முத்து வியாபாரி ஆன புத்தக வியாபாரி: ஆண்டுக்கு ரூ.4 லட்சத்தை அள்ளித் தரும் முத்துக்கள் வளர்ப்பு! - pearl farming

 

pearl-farming
முத்துகளை பார்த்து பார்த்து வாங்கி மகிழ்ந்திருப்பீர்கள். வளர்த்து பார்க்க நினைத்ததுண்டா? ஆமெனில், ஆழ்கடலின் அழகான முத்துகளை வீட்டிலேயே சாகுபடி செய்து ஆண்டுக்கு ரூ4 லட்சம் வருவாய் ஈட்டும் நரேந்திர குமாரிடமிருந்து முத்து வளர்க்க கற்று கொள்வோம்.


வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம், ஆட்டுப் பண்ணை, கோழி வளர்ப்பு, வாத்து வளர்ப்பு என்கிற வரிசையில் முத்து வளர்ப்பு லாபம் கொழிக்கும் தொழிலாக உருவெடுத்துள்ளது.

பயிற்சியுடன் முயற்சித்தால் எவரும் முத்து வளர்ப்பில் ஈடுபட்டு முத்தான வருவாயை பெற இயலும். இதற்கு உதாரணமாக திகழ்கிறார் நரேந்திர குமார் கார்வா. ஏனெனில், வேளாண் தொழிலுக்கு முற்றிலும் தொடர்பற்ற குடும்பத்தில் பிறந்த அவர், முத்துவளர்ப்பு பற்றி ஏ டூ இசட் கற்று இன்று, ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வருமானம் ஈட்டும் முத்து வியாபாரியாக ஜொலிக்கிறார்.

முத்துக்கள் - தூய்மை மற்றும் பூர்ணத்துவத்தின் சின்னம், அழகு மற்றும் அமைதியின் சின்னம். அவை நிலவுகளாக அங்கீகரிக்கப்பட்டு வைரங்களுக்குரிய மதிப்பு வாய்ந்தவை. எக்காலத்திலும் கிராக்கி இறங்காத முத்துகளை நம் நாடு, சீனா மற்றும் ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்ய ஒவ்வொரு ஆண்டும் பில்லியன் கணக்கான ரூபாயை செலவிடுகிறது.

இந்தியன் மிரர் அறிக்கையிலோ, இந்தியாவில் உள்ள உள்நாட்டு வளங்களிலிருந்தும் மிகச்சிறந்த தரமான முத்துக்களை உற்பத்தி செய்ய முடியும் என்று மத்திய நன்னீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தின் (சிஃபா) ஆய்வாளர்கள் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவும் இதற்கு முன்னர் முத்து மீன்வளத்தை பயிரிட்டு வந்தது. தமிழ்நாட்டில் மன்னார் வளைகுடா பகுதிகளிலும், குஜராத்தின் கட்ச் பகுதியிலும் இயற்கை முத்துகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், இன்று உற்பத்தி குறைந்துவிட்டது. இந்திய அரசின் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் முத்துக்களை வளர்ப்பதில் வெற்றி பெற்றதுடன், திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சம் மையத்தில் அதற்காக ஒரு திட்டத்தையும் தொடங்கியது.

1994ம் ஆண்டு வெற்றிகரமான சோதனைகள் மூலம், ராஜஸ்தான் மாநிலத்திலும் அதன் தெற்கு பகுதிகளிலிருந்த ஏரிகளிலிருந்து செயற்கை முத்துகளை உற்பத்தி செய்ய முடியும் என்று தெரியவந்தது.

இன்று இந்த கட்டுரையில் ராஜஸ்தானில் முத்து வளர்ப்பில் ஈடுபட்டுவரும் அத்தகைய ஒரு விவசாயியின் கதையை தான் பார்க்கபோகிறோம். முத்தெடுக்க வாரீகளா?!

வாழ்வை மாற்றிய முத்துக்கள்!

ராஜஸ்தான் மாநிலம் கிஷன்கர் அருகே உள்ள ரென்வால் பகுதியைச் சேர்ந்த புத்தக வியாபாரி நரேந்திர குமார் கார்வா. 45 வயதான நரேந்திர குமார், பி.ஏ. முடித்துவிட்டு கடந்த பத்து ஆண்டுகளாக அவரது தந்தையுடன் புத்தகக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். பத்து ஆண்டுகளாய் அயராது உழைத்தாலும், அத்தொழில் அவரது வாழ்வில் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்திவிடவில்லை.

அதனாலே, வாழ்வில் வெற்றிபாதைக்கு நகர்த்திட வேண்டுமென, தொழில் சார்ந்து அதிகம் தேடி படித்துள்ளார். அப்படி தான், விவசாயத்தின் மீதும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அவரது குடும்பத்திலோ அல்லது நண்பர் வட்டாரத்திலோ யாரும் விவசாயத்தில் ஈடுபடவில்லை.

''புத்தக கடையில் அமர்ந்திருக்கும் போது, யூடியூப்பில் விவசாயம் தொடர்பாக பல வீடியோக்களை பார்ப்பேன். நமக்கான உணவை நாமே உற்பத்தி செய்து கொள்வது என்னுடைய ஆசையாகவே இருந்தது. ஆனால், எங்களிடம் எந்த விளைநிலமும் சொந்தமாக இல்லாததால், என்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள நான் முயன்றதே இல்லை.

அப்போ தான், எனக்கு ஒருவர் ஒரு வேளாண் வீடியோவை அனுப்பியிருந்தார். அதை பார்த்த பிறகு தான், விவசாயம் செய்வதற்கு நிலம் தேவையில்லை என்பதை தெரிந்துகொண்டேன். அந்த வீடியோவால் ஈர்க்கப்பட்டு வீட்டிலேயே காய்கறிகளை வளர்க்க ஆரம்பித்தேன்," என்று யுவர் ஸ்டோரிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார் நரேந்திர குமார்.

வீட்டிலே விளைவித்த காய்கறிகளை அறுவடை செய்து திருப்தி அடைந்திருந்த நரேந்திர குமார், யூடியுப்பில் மற்றொரு வீடியோவை கண்டார். வீடியோவை கண்டவருக்கு ஒரே அதிர்ச்சி. ஏனெனில், முத்துகளை வீட்டிலே வளர்த்து சாகுபடி செய்வதை விளக்கும வீடியோ அது.

நீண்ட நாட்களாக சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவருக்கு அந்த வீடியோ உத்வேகத்தை அளித்தது. முத்துவளர்ப்பு குறித்த தகவல்களைத் தேடி தேடி தெரிந்து கொண்டார். முத்து வளர்ப்பு தொழில் மேற்கொள்வதற்கு ஆர்வமும், விருப்பமும் அவரிடம் இருந்தது. அதற்கான இடவசதியும் இருந்தது. அவரிடம் இல்லாதது போதுமான வழிகாட்டலே.

அதனை உணர்ந்த அவர், 2017ம் ஆண்டு புவனேஸ்வரில் அமைந்துள்ள மத்திய நன்னீர் மீன் வளர்ப்பு கல்விநிலையத்தில்(சிஃபா), 'தொழில்முனைவோர் மேம்பாட்டுக்கான நன்னீர் முத்து வளர்ப்பு' எனும் 5 நாள் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டார்.



முத்துகளை வளர்ப்பது எப்படி?

முத்து வளர்ப்பிற்கான பயிற்சியை எடுத்துக் கொண்ட கையோடு, ரூ.40,000 முதலீட்டில் 10 ×10 அடி பரப்பளவில் முத்து வளர்ப்பு தொழிலைத் தொடங்கினார். அதற்காக 5 அடி ஆழத்தில் செயற்கையான கான்கிரீட் குளங்களை கட்டியதுடன், அம்மோனியா மீட்டர், பிஹெச் மீட்டர், தெர்மோமீட்டர்கள், மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், மவுத் ஓப்பனர் போன்ற சாதனங்களையும் வாங்கினார்.

சிப்பிகளுக்கான உணவான பாசிகளை சாணம், யூரியா மற்றும் சூப்பர் பாஸ்பேட் ஆகியவற்றிலிருந்து தயாரித்துள்ளார். பல்வேறு வடிவங்கள் மற்றும் வடிவமைப்புகளுக்கு மாற்றிக் கொள்ளகூடிய 'டிசைனர் முத்துகள்', ஒரு வருடம் மற்றும் 1.5 ஆண்டில் வளரக்கூடிய உருண்டை வடிவிலான முத்துகள் என இரண்டு வகையான முத்துக்களை வளர்க்கிறார் நரேந்திர குமார்.

குளத்துக்குள் சிப்பிகளை வைப்பதற்கு முன்னதாக, 24 மணி நேரம் சிப்பிகள் நன்னீரில் வைக்கப்படுகின்றனர். உடனே பயன்படுத்தத் தொடங்கினால் அவை இறப்பதற்கு வாய்ப்பு உள்ளது. 15 நாட்களுக்கு சிப்பிகளுக்குத் தேவையான உணவு அளிக்கப்படுகிறது. அதன் பிறகே சிப்பிக்குள் கருவை உட்செலுத்தும் செயல்முறை தொடங்குகிறது.

"ஒவ்வொரு சிப்பிக்குள்ளும் முத்து கருவினை கவனமாக உட்செலுத்தி, தண்ணீருக்குள் மூழ்கி வைக்கவேண்டும். தண்ணீரின் வெப்பநிலை 15-30 டிகிரி செல்சியசில் இருக்கவேண்டும். சிப்பிகளுக்கு உணவாக பாசிகளை அளிக்கவேண்டும். உட்செலுத்திய முத்து கரு ஒரு ஆண்டில் சிப்பி ஓடுகளிலிருக்கும் கால்சியம் கார்பனேட்டை சேகரித்து நேர்த்தியான முத்துக்களை உருவாக்கும்.

குளத்தை பராமரிப்பதில் பணச் செலவு எதுவும் இல்லை என்றாலும், கவனமாக விழிப்புடன் இருக்க வேண்டும். நீரின் மட்டம், சிப்பிகளின் ஆரோக்கியம், போதுமான அளவு பாசிகள் இருக்கிறதா என்பன போன்றவற்றை சோதித்து கொண்டே இருக்கவேண்டும்.

இறப்பைத் தவிர்க்க பி.எச் அளவை 7-8 க்கு இடையில் வைத்திருக்க வேண்டும். மிக முக்கியமாக, நீங்கள் ஒரு வருடம் பொறுமையாக இருக்க வேண்டும், என்று முத்து வளர்ப்பு குறித்து முதலில் இருந்து கூறிமுடித்தார் அவர். முத்துக்கள் உருவாகிய பிறகு, நரேந்திரா அவற்றை ஆய்வகத்திற்கு அனுப்புகிறார்.

தரத்தைப் பொறுத்து, ஒரு முத்து ரூ.200 முதல் ரூ.1000 வரை விற்கிறார். தொடர்ந்து அவரது உற்பத்தியை மேம்படுத்திக் கொண்டே வரும் நரேந்திரகுமார், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3,000 முத்துக்களை உற்பத்தி செய்து, ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வருமானம் ஈட்டி வருகிறார்.

முத்துகளுக்காக ஒரு பள்ளி!

பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்த நரேந்திரா, சமீபத்தில் முத்து வளர்ப்பு குறித்து வகுப்புகள் எடுக்கத் தொடங்கி உள்ளார். அவருடைய கிராமமான ரென்வாலிலே அல்கா அறக்கட்டளை முத்து விவசாயப் பயிற்சி பள்ளியை நடத்தி வருகிறார். பயிற்சிப் பள்ளி தொடங்கியதிலிருந்து முத்து சாகுபடி குறித்து 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கற்பித்துள்ளார்.

"நான் முத்து வளர்ப்பில் ஈடுபடத் தொடங்கியபோது, ​​முத்துக்களை வீட்டில் வளர்ப்பது சாத்தியமில்லை என்று என் குடும்பத்தினரே என்னை கேலி செய்தனர். யாருமே என்னை ஊக்குவிக்கவில்லை. என்னை போன்று மற்றவர்களும் கேலிக்கு உள்ளாக நான் விரும்பவில்லை. அதனால், சான்றிதழ்களுடன் கூடிய 2 நாள் பயிற்சி வகுப்பை நடத்தத் தொடங்கினேன். இந்த பயிற்சிப்பள்ளி எனக்கு வருவாய் ஈட்டுவதற்கான கூடுதல் ஆதாரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் ஈட்டக்கூடிய தொழிலாகும்," என்றார்.

நரேந்திராவைப் பொறுத்தவரை, முத்து வளர்ப்புத் தொழிலால் நடந்த சிறந்த விஷயங்களில் ஒன்று பாதுகாப்பான வாழ்வாதாரம் மற்றும் நிலையான பணப்புழக்கம். கொரோனா காலத்தில் அவர்களின் புத்தகக் கடையை வியாபாரம் பாதிடைந்த நேரத்தில், முத்து வளர்ப்பு தொழிலே கைகொடுத்துள்ளது. லாக்டவுண் நாட்களில் வீட்டிலேயே இருந்ததால், முழு மூச்சாக முத்து வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார்.

"முத்து வளர்ப்பில் எப்படி மேம்படுத்துவது? உற்பத்தியை எவ்வாறு அதிகப்படுத்துவது? போன்றவற்றை கணக்கிட்டு கொள்வதற்கு போதுமான நேரத்தை லாக்டவுன் நாட்கள் கொடுத்தன. தற்போதைய உற்பத்தியை அடுத்த ஆண்டுக்குள் நிச்சயமாக இரட்டிப்பாக்கப் போகிறேன்," என்று எதிர்காலத்திட்டத்தைக் கூறி முடித்தார் நரேந்திரகுமார்.

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ