வாழ்வைக் கொல்லும் விஷம்...!
(பெண்களுக்கு சமர்ப்பணம்)
அந்த ஊரின் அழகிய இளம்பெண் அவர். அவர் மணமுடித்த அவரின் கணவர் மேல் கடுமையான எரிச்சலும் கோபமும்; ஒரு கட்டத்தில் அவனோடு வாழ முடியாது என்ற முடிவுக்கு வருகிறார், அவனைக் கொன்று விடவேண்டும் என்ற அளவுக்கு அவளிடத்தில் ஆவேசம். அந்தளவுக்கு கணவனின் கொடுமைகள்.
இதைப்பற்றி ஆலோசனை செய்ய தன் தாயிடம் வருகிறாள்.
தாயே! அவன் செய்யும் துன்புறுத்தல்களை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை; நாட்டின் சட்ட நடைமுறைகளைப் பற்றி நான் கவலைப் படுகிறேன், இல்லாவிட்டால் அவனை கொன்று விடுவேன், எனக்கு உதவிசெய்! என்று தாயிடம் கூறினாள்.
நீ சொல்வதும் சரிதான்; உனக்கு நான் உதவி செய்கிறேன், ஆனால் அதற்கு முன்னால் சில ஆலோசனைகள் தருகிறேன்; அவற்றை நீ செயல்படுத்தினால் உன் மீது எந்த சந்தேகமும் ஏற்படாமல் உன் கணவனை கொன்று விடலாம் என்றாள் தாய்;
என்ன ஆலோசனை? என்று மகள் கேட்டாள்; எதுவாக இருந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்றும் கூறினாள்.
தாய் நிதானமாக சொல்ல ஆரம்பித்தாள்:
1- அவரை சாகடிப்பதற்கு முன் அவருடன் சமரசம் செய்து கொள்ள வேண்டும்; ஏனென்றால் அவர் இறந்து விட்ட பிறகு உன்னை யாரும் சந்தேகப்பட முடியாத அளவிற்கு உன்னுடைய சமரசம் இருக்கவேண்டும்.
2- நீ அவருடன் இணக்கமாக இருக்கிறாய் என்பதை காட்டுவதற்காக உன்னை நீ அழகு படுத்திக் கொள்ள வேண்டும்; இளமையாகவும் கவர்ச்சியாகவும் தெரிய வேண்டும், உன்னை பற்றி எந்த சந்தேகமும் அவருக்கு வரக்கூடாது.
3- அவர் எதையும் உணராதபடி நீ அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மிகவும் அன்பாகவும், நன்றியுணர்வுடனும் இருந்து, அவரை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும்.
4- நீ பொறுமையாகவும், கோபம் குறைவானவளாகவும் இருக்க வேண்டும், மேலும் அவர் உன் பேச்சுக்கு அதிகம் மதிப்பளிக்க வேண்டும், மேலும் என் மனைவி சரியானவர் என்றும், எல்லோரும் உன்னைப் பாராட்டுகிறார்கள் என்று சொல்லுமளவுக்கு அதிக மரியாதையுடன் நடக்க வேண்டும்.
5- எனது மனைவி பேராசை பிடித்தவள் இல்லை என்றும், பணத்தை நேசிப்பவர் அல்ல என்றும், அவர் கூறும் வரை அவரது செலவினங்களில் குறுக்கிடாமலும், உன்னுடைய செலவுகளை வீணாக்காமலும் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும்.
6- அவரிடம் உனது குரலை உயர்த்தாதே, ஆனால் அவரிடம் நிம்மதியையும், அன்பையும் ஊக்குவிக்கும் விதமாக நடந்து கொள், அவரது நினைவுகள் எப்போதும் உன்னை சுற்றி வரும் விதமாக அவரை உபசரி,
இவற்றை நீ எவ்வளவு விரைவாக கடைபிடிக்கிறாயோ அந்தளவுக்கு அவரை நீ கொல்லும் பொழுது உன் மீது எந்த சந்தேகமும் ஏற்படாது, என்று கூறிய தாய் உன்னால் இவற்றையெல்லாம் செய்ய முடியுமா? என்று கேட்டார்;
மிகவும் உற்சாகமாக "நிச்சயமாக என்னால் முடியும்" என்று மகள் சொன்னதும், தாய் சிறிது பொடிகள் நிரப்பிய ஒரு குப்பியை கையில் கொடுத்து, இது மெல்லக் கொல்லும் விஷம், தினசரி உன் கணவரின் உணவில் இதை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வா! என்று சொல்லி, அனுப்பி வைத்தார்;
ஏறத்தாழ ஒரு மாதம் கடந்தது; மகள் தன் தாயிடம் திரும்பி வந்தாள், சொன்னாள்:
அம்மா! என் கணவரைக் கொல்லவோ அல்லது அவரை விட்டும் விலகவோ எனக்கு விருப்பமில்லை. நான் அவரை மிகவும் நேசிக்கிறேன், ஏனென்றால் அவர் முற்றிலும் மாறிவிட்டார், அவர் இப்போது நான் நினைத்ததை விட மிகவும் நல்ல கணவராக செயல்படுகிறார், என்று மகிழ்ச்சியுடன் சொன்னவர்,
தாயே! அவருக்கு நான் விஷம் கொடுத்து வந்தேனே, அதன் பாதிப்பு ஏற்படாமல் நிறுத்துவதற்கு, விஷத்தை முறிப்பதற்கு வழி இருக்கிறதா? என்று கவலையோடு கேட்டாள்;
தாய் பதிலளித்தார்:
கவலைப்படாதே மகளே! நான் முதலில் உனக்குக் கொடுத்தது வெறும் பொடி மட்டுமே. அது அவரை ஒருபோதும் கொல்லாது.
உண்மையில், உன் கணவருக்கு நீ ஏற்படுத்திய பதற்றம், கருத்து வேறுபாடு மற்றும் நீ உண்டாக்கிய சிக்கல்களால் மெதுவாகக் கொல்லும் விஷம் நீ தான்.
நீ அவரை நேசிக்கவும், அவரை மதிக்கவும், அவரை கவனித்துக் கொள்ளவும் தொடங்கியபோது, அவர் மிகவும் கனிவான, மென்மையான கணவனாக மாறி இருப்பதை நீ கண்டாய்;
ஆண்கள் உண்மையில் மோசமானவர்கள் அல்ல, ஆனால் நாம் அவர்களுடன் தொடர்பு கொள்ளும் விதமும், அவர்கள் மீதான நமது பரிவுமே அவர்களுடைய உணர்வுகளையும் அணுகுமுறைகளையும் தீர்மானிக்கிறது.
பெண்கள் தங்கள் கணவருக்கு செலுத்தும் மரியாதை, அன்பு, கவனிப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை முழுமையாகக் காட்ட முடிந்தால் அவர்கள் உங்களுக்காக 100% மாறிவிடுவார்கள்.
இன்றைய திருமண வாழ்க்கை பிரச்சினைகளில் கணவன்-மனைவிக்கிடையே அவர்களின் பெற்றோர்களின் பங்கு தான் பிரிவினைக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது என்பதை நாம் அறிகிறோம்.
Comments
Post a Comment