கோபத்தை விரட்ட என்ன செய்வது?
ஒருத்தர் தலையில் கட்டுப் போட்டுக் கொண்டு தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தார்.
‘‘என்னங்க இது?’’ என்றார் எதிரே வந்த நண்பர்.
‘‘எல்லாம் கோபத்தினால் வந்த விளைவு!’’ என்றார் அவர்.
‘‘கொஞ்சம் விவரமாகத்தான் சொல்லுங்களேன்?’’
‘‘குடும்பத்துல சண்டை. ஆத்திரப்பட்டு என்னமோ சொல்லிப்புட்டேன்… அதுக்காக ஏதோ ஒரு பாத்திரத்தை எடுத்து என் முகத்துக்கு நேரா வீசிப்புட்டா என் வீட்டுக்காரி… அவ்வளவுதான்!’’
‘‘குடும்பம்னு இருந்தா இதெல்லாம் சகஜம்தானே…!’’
‘‘உங்க வீட்டுலேயும் இப்படி நடக்கறது உண்டா?’’
‘‘தாராளமா உண்டு!’’
‘‘ஆனா, உங்க தலையில கட்டு எதையும் காணோமே..?’’
‘‘நாம கொஞ்சம் அனுசரிச்சு நடந்துகிட்டா எதுவும் பிரச்னை வராது!’’
‘‘எப்படி அனுசரிச்சுப் போறது…? அதைக் கொஞ்சம் எனக்கும் சொல்லிக் கொடுங்களேன்?’’
‘‘சொல்லிக் கொடுக்கறேன். அதுக்கு முன்னாடி ஓர் உண்மையைப் புரிஞ்சிக்கணும்!’’
‘‘என்ன அது?’’
‘‘கோபம்கறது ஒரு தற்காலிகப் பைத்தியம் தான்!’’
‘‘அப்படியா?’’
‘‘ஆமாம். தற்காலிகமா ஒருத்தருக்குப் பிடிக்கிற பைத்தியம்தான் கோபம். அந்த நேரத்துலே அவரு மறைச்சு வெச்சிருக்கிற பைத்தியக்காரத்தனம் வெடிச்சிக்கிட்டு வெளியிலே வருது… அவ்வளவு தான்!’’
‘‘சரி.. இப்ப என்ன செய்யலாம்கறீங்க?’’
‘‘கோபம் வர்ற நேரத்துல நாம் ஒரு காரியம் செய்யலாம்.. அதாவது அஞ்சு தடவை நம்ம மூச்சை ஆழமா உள்ளே இழுத்து மெதுவா மெள்ள வெளியே விடணும்.’’
‘‘அப்படி செஞ்சா…?’’
‘‘மனசுலே கோபத்துக்குப் பதிலா சுவாசம் பத்தின சிந்தனை ஏறும். இதுக்கப்புறம் கோபம் வந்தா கூட அது தீவிரமா இருக்காது. இதைத் தொடர்ந்து செஞ்சா அது ஒரு பழக்கமாகவே ஆயிடும். ஆத்திரத்தை விரட்ட, ஆன்மிகம் சொல்லிக் கொடுக்கிற ஒரு சுலபமான வழி இது!’’
‘‘நீங்க இந்த வழியைத்தான் கடைப்பிடிக்கிறீங்களா?’’
‘‘இல்லை.. அது வேறே வழி!’’
‘‘எப்படி அது?’’
‘‘என் மனைவிக்குத் திடீர் திடீர்னு பயங்கரமா கோபம் வந்துடும். கோபம் வந்துட்டா கையிலே கிடைக்கிற பாத்திரத்தையெல்லாம் எடுத்து என் முகத்துக்கு நேரா வீசறது உண்டு!’’
‘‘அதை எப்படி சமாளிக்கிறீங்க?’’
‘‘அது ரொம்ப சுலபம்.. ஒரு தலையணையை எடுத்து என் முகத்துக்கு நேரா பிடிச்சுக்குவேன்..!’’
-தென்கச்சி சுவாமிநாதன்
Comments
Post a Comment