Earn monthly in Laks in Idly factory business - லட்சக் கணக்கில் மாத வருமானம் ஈட்டும் இட்லி தொழிற்சாலை
1 லட்சம் ரூபாய் கடனோடு திருச்சியில் இருந்து சென்னைக்கு பிழைக்க வழி தேடி வந்த ரமேஷ், மற்றும் சகோதரர்கள் தொடங்கிய இந்த இட்லி தொழிற்சாலையில் ஒரு நாளைக்கு 35ஆயிரம் இட்லிகள் தயாராகிறது.
தமிழர்களின் பாரம்பரியமிக்க உணவு வகைகளில் முதலிடம் பிடிப்பது இட்லி, சட்னி, சாம்பார்தான். நம்மவர்கள் வெளிநாடு சென்றாலும் சரி, வெளிநாட்டவர்கள் இங்கு வந்தாலும் சரி, தேடிப்பிடித்து வாங்கிச் சாப்பிடுவதும் இந்த இட்லியைத்தான். அந்தளவுக்கு அனைவருக்குமான எளிதில் ஜீரணமாகும் நல்ல ஆரோக்கிய உணவாக இட்லி இருப்பதே அதன் தனிச் சிறப்பாகும்.
இச்சிறப்பு மிகுந்த இட்லியை விற்பனை செய்து மாதமொன்றுக்கு லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டுகிறார் சென்னை மறைமலைநகரைச் சேர்ந்த ஆர்.என். ரமேஷ். எம்.ஏ., படித்துள்ள இவர், இட்லி வியாபாரத்தில் இறங்கியதை கண்டு எள்ளி நகையாடிய நண்பர்களும், உறவுகளும் இன்று இவரது வளர்ச்சியைக் கண்டு வாய்பிளந்து நிற்கின்றனர்.
1 லட்சம் ரூபாய் கடனோடு திருச்சியில் இருந்து சென்னைக்கு பிழைக்க வழி தேடி வந்த ரமேஷ், இன்று சென்னை மட்டுமின்றி பல்வேறு நகரங்களில் உள்ள பலதரப்பட்ட உணவகங்கள் மற்றும் விஷேசங்களுக்கு இட்லிகளை விற்பனை செய்து லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டுகிறார்.
இதுகுறித்து அவர் நம்மிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது, நான் எம்.ஏ. முடித்துவிட்டு, பஸ் கம்பெனி மற்றும் தனியார் நிறுவனம் என பல்வேறு பணிகளில் ஈடுபட்டேன். ஆனால் போதிய வருவாய் இல்லை. எனவே சொந்தமாக பிசினஸ் செய்யலாம் என சென்னைக்கு வந்தேன். அப்போது ரூ. 1 லட்சம் கடன் இருந்தது.
இங்கு எனது சித்தி ஓர் ஹோட்டலில் பணிபுரிந்து வந்தார். அப்போது அவர் வீட்டு இட்லி தயாரிக்க ஆள் வேண்டும் என்றார். இதையடுத்து, நானும் எனது மனைவியும் இட்லி வியாபாரத்தைத் தொடங்கினோம். எங்களது கைப்பக்குவத்தில் நல்ல சுவையோடு இட்லி இருந்ததால், எங்களிடம் ஆர்டர்கள் குவிந்தன. இதையடுத்து, எனது தம்பி மற்றும் அண்ணனையும் அழைத்து வந்தேன். தற்போது நான், எனது சகோதர்கள் மற்றும் பெற்றோர் என அனைவரும் குடும்பமாக வசித்து வருவதோடு மட்டுமின்றி அனைவரும் இணைந்து எங்கள் இட்லி தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிகிறோம் என்கிறார்.
இட்லி கடை தானே என ஏளனமாக எண்ணுபவர்களுக்கு ஓர் தகவல். ரமேஷின் இட்லி தயாரிப்பு நிறுவனத்தின் ஓர் நாள் வருவாய் குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரமாகும்.
உணவகங்கள், திருமணம் உள்ளிட்ட விஷேசங்களுக்கு ஆர்டர் எடுத்து மொத்தமாக இட்லி சப்ளை செய்கின்றனர். முழுக்கமுழுக்க மனித சக்தியால் மட்டுமே இட்லி தயாரித்து விற்று வந்த இவர்கள் தற்போது அனைத்து பணிகளுக்கும் இயந்திரங்களை நிறுவியுள்ளனர். இதனால் 4 பேர் பணிபுரிந்த இடத்தில் 1 நபர் பணியாற்றினால் மட்டும் போதும். மேலும், கைபடாமல் தயாரிக்கப்படும் தூய, ஆரோக்கியமான பூப்போன்ற இட்லிகள் கிடைக்கின்றன.
முதன்முதலில் 200 இட்லி சுட்டு விற்ற நாங்கள், தற்போது நாளொன்றுக்கு 35 ஆயிரம் இட்லிகளை விற்பனை செய்கிறோம். முதலில் மாவு அரைப்பதில் இருந்து, இட்லி சுட்டு, அதை விநியோகம் செய்வது வரை அனைத்து வேலைகளையும் நாங்களேதான் செய்து வந்தோம். தற்போதுதான் அனைத்துக்கும் இயந்திரங்களை நிறுவியுள்ளோம் என்கிறார்.
இட்லி தட்டுகளில் ஓரே சீராக மாவை நிரப்பும் சிஎன்சி மெஷின்
நான் சொந்தமாக இடம் வாங்கி அங்கே எனது ‘நளா இட்லி’ ’NALA IDLI’ (NALA- நாராயணசாமி என்ற தந்தை பெயரின் முதல் எழுத்து மற்றும் சகுந்தலா என்ற தனது தாயாரின் பெயரின் கடைசி எழுத்து) என்ற பிராண்டில் barade fluffies (barade-பாரதி என்பது அவரது சகோதரர்கள் பாஸ்கர், ரமேஷ், தீபக் என்பதில் முதல் எழுத்தின் சுருக்கம்) என்ற பெயரில் இட்லி தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினேன். இங்கு முழுக்கமுழுக்க கைபடாமல் இயந்திரங்களின் உதவியால் இட்லிகள் தயாராகின்றன.
கைகளால் இட்லிகளை தயாரித்தபோது ஓவ்வொரு இட்லியும் வெவ்வேறு எடைகளில் வடிவங்களில் இருந்தது. தற்போது ஓர் சீரான வடிவத்தில், எடையில் கிடைக்கிறது என்பதே இயந்திரங்களை பயன்படுத்தி இட்லி சுடுவதன் சிறப்பாகும்.
இட்லிக்கு மாவு ஊற்றும் சிஎன்சி இயந்திரத்தில் தட்டை வைத்து, எத்தனை கிராமில் இட்லி எடை இருக்கவேண்டும் என்பதை மட்டும் செட் செய்துவிட்டால் போதும். அதுவே ஓரே சீராக இட்லிக்கு மாவு ஊற்றிவிடும். நாம் அந்த இட்லி மாவு தட்டை எடுத்து ஸ்டீம்மர் எனப்படும் நீராவி கொள்கலனி்ல் வைத்து, அடுத்த 15 நிமிடங்கள் கழித்து எடுத்தால் பூப்போன்ற இட்லிகள் தயார் என்கிறார்.
மாவு ஊற்றிய இட்லி தட்டுகளை நீராவி கொள்கலனில் அடுக்கும் பணியில் ரமேஷ்.
இட்லி தட்டில் மாவு ஊற்றுவதற்கு ரூ. 5 லட்சத்தில் ஓர் சிஎன்சி இயந்திரமும், இட்லிகளை அவித்து எடுக்க ரூ.5 லட்சம் மதிப்பில் பாய்லரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் கடனுதவியாகப் பெற்று லாபகரமான இந்த இட்லி தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இதன் மூலம் சாதாரணமாக பதினைந்து நிமிடத்தில் சுமார் 684 இட்லிகளை அவித்து எடுக்கிறார். குறைந்தபட்சம் ஓர் நாளைக்கு 35 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக 40 ஆயிரம் வரை இட்லிகளை தயாரித்து விற்பனை செய்கிறார் ரமேஷ். எஞ்சும் இட்லி மாவை வீணாக்காமல் அவற்றையும் கிலோ ரூ.40-க்கு தோசை மாவாக மாலை நேரத்தில் விற்பனை செய்து விடுகின்றனர்.
ஓர் இட்லி ரூ.4க்கு விற்பனை செய்வதால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள சாதாரண ஹோட்டல்கள் முதல் நட்சத்திர விடுதிகள் என இவரிடம் ரெகுலராக இட்லி வாங்குபவர்கள் ஏராளமானோர் உள்ளனர். திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு மொத்தமாக ஆர்டர் தருபவர்களுக்கு சட்னி, சாம்பாரோடு ஓர் இட்லி ரூ.10 என்ற வீதத்தில் விற்பனை செய்து வருகிறார் ரமேஷ்.
எவ்வித கெமிக்கல் உள்ளிட்ட செயற்கை பொருள்களின்றி முழுக்க வீட்டுத் தயாரிப்பு போலவே மாவு தயாரித்து இட்லி சுடுவதாலேயே வீட்டு இட்லி போன்ற சுவையுடன் சென்னை நகரெங்கும் இவரின் இட்லிகள் விற்பனையாகின்றன.
என்னைச் சுற்றி இருந்தவர்கள் எனது இட்லி தயாரிப்பு நிறுவனம் அமைக்கும் திட்டம் குறித்து கேலி பேசியபோது, எனது குடும்பத்தினரின் ஆதரவு எனக்கு மிகுந்த ஊக்கம் அளித்தது. மேலும், எனது தாயாரின் கைப்பக்குவம், எவ்வளவு அரிசிக்கு எவ்வளவு உளுந்து போட்டால் இட்லி சரியாக வரும் என்பன போன்றவையும், எனது சகோதரர்கள் மற்றும் சகோதரிகளின் கடும் உழைப்புமே இந்த வெற்றிக்கு முக்கியக் காரணம் எனக் கூறும் ரமேஷின் இட்லி தயாரிப்பு நிறுவனத்தில் தற்போது 15க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
ரமேஷ் அவரது குடும்பத்தினருடன்.
சமையல் தொழில் குறித்த எந்தவொரு பின்புலமும் இல்லாமல் முழுக்கமுழுக்க குடும்பமே இணைந்து பாடுபட்டு இத்தொழிலில் முன்னுக்கு வந்துள்ள இவர்கள் இன்றளவும் கூட்டுக்குடும்பமாக அனைவருக்கும் ஓர் முன்னுதாரணமாக வாழ்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
Comments
Post a Comment