நேர்மறை சிந்தனைக்கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பின் விளைவு என்ன?

 கீஜிஸ் பிரன்டிஸ் எழுதிய புத்தகம் - ஜென் தத்துவமும் மகிழ்ச்சியான வாழ்க்கையும்(zen and the art of happiness).‌ நாகலட்சுமி சண்முகம் அவர்கள் மிகவும் அழகாக தமிழில் மொழிபெயர்த்திருந்தார்.


அதில் ஒரு அருமையான விஷயத்தை கூறியிருந்தார்கள்.


ஒரு நிகழ்வு என்பது நேர்மறையானதா அல்லது எதிர்மறையானதா என்பது நாம் அதை அணுகும் விதத்தை பொறுத்து அமையும். அந்த நிகழ்வை நாம் நேர்மறையாக அணுகினால் அது நமக்கு நல்ல நிகழ்வாக அமையும். எதிர்மறையாக அணுகினால் அது நமக்கு கெட்ட நிகழ்வாக அமையும். எனவே எந்த ஒரு நிகழ்வையும் நல்லது கெட்டது என்று உடனே கூற முடியாது.


எந்த ஒரு நிகழ்வையும் ஆழமாக யோசித்தால் அதில் சில பல நன்மைகள் இருப்பது நமக்குத் தெரியவரும். அந்த நன்மைகளை கருத்தில் கொண்டு நாம் நேர்மறையாக அணுகும் போது நமக்கு நல்ல விளைவுகள் ஏற்படும் அது நல்ல நிகழ்வாக மாறி விடும்.


உதாரணமாக ஒரு நிகழ்ச்சியை எழுத்தாளர் பகிர்ந்து கொள்கிறார்.


மிகவும் திறமையான ஒரு நபர் ஒரு விளம்பர நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு வெளி நிறுவனங்களிலிருந்து பல்வேறு வாய்ப்புகள் வந்த போதிலும் அவற்றை அவர் தட்டிக்கழித்து அதே நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றி வந்தார். திடீரென ஒருநாள் அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார் ‌‌.


அவரால் அந்த நிகழ்வை தாங்க முடியவில்லை. தனக்கு நிர்வாகம் துரோகம் இழைத்து விட்டது என்று மன உளைச்சலுக்கு ஆளானார். குடிப்பழக்கத்திற்கு ஆளாகி பின்னர் போதை பழக்கத்திற்கும் ஆளானார். அவருடைய இந்த நிலைமையை கண்டு அவரது திறமையை உணர்ந்த மற்றுமொரு நிறுவனம் அவருக்கு மறுபடி வேலைவாய்ப்பு அளிக்க முன்வந்தது. ஆனால் அவரால் மருத்துவ பரிசோதனையில் தேற முடியவில்லை. வந்த நல்லதொரு வாய்ப்பினை அவரால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.


தனக்கு வேலை போனது என்ற நிகழ்வை அவர் நேர்மறையாக அணுகி உடனே மற்ற நிறுவனங்களுக்கு விண்ணப்பித்திருந்தால் அவருக்கு மற்றொரு வேலை இன்னும் அதிக சம்பளத்தில் உடனே கிடைத்திருக்கும். எதிர்மறையாக அணுகியதனால் பிரச்சினை இன்னும் அதிகமானது.


இதனைப் போலவே எழுத்தாளர்களுக்கு வாழ்விலும் ஒரு நிகழ்ச்சி.


மற்றொரு நபர் தெரியாமல் ஒரு சிறிய விபத்தில் எழுத்தாளரின் மகிழுந்தில் கோடு போட்டு விட்டபோது எழுத்தாளர் அதனை நல்லதொரு நிகழ்வாக கருதினார். கோடு போட்ட எதிராளியை கடிந்து கொள்ளவில்லை. எதிராளி நலமாக இருக்கிறாரா என்று உடனே விசாரித்தார். அவரிடம் அளவளாவிய போது அந்த நபருக்கு வேலை போனது தெரியவந்தது. அந்த நபர் ஒரு தச்சு தொழிலாளி. அவருக்கு எழுத்தாளரே சில வேலைகளை வாங்கிக் கொடுத்தார். இதன் காரணமாக கோடு போட்ட அந்த நபர் எழுத்தாளருக்கு நண்பர் ஆகிவிட்டார். அவர் மூலம் எழுத்தாளர் பல்வேறு பயன்களை எதிர்காலத்தில் பெற்றார். எழுத்தாளர் அந்த கோடு விழுந்த நிகழ்வை இறைவனின் லீலையாகவே கருதினார். கடைசிவரை அந்த மகிழுந்தில் அந்தக் கோட்டினை நீக்க அவர் முயலவில்லை.


இதனால்தான் எடிசன் அவர்கள் மின்சார பல்பு தயாரிக்க முயன்றபோது தோல்விகளை வெற்றியின் படிக்கற்களாக பார்த்தார்.


வாழ்க்கையை நேர்மறையாக அணுகும்போது வெற்றிமேல் வெற்றி குவிகிறது. முடிந்தால் இந்தப் புத்தகத்தைப் படித்து பாருங்கள்.


எல்லாம் நன்மைக்கே.

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை