ஒத்திசைவு...
வாழ்க்கையில் மனமும் உடலும் ஒரே அலைவரிசையில் பயணித்தால் மகிழ்ச்சி அதிகபட்சமாக இருக்கும்.
இதுதான் ஒத்திசைவு எனப்படுகிறது...
இதனை இன்னும் தெளிவாக தெரிந்து கொள்வோம்.
அப்போது அதிகாலை நான்கு மணியிருக்கும். அவசரமாக அந்த தம்பதியினர் திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் ஆட்டோவில் வந்து இறங்கினர். பத்து நிமிடம் தாமதமாக வந்ததால் 3.50 க்கு புறப்பட்டுச் சென்ற கோதையார் பேருந்தை தவறவிட்டு விட்டனர். வீடு பூட்டிவிட்டு வந்தோமா என்று மனைவிக்கு திடீரென சந்தேகம். கணவரிடம் மெதுவாக கேட்டாள்.
மனைவியின் சந்தேகம் கணவருக்கும் தொற்றிக் கொண்டது. யோசித்துப் பார்த்தார். சாவியை எடுத்து வீட்டை பூட்டியது ஞாபகத்துக்கு வரவில்லை. சாவியை வீட்டிலிருந்து எடுத்தது ஞாபகத்துக்கு வருகிறது. இப்போது சாவி கைப்பையில் இருக்கிறது. பூட்டியது மட்டும் ஞாபகத்துக்கு வரவில்லை.
வெளியூர் சென்றிருப்பவர்கள் வீடு அடிக்கடி கொள்ளையடிக்கப்படும் தொலைக்காட்சி செய்திகள் கணவருடைய மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தது.
சில வினாடி யோசித்துவிட்டு வீட்டுக்குச் சென்று பார்த்துவிட்டு வருவதாக கூறிவிடுச் சென்றார். பேருந்து நிலையத்தில் காத்திருந்த மனைவியின் முகத்தில் கவலை ரேகைகள் படர்ந்திருந்தது. 20 நிமிடம் கழித்து கணவர் திரும்பி வந்து கதவு ஏற்கனவே பூட்டியிருந்தது என்று கூறிய பின்னரே மனைவியின் முகத்தில் சந்தோச ரேகைகள் படரத்தொடங்கின.
வீட்டை பூட்டிய அவருக்கு ஏன் அந்த நிகழ்வு ஞாபகத்துக்கு வரவில்லை?
வீட்டை பூட்டும் போது அவர் மனம் வேறு எங்கோ அலைபாய்ந்து கொண்டிருக்கும். அதனால் தான் கதவினை இழுத்து மூடிய நிகழ்வு மனதில் பதியவில்லை.
பல பேருக்கு உடலும் மனமும் சமநிலையில் இருப்பதில்லை.
# புத்தகம் திறந்திருக்கும். மனம் நேற்று பார்த்த திரைப்படத்தை பகுப்பாய்வு செய்து கொண்டிருக்கும். இப்படியிருந்தால் எப்படி புத்தகத்தை படிக்கமுடியும்?
# சமையல் செய்து கொண்டிருப்போம். மனம் இன்று எப்படி 12B பேருந்தை எப்படி பிடிக்கப் போகிறோம் என்று கணக்குப் போட்டுக்கொண்டிருக்கும். பின் சாப்பாட்டில் எப்படி ருசி வரும்?
ஞாயிறு மாலை திரைப்படம் பார்த்துக் கொண்டிருப்போம். திங்கள் காலையில் வைக்கவேண்டிய notes of lesson எப்படி எழுதுவது என்று மனம் யோசித்துக் கொண்டிருக்கும். பின் எப்படி திரைப்படத்தை ரசிக்க முடியும்?.
இறைவனிடம் பேசுவதற்க்கு ஆலயம் சென்றிருப்பார்கள். வீட்டுப் பிரச்சனைகள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும். பின் எப்படி இறைவனிடம் பேச முடியும்?
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
உடல் ஒன்று செய்து கொண்டிருக்கும். மனம் வேறொன்றை நினைத்துக் கொண்டிருக்கும். மனதையும் உடலையும் நாம் ஒருங்கிணைக்கத் தவறும் போது நாம் வெற்றியை தவறவிடுவதோடு மகிழ்ச்சியையும் இழந்து விடுகிறோம்.
வாழ்க்கையில் முடிந்த அத்தியாயங்களில் நிகழ்கால நிஜங்களை கலக்கும் போது வாழும் நொடிகளை ரசிக்க முடியாமல் போகிறது.
மனதையும் உடலையும் ஒரே கட்டத்தில் இசைந்திருக்கும் போது தான் நம் வெற்றிப் பயணத்திற்கான முதல் அடியை எடுத்து வைக்கிறோம்.
இயற்பியலில் இரண்டு அதிரும் பொருட்கள் ஒரே அதிர்வெண்ணில் அதிர்வுறும் போது அதன் வீச்சு அதிகபட்சமாக இருக்கும் என்பது நிறுவப்பட்ட உண்மை. இதை இயற்பியலில் ஒத்திசைவு என்கிறோம்.
இதுபோல மனமும் உடலும் ஒரே அலைவரிசையில் பயணித்தால் மகிழ்ச்சி அதிகபட்சமாக இருக்கும். வாழ்க்கையில் ஒத்திசைவை உருவாக்க உடல் செல்லும் பாதையில் மனதையும் செலுத்துவோம்.
தெரியாது என்று சொல்வதற்கும் கிடையாது என்று சொல்வதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றது.
தெரியாது என்றால் எனக்கு தெரியவில்லை என்று அர்த்தம்.
கிடையாது என்றால் இவ்வுலகத்தில் உள்ள அனைத்தையும் அறிந்த நானே கூறுகிறேன் அப்படி ஒன்றும் கிடையாது என்று அர்த்தம்.
எனவே நாம் கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
‘கஷ்டம் யாருக்குத்தான் இல்லை. உனக்கும் கீழே உள்ளவர் கோடி; நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு’
*"யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்.
சுதந்திரமாக வாழ்வதற்குரிய ஒரே தகுதி இது தான்."*
"பசித்தவனுக்கு மீன்களைக் கொடுத்து உதவுவதைக் காட்டிலும், எப்படி மீன் பிடிப்பது என்பதை கற்றுக் கொடுத்தால், வாழ்க்கையில் முன்னேறுவான்"
“பணம் இருந்தால் உன்னையே உனக்கு தெரியாது
சேவை குணம் இல்லாவிட்டால் உன்னை யாருக்கும் தெரியாது”
Comments
Post a Comment