ஒரு இளைஞனாக எவ்வாறு பணக்காரனாக முடியும்?

இதனை அறிவதற்கு முன், ஒரு கதையைப் பார்ப்போம்.

ராக்பெல்லர் உலகின் மிகப் பெரிய பணக்காரர். அவர் வயதான காலத்தில், தினமும் காலையில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். அவர் அவ்வாறு நடக்கும் போது, ஒரு இளைஞன் விரக்தியுடன் நடப்பதைக் கண்டு, அவனை என்னவென்று விசாரித்தார். அவன் தான் பணத்திற்கு மிகவும் கஷ்டப்படுவதாகவும், வாழ்வு வெறுத்துவிட்டது. தற்கொலை செய்யப்போவதாக கூறினான்.

அவனுக்கு அவர் அறிவுரை கூட முற்பட்டபோது, அவன், நீங்கள் பெரிய பணக்காரர், உங்களுக்கு என்னை மாதிரி பணப்பிரச்சனை கிடையாது என்றான். இவ்வளவு பேசுகிறீர்களே, உங்களுடைய பணத்தினை எனக்கு தர முடியுமா ? என்று வினவினான்.

அதற்கு ராக் பெல்லர் 'நான் எனது சொத்தினை உனக்கு தரத் தயாராக உள்ளேன். ஆனால், அதற்கு மாற்றாக, உன்னுடைய இளமையினை எனக்குத் தருவாயா? ' என்று கேட்டார்.

'உன்னுடைய இளமையினைக் கொண்டு, நீ என்னை விடவும் பெரிய பணக்காரன் ஆக முடியும்.' என்றார் ராக்பெல்லர்.

இளைஞன் ராக்பெல்லரின் அறிவுரைகளின் படி, தனது தற்கொலை முடிவினை கைவிட்டு, உழைக்கும் பக்கம் திரும்பினான்.

எனவே, இளைஞர்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக, அவர்களுக்கு பணத்தினைப் பெருக்குவதற்கு, பல ஆண்டுகள் உள்ளன.

மேலோட்டமாக பார்த்தால், மூன்று விஷயங்கள் தான்.

  1. வரவு = பணத்தின் பல்வேறு வரவுகள்
  2. செலவு = பணத்தின் பல்வேறு செலவுகள்
  3. சேமிப்பு = வரவு - செலவு.





இந்த சேமிப்பினை இரண்டு வகைகளில் அதிகப்படுத்தலாம்.

  1. அதிகமாக சம்பாதிப்பதன் மூலம், அதிகமாக சேமிக்கலாம்.
  2. குறைவாக செலவழிப்பதன் மூலம், அதிகமாக சேமிக்கலாம்.

இந்த இரண்டு வகைகளையும் ஒரே சமயத்தில் செய்ய முடிந்தால், சேமிப்பானது இன்னும் அதிகரிக்கும். இவை இரண்டிலும், அதிகமாக சம்பாதிப்பதை விடவும், இருக்கும் சம்பாத்தியத்தினை சேமிப்பது என்பது இன்னும் எளிதானது. எனவே, சிக்கனமான வாழ்க்கை மிகவும் அவசியம். எந்த ஒரு பணக்காரரும், சிக்கனமின்றி உருவாகவில்லை.

அதிகமாக சம்பாதிக்க சில உதாரணங்கள்;

  • பகுதி நேரத்தில் மற்றொரு வேலை பார்ப்பது
  • ஈடுபாடு அற்ற முறையில் பணம் சம்பாதிக்கும் முறைகளை கையாள்வது (Passive income streams)
  • குடும்ப நிதி சூழ்நிலையை மேம்படுத்த, கணவன் மட்டுமன்றி மனைவியும் வேலைக்கு செல்வது
  • திறமைகளை வளர்த்துக் கொண்டு, அதிக சம்பளம் தரும் வேறு வேலைக்கு மாறுவது
  • வேறு ஒருவரிடம் வேலைக்கு கையேந்தாமல், சொந்தமாக தொழில் தொடங்கி, வருவாயினை அதிகமாகப் பெறப் பார்ப்பது

அதிகமாக சேமிக்க சில உதாரணங்கள்;

  • திட்டமிட்டு செலவழிப்பது
  • வரவுக்குள்ளாக செலவினைக் கட்டுப்படுத்துவது
  • வெளியே உணவருந்துவதைக் கட்டுப்படுத்தி சேமிப்பது
  • தேவையற்ற சந்தாக்களிலிருந்து வெளியேறுவது
  • கடன்களைத் தவிர்த்து, வட்டிகளைத் தவிர்ப்பது
  • பொது போக்குவரத்தினை முடிந்த அளவிற்கு உபயோகப்படுத்துவது
  • தேவை சார்ந்து மகிழுந்து வாங்குவது. எரிபொருள் செலவை கட்டுக்குள் வைத்திருப்பது

சேமிப்பு மட்டும் போதாது, முதலீடு அவசியம்;

இப்போது, அதிகமாக சேமித்துவிட்டால் மட்டும் போதாது, சேமிப்பு பணவீக்கத்தினை சமாளிக்க உதவாது.

உதாரணமாக, 1979ம் ஆண்டு, 10000 ரூபாய் ஒருவர் சேமித்து வைத்து, அதனை 2012ம் ஆண்டு கண்டெடுத்தால், அதன் மதிப்பு 10000 மட்டுமே. 1979ம் ஆண்டு அதைக் கொண்டு, கோடம்பாக்கத்தில், 10 கிரவுண்டு நிலம் வாங்க முடியும். 2012ம் ஆண்டு, அதனைக் கொண்டு, ஒரு மாத வாடகையே கோடம்பாக்கத்தில் கொடுக்க முடியும். அதற்கு பதிலாக, அதை பணத்தினை முதலீடு செய்திருந்தால், அது பன்மடங்காகப் பெருகியிருக்கும்.

முதலீட்டிற்கான சில உதாரணங்கள்;

  • 1980 ம் ஆண்டு விப்ரோ பங்கினில் 10000 ரூபாய் போட்டிருந்தால், அது கிட்டத்தட்ட 500 கோடி ரூபாயாக மாறியிருக்கும். நன்றி; Prudent Equity
  • 1979ம் ஆண்டு, பங்கு சந்தை குறியீடு சார்ந்த பரஸ்பர நிதியில் முதலீடு செய்திருந்தால், அது கிட்டத்தட்ட 17, 40,000 ரூபாயாக மாறியிருக்கும். நன்றி; Sensex Historical Yearly Returns - Since 1979

எனவே, முதலீடு என்பது மிகவும் முக்கியமான விஷயம்.

ஒரு இளைஞராக உங்களுக்கு பின்வரும் ஆலோசனைகளை பகிர்ந்துக் கொள்கிறேன். இன்னும் பல உண்டு.

  • எவ்வளவு சீக்கிரமாக முதலீடு தொடங்க முடியுமோ தொடங்குங்கள். அப்போதுதான் கூட்டுவட்டியின் பயனை சரியாக பயன்படுத்த முடியும்.
  • முதலீட்டினை தானியங்கியாக மாற்றுங்கள். சம்பளம் வந்தவுடனேயே, முதலீட்டிற்கான பணம் முதலீட்டிற்கு சென்று விட வேண்டும். நீங்களே மாதா மாதம் செய்தாலும், தவறில்லை. ஆனால், ஒரு மாதம் கூட விடாமல் செய்யுங்கள்.
  • கடன் வேண்டவே வேண்டாம். கடன் அட்டை உட்பட. கடன் உங்களை பணக்காரன் ஆகத் தடுக்கும் பெரிய அரக்கன். அவனிடம் மாட்டிக் கொண்டால், பணக்காரர் ஆவது கடினம்.
  • வரவுக்குள்ளாக செலவு வைத்திருங்கள்.
  • சிக்கனமாக வாழ்க்கையை நடத்துங்கள்.
  • முதலீடுகள் பெருக பொறுமையாக இருங்கள். ஓய்வுகாலத்திற்கான முதலீடுகள் பல்கிப் பெருக பல காலம் ஆகும்.
  • ஓய்வுகாலத்திற்கான முதலீடுகளில் இருந்து எந்த ஒரு பணத்தினையும் எடுக்காதீர்கள். அது உங்களுடைய எதிர்காலத்தினை அடமானம் வைப்பதற்கு சமம்.
  • அவசர கால நிதியினை வைத்திருங்கள். அது எந்த ஒரு அவசர காலத்திலும், கடன் வாங்குவதை தவிர்க்க உதவும்.
  • முதலீட்டினை பரவலாக செய்யுங்கள். பங்கு சந்தை குறியீடு சார்ந்த பரஸ்பர நிதிகள், கடன் பத்திர குறியீடு சார்ந்த பரஸ்பர நிதிகள், தங்கம், நிலம், தொன்மையான ஓவியம், பொருள் என்று எவ்வாறெல்லாம் முதலீட்டினை பரவலாக்க முடியுமோ, பரவலாக்குங்கள்.
  • முதலீட்டிற்கு பணம் ஒதுக்கியது போக, செலவு என்று வாழ்க்கை வாழுங்கள்.
  • வரவு செலவு கணக்கினை வைத்திருங்கள்.
  • திட்டமிட்டு செலவுகளை செய்யுங்கள். செலவுகளை கட்டுக்குள் வைத்திருங்கள்.
  • எளிமையான வாழ்க்கை வாழுங்கள். மற்றவர்களுக்காக பகட்டாக காட்டிக் கொள்ளாதீர்கள்.
  • தேவை சார்ந்து மகிழுவுந்து, வீடு வாங்குங்கள். அவையே நீங்கள் வாழ்வில் செய்யும் மிகப் பெரிய செலவுகள்.
  • அரசாங்கத்தின் வரி விலக்கு முதலீட்டுத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
  • வீடு, மேல்படிப்பு கல்வி, தொழில் தொடங்க என்பதைப் போன்ற அரிதான சமயங்களில் மட்டும் கடன் வாங்க நேரிடலாம். வீடு அடிப்படை தேவை. அரசின் வரிவிலக்கு உண்டு. கல்வி, தொழில்; எதிர்காலத்தில் பன்மடங்கு பணத்தினை பெருக்க உதவும். அதனைக் கூட, எவ்வளவு சீக்கிரம் அடைக்க முடியுமோ , அடைக்கப் பாருங்கள். மற்ற வகைகளில் கடனைத் தவிருங்கள்.
  • வரையறை உள்ள காப்பீட்டுத் திட்டத்தினை எடுத்திருங்கள். அது துரதிருஷ்டமான சமயத்தில், குடும்பத்திற்கு உதவும்.
  • நல்ல ஒரு மருத்துவக் காப்பீடு எடுத்திருங்கள். அது மருத்துவ செலவுகளை சமாளிக்க உதவும்.
  • முதலீடுகளை எளிமையாக வைத்திருங்கள். அது உங்களை எளிதில் சமாளிக்க உதவும்.
  • ஒரு இடத்தில் குறுகிய காலத்தில் மட்டும் இருப்பீர்கள் என்றால், வீடு வாங்காமல், வாடகைக்கு மட்டும் இருங்கள்
  • பல்வேறு பணப் பெருக்க வழிகளை அடையப் பாருங்கள்
  • லாட்டரி போன்ற சூதாட்டங்களை கண்டிப்பாக தவிருங்கள்
  • புகைப்பழக்கம், குடிப்பழக்கம் போன்ற தீய பழக்கங்களைத் தவிருங்கள்
  • உடல் நலத்தினை நன்றாக வைத்திருங்கள்.
  • தேவைக்கு மட்டும் பொருட்களை வாங்குங்கள். இச்சை சார்ந்த பொருட்களைத் தவிருங்கள்.
  • ஈகையை செய்யுங்கள். அது உங்கள் சமுதாயக் கடமை.

எனவே, இளைஞர்கள், சிக்கனமாக வாழ்க்கை நடத்தி, வரவுக்குள்ளாக செலவு செய்து, பணத்தை சேமித்து, சேமித்த பணத்தினை பரவலாக முதலீடு செய்து, பணத்தினை பெருக்கி, பணக்காரராக முடியும்.



Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ