மகாபாரதம் பகுதி-3 - Mahabharatham story in Tamil

  வந்தவன் வேறு யாருமல்ல. யயாதி ஆசைப்பட்டு மணந்து கொண்ட சன்மிஷ்டையின் மகன் பூரு தான்!அப்பா! தாங்கள் அழ வேண்டிய அவசியம் என்ன? உங்களுக்கு உதவுவதற்கு இந்த மகன் எப்போதுமே தயாராக இருக்கிறான். சொல்லுங்கள்! நான் என்ன செய்ய வேண்டும்? என்றான். அன்பு மகனே! ஒரு தந்தை மகனிடம் யாசிக்கக் கூடாத ஒன்றை யாசிக்கிறேன். இந்த உலகத்திலேயே கொடூரமான வியாதி பெண்ணாசை. அது என்னிடம் அதிகமாகவே இருக்கிறது.


உன் பெரிய அன்னையான தேவயானையை மணம் முடித்திருந்தும் கூட, அவளது தோழியான உன் அன்னை மீதும் ஆசைப்பட்டேன். மன்னர் குலத்துக்கு இது தர்மம் தான் என்றாலும், பெரியவள் கோபித்துக் கொண்டு போய் விட்டாள். என் மாமனார் சுக்ராச்சாரியார் என் இளமையைப் பறித்து விட்டார். உடல்தான் முதுமை அடைந்துள்ளதே தவிர, மனதில் இளமை உணர்வு அகல மறுக்கிறது. இந்த நோயில் இருந்து விடுதலை வேண்டுமானால், எனக்கு இளமை மீண்டும் வேண்டும். இளமை திரும்பினால் தான், உன் தாய் என்னை அருகே அனுமதிப்பாள், என்றான் கண்ணீர் வடித்து.தந்தையின் நிலைமைமகனுக்கு புரிந்தது. அவன் தந்தையைக் கட்டியணைத்தான். அருமைத் தந்தையே! தாங்கள் மட்டுமல்ல. இளமை சற்றும் மாறாத லோகத்திலேயே ரூபவதியான என் தாய்க்கும் பெற்ற கடனைத் தீர்க்க நேரம் வந்திருக்கிறது. நான் உங்கள் முதுமையை ஏற்கிறேன். என் இளமையை உங்களுக்கு தருகிறேன். சுக்ராச்சாரியார் சொன்னபடி சாப விமோசனம் பெற்று, என் அன்னையோடு சுகமாக வாழுங்கள். என்று உங்களுக்கு என் இளமையைத் திருப்பித் தர முடியுமோ அன்று தாருங்கள், என்றான்.

மகனைப் பாராட்டிய மன்னன், அவனிடம் அரசாட்சியை ஒப்படைத்து விட்டான். பதிலாக தன் மனைவியோடு காலம் கழிப்பதில் மட்டுமே அவன் கவனம் செலுத்தினான். ஒரு கட்டத்தில், ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்து, மகனிடம் இளமையைக் கொடுத்து விட்டு முதுமையைப் பெற்றுக் கொண்டான்.இப்படியாக சந்திரவம்சம் தியாக வம்சமாகத் திகழ்ந்தது. பூருவின் வம்சம் விருத்தியாகிக் கொண்டே வந்தது. இவர்களின் பரதன் என்ற மன்னன், மண்ணுலகில் மட்டுமின்றி, விண்ணுலகிலும் வெற்றிக்கொடி நாட்டினான். இந்த வம்சத்தில் வந்த மற்றொரு மன்னனான ஹஸ்தியின் ஆட்சிக்காலம் தான் சந்திர வம்சத்தின் முக்கிய காலம். இவன் தன் பெயரால் ஒரு பட்டணத்தை அமைத்து, அதை தன் நாட்டுக்கு தலைநகர் ஆக்கினான்.

அவ்வூரே ஹஸ்தினாபுரம் எனப்பட்டது. ஒரு காலத்தில் கஜேந்திரன் என்ற யானையை முதலையிடமிருந்து காப்பாற்ற திருமால் கருட வாகனத்தில் வந்தார். அந்த யானை, இந்திரத்யுநன் என்ற பெயரிலும், முதலை அநுரு என்ற பெயரிலும் பூமியில் மாமன்னர்களாகப் பிறந்தனர். அவர்களும் சந்திரகுலத்து அரசர்களே. இதன் பின் குரு என்ற மன்னன் பொறுப்பேற்றான். இவன் மிகச்சிறப்பாக ஆட்சி செய்ததால், சந்திரகுலம் என்ற பெயர் மறைந்து குரு குலம் என்று இந்த வம்சம் அழைக்கப்பட்டது.குருகுலத்தில் பிறந்த மன்னன் சந்தனு பேரழகன். வேட்டையாடுவதில் விருப்பமுள்ளவன். ஒருமுறை காட்டில் தாகத்தால் தவித்தவன், குதிரையில் வேகமாக கங்கைக்கரைக்குச் சென்றான். கரையில் ஒரு பெண் ஒய்யாரமாக நடந்து கொண்டிருந்தாள். தண்ணீர் அருந்த வந்த சந்தனு, தாகத்தை மறந்தான். பதிலாக தாபம் அவனைத் தொற்றிக் கொண்டது.


ஆஹா...இப்படி ஒரு பேரழகியா? மணந்தால் இவளைத் தான் மணக்க வேண்டும். இவள் எந்த நாட்டு இளவரசி? இவளைப் பெண் கேட்க வேண்டுமே! என்ற வேட்கை உந்தித்தள்ள, சுற்றுமுற்றும் பார்த்தான். அங்கே யாருமில்லை. துணிச்சலுடன் அவளருகே சென்றான். அழகுப்பெண்ணே! நீ யார்? யாருமில்லாத இந்த இடத்தில் தனியாகத் திரிகிறாயே! உன் அழகுக்கு உன்னை யாராவது அபகரித்துக் கொண்டு போய்விட்டால் என்ன செய்வாய்? உன் இருப்பிடத்தைச் சொல். உன்னைப் பாதுகாப்பாக கொண்டு சேர்க்கிறேன், என்றான்.

அவள் கலகலவென நகைத்தாள். மங்கையர் திலகமே! உன் நன்மை கருதி தான் எச்சரிக்கிறேன். நீயோ கேலி செய்வது போல நகைக்கிறாயே! இருந்தாலும், முத்துகள் சிதறுவது போல், அந்த நகைப்பும் இனிமையாகத்தான் இருக்கிறது! என்று கண் சிமிட்டினான். அவள் திரும்பவும் நகைத்தபடியே, இளைஞனே! எனக்கு பயமா? இன்று நள்ளிரவில் நீ இங்கே இரு. நீ பயப்படுகிறாயா? நான் பயப்படுகிறேனா என்பது உனக்குப் புரியும். இரவும், பகலுமாய் நான் இங்கே தான் இருக்கிறேன். இனியும் இருப்பேன். இந்த பூமி உள்ளளவும் இருப்பேன். இன்னும் பல யுகங்கள் இருப்பேன். ஆனால், அழியும் மானிடப்பிறப்பெடுத்த நீ, என்னை இங்கிருந்து போகச் சொல்கிறாய், என்று அலட்சியமாகப் பேசினாள். அப்படியானால் நீ தேவ கன்னிகை தான்.

சந்தேகமேயில்லை. பூலோகத்தில், இத்தகைய லட்சணமுள்ள பெண்ணை நான் பார்த்ததேயில்லை. சரி...இருக்கட்டும். தேவதையான உன்னை பூமியில் பிறந்ததால், நான் அடைய முடியாதோ? உன்னை அடையும் தகுதி தான் எனக்கில்லையா? என்ற சந்தனுவைப் பார்த்த அப்பெண், தனது தற்போதைய நிலையை நினைத்தாள். அவளது பெயர் கங்கா. ஒரு சமயம் அகம்பாவத்தின் காரணமாக, பூமியில் ஒரு மானிடனிடம் காலம் கழிக்க வேண்டும் என்ற சாபம் பெற்றவள். அதற்கு இவன் சரியான ஆள் தான். அழகாகவும் இருக்கிறான். மன்னனாகவும் விளங்குகிறான். தன் வினைப்பயனை இவனிடமே அனுபவிப்போம் எனக் கருதிய கங்கா, அவன் யார் என்ற விஷயத்தைத் தெரிந்து கொண்டாள். பின்னர் அவள், அன்பனே! என் பெயர் கங்கா. நானே இதோ ஓடும் இந்நதி. நதிகள் பெண்ணுருவமாக இருப்பதை நீர் அறிந்திருப்பீர். ஒரு சாபத்தால் இந்த பூமிக்கு நான் வந்தேன், என்றாள்.

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ