கவலைகள் நிறைய வந்து கொண்டே இருக்கின்றன....
தேவையற்ற கவலைகள் நிறைய வந்து கொண்டே இருக்கின்றன. எல்லாம் சரியாகிவிடும், பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணி மனதை அமைதிப்படுத்த முயல்கிறேன். எனினும் அவ்வப்போது இந்தக் கவலைகள், பயங்கள் தொற்றிக் கொள்கின்றன. இதற்கு ஒரு தீர்வு கிடைக்குமா?
கவலை என்பதை வேதாத்திரி மகரிஷி அவர்கள் கற்பனையான வலை என்று குறிப்பிடுகிறார்கள்.
தேவைக்கும், இருப்புக்கும் இடையே இடைவெளி, எதிர்பார்ப்புக்கும் பெறுவதற்கும் இடையே இடைவெளி, தனக்கும் பிறர்க்கும் இடையே ஏற்படும் முரண்பாடு, ஆசைக்கும் திறமைக்கும் இடையே உள்ள வித்தியாசம். இவை யாவும் கவலைக்கு வித்தாகின்றன. மனதைக் கடமையில் செலுத்தி இடையறாத முயற்சியுடன், முறையான திட்டத்துடன் செயல்பட்டால் இவை அனைத்தையும் சரி செய்ய முடியும்.
மனதின் தப்புகணக்கே கவலை — வேதாத்திரி மகரிஷி
கவலை யென்பதுள்ளத்தின் கொடிய நோயாம்
கணக்குத் தவறாய் எண்ணம் ஆற்றலாம்,
கவலை யென்பதோ வாழ்வில் சிக்கல் கண்டு
கலங்கி மனம் திகைப்படையும் நிலைமையாகும்;
கவலை உடல்நலம் உள்ள நலன் கெடுக்கும்
கண் முதலாய்ப் பொறி ஐந்தின் வளம் கெடுக்கும்
கவலையினை முயற்சி சிந்தனை இவற்றால்
கடமையினைத் தேர்ந்தாற்றி வெற்றி கொள்வோம் - வேதாத்திரி மகரிஷி
கவலை ஒழித்தல் பயிற்சியில், மனிதனின் கவலைகள் நான்கு விதமானவை என்று வேதாத்திரி மகரிஷி கூறுகிறார்கள்.
1. அனுபவித்தே தீர வேண்டியது ; இந்தக் கவலைகளை அனுபவித்தே ஆக வேண்டும். வேறு வழியல்லை. கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால், நேரம் வீண். தேவையற்ற மன உளைச்சல். உறவினர் மரணம், உறுப்பு இழப்பு போன்றவை. மாற்ற இயலாது. அனுபவித்தே ஆகவேண்டியது.
2. அலட்சியப்படுத்த வேண்டியது; இந்தக் கவலைகளை அலட்சியப்படுத்த வேண்டும். இதற்கு முக்கியத்துவம் கொடுத்தால், நேரம் வீண். மன உளைச்சல். அடுத்தவீட்டுக்கார் நம்மை கிண்டல் செய்வது. வீட்டில் பெரியவர்கள் அவ்வப்போது, நம்மை அவர்களுடன் ஒப்பிட்டு தவறாக குறை கூறுவது
3. தள்ளிப்போட வேண்டியது; இந்தக் கவலைகள் ஒரு நாளில் சரிசெய்ய முடியாது. முயன்று கொண்டே இருக்க வேண்டும். காலம் சரியாக அமையும் போதுதான் தீரும். திருமணத்திற்கு வரன் பார்ப்பது. வேலை தேடுவது.
4. உடனே தீர்க்க வேண்டியது; இந்தக் கவலைகள் உடனே தீர்க்கப்பட வேண்டியவை. தள்ளிப்போட்டாலோ, அலட்சியம் செய்தாலோ, ஆபத்து. உடம்பில் கட்டி , வீட்டில் சொத்து பிரச்சனை
இப்போது நீங்கள் செய்ய வேண்டியது:
1. உங்களுக்கு தியானம் தெரிந்தால் தியானம் செய்துவிட்டு அமைதியாக அமருங்கள். தியானம் தெரியாவிட்டால் சிறிது நேரம் கண்ணை மூடிக கொண்டு உங்களது மூச்சை கவனியுங்கள். அமைதியாக சில நேரம் அமருங்கள். இப்போது மனம் ஒரு சன்னமான நிலைக்கு வரும்.
2. இப்போது உங்களது கவலைகளைப் பட்டியலிடுங்கள். பட்டியல் இட்ட பிறகு ஒவ்வொரு கவலையும் மேற்குறிப்பிட்ட நான்கு வகைகளுக்குள் ஒன்றில் பொருத்துங்கள்.
3. உடனே தீர்க்க வேண்டிய கவலைக்கு மட்டும் திட்டம் வகுத்து விரைவாக செய்து முடியுங்கள்.
4. மற்ற கவலைகளை அலட்சியப்படுத்துங்கள் அல்லது தொடர்ந்து முயல்வது என்று எண்ணி கவலையைத் தள்ளிப் போடுங்கள் அல்லது அனுபவித்தே தீர வேண்டியது என்று அதை ஏற்றுக்கொண்டு விடுங்கள்.
இப்போது மனம் லேசாக இருக்கும். மனம் உற்சாகமாக இருக்கும். எதையும் என்னால் செய்ய முடியும் என்கின்ற உத்வேகம் பிறந்துவிடும். தன்னம்பிக்கை பிறக்கும்.
நீங்கள் கவலைகளை ஒழித்து மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்.
Comments
Post a Comment