தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைத்த திரைப்படங்கள் எவை?
( ஹரிதாஸ், பராசக்தி, மனோகரா, அவ்வையார், ஒரிரவு, போன்ற படங்களைப் பொதுவாக, அனைவரும் குறிப்பிடுவார்கள்)
அந்தநாள் ( பாடல்களே இல்லாமல் வந்த படம். பிரபல ஜப்பானிய இயக்குனர் அகிரோ குருசாவா அறிமுகப் படுத்திய " ராஷொமொன் (ராஷொமொன்) விளைவு" , என்பதை முதன் முதலில் , தமிழில் எடுத்துக் காட்டியது)
சந்திரலேகா— அந்தக் காலக்கட்டத்திலேயே எடுக்கப் பட்ட பிரம்மாண்டமான படம். இதில் இடம் பெற்ற முரசு நடனம், ஒரு trend setter. இன்றும் அதைப் பார்த்து வியக்காதவர்கள் இல்லை
நெஞ்சில் ஓர் ஆலயம்- ஒரு மருத்துவமனை அரங்கத்திலேயே , 15 நாட்களில் எடுக்கப் பட்ட , அற்புதமான படம். அருமையான நடிப்பு, காலத்தை வென்று நிற்கும் பாடல்கள், தரமான ஒளிப்பதிவு, இயக்கம்— பல சிறப்புகள் கொண்டது.
நவராத்திரி— நடிகர் திலகம் சிவாஜி 9 மாறுபட்ட வேடங்களிலும், அத்தனை பாத்திரங்களுக்கும் ஈடு கொடுக்கும் நாயகியாக , நடிகையர் திலகம் சாவித்திரியும், நடிப்பில் உயரங்களைத் தொட்டது , சாதனை. அந்தக் காலக்கட்டத்தில், இன்று இருப்பது போல், அபார ஒப்பனை வசதிகள், மிக நவீனமான காமிரா, வரைகலைத் தொழிற்நுட்பங்கள், இல்லை என்பதை, மனதில் கொண்டால், இந்த படத்தின் அருமை , நன்கு புரியும்.
காதலிக்க நேரமில்லை— முழு நீள நகைச்சுவை வண்ணப் படம். வெளிப்புறப் படப்பிடிப்பில், புது சாதனைகள் நிகழ்த்திய, மயக்கும் இசை, ஒளிப்பதிவு, படத் தொகுப்பு , போன்ற சிறந்த, தயாரிப்பு அம்சங்கள் கொண்டது
"சாரதா"—- புரட்சிகரமாக ஒரு தாம்பத்யப் பிரச்னையை, அழகாகக் கையாண்ட படைப்பு.
இந்த இயக்குனரின் படைப்பாக வந்த "நெஞ்சிருக்கும் வரை ", முக்கிய கதாபாத்திரங்கள், ஒப்பனை இல்லாமல் நடித்தது.
திருவிளையாடல்— வெகு நாட்களுக்குப் பின் வந்த, அருமையான புராணப் படம். அழகு தமிழ் வசனங்கள், அபார நடிப்பு, பாரம்பரிய மணம் வீசும் இசை, மற்ற தயாரிப்பு அம்சங்களோடு , மிகுந்த பொருட்செலவில், எடுக்கப் பட்ட, தரமான படம் . பின்னர், இந்த பாணியில் பல புராணப் படங்கள் வந்து , வெற்றி பெறுவதற்கு, முன்னோடியாய் அமைந்த படம்.
இந்தப் படம் எடுக்கப் பட, முக்கிய தூண்டுதலாக இருந்தது, எது என்று தெரிந்தால், ஆச்சரியம் தான் வரும்.
படத்தின் இயக்குனர் திரு ஏ. பி.நாகராஜன் அவர்களும், ஒரு நண்பரும், அண்ணா சாலையில்( அன்றைய மவுன்ட் ரோட்), இளைஞர்கள், மேற்கத்திய நாகரீகம், கலாச்சாரம் , போன்றவற்றில் மூழ்கிக் கிடப்பதைப் பார்த்து, வருத்தப் பட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் மாற்றி, மக்கள், நம் பெருமை மிக்க பாரம்பரியம், புராணம் போன்ற உன்னதமான விஷயங்களில் ஈடுபட வேண்டும், என்ற உயரிய நோக்கத்தில், திரைப்படத்தை , வழங்கியிருக்கிறார்கள்.
தில்லானா மோகனாம்பாள் , என்ற இந்த இயக்குனர் வழங்கிய , அற்புதக் கலைக் காவியத்தைத் தொடர்ந்து, சலங்கை ஒலி, கரகாட்டக்காரன், மிருதங்க சக்கரவர்த்தி, காதல் ஓவியம், எனத் தொடர்ந்து , நம் பாரம்பரியப் பெருமையைப் பறை சாற்றும் படங்கள் வந்தன.
சிவந்த மண்— முதன் முதலில் , பெரும்பாலும் வெளிநாடுகளில் , படமாக்கப் பட்ட, பிரம்மாண்டமான வண்ணப் படம், என பெருமை பெற்றது.
கதையில் பெரிய புதுமை இல்லாவிட்டாலும், இசை, ஒளிப்பதிவு, அரங்க அமைப்பு , போன்ற மற்ற திரைப்பட அம்சங்களில், அசத்திய படம்.
தடுக்கி விழுந்தால் வெளிநாட்டில் படம் பிடிப்பது, சர்வ சாதாரணமாக, இன்று நடக்கிறது. ஆனால், அன்று, இந்த வகையில், மிகுந்த செலவு செய்து படம் எடுப்பது, மிகப் பெரிய "ரிஸ்க்" , என்றால் அது உண்மையே.
இதன் வெற்றி, " உலகம் சுற்றும் வாலிபன்", " நினைத்தாலே இனிக்கும்", " ஒரே வானம் ஒரே பூமி" , என , வெளி நாடுகளிலேயே , பெரும் பகுதி எடுக்கப் பட்ட, பல திரைச் சித்திரங்கள் வர காரணமாயிருந்தது.( அந்தக் காலத்தில், அது பெரீ…..ய்ய விஷயம்)
தெய்வ மகன்—-சிவாஜி 3 வித்தியாசமான வேடங்களில் அசத்திய படம். ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப் பட்டது.
அரங்கேற்றம் — தமிழ்நாட்டில் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்திய படம். அதுவரை , clean family entertainers, வகையில், குடும்பப் படங்களை எடுத்த இயக்குனர், தைரியமாக , ஒரு ஆசாரமான குடும்பத்தை மையப் படுத்தி, புரட்சிகரமான, நெருடலான கதைக் களத்தில் உருவாக்கிய படம். இதன் வெற்றியைத் தொடர்ந்து, அவரும், மற்ற இயக்குனர்களும், வித்தியாசமான கதைக் கருக்களைத் தேர்ந்தெடுத்து , துணிச்சலாக வழங்கினர்.
இதே போல், இயக்குனர் பாலச்சந்தரின் இயக்கத்தில் , தொடர்ந்து வந்த அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், அவர்கள், போன்ற படங்களும், துணிச்சலாக மனித உறவுகளைப் புதிய கோணத்த்தில் காட்டின. இந்தப் படங்களுக்குக் கிடைத்த வரவேற்பு, மற்ற முன்னணி இயக்குனர்களை, மயங்குகிறாள் ஒரு மாது, உறவு சொல்ல ஒருவன், புவனா ஒரு கேள்விக்குறி, போன்ற வித்தியாசமான கதைக் களம் , கொண்ட படங்களை வழங்க, தூண்டுதலாக இருந்தது.
மேலும் சமூகப் பிரச்னைகளை மையப் படுத்திப் படங்கள் வந்தன.
ராஜராஜ சோழன்—பிரம்மாண்டமான, பிரமிக்க வைக்கும், முதல் சினிமாஸ்கோப் படம்.
அவள் அப்படித்தான்— வித்தியாசமாக எடுக்கப் பட்ட படம். ஆனால், இந்த படத்தின் திறமையான இயக்குனர், பின்பு வாய்ப்புகள் பெறவில்லை, என்பது வருத்தமான விஷயம்.
பதினாறு வயதினிலே— மலைக்க வைக்கும் அரங்கங்கள், கதைக்களங்களில் sophistication, richness ,எல்லாம் அதிகமாக இருந்த சமயத்தில், கிராமத்தை மையப் படுத்தி, இயற்கை எழில் பொங்கும் அந்த இடங்களையே, வியக்க வைக்கும் அரங்கங்களாக்கி, நம் மண்வாசனையை, மணம் மிகு படைப்பாகக் கொடுத்து, ஒரு புதிய புரட்சியை ,ஏற்படுத்திய , படம். இதன் தாக்கம் இன்றும் தொடர்கிறது.
பேசும் படம், வசனங்களே இல்லாமல், முக பாவங்கள், உடல் மொழிகள், மௌனமான காட்சிகள்,மூலமே, அழகாய், அழுத்தமாய், படத்தை வழங்கிய சிறப்பு பெற்றது.
இன்னும், நாயகன்( தாதா வகைப் படங்களில் முன்னோடி), தளபதி, ரோஜா, காதல் கோட்டை, டூயட், காதலுக்கு மரியாதை, மங்காத்தா,சிடிஜன், என்று என் வரிசை நீளும்.
Comments
Post a Comment