உடைக்கும் அருமருந்து!
சாலையோரங்கள், வயல், வரப்புகளில் காணப்படும் மூலிகை. அதை வேரோடு பறித்து வந்து நடவு செய்தால் போதும். நடவு செய்யாமல் போட்டு வைத்தால்கூட வளர்ந்துவிடும். ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய செடி. பொங்கல் காப்பு கட்டுக்குப் பயன்படும் சிறுசெடி.
பயன்கள்: சிறுபீளை சிறுநீர்க்கல்லை உடைக்கும் அருமருந்து. கடினமான பாறையை உடைக்கும் சிறு உளியைப் போன்றது இந்த அதி அற்புத மூலிகை. உணவு உண்ட பின் புரதச்சத்து சிதைப்புக்குப் பிறகு உண்டாகும் கழிவுப்பொருளான யூரிக் அமிலம், ரத்தத்தில் 6 மில்லிகிராம் அளவில் இருக்க வேண்டும். இந்த அளவைத் தாண்டும்போது, சிறுநீரில் கலந்து வரும் யூரிக் அமிலம் துகள்களாகப் படிவதுண்டு. இதனால் சிறுநீர்க்கல் பிரச்னை உண்டாகலாம். அதற்குத் தீர்வு பெற, சிறுபீளை, சிறுநெருஞ்சில் செடிகளை வேரோடு பறித்து, பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி சுண்டக் காய்ச்சிக்கொள்ள வேண்டும். உதாரணமாக, ஐந்து டம்ளர் நீர் ஊற்றினால், அது ஒரு டம்ளராக சுண்டும் வரை காய்ச்ச வேண்டும். இந்த ஒரு டம்ளர் நீரை தினமும் மூன்று வேளைக்குப் பகிர்ந்து அருந்த வேண்டும். தொடர்ந்து மூன்று நாள்கள் அருந்தினாலே கற்கள் உடைந்து சிறுநீரில் வெளியேறுவதை கண்கூடாகப் பார்க்கலாம். ‘8 மில்லி மீட்டர் அளவுள்ள கற்களைக்கூட உடைத்து வெளியேற்றும் திறன் இந்த கஷாயத்துக்கு உண்டு’ என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.
9 நொச்சி - கொரோனா கொல்லி!
கொரோனா தொற்றுக்குப் பிறகு, நொச்சி மிகப்பிரபலமாகி விட்டது. கொரோனா தாக்குதலுக்குக் காரணமாக இருக்கும் வைரஸ்களுக்கு எதிராகச் செயல்படும் குணம் இதில் இருப்பதை தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு கண்டறிந்திருக்கிறது. ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இதையெல்லாம் கண்டறிந்துதான் நம் முன்னோர்கள் தொடர்ந்து இந்த நொச்சியைப் பயன்படுத்தி வந்துள்ளனர். சளித் தொல்லை யைப் போக்க ஆவி பிடிக்க அற்புதமான மருந்து இது. நர்சரிகளில்கூட நொச்சி நாற்றுகள் கிடைக்கின்றன. இதைப் பெரிய தொட்டிகளில் வளர்க்க வேண்டும். மொட்டை மாடி, புழக்கடை, வீட்டுக்கு முன்பாக என இஷ்டம்போல வளர்க்கலாம்.
பயன்கள்: நொச்சி இலையின் புகைக்கு கொசுக்கள் வராது. ஆஸ்துமா, மூச்சுத்திணறலால் அவதிப்படுபவர்கள், இரண்டு நொச்சி இலையுடன் நான்கு மிளகு, ஒரு லவங்கம், நான்கு பூண்டுப் பல் ஆகியவற்றை வாயில் போட்டு மென்று விழுங்கினால் சரியாகும். நொச்சி இலையைப் பானையில் நன்றாக வேகவிட்டு இறக்கி, அந்தப் பானையில் சூடான செங்கல் துண்டுகள் அல்லது வெங்கிச்சான் கல்லைப் போட்டு, உடல் முழுவதும் கனமான போர்வையால் மூடி, ஆவி பிடித்தால், இரண்டு நிமிடங்களில் உடலில் உள்ள துர்நீர் வியர்வையாக வெளியேறும். நொச்சி இலையைப் பறித்து, பருத்தித் துணியில் வைத்துக் கட்டி தலையணை யாகப் பயன்படுத்தினால் கழுத்து வீக்கம், கழுத்து வாதம், ஜன்னி, நரம்பு வலி, மூக்கடைப்பு குணமாகும். உடலில் தோன்றும் கட்டிகள்மீது நொச்சி இலைச் சாற்றை பற்றுப் போட்டால் கட்டிகள் கரையும்.
10 திருநீற்றுப் பச்சிலை - இலையில் இருக்குது முகப்பரு க்ரீம்!
திருநீற்றுப் பச்சிலையை விதைகள், நாற்றுகள் மூலம் வீட்டில் வளர்க்கலாம். நடுத்தரமான தொட்டி போதுமானது. இது மூலிகையாக மட்டுமல்லாமல் செடிகளின் மகரந்தச் சேர்க்கைக்கும் மிகவும் உதவியாக இருக்கும். அதாவது, நீண்ட காலமாகப் பூக்காத செடிகளுக்குப் பக்கத்தில் திருநீற்று பச்சிலை செடியை வைத்தால் மகரந்தச் சேர்க்கை நடந்து பூக்கள் பூக்கத் தொடங்கும். அதனால் வீட்டுத்தோட்டத்துக்குத் தேவை யான செடிகளில் முக்கியமானது திருநீற்றுப் பச்சிலை.
பயன்கள்: இன்றைய அவசர வாழ்க்கைக்கு ஏற்ற மூலிகைச் செடி என்று இதைச் சொல்லலாம். மற்ற மூலிகைகளைப்போல் இலையைப் பறித்து, காய வைத்தோ, வேகவைத்தோ, பொடியாக்கியோ பயன் படுத்தத் தேவையில்லை. இதன் இலைகளைப் பறித்து கையில் கசக்கி முகர்ந்து பார்த்தாலே போதும்... தலைவலி, தூக்கமின்மை, இதய நடுக்கம் சரியாகும். அந்த அளவுக்கு இன்ஸ்டன்ட் மருந்து. முகப்பருவுக்கு அதிக செலவு செய்து க்ரீம்களை வாங்கத் தேவை யில்லை. திருநீற்றுப் பச்சிலையின் இலையைப் பறித்துக் கசக்கிப் பருக்களில் தேய்த்தால் போதும் ‘முகப்பரு போயே பேச்சே...’ என்று சொல்லலாம்.
11 நிலவேம்பு - முதலுதவிப்பெட்டி!
இதற்குச் சிறிய நங்கை என்று ஒரு பெயரும் இருக்கிறது. விஷக்கடிக்கு, குறிப்பாகப் பாம்பு கடிக்கு மிகச் சிறந்த மருந்து. டெங்கு, சிக்குன்குனியா, கொரோனா தொற்றுகள் காரணமாக மக்கள் மத்தியில் பிரபலமாகி யிருக்கிறது. காய்ச்சலைத் தடுக்க ஆங்கில மருத்துவர்களே பரிந்துரைக்கும் உன்னத மூலிகை. இது வீட்டில் இருப்பது முதலுதவி பெட்டி இருப்பதற்கு சமம். விதைகள், நாற்றுகள் மூலமாக வளர்க்கலாம். தற்போது அனைத்து நர்சரிகளிலும் நிலவேம்பு நாற்றுகள் கிடைக்கின்றன. இதை அதிக வெயில் இல்லாத பகுதிகளில் வளர்க்கலாம்.
பயன்கள்: இதன் இலைகளை ஒரு கைப்பிடி எடுத்து நான்கைந்து மிளகு சேர்த்து வாயில் போட்டு மென்றால் விஷக்கடி இறங்கும். இதன் இலைகளைப் பறித்து நிழலில் காயவைத்துப் பொடி செய்து வீட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால் ஒரு லிட்டர் தண்ணீரில் 30 கிராம் பொடியைக் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். கால் லிட்டர் தண்ணீராகச் சுண்ட வைத்து இறங்கி கஷாய மாகக் குடித்தால் எந்தவித காய்ச்சலாக இருந்தாலும் குணமாகும்.
12 ஆடாதொடா - இருமலுக்கு எமன்!
குழந்தைகள் இருக்கும் வீட்டில் இருக்க வேண்டிய மூலிகை. பெண்களுக்கு மிகவும் அவசியமான ஒரு மூலிகை. இருமலுக்கு எமன். போத்துகள் மூலமாக நடவு செய்ய லாம். நர்சரிகளிலும் நாற்று கிடைக்கிறது. வாய்ப்பு இருப்பவர்கள் தரையில் நடவு செய்து வளர்க்கலாம். ஆடுகள் இதைச் சாப்பிடாது. அதனால்தான் இதற்கு ஆடா தொடா என்று பெயர். வேலியோரமாக, காம்பவுண்ட் சுவருக்கு அருகில் இதை வளர்க்கலாம். இலைகளைப் பறிக்கப் பறிக்கக் கிளைகள் அதிகமாக உருவாகும்.
பயன்கள்: பல இருமல் மருந்துகள் ஆடாதொடாவில் இருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. 100 கிராம் ஆடாதொடா இலையை அரை லிட்டர் தண்ணீருடன் சேர்த்துக் காய்ச்சி 125 மில்லியாக வற்றவைத்து வடிகட்டி அதனுடன் 100 கிராம் வெல்லத்தைப் போட்டு மீண்டும் அடுப்பேற்றி பாகு பதத்தில் இறக்கிக் குழந்தைகளுக்குக் கொடுத்தால் இருமல் குணமாகும். பேறுகால கர்ப்பிணிகள் 8வது மாதம் முதல் இதன் வேரைக் கஷாயம் செய்து தினமும் குடித்து வந்தால் சுகப்பிரசவத்துக்கு அதிக வாய்ப்பு உண்டாகும். ஆடாதொடா இலையை நிழலில் காயவைத்து, பொடி செய்து காலை, மாலை பாலில் சேர்த்துக் குடித்து வந்தால் காரணமில்லாமல் வரும் ரத்த அழுத்தம், படபடப்பு குறையும்.
13 கரிசலாங்கண்ணி - கருங்கூந்தலுக்கு மட்டுமல்ல, கண்களுக்கும் அருமருந்து!
இதில் மஞ்சள், வெள்ளை என இரண்டு வகைகள் இருக்கின்றன. கரிசலாங்கண்ணி வளர்க்க விதை, செடி தேவையில்லை. ஏற்கெனவே உள்ள செடியிலிருந்து தண்டை ஒடித்து நடவு செய்தால் போதும்... வளர்ந்து விடும். அதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள் நர்சரிகளில் வாங்கி வளர்க்கலாம். இது மருந்தாக மட்டுமல்லாமல் உணவாகவும் பயன்படும் செடி. சிறிய தொட்டிகளில்கூட வளர்க்கலாம். பால்கனி, மாடிப்படிகள், மொட்டை மாடி என எங்கும் வளர்க்கலாம். எப்போதும் ஈரப்பதம் இருக்க வேண்டியது அவசியம்.
பயன்கள்: இதன் கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் உடம்பில் இரும்புச் சத்து, ஹீமோகுளோபின் அதிகரிக்கும். கீரையைக் கடைந்து சாப்பிடலாம். சட்னியாக அரைத்து சாப்பிடலாம். கூந்தல் வளர்ச்சிக்கும் கருமை நிறத்துக்கும் இதன் இலைகள் உதவியாக இருக்கும். இலைகளைப் பறித்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலைக்குத் தேய்த்து வந்தால் கூந்தல் கருகருவென வளரும். இதில் கண் மை தயாரிக்கலாம். இதன் இலைகளைப் பறித்து சாறு பிழிந்துகொள்ள வேண்டும். காட்டன் திரியை அந்தச் சாற்றில் நனைத்து காய வைக்க வேண்டும். பிறகு, அந்தத் திரியை விளக்கில் போட்டு எரியவிட்டு அதன் மீது சிறிய ஓடு போன்ற ஒரு பொருளைக் கவிழ்த்து வைக்க வேண்டும். அந்த ஓட்டில் கரி படியும். அந்தக் கரியை எடுத்து விளக்கெண்ணெயில் குழைத்தால், கண்களுக்குக் குளிச்சித் தரும் கண் மை தயார்.
இஞ்சி - வயிற்றுப் பிரச்னைகளுக்கு வரப்பிரசாதம்!
வீட்டில் இருக்க வேண்டிய அத்தியாவசிய செடி. இதை மலைப்பகுதியில் மட்டுமல்ல அனைத்துப் பகுதிகளிலும் வளர்க்கலாம். இதற்கு நாற்று தேவையில்லை. வீட்டில் சமையலுக்கு வாங்கிய இஞ்சியே போதும். இஞ்சியை எடுத்து மொட்டுகள் இருப்பதுபோல் துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். அந்த மொட்டுகள் முழுவதும் மறையாமல் சற்று வெளியில் தெரியுமாறு தொட்டியில் நடவு செய்து தண்ணீர் ஊற்றி வர வேண்டும். 20 முதல் 25 நாள்களில் இஞ்சி முளைக்கும். தொட்டியில் தண்ணீர் தேங்கக் கூடாது, வடிகால் அவசியம். 6 மாதங்களில் இஞ்சியை அறுவடை செய்யலாம்.
பயன்கள்: இஞ்சிச் சாறெடுத்து தெளிய வைத்து, அடியில் படியும் வெள்ளை நிற மாவுப்பொருளை நீக்க வேண்டும். பிறகு, அடுப்பிலேற்றி ‘சுர்’ரென்ற சத்தம் வந்தவுடன் அடுப்பைவிட்டு இறக்கிப் பயன்படுத்த வேண்டும். இதை ‘சுரசம்’ என்பார்கள். ஞாயிற்றுக்கிழமைதோறும் இரவு படுக்கப்போகும் முன், இஞ்சிச் சாறெடுத்து, சுரசம் செய்து 15 மி.லி முதல் 30 மி.லி வரை குடித்து வந்தால், வயிற்றில் உள்ள வாய்வு, மலச் சிக்கல், வயிற்றில் தங்கிய பழைய மலம் முதலான அனைத்தும் மறுநாள் காலையில் வெளியேறிவிடும். உடலும் புத்துணர்ச்சி பெறும். வயிற்றுப் போக்கு, இதயநோய்கள், வாதநோய்கள், தோல் நோய்கள் முதலான பெரு நோய்கள் வராது. இஞ்சியில் உள்ள ‘ஜிஞ்ஜிபெரின்’ என்னும் மருந்தியல் பொருள், இரைப்பை மற்றும் குடலில் உள்ள புண்களைக் குணமாக்கும். வாரம் ஒருநாள், உணவுடன் இஞ்சித்துவையல் சேர்த்துக் கொள்வது நல்லது.
செம்பருத்தி - ரத்த அழுத்தத்துக்குக் கத்தி!
செம்பருத்தியை தண்டு, பதியன் மூலமாக வளர்க்கலாம். செம்பருத்தி செடியில் தண்டை வெட்டி நடவு செய்தால் போதும். நடவு செய்யும்போது, மண்ணுக்குள் போகும் தண்டுப் பகுதியின் அடிப்பகுதியை, காயம்படாமல் மேல் தோலை மட்டும் சற்று சீவிவிட்டு நடவு செய்தால் விரைவாக வேர் பிடிக்கும். நர்சரிகளிலும் நாற்றுகள் கிடைக்கின்றன. தேவைப்பட்டால் இயற்கை உரங்கள் கொடுக்கலாம். ஆனால், அள வாகக் கொடுக்க வேண்டும். அதிகமாகக் கொடுத்தால் இலைகள் தடித்து, பூக்கள் எண்ணிக்கை குறையும்.
பயன்கள்: தினமும் ஒரு செம்பருத்திப்பூ இதழ்களை சாப்பிட்டால் வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும். இதய நோயாளிகள் செம்பருத்திப்பூ இதழ், வெள்ளைத் தாமரை இதழ் எடுத்து கசாயம் செய்து, பாலில் கலந்து குடித்து வந்தால் ரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்கி இதய நோய் குணமாகும். இதன் இலைகளைக் கொதிக்க வைத்து, தேன் அல்லது நாட்டு சர்க்கரை கலந்து தேநீராக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும். பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் பேன், பொடுகுத் தொல்லை நீங்கும்.
மணத்தக்காளி - வாய்ப்புண், வயிற்றுப்புண்ணுக்கு அருமருந்து!
மணத்தக்காளி, விதைகள் மூலமாக இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. மணத் தக்காளி செடியில் இருக்கும் பழங்களைப் பறித்து விரலில் வைத்து நசுக்கினால் விதைகள் வெளியே வரும். அவற்றைக் காயவைத்து தொட்டிகளில் தூவிவிட்டால் மணத்தக்காளி செடி வளர்ந்துவிடும். இது ஒரு செடி இருந்தால் போதும். கீழே விழும் பழங்கள் மூலமாக அதிக செடிகள் உருவாகி விடும். மணத்தக்காளி விதை ஒரு கிலோ 8,000 ரூபாய். அந்த அளவுக்கு விலை மதிப்புள்ள செடி. நான்கு தொட்டிகளில் மணத்தக்காளி இருந்தால், வாரம் ஒருமுறை சமையலுக்குக் கீரை பறிக்கலாம்.
பயன்கள்: மணத்தக்காளி கீரையை சாறெடுத்து, அதை வாயில் ஊற்றி, சிறிது நேரம் கழித்து கொப்பளித்தால் வாய்ப்புண் ஆறும். வாய் துர்நாற்றமும் போய்விடும். மணத்தக்காளி பழங் களைக் கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்தால், கர்ப்பப்பை பலமடைந்து சுகப்பிரசவத்துக்கு கைகொடுக்கும். இந்தக் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் குடல் புண், வாய்ப்புண், பால்வினை நோய்கள், உடல் உஷ்ணம், கர்ப்பப்பை கோளாறுகள், மலச்சிக்கல், காமாலை, தலைவலி நீங்கும்.
பசலைக்கீரை - இணையற்ற சத்துப் பெட்டகம்!
விதை மற்றும் தண்டு மூலமாக இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. சிவப்பு, பச்சை என இரண்டு நிற பசலைக்கீரைகள் உள்ளன. மிளகு சைஸ் இருக்கும் இதன் பழங்களை நசுக்கினால் சிவப்பு நிறமாக இருக்கும். இதை லிப்ஸ்டிக் பழம் என்பார்கள். விதையை நசுக்கி, காய வைத்து, தொட்டிகளில் நடவு செய்தால் போதும்... பசலைக்கொடி உருவாகிவிடும். இரண்டு, மூன்று இலைகள் உள்ள தண்டை நடவு செய்வதன் மூலமாகவும் உருவாக்கலாம். இதை நடவு செய்ய பெரிய தொட்டிகள் தேவையில்லை. கொடி படர்வதற்குத் தோதான இடத்தில் இதை வளர்க்க வேண்டும். வேகமாக வளரும் செடி. செடிக்கு எப்போதும் ஈரப்பதம் இருப்பது போல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பயன்கள்: இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் எனப் பல்வேறு சத்துகள் நிறைந்த பசலைக்கீரை உடலுக்கு நன்மை தருவதில் இணையற்ற கீரை என்று சொல்லலாம். குறிப்பாக, இதில் உள்ள ‘ஃபோலோசின்’ இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது. அதே நேரம் இதயநோயாளிகள் இந்தக் கீரையை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக் கூடாது. ரத்தச் சோகை பிரச்னைக்கு பசலைக்கீரை மிகுந்த நன்மையை அள்ளித்தருகிறது. வைட்டமின் ஏ, பி, சி சத்துகளும், பொட்டாசியம் உப்பின் காரச்சத்தும் ஏராளமாக உள்ளன. வைட்டமின் ஏ குறைபாட்டால் ஏற்படும் பார்வைக்கோளாறைக் குணப்படுத்துவதோடு ரத்தத்தை விருத்தி செய்யும். இதிலுள்ள இரும்புச்சத்து மிக எளிதாக செரிமானமாகி உடம்பால் கிரகிக்கப்படும். தலைவலி வந்தவர்கள் பசலைக்கீரையைத் தீயில் வாட்டி தலையில் பற்றுப் போட்டால் குணமாகும்.
வல்லாரை - நினைவாற்றல் மந்திரம்!
வேர், தண்டு மூலமாக இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. சமையலுக்கு வாங்கும் வல்லாரைக் கீரையில் சல்லி வேருள்ள தண்டை நடவு செய்தால் போதும், வல்லாரை படரத் தொடங்கும். இது விரைவாகப் படரும். வாய்ப்புள்ளவர்கள் தரைப்பகுதியில் நடவு செய்தால் நன்றாகப் படர்ந்து வளரும். கீரைகளில் அதிக விலையுள்ள கீரை இதுதான். அந்தளவுக்கு இதில் சத்துகள் உள்ளன.
பயன்கள்: வல்லாரை, கீரையை அரைத்து சாறு எடுத்து 10 மில்லி சாற்றில் கொஞ்சம் தேன் கலந்து காலையிலும் மாலையிலும் வெறும் வயிற்றில் குடித்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். இது மூளையில் ஆக்ஸிஜனேற்றம் நடப்பதைத் தடுத்து, செல்கள் பாதிப்படைவதைத் தடுக்கிறது. கற்கும் திறன் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கும். மூளையின் நரம்பு மண்டலத்தில் கிளைகள் போன்று இருக்கும் பகுதிதான் மற்ற செல்களிலிருந்து வரும் சிக்னல்களை உள்வாங்கிக் கொள்ளும். இந்தப் பகுதியின் வளர்ச்சிக்கு வல்லாரை பயன்படுகிறது. இதனால் மாணவர் களால் பாடத்தைக் கவனமுடனும் மனதை ஒருமுகப்படுத்தி படிக்கவும் முடியும். மேலும் மனப் பதற்றத்தைக் குறைக்கிறது.
பொன்னாங்கண்ணி - கர்ப்பிணிகள் தவறவிடக் கூடாத இரும்புச்சத்து!
இந்தக் கீரை மேனியை பொன் போல ஜொலிக்கச் செய்யும். அதன் காரணமாகவே இந்தப் பெயர் அமைந்ததாகச் சொல்லப் படுகிறது. விதை, தண்டு மூலமாக இனப் பெருக்கம் செய்யப்படுகிறது. சமையலுக்கு வாங்கும் பொன்னாங்கண்ணி கீரையில் இலைகளைப் பறித்த பிறகு, இருக்கும் தண்டை நடவு செய்தால் போதும். இளம் தண்டுகளைத் தவிர்த்து, சற்று முதிர்ந்த தண்டுகளை நடவு செய்ய வேண்டும். பெரிய அகலமான தொட்டிகளில் வளர்ப்பது நல்லது. கீரைகளை அறுவடை செய்யச் செய்ய புதிய கிளைகள் உருவாகிக்கொண்டே இருக்கும்.
பயன்கள்: இந்தக் கீரையில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகின்றன. கர்ப்பிணி களுக்கு மிகவும் நல்லது. இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளன. சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தையும் இது கட்டுப்படுத்தும். பொன்னாங்கண்ணிக்கு
இயல்பாகவே குளிர்ச்சியூட்டும் தன்மை உண்டு என்பதால், உடலின் உள்சூட்டை தணிக்கும். அதீத சூட்டால் பெண் களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலைக் குணப்படுத்த இந்தக் கீரை பயன்படும். அத்துடன் கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.
முடக்கத்தான் - வாழ்க்கை முடங்குவதற்கல்ல!
விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. சாலையோரங்கள், வயல் வெளிகள் எங்கும் காணப்படும். இந்தச் செடியில் இருக்கும் காய்ந்த காய்களைப் பறித்து அதிலுள்ள விதைகளைச் சேகரிக் கலாம். அந்த விதைகளைப் போட்டு வளர்க் கலாம். வயதானவர்கள் இருக்கும் வீடுகளில் அவசியம் இருக்க வேண்டிய மூலிகை. இது கொடி வகையைச் சேர்ந்த பயிர் என்பதால் படர்வதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
பயன்கள்: முடக்கு + அறுத்தான் = முடக்கத்தான் என்பார்கள். மூட்டுகளில் ஏற்படும் வலிகளுக்குக் காரணம், மூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம், கொழுப்பு திரட்சி, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் படிவங்கள்தான். அவற்றைக் கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உண்டு. இதன், இலைகளை அரைத்து, தோசை மாவுடன் கலந்து தோசையாகச் சுட்டு சாப்பிடலாம். ரசம் வைக்கும்போது இலைகளைச் சேர்த்துப் பயன்படுத்தலாம். இதைச் சாம்பார், காரக்குழம்பு/புளிக்குழம்பில் சேர்த்துச் சமைத்து சாப்பிடுவதால் உடல்வலி, பிடிப்பு, வீக்கம் போன்றவை குணமாகும். இதைப் பயன் படுத்தும்போது சிலருக்கு பேதியாகலாம். ஆனால், அதற்காகப் பயப்படத் தேவையில்லை. இதைச் சாப்பிடுவதால் எலும்புகள் பலம் பெறுவதுடன் மூட்டுவலிகள் நீங்கும். எலும்புகளுக்கு உறுதியைத் தரும். வாதத்தைக் கட்டுப்படுத்தும்.
பிரண்டை - எலும்புக்கு நண்பன்!
கொடி வகை பயிர். வேலியோரங்களில், காடுகளில் இயற்கையாக வளரும் கொடி. அதில், மூன்று கணுக்கள் உள்ளது போன்ற தண்டுகளை உடைத்து நடவு செய்யலாம். ஒரு கணு மண்ணுக்குள் போக வேண்டும். அப்போதுதான் வேர்பிடித்து முளைக்கும். நன்றாக வளர்ந்த பிறகு, ஒரு குச்சியை நட்டு வைத்தால் அதைப் பற்றிப் படரும்.
பயன்கள்: இதைத் துவையல் செய்து சாப்பிடலாம். உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியைப் பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும்; எலும்புகளுக்கு சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும். வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும்; உடல் வனப்புப் பெறும். ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதால் ரத்த ஓட்டத்தின் வேகம் குறையும். இதனால் இதயத்துக்குத் தேவையான ரத்தம் செல்வது தடைப்பட்டு, இதய வால்வுகள் பாதிப்படையும். இந்த பாதிப்புக்கு உள்ளானோர், அடிக்கடி இந்தத் துவையலைச் சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகும்; இதயம் பலப்படும். பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் முதுகுவலி, இடுப்புவலி போன்றவற்றுக்கும் இது நல்ல மருந்து.
வெற்றிலை - காமத்துக்கு மரியாதை!
வெற்றிலை வீட்டில் அவசியம் இருக்க வேண்டிய பயிர். தண்டு மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது. கணுக்கள், வேர்கள் உள்ள தண்டை நடவு செய்தால் போதும். இது கொடி வகை தாவரம். வீட்டில் வெற்றிலைக் கொடி வளர இடம் இல்லை என நினைப்பவர்கள், ஒரு பிவிசி குழாய் அல்லது கம்பு ஊன்றி, அதில் சணல் கயிற்றைச் சுற்றிவிடலாம். வெற்றிலை பற்றிப் படர இந்தக் கயிறு தேவை.
பயன்கள்: வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து அதிகம் உள்ளன. வீரியம் மிக்க நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பினைல்புரோபின் (Phenylpropene) உள்ளது. இது, உடலுக்கு உஷ்ணம் தரக்கூடியது. வெற்றிலை, உமிழ்நீரைப் பெருக்கும்; பசியை உண்டாக்கும்; பால் சுரக்க வைக்கும்; நாடி நரம்புகளை உரமாக்குவதுடன் காமத்தையும் தூண்டும். கடுகு எண்ணெயில் வெற்றிலையைப் போட்டு சூடுபடுத்தி ஒரு துணியில் வைத்து மார்பில் கட்டினால், மூச்சுத்திணறல் மற்றும் இருமல் கட்டுப்படும்.
நந்தியாவட்டை - கண்கண்ட மருந்து!
ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய செடி. இதன் பூக்கள் பூஜைக்கு மட்டுமல்ல...நமது கண்ணுக்கும் சிறந்த நிவாரணி. போத்து மூலமாக இதை வளர்க்கலாம். அதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள் நர்சரி களில் வாங்கி நடவு செய்யலாம். அனைத்து நர்சரிகளிலும் கிடைக்கிறது. இதை வாசல் ஓரமாகவோ, காம்பவுன்டு ஓரமாகவோ வளர்த்தால் பார்வைக்கு அழகாக இருக்கும்.
பயன்கள்: கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து. கண்களுக்கான ஆங்கில மருந்துகளில் இது சேர்க்கப்படுகிறது. இன்றைய நவீன யுகத்தில் மொபைல், கம்ப்யூட்டர், டிவி பார்ப்பதால் கண்கள் பாதிப்படைகின்றன. அதற்கு, நந்தியாவட்டை பூக்களைப் பிழிந்து சாறெடுத்து, இரண்டு துளிகள் தாய்ப்பால் சேர்த்துக் கண்களில் விடலாம். இதை ஒரு மாதத்தில் இரண்டு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அடுத்து 6 மாதங்கள் வரை பயன்படுத்தக் கூடாது. இதில் கவனமாக இருக்க வேண்டும். அப்படி செய்வதன் மூலம் பார்வை மங்குவது சரியாகும். கண் சிவப்பு இருப்பவர்கள் இதன் சாற்றைக் கண்களில் இரண்டு சொட்டு விட்டால் குணமாகும். உடல் சூடு காரணமாகக் கண் எரிச்சல் அதிகரிக்கும்போது நந்தியாவட்டை பூவை கண்களில் பொறுமையாக ஒற்றி எடுத்தால் கண் எரிச்சல் குணமாகும். அதிக எரிச்சல் இருப்பவர்கள் நந்தியாவட்டையின் பூக்களை சுத்தம் செய்து சாறு பிழிந்து இரண்டு துளி கண்களில் விடலாம். கண் படலம், மண்டைக்குத்தல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும்.
கண்டங்கத்திரி - சுவாசத்துக்கு உத்தரவாதம்!
இந்தச் செடி வீட்டுத்தோட்டத்தில் பெரும் பாலும் வளர்க்கப்படுவதில்லை. காரணம் இதில் இருக்கும் முட்கள். தண்டு, இலை, பூ, காய் என அனைத்துப் பகுதியிலும் முட்கள் இருக்கும். விதைகள் மூலமாக இனப் பெருக்கம் செய்யப்படுகிறது. கத்திரி குடும்பத்தைச் சேர்ந்தது. கத்திரி செடியைப் போலவே இருக்கும். சாலையோரங்களில் அதிகம் வளர்ந்திருக்கும். அப்படியிருக்கும் செடிகளில் முதிர்ந்த காய்களைப் பறித்து, விதைகளைச் சேகரித்து நடவு செய்யலாம்.
பயன்கள்: முட்கள் நிறைந்த மூலிகைகள் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் வல்லமை கொண்டவை. இது கோழை அகற்றியாகவும் சிறுநீர்ப் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படும். தலையில் நீர்கோத்தல், சூலை நீர் எனப்படும் கபநீர், பித்த நீர் இவற்றைச் சீராக்கும். மேலும், தொண்டையில் ஏற்படும் நீர்க்கட்டு, அடைப்பு, மூக்கில் நீர் வடிதல், சளி, மூச்சுத்திணறல், இருமல், ஈழை, இழுப்பு போன்ற பிரச்னைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்க வல்லது கண்டங்கத்திரி. இதன் விதையைக் காயவைத்து எரிக்கும்போது வரும் புகையை வாய்க்குள் அடக்கினால் பல் வலி நீங்கும். வாயிலுள்ள கிருமிகள் அழியும். கசப்புத்தன்மை கொண்ட கண்டங்கத்திரிக் காயைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் இருமல், சளி குணமாவதோடு, வயிற்றில் உள்ள கிருமிகளும் நீங்கி நன்கு பசி எடுக்கும். இக்காய்களை வற்றல் செய்தும் சாப்பிடலாம்.
பவளமல்லி - இடுப்புவலிக்கு இனிய தீர்வு!
விதை மற்றும் தண்டு மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. நர்சரிகளில் இதன் நாற்று கிடைக்கிறது. பெரிய பைகளில் வளர்க்க வேண்டும். இது குட்டி மர வகையைச் சேர்ந்த தாவரம். கவாத்து செய்வதன் மூலம் சிறிய தாக வைத்துக்கொள்ளலாம். வாஸ்து மரம் என்ற பெயரும் இதற்கு உண்டு. பவளமல்லிப்பூ நல்ல வாசனையாக இருக்கும்.
பயன்கள்: பல பெண்களுக்குத் தீராத பிரச்னையாக இருப்பது இடுப்பு வலி. இதற்குப் பவளமல்லியின் இதழ்களைக் கஷாயம் வைத்துக் குடிக்கலாம். காலை, மாலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இடுப்பு வலி விரைவில் குணமாகும். பவளமல்லி இலைகளை எரித்து கரியாக்கி, மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிட்டு வந்தால் கல்லீரல், மண்ணீரல் பிரச்னை தீரும்.
இன்சுலின் - சர்க்கரைக் கொல்லி!
இஞ்சி குடும்பத்தைச் சேர்ந்தது. நர்சரிகளில் கிடைக்கிறது. இதன் அடிப்பகுதியில் இஞ்சி போலக் கிழங்கு இருக்கும். ஒரு செடியைக் கிழங்கோடு நடவு செய்தால் போதும். வாழை மாதிரி பக்கக் கன்றுகள் மூலம் ஓர் ஆண்டுக்குள் புதர்போல மாறிவிடும். அதிலிருந்து பக்கக் கன்றுகளை எடுத்து விற்பனையும் செய்யலாம்.
பயன்கள்: இன்சுலின் செடியின் இலையை நாம் அருந்தும் டீயில் (ஒரு டம்ளர் தண்ணீருக்கு மூன்று இலைகள் வீதம்) சேர்த்துப் பயன் படுத்தலாம். இந்தச் செடியின் இலைகளிலிருந்து பெறப்படும் சாறு ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் படிப்படியாகக் குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கத்தக்கது.
தும்பை - குறட்டைக்கு குட்பை!
வெண்மை நிறத்துக்கு பெயர் போனது இதன் பூக்கள். வீட்டுத்தோட்டத்தில் தும்பை இருந்தால் அதன் பூவில் தேன் குடிக்க தேனீக்கள், வண்ணத்துப் பூச்சிகள் அதிக அளவில் வரும். இதனால் வீட்டுத் தோட்டத்தில் உள்ள மற்ற பயிர்களில் மகரந்தச் சேர்க்கை சுலபமாக நடக்கும். விதைமூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது. பைகளில்/தொட்டி களில் தும்பை விதையைத் தூவி தண்ணீர் தெளித்துவந்தால் போதும்... செடி வளர்ந்துவிடும். வீட்டுத்தோட்டத்தில் நாலைந்து இடங்களில் தும்பை பூச்செடி இருப்பது போல் பார்த்துக்கொள்ளுங்கள்.
பயன்கள்: தும்பை இலைச்சாறு மூன்று சொட்டு எடுத்து மூக்கால் உறிஞ்சி தும்மினால் தலையில் கோத்திருக்கும் நீர் விலகுவதோடு தலைவலி விலகும். மேலும் இது சளியைக் கட்டுப்படுத்துவதோடு நல்லதொரு மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. குழந்தைகளுக்கான சளி, இருமல், வீக்கம் போன்ற பிரச்னைகளுக்கு 10 சொட்டு பூச்சாற்றை காலையில் சாப்பிடக் கொடுத்தால் பலன் கிடைக்கும். பூவை பாலில் போட்டு கொதிக்க வைத்துக் குடித்து வந்தால் சளித்தொல்லை விலகும். 50 மி.லி நல்லெண்ணெயில் 50 தும்பைப் பூக்களைப் போட்டுக் காய்ச்சி வடிகட்டி மூக்கில் மூன்று சொட்டு வீதம் 21 நாள்கள் விட்டு வரக் குறட்டை விடும் பிரச்னை விலகும்.
பூக்களுடன் ஒரு மிளகு சேர்த்து அரைத்து நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலைவலி, தலைபாரம், நீர்க்கோவை நீங்கும். ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்கள் முழுச் செடியையும் எடுத்து நீர் விட்டு கொதிக்க வைத்து ஆவி (வேது) பிடித்தால் பலன் கிடைக்கும்.
சுண்டைக்காய் - மூர்த்தி சிறிது... கீர்த்தி பெரிது!
விதைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது. இது ஒரு செடி இருந்தால் போதும். இது சிறிய மரம் போல வளரும். அதற்கு ஏற்ப இடவசதி உள்ள இடங்களில் நடவு செய்யலாம். வாய்ப்பு இருப்பவர்கள் தரையிலேயே நடவு செய்யலாம். சிறிய தொட்டிகளில் வளர்க்கக் கூடாது.
பயன்கள்: மூர்த்தி சிறிது... கீர்த்தி பெரிது என்பார்கள். அதற்கு உதாரணமாகச் சுண்டைக்காயையும் சொல்லலாம். சிறிய காயாக இருந்தாலும் இது தரும் பலன்கள் ஏராளம். இலைகள், வேர், கனி முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவைத் தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. நெஞ்சுச்சளி முதல் இருமல், ஆஸ்துமா, மூலம், செரிமானக் கோளாறுவரை பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் மிக்கது சுண்டைக்காய். இது, உடலைத் தூய்மைப்படுத்தும் சக்தி கொண்டது. இதை வாரம் ஒரு தடவை உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டும்.
மருதாணி - முடி சூடும் ராணி!
மருதாணி, குத்துச்செடி எனப்படும் சிறிய மர வகையை சேர்ந்த தாவரம். இது, விதைகள் மற்றும் தண்டுகள் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது. காய்த்துத் தொங்கும் காய்களைக் கசக்கினால் விதைகள் கிடைக்கும். அதைத் தொட்டிகளில் தூவி நாற்றாக வளர்க்கலாம். நாற்று வளர்ந்த பிறகு, அதை எடுத்து தனியாக நடவு செய்யலாம். மரம்போல வளரும் என்பதால் அவ்வப்போது கவாத்து செய்து விட வேண்டும்.
பயன்கள்: இது உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடிய தாவரம். மருதாணி இலையை நன்றாக, விழுதாக அரைத்து இரவு தூங்கப் போவதற்கு முன்னர் கை, கால் விரல்கள், பாதத்தில் தடவிக் கொள்ளலாம். சிலருக்குக் குளிர்ச்சி தாங்காது. அவர்கள் மட்டும் இதனுடன் பாதாம் பிசின் சேர்த்துப் பயன்படுத்தலாம். அரைத்த மருதாணி இலைகளைத் தினமும் தலையில் தடவி வர, பொடுகு குறைந்து தலைமுடி பளபளப்படையும், மென்மை யாகும். இளநரை பிரச்னைக்குத் தீர்வைக் கொடுக்கும். மருதாணி இலையை அரைத்து நெற்றியில் தடவினால் தலைவலி குணமாகும்.
மூக்கிரட்டை - கைகொடுக்கும் களைச்செடி!
சாரணை, மூக்கிரட்டை என ஒவ்வொரு பகுதி யிலும் ஒரு பெயரில் அழைக்கிறார்கள். பெரும் பாலான இடங்களில் தானாக வளரும். படுக்கை வசமாகப் படரும் தன்மை வாய்ந்தது. விதை, தண்டுகள் மூலமாக இனப்பெருக்கம் செய்யலாம். மாடித்தோட்டங்களில் உள்ள தொட்டிகளில் பல இடங்களில் இது களைச்செடியாக வளர்கிறது.
பயன்கள்: இதயநோய், சைனஸ், ஆஸ்துமா, சளித் தொல்லை, ரத்தச்சோகையால் ஏற்படும் உடல்வீக்கம், தொப்பை, வாதக் கோளாறு, மஞ்சள்காமாலை, மலச்சிக்கல், மூலக் கோளாறு உள்ளிட்ட பல நோய்களைத் தீர்க்கும். மூக்கிரட்டை வேருடன் சிறிது பெருஞ்சீரகம் சேர்த்து, நீர்விட்டுக் காய்ச்ச வேண்டும். அதைத் தினமும் அருந்தினால், சிறுநீர் அடைப்பு விலகுவதுடன் சிறுநீரகக் கற்கள் கரைந்து வெளியேறும். மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி மற்றும் கீழாநெல்லி இலைகளை சம அளவு எடுத்து நன்றாக அரைத்து, மோரில் கலந்து குடிக்கலாம். இதைத் தொடர்ந்து குடித்துவந்தால் மங்கலான பார்வை, வெள்ளெழுத்துக் குறைபாடுகள் நீங்கும். மூக்கிரட்டை, சிறுகுறிஞ்சான், சிறுநெருஞ்சில், மிளகு, சீரகம், திப்பிலி போன்றவற்றை சம அளவு எடுத்து, தூளாக்க வேண்டும். இதைத் தினமும் இரண்டு வேளை தேனில் கலந்து சாப்பிட்டால் உடல் எடை குறைந்து அழகு மிளிரும்.
மூலிகைகள் மணக்கட்டும், பிணிகள் மறையட்டும் வீட்டில்!
Comments
Post a Comment