'பொறுத்தார் பூமி ஆள்வார்.

 இப்போதெல்லாம் சிறிய செயலுக்குக் கூட பொறுமை இல்லாமல் கொதித்துப் போய் விடுகின்றோம்..

இதனால் பகைமை வளர்ந்து விடுகிறது. இந்தப் பகைமை நம் உறவுகளையும் நட்புகளையும்இழந்து ஒன்றும் இல்லாமல் செய்து விடுகிறது.

நாம் பொறுமை இழப்பதால் நம்மையே இழந்து போகிறோம் என்பதை யாரும் உணர்வதில்லை.

எந்த செயலையும் எளிதாக எடுத்துக் கொள்ளாமல் அதைப் பெரியதாக நினைத்துக் கொள்வதால்,அதைத் தாங்கிக் கொள்ள முடியாத நிலைக்குப் போய் விடுகிறோம்.

எந்த நிகழ்வையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமலும் போய் விடுகிறோம்..ஆம் எந்தவொரு செயலிலும் பொறுமை தேவையாக இருக்கிறது.

பொறுமையாயிருப்பவர்கள் பல இடங்களில் நல்ல பெயரைப் பெற்று இருக்கிறார்கள். பல தொழில்களில் முன்னேற்றம் கண்டு இருக்கிறார்கள்.

ஒரு மண் ஜாடியின் கதையைக் கேளுங்கள்..,

ஒரு கலைப்பொருள் கண்காட்சியில் அனைவரது கவனத்தையும் கவர்ந்தது.

ஒரு மண் ஜாடி.அதில் அவ்வளவு கலை நுணுக்கம். அதிலிருந்த மலர் ஓவியங்கள் அழகிய கலை வேலைப்பாடுகளுடன் காட்சியளித்தது.

இந்த ஜாடியின் அழகைக் கண்டு வியந்த சிறுவன் ஒருவன் அந்த மண் ஜாடியிடம்,“எப்படி இந்த அழகிய வடிவத்தைப் பெற்றாய்?” என்று கேட்டான்.

சிறுவனே,நான் உடனே இந்த அழகிய உருவத்தைப் பெற்று விடவில்லை. நான் இந்தப் பூமியில் மண்ணாக, மனிதர்களின் நடைபாதையாக, விலங்குகளின் மேய்ச்சல் தரையாகக் கேட்பாரற்றுக் கிடந்தேன்..

ஒரு நாள் கலைஞன் ஒருவன் என்னை மண்வெட்டி கொண்டு வெட்டினான். ஆ! அப்போது நான் அடைந்த வேதனை…சகிக்க முடியாத ஒன்று. ”பொறு ,பொறு…” என்று ஆணையிட்டது..

என் உள் மனம்.. பொறுத்து இருந்தேன். பின்னர் என்னை நனைத்து வைத்துப் பிசைந்து, தண்ணீர் ஊற்றி, மிதித்து… அப்பப்பா…அப்போது நான் பட்ட இம்சை… கதறினேன்

பொறு, பொறு என்றது என் உள் மனம் மீண்டும்! பிசைந்த என்னைச் சக்கரத்தில் இட்டுச் சுழற்றினான் அவன். எனக்குத் தலை சுற்றி, மயக்கம் வந்தது.

சுற்றிச் சுற்றி இறுதியில் ஜாடியாக வடிவு எடுத்தேன். ஆனாலும் நான் அனுபவித்த வேதனை… அதிகம். பிறகு என்னைத் தீயிலிட்டுப் பொசுக்கினான்.

அப்போது வெந்து உறுதிப்பட்டேன்.தாங்க முடியாத எரிச்சல்.அதன் பிறகு ஏதேதோ வண்ண ரசாயனங்கள் என் மேனியில் பூசப்பட்டது. தகிப்பு…தாங்க முடியாத வேதனை…”இன்னும் சற்று பொறுத்திரு…” என்றது என் உள் மனம்.

தகதகப்பு. வண்ணப் பூச்சு. ஈர்க்க வைக்கும் கோலப் புதுமை. ஆஹா… இப்போது நான் அழகின் அற்புதம்.

காண்போரை லயிக்க வைக்கும் எழில் ஜாடியாக கலைப்பொருளாகக் காட்சி அளிக்கிறேன்” என்று அதன் அழகின் ரகசியத்தையும், அதற்காக அது அடைந்த அவதிகளையும்,அது காட்டிய பொறுமைகளையும்,

சொல்லி முடித்தது அந்த மண் ஜாடி.

ஆம்., நண்பர்களே.,

பொறுமை நமக்குப் பல உண்மைகளைக் கற்றுத் தருகிறது.

எதையும் தாங்கிக் கொள்ளும் பொறுமையை நாம் வளர்த்துக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும்.

பொறுமையாக இருப்பது நமக்கு சிரமமாகத் தோன்றினாலும் அது நமக்கு பலமான மனவலிமையையும், அதன் மூலம் பல நன்மைகளையும் தருகிறது…...

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ