பணம் சம்பாதிப்பது செலவு செய்யத் தான். ஆனாலும் எந்த ஒரு பொருளையும் தேவை இருந்தால் மட்டும் வாங்குங்கள்.

 மக்கள் சமீபகாலமாக அதிக அளவில் ரெஸ்டாரண்ட்டுக்கு போய் சாப்பிடுதல், மால்கள் மற்றும் பொழுதுபோக்கும் இடங்களில் தேவையற்ற செலவுகளை யோசிக்காமல் செய்வதைப் பார்க்கிறேன். பல திரையரங்குகளில் ஒரு டப்பா பாப்கார்ன் மனசாட்சியே இல்லாமல் நூறு ரூபாய்க்கு விற்கப்பட்டாலும் பலர் க்யூவில் நின்று வாங்கி பிள்ளைகளுக்குத் தருகிறார்கள்.

முன்பெல்லாம் வருடத்திற்கு ஒரு முறை பொருட்காட்சித் திடலில் மட்டும் சற்று செலவு செய்யும் தமிழ் குடும்பங்கள் இப்போது மாதத்தில் பல நாட்கள் இப்படி இஷ்டத்திற்கு வீண் செலவு செய்வது சாதாரணமாகி விட்டது.

நடுத்தரக் குடும்பங்கள் ஏதோ நாளையோடு சரவணா ஸ்டோர்ஸ் போன்ற பெரும் கடைகள் மூடப்படுவதைப் போல என்னாளும் போய் அலைமோதுகிறார்கள்.

இதே போல துணிக்கடைகள், நகைக்கடைகள், விளம்பரத்தால் தூண்டில் போடும் ஆன்லைன் நிறுவங்கள் என நடுத்தர மக்களின் சேமிக்கும் பழக்கத்தைக் குழி தோண்டி புதைக்க பல வர்த்தக முதலைகள் வாயைப் பிளந்து கொண்டு காத்திருக்கின்றன.

தேவைக்காகப் பொருள் வாங்கிய காலமெல்லாம் மலையேறி விட்டது போலும்.

இப்பொதெல்லாம் ஏதாவது வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக மக்கள் பல சமயம் முட்டாள்தனமாக செலவு செய்வது ஒரு ஃபேஷனாக ஆகிவிட்டது.

வெறும் டம்பத்திற்க்காக ஆடம்பர செலவு செய்வதும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருமணங்கள். பெற்றோரின் ஆயுட்கால சேமிப்பை மணமக்களின் எதிர்கால வாழ்க்கைக்கு எந்த வகையிலும் பயன்படாத வகையில் செலவு செய்வதற்கே திருமணங்கள் நடத்தப்படுகின்றதோ எனும் ஐயம் நமக்கு ஏற்படுகிறது.

"இப்பொதெல்லாம் வருமானம் அதிகம் ஸார் அதனால செலவு செஞ்சா தப்பில்ல" என்ற கருத்தும் பரவி வருவது மிகத் தவறானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட.

சில ஆண்டுகளுக்கு முன் மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்ட கடும் பொருளாதார சரிவின் போது இந்தியாவில் அதன் தாக்கம் மிகக் குறைவாகவே இருந்தது. காரணம், நமது நாட்டின் மிகப் பெரிய எண்ணிக்கையிலான நடுத்தர வர்க்கத்தின் சேமிப்பாகும்.

நுகர்வோர் கலாச்சாரம் வரம்பு மீறும் போது, க்ரெடிட் கார்ட் தரும் போலி தைரியத்தின் காரணமாக செலவுகள் எல்லை தாண்டும் போது நம் பொருளதாரத்தின் அடித்தளம் அசைவு காணும், பலவீனம் அடையும்.

எனவே, அடுத்த முறை நீங்கள் ஒரு செலவை மேற்கொள்ளும் முன் அதன் அவசியத்தை கொஞ்சம் யோசித்து; அப்பொருளை நீங்கள் அதன் தேவை கருதி வாங்குகிறீர்களா அல்லது அதனை சும்மா விரும்புவதால், வேண்டும் என நினைப்பதால் வாங்குகிறீர்களா என்று வாங்கு முன் சற்று தயக்கம் காட்டுங்கள். உங்கள் முடிவு மாறலாம். அப்போது உங்கள் பணம் உங்களிடமே, உங்கள் உண்மையான தேவைக்காக பத்திரமாக இருக்கும். அது நீங்கள் உழைத்து ஈட்டியது. மறந்து விடாதீர்கள்.

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

Nothing can compete with The knowledge gained from poor, confidence

EFFECTS OF NEGATIVE THOUGHTS ON YOUR MIND & BODY