அணுகுமுறை – வெற்றியின் வழி!
சின்ன சின்ன விஷயத்திற்காக கூட வேதனைப்பட்டுக் கொண்டு, அடுத்தவரையும் காயப்படுத்துகிற பலரை இன்று நாம் நம் கண்முன்னே பார்க்கின்றோம்.
நாமே கூட சில நேரங்களில் காரணங்களை அறியாமல் ஆராயாமல் அடுத்தவர் மீது பழியினைப் போட்டு கோபத்தால் கொப்பளிக்கின்றோம்.
இதனை நினைக்கும் போது சமீபத்தில் நான் வாசித்து ரசித்த சீன தேசத்துக் கதையொன்று நினைவுக்கு வருகிறது.
மலைக்கோவில் ஒன்றில் வழிபடுவதற்காக ஒரு தந்தை தன் மகனை குதிரையில் அழைத்துக் கொண்டு சென்றார்.
செங்குத்தான மலைப்பாதையில் ஒரு இடத்தில் குதிரை சற்றுத் தடுமாறவே குதிரையின் மீது அமர்ந்திருந்த சிறுவன் கீழே விழுந்து விட்டான்.
அவனது கை கால்களில் நன்கு சிராய்ப்பு ஏற்பட்ட வலியினால் அவன் “ஐயோ!” என்று கத்தினான்.
மறுகணமே “ஐயோ!” என்று மலையில் அந்த சப்தம் எதிரொலித்தது.
தன்னை மலை கேலி செய்வதாக நினைத்துக் கொண்டு அந்தச் சிறுவன் மலையினை நோக்கி “உன்னைக் கொன்று விடுவேன்” என்று கத்தினான்.
மறுகணமே மலையும் “உன்னைக் கொன்று விடுவேன்” என்று எதிரொலித்தது.
“நான் யார் தெரியுமா?” என்று சிறுவன் உறுமினான்.
மலையும் அவ்வாறே எதிரொலித்தது.
அவனால் தனது கோபத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் கையில் கிடைத்த கற்களை எடுத்து மலையை நோக்கி எறிந்தான்.
இப்போது மலை மெளனமாகவே இருந்தது.
அவனது சிறுபிள்ளைத்தனத்தை பார்த்துக் கொண்டிருந்த அவனது தந்தை, “தம்பி ‘நீ நல்லவன்’ என்று சப்தமாகச் சொல்லு” என்றார்.
பையனும் அது போலவே கத்தினான்.
உடனே மலையிலிருந்து “நீ நல்லவன்” என்ற சப்தம் பதிலாக வந்தது.
அது போலவே ‘உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு’ என்று சொல்லச் சொன்னார்.
பையனும் அப்படியே சப்தமிட்டான். மலை அதையும் எதிரொலித்தது.
இப்போது பையனுக்கு மலை மீதிருந்த கோபம் போய் விட்டது. அப்பா சிரித்தபடியே பையனிடம் சொன்னார்.
“தம்பி! உண்மையில் எதிரொலிப்பது மலை அல்ல; நம் மனதுதான். நம் மனதில் என்ன நினைக்கிறோமோ அதுதான் நமது அணுகுமுறை. அதுதான் வெளியில் எதிரொலிக்கிறது.
நாம் உலகத்தை நோக்கி நல்லவற்றை விதைத்தால் அதுவும் நமக்கு நல்லனவற்றையே கொடுக்கும்.
நாம் உலகத்தை நோக்கி கோபங்களை மட்டுமே எறிகின்றோம். அதனால்தான் எங்கும் அதே கோபக்குரல் பதிலாக எதிரொலிக்கிறது.
நாம் அறியாமல், நம் அனுமதியின்றி நம்மை யாரும் காயப்படுத்திவிட முடியாது.”
ஆப்ரஹாம் லிங்கன்
ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற அன்று மாலை அவருக்கு ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழா இறுதியில் அவர் ஏற்புரை வழங்க வந்தார்.
அந்நேரம் கூட்டத்தில் அமர்ந்திருந்த பெரும் செல்வந்தராகிய ஒருவர் லிங்கனை அவமானப்படுத்தும் எண்ணத்துடன் லிங்கனது பேச்சின் நடுவே இடைமறித்ததார்.
“மிஸ்டர் லிங்கன்! தாங்கள் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் என்பதனை எந்தக் தருணத்திலும் மறந்து விடக் கூடாது. எங்கள் குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் தங்கள் தந்தை தான் காலணிகளை செய்து கொடுத்திருக்கிறார்” என்றார்.
சபையில் அனைவரும் எள்ளி நகைத்தனர்.
ஆனால் லிங்கன் எந்தச் சலனமும் இன்றி, அந்த செல்வந்தரை நோக்கி, “இந்த நல்ல நேரத்தில் எனது தந்தையை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.
எனது தந்தை காலணி தயாரிப்பதில் கைதேர்ந்த கலைஞர். அவர் செய்தவை வெறும் காலணிகள் அல்ல. அதில் அவருடைய ஆன்மாவும் கலந்திருக்கும்.
அவர் செய்து தந்த காலணிகளில் ஏதேனும் குறை அல்லது கோளாறு இருக்குமாயின் என்னிடம் கொடுங்கள். நான் சரி செய்து தருகிறேன்.
ஆனால் எனக்கு தெரிந்த வரை எனது தந்தை செய்த காலணிகளில்
குறையேதும் இது வரை யாரும் கண்டது இல்லை.
நான் எனது தந்தையை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். அவரது மகன் என்கிற கர்வமும் எனக்கு உண்டு” என்றாராம்.
அந்த சபையே ஸ்தம்பித்து போனது.
அவரின் அணுகு முறை நமக்கு ஓர் உதாரணம்.
தன்னைக் காயப்படுத்துவதற்காக ஏவப்பட்ட கேலிக் கணையினை, தன்
தந்தையின் தொழில் பக்தியின் பெருமையை எடுத்தியம்பும் கருவியாக பயன்படுத்தி, அனைவரையும் சிந்திக்க வைத்து தானும் பெருமைக்குள்ளானார் ஆப்ரஹம் லிங்கன் அவர்கள்.
நாட்டின் அதிபரையே தலை குனிய வைக்க முற்படும் மனிதர்கள் நம்மைப் போன்ற சாமானியர்களை சும்மா விடுவார்களா?
இப்போ சொல்லுங்க!
சமூகம் மாறாது; அப்போ மாற வேண்டியது நாம் சமூகத்தினை அணுகும் நமது அணுகுமுறை.
வாழ்க🙌வளமுடன்
*அன்பே🔥சிவம்*
Comments
Post a Comment