எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம் என்ன?
இந்தி திரையுலகம் சிலரின் கைப்பிடிக்குள் சிக்கியிருக்கிறது; பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கு அதுதான் காரணம் என்று குற்றசாட்டுகள் எழுகின்றன.
இங்கே தமிழ் திரையுலகம் ஒரு தனி மனிதன் இரும்பு பிடியில் முப்பது வருடங்கள் சிக்கியிருந்தது.
1925ல் நடிக்க வந்த எம்.ஜி.ஆர் நடிப்பு துறையில் ஒரு இடம் பிடிக்க 22 வருடங்கள் போராடினார். 1947ல் திரை கதாநாயகன். 1958ல் வசூல் சக்ரவர்த்தியாக உருவெடுத்தபோது அவருக்கு வயது 41.
1960 களில் எம்.ஜி.ஆர் தனக்கான இடத்தை பிடித்தார். உதவிகள், துரோகங்கள், ஏமாற்றங்கள், ஏற்ற இறக்கங்கள் என 35 வருடங்கள் போராடி பெற்ற இடம்.
இடத்தை பிடித்ததும் அதுவரை ஒதுக்கியவர்களை ஓரத்தில் வைத்தார். உதவியவர்களை மதித்தார். மறுத்தவர்களை மண்டியிட செய்தார். பட்டியலில் இயக்குனர் ஸ்ரீதர், பாடகர் டி.எம்.சௌந்தர ராஜன், நடிகர்கள் அசோகன், சந்திரபாபு, காதல் இளவரசன், சூப்பர் ஸ்டார் என்று பலர்.
அந்த காலங்களில் மேற்படி விஷயங்களுக்கு யாரும் சிபிஐ விசாரணை கேட்கவில்லை.
மாறாக "வாத்தியார் தனது வகுப்பை எப்படி கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்" என்று ரசிகர்கள் புளகாங்கிதம் அடைந்தார்கள். அவரது கீர்த்தி மேலும் கூடியது!
எம்.ஜி.ஆரின் புகழ் என்பது தெளிவாக கட்டமைக்கப்பட்ட ஒரு பிம்பம். ஒவ்வொரு அங்குலமாக அவரே செதுக்கியது.
- பிரஷாந்த் கிஷோர் படித்த பள்ளியில் எம்.ஜி.ஆர் பெரிய வாத்தியார்
- உயிருடன் இருந்தவரை அசைக்கமுடியாத பிரபலமாக இருந்ததற்கு அவரது "டகால்ட்டி" வேலைகள் காரணமாக இருந்திருக்கலாம்.
- ஆனால் இறந்தபின்னரும் நினைவில் நிற்கும் வகையில் எம்.ஜி.ஆரின் புகழ் நிலை நாட்டப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் இறந்த பெருந்தலைகளை மறந்த அரசியல் களம், 90ஸ் கிட்ஸ்கள் முகம்கூட பார்த்திராத இந்த மனிதனை இன்னும் பேசுகிறது. வணங்குகிறது.
எவரையும் சந்தேக கண்ணோடு பார்க்கும் எம்.ஜி.ஆரின் குண நலன்கள், வறுமையில் இளமையை தொலைத்த அனைத்து ஏழை சிறுவர்களுக்கும் பொதுவானவை.
எம்.ஜி.ஆர் பிறந்த இரண்டாவது வயதில் தந்தையை இழந்தார். வறுமையில் வீழ்ந்த குடும்பத்தில் வாழ்ந்தார்.
சின்னங்சிறு வயதில் நாடக சபாவில் தனது தமையனுடன் சேர்க்கப்பட்டார் ராமச்சந்தர். "அன்னையை பிரியமாட்டேன், மேலே படிக்கவேண்டும்" என்று கதறி அழுதவரை, "உணவுடன் தங்குமிடம் கிடைக்கும்" என்று ஆறுதல் சொல்லி சபாவில் சேர்ந்துவிட்டார் அவரது தாயார்.
எந்த சபாவிலும் முன்னணி நடிகர்களுக்குத்தான் முதல் பந்தி. உப நடிகர்களுக்கு தனி பந்திதான்.
"தனி" பந்தியில் மீந்தியதை சாப்பிடும்போது ஒருவேளை அவர் தீர்மானித்திருக்கலாம் "எப்படியாவது முதல் இடத்தை பிடிக்கவேண்டும், யாருக்கும் அதை விட்டுத்தரக்கூடாது" என்று.
மக்கள் திலகமாக உருமாறிய பின்னாளில் அவரது வீட்டிற்கு வரும் அனைவரையும் அவரே "சாப்பிட்டீர்களா" என்று விசாரிப்பார்; சமபந்தியில் சாப்பிட வைப்பார் என்று பலரும் நினைவு கூறுகிறார்கள்.
எட்டு வயதில் உணவிற்காக தனது அம்மாவையும், கல்வியையும் பிரிய நேர்ந்தது அவர் வாழ்வின் முதல் துயரம். அது 50 வருடங்கள் கழித்து அவர் மாநிலத்தின் முதல்வரான போது மேம்படுத்தப்பட்ட மதிய உணவுத்திட்டமாக உருவெடுத்தது.
கேள்விக்குரிய நிர்வாகத்திறனுடன் நடத்தப்பட்ட அதிமுக ஆட்சியை அசைக்க முடியாத ஆட்சியாக மாற்றிய திட்டம் அது.
38 வருடங்களுக்கு முன்னால் இதே தேதியில் (18.07.1982) திருச்சியில் திட்டத்தை துவங்கி வைத்து பேசுகையில் இரு வேளை உணவுக்கு தன்னை பிரிய நேர்ந்த தனது அன்னையை ஒருவேளை நினைத்திருக்கலாம்..
"வேலைக்குப்போகும் ஏழை தாய்மார்கள் இனி தனது மகன் அங்கே வயிறார சாப்பிட்டுக்கொண்டிருப்பான்; சத்தான உணவு அவனுக்கு கிடைக்கிறது என்று நிம்மதியுடன் அவர்கள் வேலையை தொடரலாம்"
திரையின் உச்ச நட்சத்திரமாக இருந்தபோது எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டு பிழைத்து வந்தார் எம்.ஜி.ஆர். கழுத்தில் கட்டுடன் வெளிவந்த அவரது போட்டோ அவர் ரசிகர்களை வெறி கொள்ள செய்தது. ஒரு தேர்தலையே வெற்றிகொள்ள வைத்தது.
ஆனால் எம்.ஜி.ஆரால் பழைய குரலில் பேசமுடியவில்லை. எதிர்தரப்பினரால் பெரும் கேலிக்குள்ளானார். இருந்தாலும் அவருக்கேயுரிய பிடிவாதத்துடன் கடைசிவரை சொந்த குரலில் பேசி நடித்தார்.
"ஊமையன்" என்று கேலி செய்த குரல்கள் தன்னை காயப்படுத்தியதாக அவர் என்றுமே காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் அவரது மரணத்திற்கு பின் வெளியான உயிலில் தனது சொத்தில், ராமாவரத்தில் 6.5 ஏக்கர், ஊமை குழந்தைகளுக்கான பள்ளிக்கென்று எழுதி வைத்திருந்தார்.
எம்.ஜி.ஆர். புகழ் இன்றும் நிலைத்திருக்க என்ன காரணம்?
- தனக்கென ஒரு இடத்தை உருவாக்க நடத்திய நீண்டதொரு போராட்டம்.
- கிடைத்த இடத்தை தக்க வைக்க செய்த தந்திரங்கள், தளராத முயற்சிகள்.
- ஏற்பட்ட காயங்களை இறுதி நாள் வரை மறக்காத குணம்.
- தான் பட்ட கஷ்டத்துக்கு, சமூகத்தை பழிவாங்க முற்படாமல், அந்த சிரமங்களை ஏழை மக்கள் படாமலிருக்க முயற்சி மேற்கொண்ட பொன்மனம்.
"கோடிகள் சம்பாதித்து, பாதியை தர்மத்துக்கு எழுதி, மீதியையும் தனது குடும்பத்துக்கு நிரந்தரமாக தராமல், அவர்கள் காலத்துக்கு பின்னர் கட்சிக்கும் பொதுவுக்கும் வருமாறு உயிலெழுத ஒரு மனம் வேண்டும். சென்னை நகருக்குள் ஏக்கர் கணக்கில் வாங்கிய தனது சொத்துக்களை எழுதிவைத்த ஒரு தலைவனை இனி பார்க்க முடியுமா" என்று அவர் ரசிகர்கள் கேட்கிறார்கள்.
தான் கட்டமைத்த பிம்பமானாலும் அதாகவே மாறிப்போனார் எம்.ஜி.ஆர்.
தமிழகமும் அந்த புகழ் பிம்பத்திலிருந்து வெளிவர விரும்பாமல் அதை நிரந்தரமாக்கிவிட்டது.
Comments
Post a Comment