ஃபோன் பே போல யு.பி.ஐ மூலம் பணம் செலுத்தும் பொழுது நாம் எதையாவது இழக்கிறோமா? ஏதேனும் பிரச்சனைகள் நமக்கு வருமா?

 கண்டிப்பாக இழப்புகள் அதிகம். நீண்டகால நோக்கில் பார்த்தால் பிரச்சினைகள் வரலாம்…

இந்த பதில் இணையதள பரிவர்த்தனை களால் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் தாக்குதல்கள் சார்ந்த இழப்பு பற்றி அல்ல…

பெரும் வணிகத்தின் சிறுசிறு தந்திரங்களால் வீழ்த்தப்படும் நமது உளவியலைப் பற்றியது.






அரசாங்கமும் வங்கி மற்றும் நிதித்துறை சார்ந்த தனியார் மற்றும் அரசு அமைப்புகளும் எதற்காக இணையதள வழி பணப் பரிமாற்றங்களை ஊக்குவிக்கின்றன என்பது உங்களுக்கே தெரியும்.

  • இந்த முறையில் நாம் எப்பொழுதும் பணத்தைக் கையில் வைத்திருக்க வேண்டிய தேவையில்லை
  • யாரேனும் வழிப்பறி கூட செய்யமுடியாது. அப்படியே நமது திறனபேசியை பிடுங்கி பணப்பரிமாற்றம் செய்து கொண்டாலும் அதை வைத்தே அவர்களை பிடித்து விட முடியும்
  • வெகு தொலைவில் உள்ள ஒருவருக்கு உடனடியாக பணம் அனுப்ப இயலும்.
  • இணையவழி பரிமாற்றங்களில் பணம் கொடுத்ததற்கு அதுவே ஆதாரமாக இருக்கும்.
  • அரசாங்க வங்கியில் பணம் அச்சிடும் தேவை பெருமளவில் குறையலாம்.
  • அதிகாரப்பூர்வமற்ற கறுப்பு பண புழக்கத்தை குறைக்க முடியும்.

என் தனிப்பட்ட அனுபவத்திலிருந்து சொல்கிறேன் 500 ரூபாய்க்கு கீழே உள்ள செலவையாவது உண்மையான பணத்தின் மூலம் செலவழிப்பது நல்லது.







பெரும் கார்ப்பரேட் வணிக நிறுவனங்களின் நுட்பமான பணம் பிடுங்கும் உத்திகளை அறிந்தவர்கள் மட்டுமே யுபிஐ மூலமும் card purchase மூலமும் பெரிய பரிமாற்றங்களை மேற்கொள்வது நல்லது.

இதனால் வரும் இழப்புகள் பல

முதலாவது :

மனைவி மகன்கள் மகள்கள் சகிதம் வீட்டில் அமர்ந்து அடுத்த மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை பட்டியல் எழுதி ஒரு பேரங்காடிக்கு செல்கிறோம். ஆயிரம் ரூபாய் தான் அதற்கான செலவு ஆனால் பணம் செலுத்தும் இடத்தில் card purchasing 1500 ரூபாய்க்கு வாங்கினால் 5 %கேஷ்பேக் என்று சலுகையை பார்க்கிறோம். 50 ரூபாய்க்கு காய்கறி வாங்கி விட்டு கருவேப்பிலை கொத்தமல்லி இலவசமாக எதிர்பார்க்கும் மனது அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியில் 5% கேஷ் பேக் பெற ஆசைப்பட்டு இப்பொழுது பில் 1500 ஆகிறது.இன்னும் 500 ரூபாய்க்கு எது தேவைப்படும் என்று தேடிப்பிடித்து வாங்குகிறது மனது. 2 மணிநேரம் குடும்பத்தோடு முடிவு செய்த உங்களின் தேவையை ஒரு நொடியில் ஒரு வணிக உத்தி மாற்றிவிடுகிறது.

கூடுதல் செலவு 500–5% கேஷ்பேக் போக 475 நம்மிடமிருந்து அதிகாரப்பூர்வமாக திருடப்படுகிறது. அதாவது 25 ரூபாய் சேமிப்பு அல்ல. 475 ரூபாய் இழப்பு

இது எப்படி திருட்டாகும். எப்படியும் எனக்கு பயன்படத்தானே போகிறது என்று மனம் சப்பைக்கட்டு கட்டலாம். ஆனால் ஒரு பொருளை வாங்கலாமா வேண்டாமா என்பதை நீங்கள் முடிவு செய்தால் தான் அது தேவை.யாரோ முடிவு செய்தால் ? ஒரு நொடியில் உங்களுக்குள் புதிய தேவையைத் திணித்ததுதான் வணிக உத்தி.

இரண்டாவதாக உளவியல் தோல்வி :

உங்கள் கைகளால் தொட்டு உணர்ந்து செலவு செய்யும் கரன்சி தான் பணம் எனப்படும்.

உங்கள் திறன் பேசியில் தட்டி விடுவது வெறும் எண்கள் தான். அதனால் தான் பத்து ரூபாய் செலவு செய்ய வேண்டி வந்தாலும் இந்த செலவு நமக்குத் தேவையா என்று யோசிக்கும் நாம் யுபிஐ பரிமாற்றங்களில் ஆயிரம் ரூபாய் என்றாலும் ஒரு தட்டு தட்டுகிறோம். மனம் என்னும் மாய ஊஞ்சலின் கண்ணாம்பூச்சி ஆட்டம் இது.

நான் எரிபொருள் நிரப்பும் பொழுது மற்றும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் செலுத்த நேரும் போது card payment முறையை பயன்படுத்துகிறேன்.

ஆனால் அண்மைக் காலங்களில் தொடர்ச்சியாக 200 ரூபாய் 100 ரூபாய் 50 ரூபாய்க்கெல்லாம் கூகுள் பே பயன்படுத்தியதில் ஒன்றை உணர்ந்தேன்.

அது இயல்பாக 200 ரூபாய் கையில் பணமாக இருந்தால் அதற்குள்ளேயே அன்றைய நாளின் தேவைகளுக்காக செலவிடப்படுகிறது. மெனக்கெட்டு ஏடிஎம்மில் சென்று எடுத்து மேலதிகமாக செலவு செய்ய மாட்டோம். ஆனால் யுபிஐ முறையில் தொட்டதற்கெல்லாம் ஏகபோகமாக எண்களை தட்டிவிட்டு விளையாடுகிறோம்.

100 ,1000 என்று எண்களை தட்டும் பொழுது நமது(எனது) மனம் அவற்றைப் பணமாகவே கணக்கில் எடுப்பதில்லை.

இந்த கூகுள் பே முறை பயன்படுத்துவதற்கு முன்னர் Sankara snacks செல்லும்போது கண்டிப்பாக பணம் 100 ரூபாய்க்கு மேல் செலவாகாது. கஞ்சத்தனம் இல்லை.அது போதுமான தேவை. ஆனால் கூகுள் பே பயன்படுத்த தொடங்கிய பின்னர் சராசரியாக 150 ரூபாய் பரிமாற்றம் செய்யப்படுகிறது. காரணம் 150 ரூபாய்க்கு மேல் செலுத்தினால் சொற்ப அளவு பணம் Return கிடைக்குமென்ற அற்ப சிந்தனை மனதை ஆக்கிரமித்துக் கொண்டது.





மேலே எனக்கு கிடைத்த 5 ரூபாயை வைத்துதான் அரிசோனா மாகாணத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு வாங்க வேண்டும்

  • 100 ரூபாயில் முடிய வேண்டியது 150 ரூபாயில் முடிந்து ஐந்து ரூபாய் திரும்பப் பெற்றது போக 45 ரூபாய் இழப்பு தான்.
  • யாருக்கேனும் கடன் கொடுப்பதில் கூட பணம் கொடுப்பதாக நினைக்காமல் எண்களை தட்டி விடுகிறோம்.
  • முன்பெல்லாம் குழந்தைகளிடத்தில் பத்து ரூபாய் இருபது ரூபாய் 50 ரூபாய் என்று சிறிய தொகையை கொடுத்தால் குழந்தைகள் அதைப் பார்த்து பார்த்து செலவு செய்வார்கள். பணத்தின் நீரோட்டம் அவர்களுக்குப் புரியும்.தற்போது நான்கு பேருக்கு நடுவில் நமது புஜபல பராக்கிரமத்தை நிலைநாட்டுவதாக நினைத்துக்கொண்டு டெபிட் கார்டு அவர்கள் கைகளில் திணிக்கப்படுகிறது."பொருளாதாரச் சமநிலை" "வரவு செலவு" "கையிருப்பு"என்பதற்கெல்லாம் எந்த பொருளும் தெரியாமல் குழந்தைகளும் கண்டபடி செலவு செய்து எதிர்காலத்தில் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.

மூன்றாவதாக நாணய சேகரிப்பு (இந்த இழப்பு எல்லோருக்கும் பொருந்தாது) :






இவை என்னிடம் உள்ள அரிய வகை நாணயங்களில் சில. வரலாற்று நிகழ்வுகள் மற்றும் தலைவர்கள் நினைவு நாள்,பண்பாட்டு அடையாளங்களின் நினைவு நாட்கள் நிறுவப்பட்ட நாட்களுக்காக ரிசர்வ் வங்கி வெளியிடும் சிறப்பு நாணயங்கள். பிரிட்டிஷ் இந்தியாவில் எட்வர்டு மன்னரின் உருவம் பொறித்த நாணயம் முதல் 1951 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் டெல்லியில் நடந்த போது வெளியிட்ட நாணயம் உட்பட காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோவில் உருவம் பதித்த நாணயம் வரை 81 நாணயங்கள் கைவசம் உள்ளன.

இவை அனைத்துமே 20 ரூபாய் 30 ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யும் பொழுது மீதி சில்லறைகளில் கடந்த பல ஆண்டுகளில் சேகரித்துக் கொண்டவை. அரிய வகை நாணயங்கள் சேகரிப்பதில் ஆர்வமுண்டு.

தற்போது 30 ரூபாய் கூட கூகுள் பே செலுத்துவதால் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு அரிய வகை நாணயத்தைக் கூட கைப்பற்ற முடியவில்லை.

சாலையோரங்களில் முளைத்துள்ள துரித உணவகங்களில் கூட யுபிஐ வந்துவிட்டது.

இரவு 11 மணிக்கு மேல் வீட்டிற்கு செல்லும்போது கூட கையில் பணம் இல்லாவிட்டாலும் அர்த்தராத்திரியிலும் அஜினாமோட்டோவை அமிர்தம் போல சாப்பிட்டுவிட்டு கூகுள் பே செய்துவிட்டு செல்கிறோம். ஏதோ நமக்கும் நமது இரைப்பைக்கும் தொடர்பே இல்லை என்பது போல நடந்து கொள்கிறோம்.

  • உலகமயமாக்கலின் மயக்கத்தால் நான்கு பேருக்கு நடுவில் யுபிஐ மூலம் பணம் பரிமாற்றம் செய்வது நாம் உயர் வர்க்கத்தை சேர்ந்தவர்களாக நம்மை காண்பிப்பது போல ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
  • அது சில்லறைகளை எண்ணி வாங்குவது இழிவு என்று நமது மரபணுவில் பதிந்து கொண்டிருக்கிறது.
  • ஆனால் நடு வீட்டில் சென்று பார்த்தால் சட்டிபானை எல்லாம் காலியாக இருக்கும். (வீட்ல திங்கிறதுக்கு சோறு இல்ல உனக்கு எதுக்குடா கிரிக்கெட் ஸ்கோரு என்று கவுண்டமணி அண்ணன் சொல்வது போல)
  • உயர்தட்டு வர்க்கம் என்பது தற்போது பணத்தைக் கொண்டுதான் முடிவு செய்யப்படுகிறது.

குறிப்பிட்ட கார்டை பயன்படுத்தினால் 20% கேஷ்பேக் யுபிஐ பரிமாற்றத்திற்கு 5% கேஷ்பேக் குறிப்பிட்ட நிறுவனங்களில் இணைய வழிப் பணப்பரிமாற்றம் செய்தால் தனிப்பட்ட சலுகைகள் என்பவை எல்லாம் நம்மை நோக்கி நாம் வரும் வழியில் ஒரு ஓரமாக விரிக்கப்பட்டுள்ள வலைகள். நாமாகத்தான் சென்று விழுந்து சிக்கிக் கொள்கிறோம். ஏற்கனவே விளம்பர மோகத்தால் உங்களுக்கு தேவையில்லாதது கூட தேவையாக திணிக்கப்படுகிறது. இதற்குப் பின்னும் இந்த சலுகைகள் எல்லாம் இரண்டாவது கிட்னியை எடுப்பதற்கான அழைப்புகள் தான்.


எனது சொந்த அனுபவங்களிலிருந்து பெற்ற படிப்பினைகள். நிதி மேலாண்மையில் வலுவான நிலைப்பாடுகள் உள்ளவர்களுக்கு இது தேவைப்படாது. அவர்கள் இதை ஒரு தகவலாகப் படித்துவிட்டு கடந்து சென்றுவிடலாம். மற்றும்படி யாருக்கேனும் ஏதாவது பயன்பட்டால் மகிழ்ச்சியே.

கைகளில் உள்ள பணம்தான் பணமாக நமது உள்மன உளவியலால் உணரப்படும். எண்களை வெறும் எண்களாக மட்டுமே நமது மனம் பார்க்கும்.

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை