பணக்காரர்கள் வரிசையில் இடம்பிடிக்கும் சூட்சுமங்கள்!

 சமீபத்தில் தாவோஸில் கூடிய உலகப் பொருளாதார மாநாட்டில் உலக மக்களில் பலரும் ஆச்சர்யத்துடன் கவனித்த செய்தி எது தெரியுமா..? ‘‘உலகப் பணக்காரர்களில் நூறு பேர் சேர்ந்து ‘தி பேட்ரியாட்டிக் மில்லியனர்ஸ்’ என்ற குழுவை ஆரம்பித்துள்ளனர். அவர்களின் கோரிக்கை, “தயவு செய்து எங்களுக்கு அதிக வருமான வரி விதியுங்கள்” என்பதே. வரியைக் குறையுங்கள் என்று எல்லோரும் சொல்லும்போது, இவர்கள் எங்களுக்கு வரி விதியுங்கள் என்று சொல்லக் காரணம் இதுதான்...

சுந்தரி ஜகதீசன்

“கடந்த இரண்டு வருடங்களில் கொரோனாவால் பலரும் வேலை இழப்பு, சம்பளக் குறைப்பு என்று அவதிப்பட்டபோது, எங்கள் செல்வம் மட்டும் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. ஒரு நாளுக்கு 21,000 பேர் வறுமையால் இறந்தபோது நாங்கள் மட்டும் அதிக செல்வத்தை அனுபவிப்பது எந்த விதத்தில் நியாயம்? ஆகவே, எங்களுக்கு அதிக வரி விதியுங்கள்’’ என்கிற வேண்டுகோளை அவர்கள் முன்வைத்திருந்தனர்.


இந்தக் குழுவில் டிஸ்னி வாரிசான அபிகெயில் டிஸ்னி போன்ற பெரும் பணக்காரர்கள் உள்ளனர். (நம் நாட்டுப் பணக்காரர்கள் ஒருவர்கூட இந்தக் குழுவில் இடம்பெற் றிருப்பதாகத் தெரியவில்லை!).


இவர்கள் கூறுவது பொய்யல்ல. உலகின் 90% செல்வம் 10% பெரும் பணக்காரர்களிடம் குவிந்துள்ளது. காரணம், சாதாரண மக்களுக்குக் கிடைக்காத சில லாபகரமான முதலீட்டு முறைகள் செல்வந்தர்களுக்கு எளிதில் கிடைக் கின்றன. அவர்கள் முதலீடு செய்து செய்யும் தொழில் அவர் களுக்குப் பல ஆயிரம் கோடியைச் சம்பாதித்துத் தருகிறது. ஒரு தொழிலில் கிடைத்த பணத்தைக் கொண்டு அடுத்த தொழிலை ஆரம்பிக்கிறார்கள். அதில் பெரும் லாபம் கிடைக்க அவர்கள் மேலும் மேலும் பணக்காரர் ஆகிறார்கள்.


அது மட்டுமல்ல, அழகிய தீவுகள், வின்டேஜ் கார்கள், கிடைப்பதற்கரிய கலைப் பொருள்கள், அபூர்வ வாட்சுகள், பழைமை வாய்ந்த ஒயின் போன்ற சாமான்யனுக்கு எட்டாத விஷயங்களில் முதலீடு செய்வதன் உலகப் பணக்காரர்கள் தங்கள் செல்வத்தை இன்னும் இன்னும் பெருக்குகிறார்கள். அவர்களுக்கு சாத்தியப்படும் விஷயம் நமக்குக் கிடைக்காதா? நம்மால் பெரும் பணக்காரர் ஆக முடியாதா?


நிச்சயம் முடியும். இன்றைக்கு நமக்கு அது கைகூடாமல் போயிருக்கலாம். ஆனால், நம் அடுத்த சந்ததியினருக்கு இது சாத்தியப்படும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?


முதலில் “இதற்கெல்லாம் பரம்பரை சொத்து வேண்டும்” என்ற எண்ணத்தை மனதில் இருந்து முழுவதுமாகத் துடைத்தெறிய வேண்டும். இந்த ‘பேட்ரியாட்டிக் மில்லியனர்ஸ்’ஸில் யாரும் அரச குடும்பத்தினரல்ல; முதல் அல்லது இரண்டாம் தலைமுறைப் பணக்காரர்கள். அவர்களிடம், மற்ற யாரிடமும் இல்லாத மாய, மந்திர ரகசியங்களும் இல்லை. ஆனால், அவர்கள் அனைவரிடமும் சில பொதுவான விஷயங்கள் உள்ளன. அவற்றில் எதை நாம் பின்பற்றலாம் என்று பார்ப்போம்.


முதலிலேயே திட்டமிடுதல்...


சிகாகோவில் நடத்திவந்த டெலிகாம் கம்பெனியை விற்ற ஜோஷுவா கோல்மேன், பல நிபுணர்களைக் கலந்தாலோசித்து, அந்தப் பணத்தைக் கொண்டு உடனடியாகப் புதிய கம்பெனி களைத் தொடங்கினார்.


நமக்கும் ஆண்டுதோறும் சம்பள உயர்வு, அரியர்ஸ், போனஸ் என்று சில சலுகைகள் மூலம் அவ்வப்போது கணிச மான பணம் கிடைக்கத்தான் செய்கிறது. சிலசமயம் நிலத்தை விற்ற பணம், கோர்ட்டில் நிலுவையில் இருந்த பணம் என்று ஏதாவது ஜாக்பாட்டுகளும் வருவதுண்டு.


அப்படி வரும் பணத்தை நாம் என்ன செய்வோம்? கார் வாங்கலாம், இன்னும் சொகுசான வீடு வாங்கலாம் என்றுதான் யோசிப்போம். எந்தக் கடனை அடைக்கலாம், எந்த முதலீட்டைத் தொடங்க லாம் என்கிற விஷயங்களை எல்லாம் சுத்தமாக யோசிக்க மாட்டோம். கணிசமான வரும் போது முதலீடு செய்கிறவர்கள் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள். செலவு செய் பவர்கள் சாதாரண மனிதர் களாகவே இருக்கிறார்கள்.


ரிஸ்க் பற்றிய குறுகிய கண்ணோட்டத்தைத் தவிர்த்தல்


இந்தியப் பங்குச் சந்தையில் கலக்கிய ராகேஷ் ஜுன்ஜுன்வாலா நூறு விமானங்களுடன் ஆகாசா என்ற விமானக் கம்பெனியைத் தொடங்கியுள்ளார். விமான நிறுவனத்தை நடத்துவது அதிக ரிஸ்க் மிகுந்தது. தவிர, அவருக்கு இப்போது 65 வயதுக்குமேல். என்றாலும், மனிதர் தில்லாக இந்தத் தொழிலில் இறங்கியிருக்கிறார்.


ஆனால், நமக்கோ முதலீடு என்றால் ரிஸ்க் இல்லாத தங்கம், நிலம், ஃபிக்ஸட் டெபாசிட் தவிர வேறெதுவும் நினைவுக்கு வருவதில்லை. நம் தாத்தா காலத்தில் விறகடுப்பில் சமைத்தார்கள் என்பதற்காக இன்று நாம் அதையேதான் பின்பற்றுகிறோமா? ரிஸ்க் பற்றியே எண்ணி பயந்து நல்ல முதலீடுகளில் இருந்து பின்வாங்காமல், பாதுகாப்புடன் ரிஸ்க் எடுப்பது எப்படி என்று யோசிக்கலாம்.


செல்வம் சேர்க்கும் கடன்களை மட்டும் வாங்குதல்


அம்பானி, அதானி கம்பெனிகள் வாங்கியிருக்கும் கடன் அளவு லட்சக்கணக்கான கோடிகள். இன்று கடன் இன்றி வாழ்வு நகர்வதில்லை. ஆனால், வாங்கும் கடன்கள் கல்விக் கடன், வீட்டுக் கடன் போல் நம் வாழ்நிலையை உயர்த்துவதாக இருக்க வேண்டும். பெரிய கார், பெரிய டிவி, விலை உயர்ந்த ஃபோன், லேட்டஸ்ட் ப்ளே ஸ்டேஷன் போன்றவற்றை அடுத்த வருடன் போட்டி போட்டு வாங்கக் கூடாது. அப்படி வாங்கினால், நாம் என்றும் கடன்தாரராகவே இருப்போம்.


செலவைக் குறைத்து வரவின் மீது கவனம் செலுத்துதல்


வாரன் பஃபெட் ஒமாஹாவில் 1958-ம் வருடம் வாங்கிய அதே வீட்டில்தான் இன்னும் குடியிருக்கிறார் என்கிற தகவல்கள் நம்மில் பலருக்கும் தெரியாது. பொதுவாக, மிகப்பெரிய செல்வந்தர்கள் மற்றவர் களுடன் போட்டி போட்டு, தங்கள் லைஃப்ஸ்டைலை ஆடம்பரமாக அமைத்து, தங்கள் பணக்காரத் தன்மையை வெளிப்படுத்துவதில்லை. இதனால் தங்கள் பொருளாதாரக் குறிக்கோள்களை அவர்கள் சீக்கிரமே எட்ட முடிகிறது.


போர்ட்ஃபோலியோ உருவாக்கம் மற்றும் ரீபேலன்சிங்


எல்லாப் பணக்காரர்களும் அஸெட் அலொகேஷன் முறைகளை மிகவும் கவனத்துடன் பின்பற்றுகிறார்கள் என்பது நாம் அவசியம் அறிய வேண்டிய உண்மை. தொட்டு உணரக்கூடியவை (Tangible) மற்றும் தொட்டு உணர இயலாதவை (Intangible) போன்ற இருவகை முதலீடுகளையும் நாமும் மேற்கொள்ள வேண்டும். நம் வயது, ரிஸ்க் எடுக்கும் திறன் ஆகிய வற்றைப் பொறுத்து நிலம், தங்கம், வங்கி எஃப்டி இவற்றுடன் மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் என்று பரந்து விரியும் புதிய முதலீடுகளிலும் இறங்க வேண்டும். ஏற்கெனவே புதிய முதலீடுகளில் ஈடுபட்டுள்ளவர்கள் சீனா, அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் முதலீடு செய்யும் ஃபண்டுகளில் சிறிதளவு கால் பதிக்கலாம். அத்துடன் நம் போர்ட் ஃபோலியோவை அடிக்கடி பரிசீலித்து தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.


இவற்றை எல்லாம் கடைப்பிடித்தால் உங்கள் சந்ததியினரும் உலகப் பணக்காரர் ஆகவில்லை என்றாலும் பெரும் பணக்கார ஆவது உறுதி!

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை