குங்கிலிய மரம்
குங்கிலிய மரம் தமிழகத்தில் குறைவான அளவிலேயே காணப்படுகின்றது. இவற்றில் இரு வகைகள் இருக்கின்றன. ஒன்று தம்பாகிய இரகம், மற்றது ராக்ஸ்பர்ஜி இரகம் ஆகும். தம்பாகியா குங்கிலிய மரத்தை காங்கு என்றும், தம்பாகம் என்றும் அழைப்பார்கள்.இவை கிட்டதட்ட 18 மீட்டர் உயரம் வரையில் வளரும். ராக்ஸ்பர்ஜி மரம் மேலகிரி, கல்வராயன் மலைப்பகுகிகளில் சுமார் 15 மீட்டர் உயரம் வரையில் வளர்கின்றது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் இவற்றைக் காணலாம்.
தம்பாக்கியா குங்கிலிய மரங்கள் வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகளிலும், ராக்ஸ்பர்ஜி குங்கிலிய மரம் கோவை, ஈரோடு, மதுரை மாவட்டங்களிலும் காணப்படுகிறது.
இந்தியக் காடுகளிலுள்ள மரங்களில் 14 சதவீத காடுகளில் குங்கிலிய மரங்கள்தான் நிறைந்து இருக்கின்றது. அஸ்ஸாம், உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார், ஒரிசா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலுள்ள காடுகளில் இவற்றை அதிகளவில் காணலாம். ஆண்டு மழையளவு 10 சென்டி மீட்டரிலிருந்து 46 செ.மீ. வரையுள்ள பிரதேசங்களில் இம்மரங்களை அதிகளவில் காணலாம்.
மலைப்பிரதேசங்கள், பள்ளத் தாக்குகள், மேட்டு நிலங்கள் என எல்லா இடங்களிலும் மிக உயரமாக வளரும். இம்மரத்தின் அடி மட்டச்சுற்றளவு சுமார் இரண்டு மீட்டர் இருக்கும். 18 முதல் 30 மீட்டர் உயரம் வரையில் கூட இவை வளரும் தன்மை கொண்டதாகும். வளர்வதற்கு ஏற்ற நல்ல சீதோஷ்ண நிலை கிடைத்தால் சுமார் 150 அடி உயரம் வரையில் வளரும்.
வளரும் மரத்தில் பாதி உயரத்திற்கு மேல் கிளைத்து, அடர்ந்த தழையமைப்புடன் வளரும். இம்மரத்தின் பட்டை சிவப்பு நிறம் கலந்த கருப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் வழவழவென்று இருக்கும். பட்டையின் நீள்வாக்கில் வெடிப்புகளும் தோன்றும்.
பொதுவாக குங்கிலிய மரத்தின் இலைகள் அளவுகளில் பெரியதாக, அரை அடி முதல் ஒரு அடி நீளமும், அரை அடி அகலமும் கொண்டு முட்டை வடிவில் இருக்கும். குங்கிலிய இலைகள் பச்சையாக இருந்தாலும் துளிர்கள் சிவப்பு நிறத்தில் நுனி மழுங்கியிருக்கும். இதன் இலைகள் தோலைப்போன்று தடித்து இருக்கும். இதில் பூக்கள் பிப்ரவரி - ஏப்ரல் மாதங்களில் மஞ்சள் கலந்த வெண்மை நிறப் பூக்கள் அடர்த்தியாகப் பூக்கும். பூக்கள் பூத்த பிறகு, நெற்றுக்கள் உருவாகி, வளர்ச்சி அடைந்து முற்றிவிடும். இதனுள் ஒரு விதை இருக்கும். இவை உதிர்ந்து காற்றிலே பறந்து தாய் மரத்திலிருந்து சிறிது தூரம் தள்ளி அங்கு நிலத்தில் பட்டு பின்னர் முளைக்கிறது.
பொதுவாக, மரங்கள் விதையிட்டதிலிருந்து 15 வருடங்களில் பூக்கள் பூக்கத் தொடங்கும். குங்கிலிய இலைகளை விவசாயிகள் கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்துகின்றார்கள். தரத்தில் இது குறைந்த தரமுடையதாகும்.இதன் இலைகளைத் தைத்து வாழையிலையைப் போன்று உணவு பரிமாறவும் பயன்படுத்துகின்றார்கள்.
பொருளாதாரத்தில் குங்கிலிய மரப்பட்டை தோல் பதனிடலிலும், அட்டைகள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகின்றது. குங்கிலிய மரத்திலிருந்து எடுக்கப்படும் பிசினைக்கொண்டு சாம்பிராணி, பெயிண்ட், வார்னிஷ், கார்பன் பேப்பர்கள், தட்டச்சு இயந்திர நாடாக்கள், ஓட்டுப் பலகை, ஆஸ்பெஸ்டாஸ் அட்டைகள் போன்றவை தயாரிக்க மிகவும் பயன்படுகின்றன. குங்கிலிய விதைகளைக் கோழித் தீவனத்திலும் கலக்கச் செய்யலாம். இதன் விதைகளிலிருந்து எண்ணெயும் எடுக்கப்படுகின்றது. இவை சோப்புத் தொழிசாலைகளிலும், மிட்டாய்த் தயாரிப்பிலும் மிகவும் பயன்படுகிறது.
குங்கிலிய மரக்கட்டைகளைக் கொண்டுதான் ரயில்வே தண்டவாளங்களில் உள்ள கட்டைகள் அமைக்கப்படுகின்றன. இது தவிர உத்திரங்கள், தூண்கள், சட்டங்கள், மரப்பாலத்திற்கான பொருட்கள், இரயில் பெட்டிகள், வண்டிகள் மற்றும் பல கட்டுமானச் சாமான்கள் செய்யவும் பயன்படுகின்றது. ஆக, ஏராளமான பொருளாதாரப் பயன்களை உடையதாக இம்மரம் விளங்குகிறது.
Comments
Post a Comment