ஆலயம் ஒரு கருவி; ஆலயமே ஆதாரம்! - தென்னக மக்களுக்கு ஒரு தென் திருப்பதி
புரட்டாசி புண்ணிய தரிசனம்
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி கரையில் அமைத்துள்ளது கருங்குளம் வேங்கடாசலபதி கோயில். நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், மலைக்குமேல் திருப்பதியாகக் காணப்படுகிறது, இந்தக் கோயில்; வகுளகிரி க்ஷேத்திரம் என்று போற்றுகின்றன ஞானநூல்கள்.
ஒருபுறம் பாய்ந்தோடும் தாமிரபரணி, இந்தக் கோயிலுக்கு மாலையாக அணி சேர்க்க... மறுபுறம் சுற்றிலும் பச்சைப்பட்டு விரித்தாற்போல வாழைத் தோப்புகளும் விவசாய நிலங்களும் சூழ்ந்திருக்க, மத்தியில் மிக ஓய்யாரமாய் வகுளகிரி க்ஷேத்திரம் உள்ளது.
இந்த ஆலயத்துக்கென தனி விசேஷம் உண்டு. இக்கோயிலில் உருவமற்ற சந்தனக்கட்டையில் வேங்கடாசலபதி மூலவராகக் காட்சியளிக்கிறார்.
மற்றுமொரு சிறப்பு, மதுரையில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவார் அல்லவா... அதுபோலவே தாமிரபரணி ஆற்றில் இக்கோயிலின் ஸ்ரீநிவாசர் இறங்கும் அற்புதத் திருவிழா சித்ரா பௌர்ணமிதோறும் நடைபெறுகிறது.
சந்தனக் கட்டையே திருவேங்கடவன்!
இந்தியாவின் மையப்பகுதியில் சுபகண்டன் என்ற அரசன் ஆண்டுவந்தான். இவன் ஆட்சியின் கீழ் அனைத்து நலன்களும் பெற்று மக்கள் வாழ்ந்து வந்தனர். அவனுக்கு சோதனை, நோய் ரூபத்தில் வந்தது. அரசனுக்கு கண்டமாலை என்னும் நோய் பீடித்துக்கொண்டது. நோயைத் தீர்க்க மிகப்பெரிய வைத்தியர்களைக்கொண்டு ராஜவைத்தியம் பார்த்தான். ஆனால், நோயை குணப்படுத்த இயலவில்லை. ஆகவே, இந்த உலகினை ஆளும், சிறப்பான வைத்தியரான எம்பெருமானைத் தேடி பல ஸ்தலங்களுக்குச் சென்றான். அங்குள்ள மூர்த்தியரை வணங்கி வந்தான். அவனுக்கு நோய் தீரவில்லை. நிறைவில், திருப்பதி ஏழுமலைவாசனின் சந்நிதியை நாடிச் சென்று, அவரிடம் நெஞ்சுருகப் பிரார்த்தித்தான்.
குழந்தை வரமருளும் சந்தன வெங்கடாசலபதியின் சிலிர்ப்பூட்டும் தரிசனத்துக்கு...
பகவான் வேங்கடாசலபதி அவன் கனவில் தோன்றினார். ‘`சுபகண்டா... நீ ஒரு சந்தன மரத்தை எடுத்து அதில் உள்ள பாகங்களில் எதுவுமே மீதம் வராமல் எனக்கு ஒரு தேர் செய். அப்படி தேர் செய்தால் உன் நோய் தீரும்'’ என்றார். மறுநாள் காலையில் எழுந்தவுடன் அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டான். கைதேர்ந்த சிற்பிகளைக் கொண்டுவந்தான். அதற்கானச் சந்தன மரம் கொண்டுவரப்பட்டது. மிச்சம் மீதி எதுவும் வராமல் தேர் செய்ய வேண்டும். எனவே, அவனும் உடனிருந்து கவனித்து, தேர் செய்து முடித்தான். ஆனால், மிச்சமில்லாமல் தேர் வேலையை முடிக்க இயலவில்லை.
அந்தத் தேரில் சேரமுடியாத பகுதியாக ஒரு சந்தனக்கட்டை மட்டும் மீதி இருந்தது. அதை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தான் சுபகண்டன். ‘பகவானே.. நான் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துவிட்டேன். ஆயினும் இந்தச் சந்தனக்கட்டை மீதமாகிறதே. பகவானே... நோய் என்னை பரிதவிக்கச் செய்கிறதே. நான் என்ன செய்யவேண்டும்’ என்று மனமுருகி வேண்டி நின்றான்.
அன்று இரவு மீண்டும் பகவான் அரசன் கனவில் தோன்றினார். `‘சுபகண்டா... கவலைப்படாதே. தென்பகுதியில், என்னை நாடி வரும் பக்தர்களுக்கு நான் அருள்பாலிக்கவுள்ளேன். ஆகவே, நாளை காலை பசுவும் கன்றும் உன்னருகே வந்து நிற்கும். அதன் வாலில் நீ இந்த சந்தனக்கட்டையைக் கட்டு. பின்னர், அந்தப் பசுவையும் கன்றுவையும் பின் தொடர்ந்து செல். அவை உனக்கு அடையாளம் காட்டும் இடத்தில், சந்தனைக் கட்டையையே என் அர்ச்சாமூர்த்தமாகக் கருதிப் பிரதிஷ்டை செய்'’ என்றார்.
பகவான் கூறியதுபோலவே காலையில் பசுவும் கன்றும் காட்சியளித்தன. அந்தப் பசுவின் வாலில் சந்தனக்கட்டையைக் கட்டி, அவற்றைப் பின்தொடர்ந்து தெற்கு நோக்கிப் பயணமானார். பசுவும் கன்றும் காடு மேடு எல்லாம் கடந்து வற்றாத ஜீவநதியாம் தாமிரபரணி தீரத்திலுள்ள வகுளகிரி மலையின் மீது வந்து நின்றன. அந்த இடமே பகவானைப் பிரதிஷ்டை செய்ய உகந்தது என்று புரிந்துகொண்ட மன்னன், அங்கேயே வேங்கடாசலபதி உறைந்திருக்கும் சந்தனக் கட்டையை நிறுவினான். அதன்பின் பால், நெய், சந்தனம் போன்ற பலவித அபிஷேகங்கள் செய்தான். என்ன ஆச்சர்யம்... அவனின் நோய் தீர்ந்தது. அந்தத் தலமே வகுளகிரி என்று புராணங்கள் போற்றும் இன்றைய கருங்குளம்.
வகுளகிரி நாதரைப் (சந்தனத் தாரு) பிரதிஷ்டை செய்து பல நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. தொடர்ந்து மூலவருக்குப் பல்வேறு அபிஷேகங்கள் தினமும் நடந்துவருகின்றன. ஆனால், எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் பொலிவுடன் மூலவர் (சந்தனத் தாரு) திகழ்வது அற்புதம் ஆகும்!
வகுளகிரி க்ஷேத்திரத்துக்குப் பல்வேறு சிறப்பு கள் உள்ளன. அதுபற்றி தாமிரபரணி மகாத்மியம் என்னும் வடமொழி நூல் மிகச் சிறப்பாகவே கூறுகிறது.
ஆதிசேஷனே வகுளகிரி!
ஒருமுறை, திருமாலை தரிசிக்க திருப்பாற் கடலுக்கு வந்தார் நாரதர். ஆனால் அங்கே பகவான் இல்லை. வேறு எங்கே சென்றிருப்பார் என்று தனது ஞான திருஷ்டியால் தேடினார் நாரதர். அப்போது, தாமிரபரணிக் கரையில் ஆதிசேஷனே மலையாய்த் திகழும் வகுளகிரியின் மீது, தேவர்கள் வணங்கி நிற்க - கருட வாகனராக, லட்சுமிதேவியோடு அருள்பாலித்துக்கொண்டிருந்தார் பகவான்.
அதைக் கண்டு மனம்மகிழ்ந்தார் நாரதர். தானும் அங்கு சென்று வணங்கி நின்றார். இன்றைக்கும் இந்தத் தலத்தில், ஆதிசேஷனாகிய வகுளகிரியின் மீது பிராட்டியுடன் சேர்ந்து கருட வாகனராக பெருமாள் அமர்ந்திருப்பதாக ஐதிகம். இதற்கான மூலக்கோயில் அருகில் உள்ளது.
அதிசய புளிய மரம்
இக்கோயிலில் அபூர்வ புளியமரம் தலவிருட்ச மாகக் காணப்படுகிறது. இந்த புளியமரத்தை `உறங்கா புளியமரம்' என்று அழைக்கிறார்கள். இந்தப் புளியமரத்தில் பூப்பூக்கும். ஆனால், காய்க்காது. இரவில் தன் இலைகளை மூடாது. இந்த புளியமரம் மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.
சிங்கநாதன் என்னும் அரசர் தனது 30 வயதில் வயிற்றுவலியால் கஷ்டப்பட்டார். நாரதரைத் தேடிச் சென்று தனது நிலையைக் கூறி அழுதார். அப்போது நாரதர், `‘அரசனே! நீ கடந்த பிறவியில் கார்முகன் என்னும் வேடனாக பிறந்தாய். அப்போது காட்டுக்குள் சென்று நீ வேட்டையாடும்போது மான் ரூபத்தில் தனது மனைவியுடன் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்த முனிவரை அம்பு எய்து கொன்று விட்டாய். அம்பு ஏற்படுத்திய ரணத்தால் துடிதுடித்த நிலையில் அவர், ‘என்னை போல் நீயும் ரணத்தினால் துடிப்பாய்’ என உனக்குச் சாபமிட்டுவிட்டு இறந்துவிட்டார். அந்தச் சாபம் தான் தற்போது உன்னைப் பீடித்து ஆட்டுகிறது. ஆகவே, நீ சாபம் தீர தாமிரபரணியின் கரையில் உள்ள வகுளகிரி க்ஷேத்திரம் சென்று தரிசனம் செய். உனது நோய் தீரும்’' என்று அனுப்பிவைத்தார். அதன்படி சிங்கநாதன் வகுளகிரி க்ஷேத்திரம் வந்தார். அங்குள்ள பகவானை வணங்கி சாப விமோசனம் பெற்றார்.
`வகுளகிரிக்குச் செல்...'
அந்தணர் ஒருவர் தன் மனைவி, குழந்தைகளோடு கங்கைக்கரைக்குச் சென்று இறைவனை தரிசிக்க எண்ணினார். அதற்காக தன்னுடைய உடமைகளை அவ்வூர் செல்வந்தர் ஒருவரிடம் ஒப்படைத்தார். பின்னர் குடும்பத்துடன் கங்கை தீரம் சென்று திரும்பியபிறகு, செல்வந்தரிடம் வந்து உடமைகளைக் கேட்டார். அவரோ, ‘நீ அப்படி எதுவும் தரவில்லையே’ என அலட்சியமாகக் கூறிவிட்டார். அதனால் கோபம் கொண்ட அந்தணர், செல்வந் தரைச் சபித்தார். ‘என் மனம் வலிப்பது போல் ரணத்தினால் நீயும் கஷ்டப்படு வாய்’ என்றார். அந்தச் செல்வந்தருக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. பல மருத்துவம் பார்த்தும் பலனில்லை. திருப்பதி சென்று பகவான் வேங்கடாசலபதியை மனமுருக வேண்டி வயிற்றுவலி தீர வழி கேட்டார்.
வகுளகிரிக்குச் சென்று வழிபட்டால் பாவம் கரையும்; சாபவிமோசனம் கிடைக்கும் என்று அருள்பாலித்தார் பகவான். அதன்படி வகுளகிரி யாகிய கருங்குளம் தலத்தை அடைந்த செல்வந்தர், வகுளகிரிநாதரை வழிபட்டு விமோசனம் பெற்றார்.
பிள்ளை வரம் வழங்கும் பிரசாதம்
தென்திருப்பேரையைச் சேர்ந்த கோதரன் - மாலதி தம்பதி குழந்தைப்பேறு இன்றி மிகவும் வருந்தினர். அவர்களுக்கு அருள்பாலிக்கத் திருவுளம் கொண்டார் விஷ்ணு. ஆகவே, ஓர் அந்தணர் வடிவத்தில் அவர்களது இல்லத்துக் குச் சென்றார். `வகுளகிரிக்குச் சென்று விஷ்ணுவை வணங்கிப் பணிவிடை செய்தால், உங்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும்' என்று வழிகாட்டினார்.
கோதரன் - மாலதி தம்பதியர் உடனே கருங் குளம் வந்து பகவானை வணங்கி பணிவிடை செய்தனர். திருவோணம் நட்சத்திரத்தன்று பாயசம் சமைத்து, அங்கு சிறு குழந்தைகளுக்கு வழங்கினர். அதன்பின் அவர்களுக்குப் பிள்ளைப் பேறு கிடைத்தது. ஆகவே இந்தக் கோயிலில் திருவோண நட்சத்திரத்தன்று திருமஞ்சனம் செய்து, பாயசம் படைத்து, அதைப் பிரசாதமாகச் சிறுவர்களுக்கு வழங்கினால், விரைவில் பிள்ளைப் பேறு வாய்க்கும் என்பது ஐதிகம்.
நிகழ்காலத்திலும் இக்கோயிலில் பல அற்புதங் கள் நடைபெற்று வருகின்றன.
கருங்குளம் வேங்கடாசலபதி திருக்கோயிலின் கும்பாபிஷேகத்தின்போது, திருக்கோயில் முன் நிலை வாயிலில் திருப்பணி செய்ய வேண்டியிருந்தது. அதன்பொருட்டு நிலைக்கல் ஒன்றை அம்பாசமுத்திரத்திலிருந்து எடுத்து வரவேண்டிய நிலை. அதற்காக, மாட்டு வண்டிக்காரர் ஒருவரிடம் வாடகை பேசினர். அந்த வண்டிக்காரரோ அளவுக்கு அதிகமாகக் கூலி கேட்டார். வேறுவழியின்றி வண்டிக்காரர் கேட்ட பணத்துக்கு இசைந்தனர் நிர்வாகத்தினர்.
அதன்படி பாரம் ஏற்றி வந்த அந்த வண்டி, கோயில் அருகே உள்ள புளிய மரத்தை நெருங்கிய போது, அச்சு முறிந்துவிட்டது. அச்சாணியைத் தேடியபோது, அது மலையடிவாரத்தில் கிடைத் தது. எனில், அச்சாணி இல்லாமலேயே மலைமீது வண்டி ஏறியிருக்கிறது என்றால், அது அந்த பகவானின் திருவருளால்தான் என்பதைப் வண்டிக்காரர். இறைவனின் மகிமையை உணர்ந்தவர், தன் தவற்றுக்காக வருந்தினார். அதன் பிறகு, வேங்கடாசலபதியின் அடிமையாய் திருப்பணியில் கலந்துகொண்டார்.
மகிமைமிகு மார்த்தாண்டேஸ்வரர்!
வகுளகிரி மலைமீது ஏறி வேங்கடாசபதியை வணங்கும் முன்பு, அடிவாரத்திலுள்ள மார்த்தாண் டேஸ்வரை வணங்கிச் செல்கிறார்கள் பக்தர்கள். மார்த்தாண்டேஸ்வரர் என்ற அரசன் இந்த சிவன் கோயிலைக் கட்டியதால் அவர் பெயரில் மார்த்தாண்டேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இவ்வூரையும் மார்த்தாண்டேஸ்வரர் கருங்குளம் என்றே அழைத்துவருகின்றனர்.
இவ்வூரில் குலசேகரப் பாண்டியன் பல திருப்பணிகள் செய்த காரணத்தினால், இந்தச் சிவாலயத்தில் அருளும் அன்னைக்கு குலசேகர நாயகி என்ற திருநாமம் உண்டு. இக்கோயிலில் தம்பதி சமேதராக நவகிரகங்கள் அருள்தருகிறார்கள். இவர்களை வணங்குவோருக்கு கேட்கும் வரம் கிடைக்கிறது. இந்தக் கோயிலில் சாயாரட்சை பூஜையின்போது, அரிசியின் மீது தேங்காய் உடைத்துவைத்து, நெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும்!
திருப்பதி தரிசனப் புண்ணியம்!
திருப்பதி திருவேங்கடவன் அருளால் உண்டான க்ஷேத்திரம் இது என்பதால், திருப்பதி பெருமாளுக்கு வேண்டிக்கொண்ட நேர்ச்சையை கருங்குளம் வேங்கடாசலபதி கோயிலில் செய்யலாம் என்கிறார்கள். நெல்லை - திருச்செந்தூர் பிரதான சாலையில், நெல்லையிலிருந்து 15 கி.மீ. தொலை வில் கருங்குளம் என்னும் கிராமத்தில் உள்ளது இந்தக் கோயில். காலை 7 முதல் 10 மணி வரையும் மாலை 5 முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
இறை உணர்வின் ஆதாரம்!
அந்தக் கிராமத்துக்குத் துறவி ஒருவர் வந்திருந்தார். தினமும், கிராம எல்லையிலுள்ள ஆல மரத்தடியில் அமர்ந்து, மக்களுக்கு உபதேசம் செய்து வந்தார். அன்றும், எங்கும் நிறைந்த இறைவனின் சாந்நித்தியத்தைக் குறித்துப் பேசினார். அப்போது ஒருவர் துறவியிடம் கேட்டார்: ``சுவாமி! இறையுணர்வு கொள்ளவேண்டும் எனில், எதற்காக ஆலயம் செல்லவேண்டும். இறைவன்தான் எங்கும் நீக்கமற நிறைந்திருக் கிறார் என்கிறீர்களே... எனில், கோயிலுக்குச் செல்லாமலேயே இறையுணர்வை அடைய முடியாதா?''
துறவி பதிலேதும் கூறாமல் அவரிடம், ``குடிக்கத் தண்ணீர் கொண்டு வா'' என்றார்.
அவர் ஓடிச்சென்று செம்பில் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தார். உடனே துறவி, ``நான் தண்ணீர்தானே கேட்டேன். கூடவே செம்பு எதற்கு?'' என்றார். அவர், ``சாமி! தண்ணீர் எடுத்துவர ஆதாரம் வேண்டுமல்லவா? வெறும் நீரை மட்டும் கொண்டு வர இயலாதே...'' என்றார்.
துறவி புன்னகையோடு பதில் சொன்னார்: ``அதேபோல், இறையுணர்வு கொள்ள ஆலயம் தேவை. ஆலயம் ஒரு கருவி; ஆலயமே ஆதாரம்!''
- ஆர்.ஆர். பூபதி, கன்னிவாடி
படங்கள்: சுடலை மணி செல்வன்
Comments
Post a Comment