நம்புங்கள்_நல்லதே_நடக்கும்
இரு மகள்களுக்கும், திருமணம் செய்வித்து, கடமையெல்லாம் முடிந்தது என கணவருடன், அமைதியான வாழ்வை ஒட்டிக்கொண்டிருந்தார் சாரதா.
திடீரென ஒருநாள் கைகள் செயலிழந்தன. கணவரோ வயதானவர்.தனக்கான வேலைகளுக்கு கூட அடுத்தவரை எதிர்பார்க்க வேண்டிய நிலை.
வேலைக்கு ஒரு பெண்ணை வீட்டோடு வைத்துக்கொண்டாள். இத்தனை நாள் கடமை தவறாது வாழ்ந்த எனக்கு இறைவன் இப்படி ஒன்றை செய்திருக்க கூடாதென நேரம் கிடைக்கும்போதெல்லாம் இறைவனை திட்டி தீர்த்தாள் .
வேலைக்கு வந்த பெண் பொறுமையிழந்து பேசத்தொடங்கினாள். " இந்த நிலை ஒரு 10 வருடங்களுக்கு முன் ஏற்பட்டிருந்தால் எத்தனை வேலைகள் தடைப்பட்டிருக்கும்? எல்லாம் சரியாகவே நடக்கிறது. பிசியோதெரபி செய்து வருகிறீர்கள் சீக்கிரம் குணமடைய போகிறீர்கள். நான் இல்லமால் முன்பு செய்தது போல் வேலை செய்யத்தான் போகிறீர்கள். இந்த ஒரு வருடம் நீங்கள் மாதா மாதம் கொடுத்த 10 000/- என் திருமண செலவுக்கு மிகவும் பயனாயிருக்கும்.நான் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டே இங்கு வேலை செய்யும்போது, நீங்களும் இறைவனுக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருங்கள். விரைவில் குணமடைவீர்கள் என்றாள் .
வயதில் சிறியவள் ஆனாலும், அவளின் அனுபவங்கள் வாழ்வை இயல்பாக பார்க்க அவளை பழக்கி இருந்தன.
எதிர்பாராது நடக்கும் விஷயங்களுக்கு மனம் உடைந்து போகாதீர்கள். திடீரென மிக நெருக்கமான உறவுகள், நட்புகள் அந்நியப்படலாம். காரணமின்றி சிலர் நம்மை தவிர்க்கலாம். விலகலாம். குமைந்து போகாதீர்கள். எல்லாம் நன்மைக்கே. இறைவன் ஆணையின்படியே இங்கு எல்லாம் நடக்கிறது. அவர்கள் தந்த மகிழ்ச்சியான நொடிகளுக்கு நன்றி சொல்லுங்கள்.
திடீரென நோயில் சிக்கலாம், விபத்து உங்களை முடக்கி இருக்கலாம். எதிர்பாராத பணச்சிக்கலில் நீங்கள் சிக்கியிருக்கலாம் . எல்லையில்லா பெருங்கருணை உங்களை மீட்டெடுக்கும்.எல்லாவற்றையும் தாண்டி வருவீர்கள்.
ஆற்றின் ஓட்டத்தில் நீந்துபவன்தான் புத்திசாலி. எத்தனை மோசமான நிலையில் இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். கூப்பாடு போடாதீர்கள். சீக்கிரம் எல்லாவற்றையும் தாண்டி வெளி வருவீர்கள். நம்புங்கள். நல்லதே நடக்கும்..!!
Comments
Post a Comment