எதுவும் என்னுடையது இல்லை! - ஞானம் தந்த அரசனின் கதை

 

புகழ்பெற்ற குரு ஒருவர், தன் சீடனை உண்மை ஞானத்தை உணர்ந்துகொள்ள பற்றற்ற ஓர் அரசனிடம் அனுப்பி வைத்தார். ‘மெய்ஞானம் குடிகொண்ட குருவிடம் அறிய முடியாத மேன்மையைச் சுகபோகங்களில் ஆழ்ந்திருக்கும் ஓர் அரசனிடம் எப்படி அறிய முடியும்?’ என்று சீடன் சிந்தித்தான். ஆனாலும், குருவின் கட்டளைக்கு அடிபணிந்தான்.


வன் அரண்மனையை அடைந்த போது அங்கு ஆடலும் பாடலும் அரங்கேறின. அந்த இன்பமயமான சூழல் சீடனுக்கு வெறுப்பைத் தந்தது. வரவேற்று உபசரித்த அரசன், அன்றிரவு அரண் மனையில் தங்கும்படி வற்புறுத்தினான். இரவு முழுவதும் சீடனுக்கு உறக்கம் வரவில்லை. ஆடலும் பாடலும் மயக்கம் தரும் சூழலும் நிறைந்த அந்த அரண்மனையில் எந்தப் பேருண்மை புலப்படக் கூடும் என்று அவனுக்குப் புரிய வில்லை.

விடிந்ததும், அரசனின் அழைப்பை ஏற்று அவனுடன் நதியில் நீராடச் சென்றான். இருவரும் நீராடிய நேரத்தில், அரண்மனை நெருப்பு பற்றி எரிந்தது. அதைப் பார்த்த அரசன் சிறிதும் சலனமின்றி, ‘`அரண்மனை முழுவதும் தீப்பிடித்து எரிவது தெரிகிறதா?’’ என்று கேட்டான்.

‘`அரசே! அரண்மனை எரிவது குறித்து எப்படி உங்களால் இவ்வளவு அமைதியாகச் சொல்ல முடிகிறது? எனது மாற்றுத்துணி எரிந்து கருகுவதற்குள் நான் அதை மீட்டாக வேண்டும்’’ என்று கூறிவிட்டு ஓடிய சீடனின் சிந்தையில் ஒரு கேள்வி எழுந்தது.

‘நான் ஓர் அற்ப ஆடையைக் காப்பாற்ற ஓடுகிறேன். ஆனால், அரசன் ஏன் அரண்மனையே எரிந்து சாம்பலாவதைச் சலனமற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறான்?’ என்று யோசித்தவன், அரசனிடமே திரும்பி வந்து காரணம் கேட்டான்.

‘`நண்பனே, இந்த அரண்மனை என்னுடையது என்று நான் எண்ணி யிருந்தால், இந்நேரம் அலறியடித்து ஓடியிருப்பேன். கோவணத்துணி உன்னுடையது என்று நீ எண்ணியதால்தான் உடனே ஓட முயன்றாய். எதுவும் என்னுடையது இல்லை என்ற எண்ணம் உனக்குள் கண் விழித்தால், எந்த நிலையிலும் கலக்கம் இல்லை’’ என்றான் அரசன்.

குரு, ஏன் இந்த அரசனிடம் தன்னை அனுப்பி வைத்தார் என்ற ரகசியம் சீடனுக்கு அப்போதுதான் விளங்கியது!

வியாதி தீர்க்கும் அருமருந்து!

ஶ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம் மகாவிஷ்ணுவின் ஆயிரம் பெயர்களைக் குறிப்பதாகும். விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்டால் தீராத வியாதிகளும் தீரும் என்று வைத்திய சாஸ்திர நூலான சரக சம்ஹிதையில் சொல்லப் பட்டுள்ளது. தினமும் காலையில் வீட்டில் விளக்கேற்றிவைத்து, திருமாலை மனதார தியானித்து விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வந்தால், அந்த வீட்டில் சண்டை சச்சரவுகள் வராது; துர்தேவதைகள் நுழையாது.

- எஸ்.விஜயா, திருச்சி-13

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ