கதையல்ல நிஜம்
பொதுவாக நீதிமன்றங்களில் யாரை பெயர் சொல்லி அழைக்கிறார்களோ அவர்கள்தான் உள்ளே போவார்கள்.
ஆனால் அன்றைக்கோ வாய்தாவுக்கு வந்திருந்த அனைவருமே கும்பலாக நீதிமன்றத்திற்குள் குழுமியிருந்தார்கள்.
நானும் ஒரு வாய்தாவுக்கு ஆஜராகத்தான் போயிருந்தேன்.
உள்ளே கூட்டத்தோடு கூட்டமாக எட்டிப்பார்த்தேன்.
இது சில வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம்.
அதாவது மதுரையில் ஒரு பெண்ணை ஒரு இளைஞன் கேலி பண்ணுகிறான்.
அந்தப் பெண்ணின் அக்காள் மாப்பிள்ளை அந்தப் பையனை கண்டிக்கிறார்.
பையனின் மனசில் வன்மம் குடியேறி பழிவாங்கும் வெறியாக மாறுகிறது.
தன்னைக் கண்டித்தவரின் இரண்டு வயசு பெண் குழந்தையை கடத்துகிறான்.
மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு குழந்தையுடன் வந்து ஊர் சுற்றுகிறான்.
குழந்தை அழத் தொடங்குகிறது.
ஒருபெரிய யானைப் பொம்மையை வாங்கிக் கொடுக்கிறான்.
ஆனாலும் குழந்தையின் அழுகை நிற்கவில்லை.
நகரத்தை விட்டு தனியே இருக்கும் ஒரு கோயிலுக்குப் போய் சேரும்போது சாயங்காலமாகிவிடுகிறது.
அந்தக் கோயிலை ஒட்டியுள்ள கிணற்றில் குழந்தையை வீசிவிட்டு தப்பிக்கிறான்.
பொழுதடைய கோவிலைச் சாத்த குருக்கள் வரும்போது குழந்தையின் முனங்கல் கிணற்றுக்குள் லிருந்து கேட்க குருக்கள் எட்டிப்பார்க்கிறார்.
குழந்தை யானைப் பொம்மையை இறுக்கிப் பிடித்தபடி தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கிறது.
பொதுமக்கள் சேர்ந்து குழந்தையை காப்பாற்றுகிறார்கள்.
போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறது.
ஒரு மணிநேரத்தில் காவல்துறை பெற்றோரைக் கண்டுபிடிக்கிறது.
குழந்தையைக் காணவில்லை என்று யாராவது புகார் கொடுத்து
இருக்கிறார்களா என்று தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் விசாரித்து ஒரே மணிநேரத்தில் நெல்லை போலீஸ் மதுரையில் இருக்கும் பெற்றோரை கண்டுபிடிக்கிறார்கள்.
இரவோடு இரவாக பெற்றோர்கள் நெல்லை வந்து சேர்கிறார்கள்.
அடுத்த நிமிஷமே குற்றவாளியை கைது செய்கிறது நெல்லை காவல்துறை.
காலையில் அந்தக் குழந்தையை நீதிமன்றத்தில் ஒப்படைத்து அப்புறமாக சட்டரீதியான நடவடிக்கைக்குப் பின் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியைப் பார்க்கவே அந்தக் கூட்டம்.
தன்னைக் காப்பாற்றிய அந்த யானைப் பொம்மையை இடுக்கிப் பிடித்தபடியே குழந்தையை ஒரு பெண்காவலர் கொண்டுவந்தார்.
ீஅதைப் பார்த்ததும் அந்தத் தாய் அழுத அழுகை அனைவரின் கண்களும் பனித்தன.
தெய்வீகக் குழந்தை என்றார் நீதிபதி.
எருமை வாகனத்தில் வந்து குழந்தையின் உயிரைப் பறிக்க முயன்ற எமன் தோற்றுப் போனான்.
காரணம் குழந்தை யானையிடமல்லவா இருக்கிறது.
யானையை ஜெயிக்க எருமையால் முடியுமா .
_*கிளைமாக்ஸ்*_ :-
வழக்கமாக அந்தக் கோவிலைச் சாத்திப் பூட்ட வருகிற குருக்களுக்கு இரண்டு காதுகளும் செவிடாம்.
அன்றைய தினம் திடீர் உடல்நலக் கோளாறினால் தன்னுடைய மருமகனை அனுப்பியிருக்கிறார்.
அந்த காதுகேளாத குருக்கள் அன்றைக்கு வந்திருந்தால் குழந்தையின் முனங்கல் கேட்டிருக்காது.
குழந்தை இரவுமுழுக்க தண்ணீரில் மிதந்து விறைத்து இறந்திருக்கும்.
_*புரிந்துகொள்ளுங்கள்*_
_*இதற்குப் பெயர்தான் கடவுள் என்பது.*
Comments
Post a Comment