எண்ணம்போல் வாழ்க்கை
ஒருவன் கடவுளை நோக்கிக் கடுமையாகத் தவம் இருந்தான். கடவுள் அவன் தவத்தை மெச்சி , ‘என்ன வரம் வேண்டும் பக்தா ?’ என்றார்.
‘மற்றவர்களின் மனதை படிக்கிற திறனை அருள வேண்டும் சுவாமி’ என்றான்.
கடவுளும் ‘வரம் தந்தேன்’ என்றார்.
சில நாட்களிலேயே அவன் அழுது புலம்பி கடவுளை அழைத்து ,’தயவு செய்து இந்த வரத்தை திரும்ப வாங்கிக்கொள்ளுங்கள்’ என்றான்.
‘ஏன்?’ என்றார் கடவுள்.
‘அனைவரும் என்னை பொய் சொல்கிறவன், பொறாமை பிடித்தவன், அடுத்தவன் குடி கெடுப்பவன், சோம்பேறி என்றெல்லாம் நினைக்கிறார்கள் என்னால் தாங்க முடியவில்லை’ என்றான்.
‘அப்படியா, இந்த ஆலமரத்தின் அடியில் கண்களை மூடிப் படுத்துக் கொள் என்ன நடக்கிறது என்று கவனி’ என்றார் கடவுள்.
அப்படியே செய்தான் பக்தன்.
அப்போது ஒரு குடிகாரன் வந்தான் ,’யார்ரா இவன் நினைவே இல்லாம படுத்திருக்கான் குடிகாரப் பயல் ‘என்று சொல்லி விட்டுப் போனான்.
பிறகு ஒரு திருடன் வந்தான் ‘ராத்திரி பூரா கொள்ளையடிச்சுட்டு வந்து எவனோ இங்க படுத்து கிடக்கான்‘ என்று சொல்லிவிட்டுப் போனான்.
ஒரு நோயாளி வந்தான் ‘பாவம் வயித்துவலி போல சுருண்டு கிடக்கான்’ என்று சொல்லிவிட்டுப் போனான்.
ஒரு துறவி வந்தார், ‘யாரோ முற்றும் துறந்தவர் போல, அனைத்தையும் மறந்து உறங்குகிறார்’ என்று சொல்லி விட்டுப் போனார்.
சிறிது நேரம் கழிந்தது. கடவுள் பக்தனிடம் வந்தார்.
‘பார்த்தாயா உன்னைப் பற்றி அவரவர் அவரவர் கோணங்களில் புரிந்து கொள்கிறார்கள். இனியாவது உன்னைப் பற்றிய மற்றவர் விமர்சனத்தை பொருட்படுத்தாதே! ஒவ்வொரு பார்வைக்கும் ஒரு புரிதல் இருக்கும். உன்னுடைய சரியான பாதையில் தைரியமாக செல் வெற்றி உனக்குத்தான்’ என்றார்.
பக்தன் தெளிவடைந்தான்.
Comments
Post a Comment