குழந்தைகளின் எதிர்காலத்தை கட்டமைக்கும் ‘கோடிங்’

 சமீபகாலமாக பெற்றோர் மத்தியில் அதிகம் பேசப்படும், விவாதிக்கப்படும் தலைப்புகளில் ‘கோடிங்' தலைப்பும் ஒன்று. இன்று நிறைய குழந்தைகள், பள்ளி கல்வியோடு சேர்த்து கோடிங் கல்வியும் கற்கிறார்கள். அது அவசியமான ஒன்றா?, அது குழந்தைகளின் வாழ்வில் எத்தகைய மாற்றத்தை உண்டாக்கும்... போன்ற பல கேள்விகளுக்கு, பதிலளிக்கிறார் கல்பனா சேட்டு.






சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த வரான இவர், கடந்த 5 வருடங்களாக ஏழை குழந்தைகளுக்கு இலவச கோடிங் பயிற்சி வழங்கி வருகிறார். அவர் கோடிங் பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.

குழந்தைகளுக்கு ‘கோடிங்’ கற்றுக்கொடுக்கும் மோகம் எல்லா பெற்றோர்கள் மத்தியிலும் இருக்கிறது. இது நல்லதா?

நல்லதுதான். ஓவியப்பயிற்சி, நடனப்பயிற்சி, கராத்தே பயிற்சிகளை போல குழந்தைகளின் திறன் வளர்க்கும் பயிற்சி பட்டியலில் நவீன அப்டேட்டாக கோடிங் பயிற்சி இணைந்திருக்கிறது. இது மற்ற பயிற்சிகளைவிட சிறப்பானது.

எந்த வயதில் கோடிங் கற்றுக்கொள்வது சிறந்தது?

6 வயதில் இருந்தே, கோடிங் கற்கலாம். இருப்பினும் 8 வயதிற்கு பிறகான கோடிங் பயிற்சி, சிறப்பானதாக இருக்கும். ஏனெனில் அப்போதுதான் குழந்தைகளிடத்தில் புரிந்து கொள்ளும் திறன், அதிகமாக இருக்கும்.

குழந்தைகளுக்கு கோடிங் எத்தகைய வளர்ச்சியை கொடுக்கும்?

என்னிடம் கோடிங் பயிற்சி பெற்ற, 8 வயது நிரம்பிய குழந்தைகள், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சம்பாதிக்க தொடங்கிவிட்டனர். இன்னும் சிலர், சுயமாக கோடிங் எழுதி, அப்ளிகேஷன் உருவாக்க பணிகளில் களம் இறங்கி உள்ளனர். பலர் சுயமாகவே, சிறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்க, முயற்சித்து வருகின்றனர். பள்ளி-கல்லூரி படிப்புகளை முடிப்பதற்குள், இவர்கள் கோடிங் துறையில் தங்களுக்கு என தனி மார்க்கெட்டையும், வருவாயையும் உருவாக்கிவிடுவார்கள். இதுதான் கோடிங் பயிற்சியின் வளர்ச்சி.

கோடிங் பயிற்சிகள், பொழுதுபோக்கு பயிற்சிகளா? இல்லை வாழ்வியல்/தொழில்முறை பயிற்சிகளா?

இது வாழ்க்கைக்கான, தொழில்முறை பயிற்சிதான். மற்ற பொழுதுபோக்கு பயிற்சிகளைவிட, கோடிங் பயிற்சியின் மூலம் நிறைய சம்பாதிக்கலாம். ஆண்ட்ராய்டு ஆப், சமூக வலைத்தளங்கள், கணினி கோடிங்... என டிஜிட்டல் உலகில், கோடிங் பயிற்சிகளுக்கு நிறைய வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. பள்ளி-கல்லூரி படிப்புகளில் ஜொலிக்காத பட்சத்தில்கூட, கோடிங் திறமையை கொண்டு, அதிக சம்பளம் கிடைக்கும் பணிகளில் சேரலாம். வாழ்க்கையை சந்தோஷமாக நகர்த்தலாம்.

குழந்தைகளுக்கு எந்தெந்த கோடிங் பயிற்சிகளை வழங்கலாம்?

பைத்தான், ஜாவா ஸ்கிரிப்ட்... இவை இரண்டு மிகவும் சுலபமானவை. ஆனால் அவை எல்லா கோடிங் பயிற்சிகளுக்கும் அடிப்படையானவை. அதனால், இதிலிருந்து கோடிங் பயிற்சியை ஆரம்பிப்பது சிறப்பானதாக இருக்கும். சி, சி++, டாட் நெட்... என பழைய கோடிங் மொழிகள் தொடங்கி, புதிது புதிதாக பல கோடிங் மொழிகள் வந்துகொண்டே இருக்கின்றன. டிஜிட்டல் உலகின் அப்டேட்டுகளுக்கு ஏற்ப நாமும் அப்டேட் ஆவது, அவசியம்.

கோடிங் பயிற்சியின் அவசியம் என்ன?

கற்பனை திறனை வளர்க்க, யோசிக்கும் திறனை மேம்படுத்த, சுயமாக வாழும் மனப்பக்குவத்தை உண்டாக்க, கோடிங் பயிற்சி அவசியமாகிறது.

கோடிங் பயிற்சி எந்தெந்த துறை மாணவர்களுக்கு கை கொடுக்கும்?

இப்போது எல்லாமே, கணினி மயம்தான். எல்லா துறைகளிலும் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பங்கள் அறிமுகமாகிவிட்ட நிலையில், எதிர்காலத்தில் எல்லா துறைகளிலும் சாதிக்க கோடிங் அவசியமான ஒன்றாகிவிடும்.

கோடிங் பயிற்சிக்கு, பிரத்யேக திறமை வேண்டுமா? கணிதம்/ அறிவியல் போன்ற பாடங்களில் அதிக ஈர்ப்பு வேண்டுமா?
சிறப்பாக படிக்கும் குழந்தை/ படிக்காத குழந்தை... என்ற பாகுபாடு எல்லாம் கோடிங் பயிற்சியில் இல்லை. கோடிங் பொருத்தவரை, ஜீரோவில் இருந்து ஹீரோவாக மாறலாம். புரிந்துகொள்ளும் திறனும், கற்றுக்கொள்ளும் ஆர்வம் மட்டுமே இதற்கு தேவை. மற்றபடி, பிரத்யேக திறமை என எதுவுமே தேவையில்லை.



Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

Nothing can compete with The knowledge gained from poor, confidence

EFFECTS OF NEGATIVE THOUGHTS ON YOUR MIND & BODY