காற்றினிலே வரும் கீதம் - கோடைப் பண்பலை - Kodaikanel FM Enlight more than Entertain
உள்ளூர் வானொலியாகத்தான் இது தொடங்கப்பட்டது. நேயர்களிடம் கிடைத்த வரவேற்பு காரணமாக, தொடங்கிய இரண்டாவது ஆண்டே மெட்ரோ ஸ்டேஷன் அங்கீகாரம் கிடைத்தது.
வானொலி என்றால் சென்னைக்கு நிறைய எஃப்.எம்-கள் நினைவுக்கு வரலாம். தென்தமிழகத்தில் 24 மாவட்டங்களின் 3.5 கோடி நேயர்களுக்கு அது கோடைப் பண்பலைதான்.
அகில இந்திய வானொலிகளில் அதிக நேயர்கள், விளம்பர வருமானத்தில் ஆசியாவிலே முதலிடம், 2017-ம் ஆண்டு ஆனந்த விகடனின் நம்பிக்கை விருது என கோடைப் பண்பலையின் சிறப்புகள் ஏராளம். 20 ஆண்டுகளைக் கடந்து ஜூலை 1-ல் தனது 22-ம் ஆண்டில் காலடி வைத்துள்ளது கோடைப் பண்பலை.
புதுப்புது மனிதர்களின் பேச்சுகள், துறைசார்ந்த கலந்துரையாடல்கள், திரைப்பாடல்கள் என நேயர்களின் நெஞ்சுக்கு நெருக்கமாக இருக்கிறது.
‘நான் ஈரோட்ல இருந்து முத்துச்சாமி பேசுறேனுங்க...’ என முகம் தெரியாத குரல்கள் கோடைப் பண்பலையில் வழிந்துகொண்டே இருக்கின்றன. இதன் நேயர்களில் 60 சதவிகிதம் பேர் நெசவாளர்கள் மற்றும் விவசாயிகள். கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் திராட்சைத் தோட்டங்களில் வானொலி கேட்டுக்கொண்டே தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இதற்காக, தோட்டத்தில் ஆங்காங்கே ஸ்பீக்கர் வைத்திருக்கிறார்கள். எப்.எம் இல்லாத தோட்டத்திற்கு வேலைக்கு வரமாட்டோம் எனத் தொழிலாளர்கள் சொல்வதை அந்தப் பகுதிகளில் கேட்கலாம். கரூர், ஈரோட்டுப் பகுதிகளில் நூற்பாலைகளிலும் சோர்வைப் போக்குவது இந்தப் பண்பலைதான்.
கடிதங்கள் மூலம் நேயர் விருப்பத்தை வானொலிகள் ஒலிபரப்பிக்கொண்டிருந்த காலத்தில் தொலைபேசி மூலமும், நேரடியாக மக்களிடம் சென்றும் ஒலிபரப்பைத் தொடங்கியது கோடைப் பண்பலை. மக்களிடம் நெருக்கமாகச் சென்றதுதான் பண்பலையின் வெற்றிக்கு அடிப்படை. வானொலி தொடங்கியபோது நிலைய இயக்குநராக இருந்தவர் முனைவர். முசிறி டி. வீராச்சாமி. அவர் 2003-ல் இறந்துவிட்டார். தொடர்ந்து இங்கு பணியாற்றிய மகா சோமஸ் கந்தமூர்த்தி, சவித்ரா, சுப்ரா, சுந்தர ஆவுடையப்பன், ஸ்ரீரங்கம் ஆர்.முரளி மற்றும் தற்போதைய நிலைய இயக்குநர் பழ.அதியமான், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், அறிவிப் பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் ஆகிய பலரும் இதன் வெற்றிக்குப் பின்புலமாக இருக்கிறார்கள். ‘வானவில்’, `செப்புக செந்தமிழ்’ போன்ற பல நிகழ்ச்சிகள் இந்த வானொலியின் ஈர்ப்புக்குக் காரண மாக இருக்கின்றன.
அதிக உயரத்தில் அமைந்துள்ள இந்த FM தமிழ்நாட்டில் உள்ள 24 மாவட்டங்களை சென்றடைகிறது. நிகழ்ச்சியின் செயல் அலுவலர் மற்றும் அலுவலகத் தலைவர் எம்.ஜான் பிரதாப் குமார் கூறுகையில், பொதுவாக ஒரு எஃப்எம் 80 கிமீ சுற்றளவில் சென்றடையும், அதேசமயம் கோடை எஃப்எம் வடக்கே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் வரையிலும், தெற்கே திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி வரையிலும் சென்றடைகிறது.
கோடைப் பண்பலையின் நட்சத்திர அறிவிப்பாளரான சலீமா ஷாஜஹானிடம் பேசினேன். `` ‘வானவில்’ நிகழ்ச்சிதான் பண்பலையை மக்கள் மத்தியில் நெருக்கமாக்கியது. 2001-ம் ஆண்டு இந்த நிகழ்ச்சியில் தொலைபேசி மூலம் பேச ஒரே நேரத்தில் 42,000 நேயர்கள் தொடர்பு கொண்டார்கள். இதனால் நெட்வொர்க் ஜாம் ஆகிறது என பி.எஸ்.என்.எல். தெரிவித்தது. இது வேறு எந்தப் பண்பலையிலும் நிகழாத சம்பவம்.
உள்ளூர் வானொலியாகத்தான் இது தொடங்கப்பட்டது. நேயர்களிடம் கிடைத்த வரவேற்பு காரணமாக, தொடங்கிய இரண்டாவது ஆண்டே மெட்ரோ ஸ்டேஷன் அங்கீகாரம் கிடைத்தது. அதன் பிறகு 2003-ல் ஸ்டீரியோ ஆனது. மூட்டை மூட்டையாகக் கடிதங்கள் வரும். ஒரு பாட்டுக்கு விருப்பம் கேட்டுள்ள நேயர்கள் பட்டியல் மட்டும் நான்கைந்து பக்கங்கள் இருக்கும். இப்போது எஸ்.எம்.எஸ், மெயில், வாட்ஸப் மூலமாக விருப்பங்களைத் தெரிவிக்கிறார்கள். கொரோனா நேரத்திலும் கலெக்டர், மருத்துவர்கள் மூலமாகத் தொடர்ந்து இது தொடர்பான விழிப்புணர்வு கொடுத்து வருகிறது’’ என்றார்.
கோடைப் பண்பலையின் மேற்பார்வையாளர் பழ. அதியமான், ‘`2017-ம் ஆண்டின் சிறந்த பண்பலையாகக் கோடைப் பண்பலையை ஆனந்த விகடன் தேர்வு செய்தது. அதை மக்களின் அங்கீகரிப்பாகக் கோடைப் பண்பலை கருதியது. அயல்மொழி மோகம் இன்னும் தணியவில்லை. இச்சூழலில் அன்னை மொழியால் சிறப்பாக இயங்குகிறது கோடைப் பண்பலை. 21 மாவட்ட நிர்வா கங்கள் வழங்கும் அவசர அவசியத் தகவல்களை நெருக்கடியான நேரத்திலும் தொடர்ந்து மக்களிடம் சேர்க்கும் பொதுச் சேவையில் திளைக்கிறது.
நிகழ் நிதியாண்டின் முதல் காற் பகுதிக் காலம் கொரோனாவில் கழிந்தாலும் இனிவரும் மாதங்களில் இயல்பு நிலைமை திரும்பிவிடும். அப்போது பொதுச் சேவையோடு பொழுது போக்கு மேலும் பொலிவுறும். வணிகச்சேவையும் நிமிர்ந்து முன்னேறும். இந்தப் பெரு வேட்கையோடு 21-ம் ஆண்டில் துள்ளிக் குதிக்கிறது கோடைப் பண்பலை. பெருங்கூட்டமாக மக்கள் திரளும் உதய விழாவை கொரோனா காரணமாக நடத்த இயலாமற்போகலாம். ஆனால் தென்தமிழகத்தின் கோடிக் கணக்கான நேயர்களின் உள்ளக் கோயிலில் என்றும் குடியிருப்பது கோடைப் பண்பலை’’ என்கிறார் கவித்துவமாக.
Comments
Post a Comment