உங்களால் குழந்தைகளை இப்படி வளர்க்க முடியுமா?

 தினமும் தன் இரு சக்கர வாகனத்தில் தன் மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஒருவர் ஒரு வித்தியாசமான விசயத்தை தொடர்ந்து செய்து வந்தார்.


மகளுடன் சாலையில் செல்லும்போது ஏதாவது ஒரு கடையின் பெயர் பலகையை அவளை படிக்கச் சொல்வார்.

பின்னர் அந்தக் கடையைப் பற்றிய விவரங்களை அவளுக்கு விளக்குவார்.

அந்தக் கடையில் நடக்கும் வேலைகள், அதற்கான பொருள்கள், தயாரிக்கும் முறை என்று மகளுக்கு சொல்லிக்கொண்டே போவார். 

உதாரணமாக ஒரு டீ கடை என்றால்...

 "எனக்குத் தெரிஞ்சவர் இந்த கடைக்காரர்.
இங்கே 10 வருஷமாக டீ கடை வெச்சிருக்கார்.
தினமும் காலையில் 5 மணிக்கே கடையை திறந்து விடுவார். அதுக்காக, 4 மணிக்கே எழுந்து விடுவார். ராத்திரி 10 மணி வரைக்கும் கடை இருக்கும். ஒரு நாளில் 17 மணி நேரம் வேலை செய்கிறார். அதில் முக்கால்வாசி நேரம் நின்றபடியேத்தான் இருப்பார்.

நீ கிளாஸ்ல உட்கார்ந்து பாடம் படிப்பாய். நானும் ஆபீஸ்ல உட்கார்ந்து வேலை செய்வேன். 

ஆனால், இவர் உட்கார்ந்து வேலை செய்ய முடியாது. நின்றபடியே வேலை செய்தால்தான் வேலை நடக்கும். ஒரு குறிப்பிட்ட நேரத்துல கூட்டம் அதிகமா இருக்கும். அந்த நேரத்துல யாரையும் அதிகம் காத்திருக்க வைக்க முடியாது.

சுறுசுறுப்பா டீ கொடுக்கணும். டேஸ்ட்டும் நல்லா இருக்கணும்.''

இப்படி ஆரம்பித்து, அதில் வரும் வருமானம், சவால்கள் எனச் சொல்வார். 

அவர் செல்ல மகளும் இடையிடையே நிறைய கேள்விகள் கேட்பாள். அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லியவாறு அழைத்துச் சென்று பள்ளியில் விடுவார் தன் மகளை.

ஒரு நாள் வகுப்பில் ஒரு பாடம் நடத்தும்போது நடந்த உரையாடலில், பூ விற்பவர் பற்றிய பேச்சு வந்தது.

உடனே எழுந்த அந்தப்பெண், அதுபற்றி தனக்குத் தெரிந்ததை எல்லாம் கோர்வையாக சொல்லிக்கொண்டே போனாள்.

அது மற்ற குழந்தைகளுக்கு மட்டுமல்ல அந்த வகுப்பு ஆசிரியைக்கும் தெரியாத பல செய்திகளை வெளிப்படுத்துவதுமான ஒரு நிகழ்வாக இருந்தது.

அந்தத் தகவல்களுக்குள் ஒரு மனிதரின் வாழ்வியல் முறை, சக மனிதருடன் நமக்குள்ள தொடர்பு, அவர்களின் முக்கியத்துவம், அவர்களின் பொருளாதார சூழல் ஆகியவை வெளிப்பட்டன.

அவள் வகுப்பு ஆசிரியை வியந்து கைதட்டினார். மற்ற குழந்தைகளும் கூட அவளை வியந்து பார்த்தது. 
தன் தந்தைக்கு மனதார நன்றி சொன்னாள் அந்தச் செல்ல மகள்.

பொதுவாக, பொருளாதார ரீதியாக எளிய பணிகளைச் செய்பவர்களை நம் குழந்தைகளுக்கு நாம் எப்படி அறிமுகம் செய்கிறோம் என்று யோசித்துப் பாருங்கள்..?!

"சரியா படிக்கலைன்னா இப்படித்தான் நீயும் கூலி வேலை செய்து கஷ்டப்படணும்'' என்கிறோம்.

அதாவது, நம் குழந்தைகளுக்குள் பயத்தைப் புகுத்தி அதன் மூலமாக புது பொறுப்பை உருவாக்க இதை ஓர் உத்தியாக நினைக்கிறோம். ஆனால், அப்படிச் சொல்வதால் அவர்களுக்குள் பயம் மட்டுமா உருவாகிறது? 
நிச்சயமாக இல்லை!

அந்தப் பணியைத் தாழ்வாகவும், அதைச் செய்பவர்கள் மீது இயல்பாகவே மதிப்பும் குறைகிறது.

இது சரியான வழிமுறையா?

இங்கே செய்யப்படும் எல்லாவிதமான பணிகளும் முக்கியமானவைகளே.
எல்லா மனிதர்களும் முக்கியமானவர்களே
என்பதை நாம் நம் குழந்தைகளுக்கு உணர்த்துவது மிக முக்கியம். 
 எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே !!!        பின் நல்லவராவதும் தீயவராவதும் பெற்றோர்கள் வளர்ப்பினிலே!!!

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

EFFECTS OF NEGATIVE THOUGHTS ON YOUR MIND & BODY

Nothing can compete with The knowledge gained from poor, confidence